Friday 2 July 2021

வெண்ணிற இரவுகள் - வாசிப்பனுபவம்

வெண்ணிற இரவுகள்

ஆசிரியர் -   ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி 

தமிழில் - ரா. கிருஷ்ணையா 

விலை - ரூபாய் 80

பக்கங்கள் - 96



"வெண்ணிற இரவுகள்" - வாசித்து முடித்தவுடன், இறுதியில் நிராசையுடன் விடைபெறும் கனவுலக வாசியின் கனத்த இதயத்தின் வலியிலிருந்து மீள்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.

1848 ஆண்டில் வெளியான இந்த காதல் காவியம் இன்றளவும் பெரும்பாலோனோர்களால் வாசிக்க நேசிக்கும் ஒரு காதல் கதை. 172 வருடங்கள் கடந்தும் உலகின் பெரும்பாலான மொழிகளில்  மொழிபெயர்த்து   உயிரோவியமாகக் காதலை நேசிக்கும் ஒவ்வொருவ வாசிக்க முற்படும் கதை.

மூன்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த கதையில் வரும் நாயகர்களுக்கு பெயரேதும் இல்லை. நமக்குத் தெரியும் ஒரே பெண்ணின் பெயர் "நாஸ்தென்காஇவள் தான் இந்த கதையின் உயிரோட்டம்.

இத்தனை வருடங்கள் கடந்தும் இன்றும் இளமை துள்ளும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையென்றால் அது வெண்ணிற இரவுகள் தான்.  

பீட்டர்ஸ்பர்க் நகரில் எட்டு வருடமாகத் தனிமையில் வசிக்கும் ஒரு இளைஞன், தான் காணும் சில துயரச்செய்திகளை பகிர்ந்து கொள்வதாக ஆரம்பிக்கும் இந்த கதை, ஆமாம் அந்த இளைஞன்  தான் கதையின் நாயகன். அப்படியாக தன் பெரும்பாலான வாழ்க்கையினை கனவுகளிலே கழித்து வந்த நாயகன், ஒருநாள் இரவு தன் காலும் மனமும் போன போக்கில் நேவ்ஸ்கி சாலையிலும், பூங்காவிலும் பின்னர்  பன்தான்கா ஆற்றங்கரையில் நடந்து செல்கிறான் நடந்து நடந்து நகரின் வெளிப்புற எல்லைக்கே சென்றுவிடுகிறான்.

யாருடனும் சகஜமாகப் பழக விரும்பாத நாயகன், ஏன் அதுவும் பெண்களைக் கண்டாலே நடுக்கம் எடுக்கும் இவன், அன்று இரவு நகரின் வெளிப்புற எல்லையிலிருந்து ஆற்றங்கரையில் நடந்து வருகிறான். சக மனிதர்களிடம் பேசாமல் இருக்கும் இவன் அந்த வீதியில் இருக்கும் வீடுகளிடம் பேசிச்செல்கிறான், அந்த வீடுகள் எல்லாம் இவனுடன் உரையாடுவதாகவே நினைத்துக் கொண்டு தனது நடையினை தொடர்கிறான்.

வரும் வழியில் ஒரு 17 வயது கொண்ட இளம் பெண் நிற்கிறாள் அப்போது அவளை ஒரு குடிகாரன் தொந்தரவு செய்கிறான், நம் நாயகன் இதுவரையில்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அந்த பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். அவள் தான் நாயகி நாஸ்தென்கா.

நாஸ்தென்கா, அதே பகுதியில் தனது கண் தெரியாத பாட்டியுடன் வாழ்கிறாள்.  பாட்டி இவளை எப்போதும் தனது உடையுடன் சேர்த்து ஒரு ஊக்கு போட்டுக் கொண்டே பாதுகாப்பாள். ஆற்றங்கரையில் இருவரும் அமர்ந்து உரையாடும் நிகழ்வுகளின் தொகுப்பே இந்த காதல் ஓவியம்.

கனவுலகத்தில் மட்டுமே வாழ்ந்த நாயகன், முதல் முறையாக ஒரு பெண்ணை சந்தித்ததும் அவளும் இவன் கூட பேசுவது அவனின் கனவுலகத்திலிருந்து வெளியுலகத்திற்கு அழைத்து வந்தது. இருவரும் தங்கள் கதையினை பகிர்ந்து கொள்வதும் உணர்ச்சிப்பூர்வமான கருத்து பரிமாற்றம் என வாசிக்கும் நம்மை அந்த ஆற்றங்கரையின் அருகே அமர்ந்து அவர்களோடு ஒருவராக உரையாடுவது போலவே இருக்கிறது.

இவர்கள் தொரடந்து இந்து நாட்கள் இரவுகளில் சந்திக்கின்றனர். முதல் நாள் அன்று நாயகன் தனது கதைகளைச் சொல்வது போலவே கதை வேகமாக நகர்கிறது.   

