Friday 9 July 2021

நீராட இருக்கிறது நதி - வாசிப்பனுபவம்

 நீராட இருக்கிறது நதி 

திரையுலகின் ஒரு சகாப்தம் 

சி மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 83





தமிழ் திரையுலகின் மறக்க முடியாத ஆளுமைகள் கருப்பு வெள்ளை காலத்திலியே களம் கண்டவர்கள் எண்ணற்றவர்கள். இன்றளவும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து நம்மை ஆட்கொள்பவர்கள். ஆம் அப்படிப் பட்ட ஆளுமைகளையும் திரையுலக எதார்த்தையும் பற்றித் தான் நமக்கு "சி மோகன்" அவர்கள் இந்த "நீராட இருக்கிறது நதி" என்ற இ- புத்தகத்தின் வழியே பல ஆளுமைகளின் தரிசனத்தைக்  கொடுத்துள்ளார்.

"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த ஐந்தாவது புத்தகம் தான் "நீராட இருக்கிறது நதி". இந்த இ - புத்தகம்,  ஆசிரியர் சி. மோகன் அவர்கள் கிண்டிலில் கடந்த மாதம் இலவசமாக அறிவித்ததில் தரவிறக்கம்  செய்தது.

இந்த கட்டுரை தொகுப்பு 2011 ஆண்டில் "காட்சிப்பிழை திரை" என்ற இதழில் தொடர்ந்து வெளிவந்தது. நமக்காக ஒரு ரசிகனின் கைவண்ணத்தில் தொடுத்த கதம்ப பூ மாலை போல மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தொடுத்திருக்கிறார் ஆசிரியர் சி மோகன்.

கருப்பு வெள்ளை காலத்தில் திரைப்படங்களைத் திரை அரங்குகள் சென்று தான் பார்க்க வேண்டும் அப்படித்தான் இருந்தது அந்த காலகட்டம். ஆனால் இன்று நவீன யுகத்தில் இருக்கும் நமக்கு விரும்பியோ அல்லது விரும்பாமலோ நித்தமும் "கருப்பு வெள்ளை" பாடல்களோ அல்லது எதாவது ஒரு திரைப்படமோ நம் வீட்டுத் தொலைக்காட்சியில் திரையிடாமல் இருப்பதில்லை எனவே காலங்கள் எத்தனை ஆனாலும் நம் திரையுலகத்தில் தொடக்கமாக இருந்த பல ஆளுமைகள் நீண்ட காலம் நிலத்து நிற்பார்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

ஆசிரியரின் குறிப்பில், இவ்வாறு குறிப்பிடுகிறார், நினைவுகள் மறதிகளால் ஆனவை என்பதால், அவை மறதிகளில் மங்கி, கற்பனைகளில் ஒளிர்கின்றன. இந்த கட்டுரைகளில் இந்த கற்பனை அம்சமும் உறைந்திருப்பதாகவே உணர்கிறேன்" என்கிறார். முழுவதும் வாசித்து முடித்த பிறகு நமக்கு இதில் ஏதேனும் கற்பனைகள் இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இருக்காதென்று சொல்லலாம். ஒவ்வொரு தகவல்களும் சிறப்பாகவும் உண்மை கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதாகவே தோன்றுகிறது.

நாம் பண்டைய காலத்திலிருந்தே திருவிழாக்களோடே சேர்ந்து வாழ்ந்து வந்தவர்கள், இன்றளவும் எண்ணிலடங்கா திருவிழாக்கள் நடக்கத்தான் செய்கிறது இருந்தாலும் சில திருவிழாக்கள் அல்லது அவற்றை நாம் முன்னெடுக்கும் விதமானது அந்த பழைய வீரியத்துடன் இல்லாமல் இருக்கிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மையே. அப்படி நம்மை விட்டு விலகிப் போன பெருவாரியான திருவிழாக்கள் நம்   திரைப்படத்தின் வழியே நம் கண் முன்னே நடந்தேறுகின்றது எனவே திரைப்படம்  ஒரு நவீன சமய திருவிழா என்று சொல்வது ஆகச் சிறந்ததாகும் என்கிறார்.

அவரின் இளம்பருவ காலகட்டத்தில் திரையில் தோன்றிய கருப்பு வெள்ளை தேவதைகளைப் பகலில் தோன்றிய நிலவு என்று உவமையாகக் குறிப்பிடுகிறார். குறிப்பாகச் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி மற்றும் தேவிகா என அன்றைய தேவதைகளைப் பட்டியலிடுகிறார். அதனால் இன்றைய தேவதைகளை அவர் குறை சொல்லவில்லை குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சிம்ரன், த்ரிஷா என இந்த நவீன திரையுலகின் தேவதைகளையும் சிறப்பாகவே சொல்கிறார்.

