Thursday, 15 July 2021

நாவல் கலை - வாசிப்பனுபவம்

 நாவல் கலை  

சி மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை 50

பக்கங்கள் 107



"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த ஏழாவது புத்தகம் தான் "நாவல் கலை". இந்த இ - புத்தகம். இந்த புத்தகம் கடந்த ஆண்டு அமேசானில் வாங்கியது. 


ஆசிரியர் சி மோகன் அவர்கள் 1977 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வெவ்வேறான சந்தர்ப்பங்களில் எழுதிய ஏழு கட்டுரைகளை நமக்காகத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொடுத்திருக்கிறார். 

நாவலாசிரியர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, தன்னளவில் ஒரு தத்துவவாதி எனவும், சிந்தனை வாதி எனவும்,புதிய கண்டுபிடிப்பாளன் எனவும் மிகத் தெளிவாகச் சொல்லிச் செல்கிறார் தனது கட்டுரைகளின் வழியே.

நாவல் என்பது ஒருவிதமான கலை. இன்றைய சூழலில் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் விஞ்ஞானம் போன்ற காரணிகளால் சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்களினால் மனிதர்களின் வாழ்வியல் முறைகள் மாறுகிறது. இது இயற்கையின் சுழற்சி இவற்றுள் சில நம்மால் நிர்ணயிக்க முடியாது போகும். எப்படி ஒவ்வொரு கலைகளும் தனித்தன்மையுடன் இருக்கிறதோ அதுபோலவே தான் நாவல் என்ற கலையும் தனித்தன்மையுடன் இருக்கிறது மட்டுமல்லாமல் நாவலாசிரியர் அந்த தனித்துவத்தின் வழியே தனது படைப்புகளை நமக்குக் கொடுக்கிறார்.

எழுத்து கலை மற்ற கலைகளிலிருந்து தனித்த குணங்களைக் கொண்டுள்ளது, ஒரு எழுத்தாளன் தன் கால  வாழ்வியல் அனுபவங்களை எழுத்தின் மூலமாக விவரிக்கிறான் என்கிறார்.

விய கலைஞன் பிக்காஸோதனது சித்திரத்தின் வழியே "கோர்னிகா" என்ற கிராமத்தில்  நடந்த குண்டு வீச்சினால் அழிந்த  கொடூரத்தினை  உருவகங்கள் மூலம் வடிவமைத்துள்ளார் என்கிறார். ஆனால் கீழ் வெண்மணி சம்பவத்தினை நாவலாக்கிய ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி தனது சுயத்தினை உட்படுத்தி உண்மையான சமூக நிகழ்வினை சரியாகக் குறிப்பிடவில்லை என்கிறார்.

நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும் என்ற கட்டுரையில் இன்று எழுத்து வியாபாரமாகிக்கொண்டே போகிறது. வியாபார நோக்கின் அடிப்படையிலே பெரும்பான்மையான எழுத்துக்கள் உதிர்கிறது எனக் குறிப்பிடுகிறார்.

பொதுவாக வாழ்வின் உண்மைநிலையை அறிய முற்படுபவன் நாவல் கலைஞன், அவனின் அனுபவத்தையும் அதன் இயல்பான தனிமையிலேயே எளிய மொழிநடையில் உருவாக நாவல் பெரிதும் சுதந்திரமாகத் தன்மையினை கொண்டுள்ளது. நாவலின் அடிப்படை குணம் வாழ்வின் யதார்த்தத்தினையும் அனுபவங்களையும் மட்டும் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதும் பெரும்பாலான நாவல்கள் பெயரளவில் மட்டும் தான் இருக்கிறது.


தமிழின் மிக மேன்மையான நாவல்கள் என்று, தி.ஜானகி ராமனின்  "மோகமுள்" மற்றும் சுந்தர ராமசாமியின் ஜே ,ஜே  சில குறிப்புகள் இவற்றுடன் எஸ். சம்பத்தின்   "இடைவெளி", ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி  என வெகு சில நாவல்களையே பட்டியலிடுகிறார்.        இதன் கூடவே சில நல்ல நாவல்கள் என சில நாவல்களைப் பட்டியலிடுகிறார்.


தாஸ்தாயெவ்ஸ்கி  அவர்களின் கடைசி  நாவலான "கரம்சோவ் சகோதரர்கள்" நாவல் கலையின் சிகரம் என்கிறார். இவரின் கலைப் படைப்பு மகத்தானது என்று மிகத் தெளிவான கட்டுரையின் மூலமாக விவரிக்கிறார்.


ஜி. நாகராஜனின் இலக்கிய எழுத்துத் ஒரு தனி பிராந்தியம். மனிதர்களின் இயல்புணர்வுகளையும், சமூகத்தில் பெரும்பாலும் இருக்கும் விளிம்புநிலை மனிதர்களின் உணர்வுப்பூர்வமான வாழ்நிலையையும் தன் படைப்பின் மிகத் தெளிவாகப் பதித்துள்ளார். நாளை மற்றுமொரு நாளே நாவலின் முக்கிய பாத்திரமான கந்தனின் வாழ்வியலை இயல்பாகவே வெளிப்படுத்தியிருப்பார் அதுபோலவே குறத்தி முடுக்கு வில் தங்கத்தின் பாத்திரம் அவளின் தொழிலிலும் எனப் படைப்புக்கு ஏற்றாற்போல் தங்கத்தின் நிலை ஒரு அபூர்வ பெண்ணாக சித்தரித்திருப்பார் என்று விவரமாகக் குறிப்பிடுகிறார்.


சம்பத்தின் - இடைவெளி , இவற்றில்   தனக்கு ஏற்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரை வழியே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். மீண்டும் இந்த நாவலின் சில பகுதிகளில் மாற்றங்கள் மற்றும் தெளிவான வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக சம்பத் அவர்களிடம் பேசி பின்னர் திருத்தப் பட்ட புதிய பொலிவுடனான நாவலாக வெளியிடப்பட்டது.

ப. சிங்காரத்தின், எழுத்துக்கள் பெரும்பாலும் சம கால கலைஞர்களால் அங்கீகரிப்படவில்லை. ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்களும் தமிழ் நாவலின் ஓர் அபூர்வம் என்கிறார். கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி என இந்த இரண்டு நாவல்களும் தனித்தன்மை வாய்ந்தது எனவும் அவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 


தி. ஜானகி ராமன் அவர்களின் "மோகமுள்", பொதுவாகத் தமிழில் நாவல் ஆரம்பித்தது "பிரதாப முதலியார் சரித்திரம்" இருந்துதான் என்பது உண்மை ஆனால் மோகமுள் தான் ஒரு உன்னதமான நாவலின் தொடக்கம் என்கிறார்.

இந்த நாவல் கலை தொகுப்பின் வழியே நமது மனதில் இருக்கும் நாவல்களை பற்றிய  எண்ணற்ற கேள்விகளுக்கு  நேர்த்தியான பதில் கிடைக்கிறது. ஒரு நாவல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உரித்தான சிந்தனைகளாகட்டும் அலல்து ஒரு நாவலினை எப்படி வாசிப்பது மேலும் அவற்றை எப்படி மதிப்பீடு செய்வது என நேர்த்தியான காரணங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

16 ஜூலை 2021


   

     


 





No comments:

Post a Comment