நாஸ்தென்கா தன் கதையினை சொல்கிறாள்.  தான் ஒருவரைக் காதலித்ததும் அவர் தங்கள் வீட்டு மாடியில் குடியிருந்தவர் என்றும் அவர் இப்போது மாஸ்கோவில் இருக்கிறார் அவர் ஒரு வருடம் கழித்து வந்து என்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்துச் சென்றார். ஆனால் அவர் இப்போது இங்கு வந்திருக்கிறார் இதுவரை என்னை வந்து பார்க்கவே இல்லை என்று அழத்தொடங்கினாள்.  

அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு, அவளிடம் ஒரு கடிதம் எழுதச்சொல்லி அதை வாங்கிக் கொண்டு அவனிடம் கொடுக்க செல்கிறான். ஆனால் அவன் அவனைச் சந்திக்க வில்லை. 

இவர்கள் சந்திப்பில் நிகழும் உரையாடல்கள் மனதினை வருடம் வண்ணமாகவே இருக்கிறது. நாஸ்தென்கா, அவன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தாள். மிகவும் நம்பிக்கைக்குரியவன் ஏனெனில் இதுவே வேற எதாவது ஒரு ஆணாக இருந்தால் என்னைக் காதலிப்பதாகச் சொல்லியிருப்பான் ஆனால் நீ இதுவரை அதுபோல சொல்லாமல் என்னைப் பாதுகாத்து வருகிறாய் அதனாலே நீ எனக்கு மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். இன்று போலவே நம் நட்பு  வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும் என்று இறைவனுடன் வேண்டிக்கொள்கிறேன் என்கிறாள்.

நான்காம் நாள் இரவு இவர்களின் சந்திப்பில், தனது காதலன் வந்து பார்க்காததும் மேலும் ஒரு வரி கடிதம் கூட எழுதாததும் நினைத்து கவலை கொண்டிருந்தாள், அந்த ஏக்கம் அவளின் கண்ணீராக வெளியேறியது அவன் இரக்கமற்றவன் எனவும் அவனிடம் சொல்கிறாள். இந்த சூழலிலும்   அவனின் முகத்தின் தெரிந்த ஒரு குழப்பத்தினை கண்டு கொண்ட நாஸ்தென்கா அவனிடம் என்ன என்று கேட்கிறாள். அவனும் ஏதும் சொல்லாமல் இருக்கப் பார்க்கிறான் ஆனால் அவளோ விடுவதாகவில்லை. அவன் தன்னை அறியாமலே அவள் மீது அலாதி காதல் கொண்டிருப்பதைச் சொல்கிறான். இங்கே இருவருக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் மிக உணர்ச்சிவசத்துடன் அழகா காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

முதலில் ஆச்சரியமாகப் பார்த்த நாஸ்தென்கா முடிவில், அவனிடம் நீங்கள் எனக்குக் காட்டும் அன்பில் நான் அவரை மறக்க முடியுமென்றால்,நீங்கள் அவரை போலவே என்னை நிர்கதியாக விடமாட்டேன் என்றும் என் வாழ்நாளெல்லாம் கூடவே இருப்பேன் என்றும் நினைத்தால் நாம் தொடர்வோம் என்கிறாள்.

அவனை இப்போது இருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் வீட்டு மாடிக்கே குடிபெயரவும் சொல்கிறாள். 

இறுதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் போது ஒரு இளைஞன் இவர்களை உற்று நோக்கியே செல்கிறான். அவன் தான் நாஸ்தென்காவின் காதலன் அவன் அவர்களைக் கடந்து செல்லும் போது அவள் இவனை நெருக்கி நின்றதும் காதலன் இவளை நோக்கி அழைத்ததும் அவள் இவனிடமிருந்து மின்னல் வேகத்தில் சென்று அவனைக் கண்டுகொண்டு மீண்டு வந்து இவனை முத்தமிட்டு பிறகுத் தனது காதலுடன் சென்றதை அவனால் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

ஒரு கோழைக்கு வீரத்தைச் சொல்லிக்கொடுத்து அவனுக்கு முழு போர்ப் பயிற்சியும் கற்றுக் கொடுத்து நீதான் இந்த நாட்டை ஆளப் போகிறாய் அதற்குத் தயாராகு என்று சொல்லும் நேரத்தில் திடீரென அனைத்தையும் பறித்துக் கொண்டு மீண்டும் அவனைக் கோழையாகவே இருக்கச் சொல்வது எவ்வளவு கடினமானதோ அதுபோலத் தான் இங்கே அந்த கனவுலக நாயகனின் நிலையும்.

இறுதியில் நாஸ்தென்காவிடம் இருந்து ஒரு கடிதம் அவனை நிதானப்படுகிறது. இவர்களின் வாழ்வில் மீண்டும் இருவரும் சந்திப்பார்கள் அதே நட்பு இவர்களிடம் மீண்டும் மலர்ந்தது...   

         

             


                             

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

02 ஜூலை 2021 

 


No comments:

Post a Comment