சாவித்திரியம்மா அவர்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. தனது திரையுலகிலும் சரி, தனது வாழ்விலும் சரி மிகப் பெரிய சோதனைகள் கடந்தவர் தான் சாவித்ரியம்மா. இவர் தமிழ் மக்களின் வீட்டில் ஒரு மகளாக, தங்கையாக, அக்காகவே வாழ்ந்து இருக்கிறார். இவர் மறைந்த போது பெரும்பாலும் அழாத தாய்கள் தமிழ்நாட்டில் இல்லையென்றே சொல்லலாம் என்கிறார். மௌனம் என் தாய்மொழி என்ற பாடலில் வரும் "பகலில் தோன்றும் நிலவு: கண் பார்வைக்கு மறைந்த அழகு" இந்த வரிகள் இவருக்கே பொருந்தும் என்கிறார். இந்திய அரசால் "நினைவு அஞ்சல் தலை" வெளியிட்டிருப்பது இந்த ஒரு தமிழ் நடிகைக்கு மட்டுமே என்பது ஒரு பெருமிதமே.  

கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி, தனது அபிநயத்தில் அசத்தும் அசாத்திய திறமையால் தமிழ் ரசிகர்களை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டிருந்தது இந்த கன்னடத்துப் பைங்கிளி என்பதில் சந்தேகம் ஏதுமில்லை என்றே சொல்லலாம். தமிழில் அதிகமாகக் கல்லூரி மாணவியாக நடித்தவர் இவராகமட்டும் தான் இருக்கமுடியும் என்கிறார். இவரின் கொஞ்சும் குரல் இன்றளவும் இனிமையாகத்தான் இருக்கிறது.

வைஜெயந்திமாலா, என்னதான் தமிழ் நாட்டுப் பெண்ணாக இருந்தாலும் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியில் திரையுலகில் கொடிகட்டிவந்தவர் என்பதால் அவரை தமிழ் திரையுலகின் நாயகி என மனம் ஏற்க மறுக்கிறது என்கிறார். உண்மைதான் நான் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மும்பையைச் சேர்ந்தவர் அவர் எப்போதும் என்னிடம் வைஜயந்தி மாலாவைப் பற்றிப் பேசுவார் ஆனால் எனக்கு அவரை பற்றித் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. முதலில் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி பின்னர் அதே படம் இந்தியில் எடுக்கும் போது இவரே நாயகியாக நடித்ததால் படம் வெற்றி ஆனதால் இவரின் இந்தி திரையுலக வாசல் திறந்து வரவேற்றது இவரின் பெரிய அதிர்ஷடம் என்பதே ஆகும்.

நாட்டிய பேரொளி பத்மினி, இவர்களைப் பற்றிய எண்ணற்ற விவரங்கள் இருக்கிறது இருந்தாலும் இன்றளவும் இளையோர்களையும் கட்டிப் போட்டு வைத்திருக்கும் "தில்லானா மோகனாம்பாள்கதாபாத்திரமும் அதில் இடம்பெற்ற "நலம் தானா என்ற பாடலுக்கு இவர் தன் கண்களால் பேசும் மொழியும் எத்தனை காலங்கள் ஆனாலும் அகலவே அகலாது என்பதுதான் நிஜம். 

தேவிகா பற்றிச் சொல்லும்போது அவருக்கு என்று எந்த பட்டமும் கொடுக்கவில்லை என்ற தன மன வருத்தத்தைப் பதிவு செய்கிறார். கூந்தலழகி என்றாவது கொடுத்திருக்கலாம் என்கிறார். இவரைப் பற்றி வாசிக்கும் போது ஆசிரியர் குறிப்பிடும் பாடல் காட்சி. "அழகே வா,,, அருகே வா" இந்த பாடலை யூ டுபில் பார்த்துவிட்டு வந்துதான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். அவர் சொன்னதுபோலவே தேவிகா தான் கண்களால் நாயகனைச் சுண்டி அழைக்கும் அழகே அழகுதான்.

தமிழ் திரையுலகின் முதல் கவர்ச்சி தேவதையும், கனவுக்கன்னியும்  டி.ஆர். ராஜகுமாரி (தஞ்சாவூர் ரெங்கநாயகி ராஜாயி)  என அழகா வர்ணிக்கிறார். மயக்கும் மந்திர புன்னகை,  உதடுகளின் மாயச் சுழிப்பு, கண்களின் வசீகரம் என இவரின் அழகை அபாரமாக வர்ணிக்கிறார்.  இங்கேயும் மீண்டும்  யூ டுபில் "மன்மத லீலையை வென்றார்"  என்ற பாடலில் இவரின் அபிநயத்தினை ரசித்துவிட்டு வந்துதான் மீண்டும் வாசித்தேன். அத்தனை அழகுதான் அவர். இத்தனை அழகின் பொக்கிஷம் கடைசிக் காலத்தில் தொழு நோயால் இறந்து போனார் என்றதும் மனம் ஒரு நொடி கலங்கித் தான் போனது.

தியாகராஜ பாகவதரும் ராஜகுமாரியும் சேர்ந்து நடித்த "ஹரிதாஸ்தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தொடர்ந்து 110 வாரங்கள் ஓடி மகத்தான சாதனை புரிந்தது.

மச்சக்கன்னி பாரதி, மற்றும் ஸ்ரீதர் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யமானவை எனவும் நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தில் நாயகன் மருத்துவமனையில் இருக்கும் போது அந்த அறைக்குள் காட்சிப்படுத்தப் பட்ட ஒரு பாடல் காட்சி அதுதான் "சொன்னது நீதானா, சொல் சொல் என்னுயிரே" மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும் என்கிறார்.

இந்திய திரைப்படத்தின்  அழகி "மதுபாலா". உலகின் அழகுக்கு இலக்கணமாக மர்லின் மன்றோ இருக்கலாம் ஆனால் அழகின் ஆன்ம என்பது மதுபாலா என்கிறார். மதுபாலாவை பற்றிய அருமையான தகவல்கள் நிறைந்து இருக்கிறது. இத்தனை அழகின் அரசியாக இருந்த இவர் 35 வயதிலே நம்மை விட்டுப் பிரிந்தது நமது துரதிஷ்டம் எனலாம்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவையும் பாடல்களும் பெரும்பான்மையான இடத்தை பெற்றிருக்கிறது என்றால் அதில் தவறேதும் இல்லை . என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, தங்கவேல், கருணாநிதி, காளி என் ரத்தினம் எனக் கருப்பு வெள்ளை காலத்திலும் பிறகு கௌண்டமணி செந்தில் வரைக்கும் எல்லோரது சிறப்புகளையும் தொகுத்துக் கொடுத்தவர் "நாகேஷ்"  என்ற ஒரு மிகப் பெரிய நகைச்சுவை பிம்பத்திற்கு எங்கும் அவர் கோடிட்டுக் கூட காட்டவில்லை என்பது ஒரு வருத்தமாகத்தான் இருக்கிறது.

இறுதி கட்டுரையில் கலகக்காரனாக வாழ்ந்த கலைஞன் என்று எம் ஆர் ராதாவைப் பற்றிய வெகுவான விவரங்களை நேர்த்தியாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். நாடக உலகில் கொடிகட்டிப் பறந்தவர் திரையுலகில் முதலில் வெற்றி காணமுடியாமல் மீண்டும் நாடக உலகிற்கே முழு கவனத்திலும் செலுத்தியவர் தந்து புகழ்பெற்ற ரத்த கண்ணீர் நாடகத்தைத் திரைப் படமாக்கி மீண்டும் ஒரு புதிய தடத்தினை பதித்து வெற்றியும் பெற்றார். நடிகவேள் என்ற பெயருக்குப் பொருத்தமாக தன் இறுதிக்காலம் வரை பல்வேறு வடிவங்களில் மக்களுக்குப் பகுத்தறிவைப் புகட்டியவர் என்றால் அதில் தவேறுதுமில்லை என்றே சொல்லலாம். கலைஞர் கருணாநிதிக்கு "கலைஞர்"  என்ற பட்டதைக் கொடுத்தவர் எம் ஆர் ராதா தான் இருந்தாலும் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு விருது கூட எம் ஆர் ராதா பெயரில் கொடுக்காது வருத்தத்துக்குரியது என்கிறார் ஆசிரியர்.

ஒரு நூற்றாண்டு கால திரையுலகின் எண்ணற்ற விவரங்களையும் அருமையான நிகழ்வுகளையும் நேர்த்தியக்கான பார்வையையும் இந்த தொகுப்பின் மூலம் நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எண்ணற்ற தகவல்களைத் தெரிந்து கொண்ட திருப்தியுடன் எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்.

10 ஜூலை 2021  

No comments:

Post a Comment