Friday 9 July 2021

அங்கீகரிக்கப்படாத கனவுகளின் வலி (நேர்காணல்கள்) - வாசிப்பனுபவம்

அங்கீகரிக்கப்படாத கனவுகளின் வலி 

(நேர்காணல்கள்)   

சி மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 73

பதிப்புத் துறையின் பன்முகத்திறமையாளராக திகழும் "சி மோகன்" அவர்களிடம் வெவ்வேறான காலகட்டங்களில் எடுத்த நேர்காணல்களின் தொகுப்பே இந்த  "அங்கீகரிக்கப்படாத கனவுகளின் வலி" என்ற இந்த இ- புத்தகம்.   

"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களை குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த நான்காவது புத்தகம் தான் "அங்கீகரிக்கப்படாத கனவுகளின் வலி  - நேர்காணல்". இந்த இ - புத்தகம்,  ஆசிரியர் சி. மோகன் அவர்கள் கிண்டிலில் கடந்த மாதம் இலவசமாக அறிவித்ததில் தரவிறக்கம்  செய்தது. 

சென்னை இணையதளம் - நடத்திய நேர்காணல், இனிய உதயம் இதழ் எடுத்த நேர்காணல், த சண்டே இந்தியன் -இதழ் எடுத்த நேர்காணல் மற்றும் குங்குமம் வார இதழ் எடுத்த நேர்காணலும் சேர்ந்து மொத்தமாக ஒரு அருமையான தொகுப்பாகவே அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் மிக நேர்த்தியான பதில்களைக் கொடுத்திருக்கிறார்.

படைப்பிலக்கியம் என்பது ஒரு தனி நபரோடு மட்டும் நின்று கொள்வதில்லை, அது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும், பல பரிணாமங்களில் பல புதிய புதிய தலைமுறைகளைத் தாண்டி இலக்கியம் நகர்ந்துகொண்டே தான் இருக்கும்.

கலை இலக்கியத்தில் நாம் பாரம்பரியமாகவே செழுமையும் தொன்மையும் கொண்டிருக்கிறோம், நமது மொழி வளமானது, அபாரமானது  மட்டுமல்லாமல் நமது கட்டிடக்கலை, சிலைகளும், சிற்பங்களும் மேலும் நாட்டார் கலைகளும் என நாம் எந்த விதத்திலும் தாழ்ந்துவிட இல்லையே ஆனால் அதே சமயம் அந்நிய ஆதிக்கத்தாலும் கால மாற்றத்தாலும், புதிய கல்விமுறைத் திணிப்பாலும் மற்றும் சமூக கலாச்சார வீழ்ச்சியாலும் நடந்து கொண்டிருக்கும் சில மாறுபாடுகள் நம் கையில் இல்லை.

தமிழ் படைப்புலகுக்கு முக்கியமான பங்களிப்பு செய்த சில ஆளுமைகளைத் தமிழ்ப் படைப்புலகம் போற்றத் தவறிவிட்டது என்பதை ஆணித்தனமாக சொல்கிறார் அதே சமயம் ப.சிங்காரம், ஜி. நாகராஜன், பிரமிள் போன்றோரைப் பெரிதும் போற்றி சொல்கிறார்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தனக்கு பிடித்தமானவர்கள் என சம்பத், ப.சிங்காரம், நகுலன், தி. ஜானகி ராமன்,  சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், மற்றும் அசோகமித்திரன் எனப் பெரிதும் போற்றக்கூடியவர்கள் இருக்கின்றனர்  மேலும்  தமிழ் கவிமொழியில் பிரதானமானவர்கள் என கலாப்ரியாவும் விக்ரமாதித்யனும் எனக் குறிப்பிருக்கிறார். நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒட்டுமொத்தமாக மௌனி, பிரமிள், நகுலன் சம்பத் ஆகியோர் குறிப்பிடுகிறார்.

படைப்பு மொழியில் உள்ள சிக்கல்களையும், சிடுக்குகளையும் அகற்றி நேர்த்தியாக வாசிப்பதற்கு ஏற்ற பிரதியை உருவாக்குபவனே எடிட்டர்அப்படிப் பட்ட எடிட்டிங் என்பது ஒரு பதிப்பினை மெருகேற்றும் ஒரு கலை அதில் எனக்கு அதீத ஈடுபாடு இருந்ததால் நான் அதை விரும்பி செய்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நாவல் என்ற கலைச்சாதனம் குறித்த தனது பிரமிப்பை மனிதக்குல வரலாற்றில் மனிதனின் அபாரமான கண்டுபிடிப்பே நாவல் கலைதான் என்கிறார்  ஆனால் பிறகு நாவல் பற்றிய ஆய்வு மேற்கொண்டிருந்த காலத்தில் இன்னும் விளக்கமாகவும் ஒரு கட்டுரையை எழுதியதின் விளைவே சில விவாதங்கள் அந்த விவாதங்களின் முடிவில் ஆய்வை கைவிடவேண்டியதாயிற்று.

வழக்கை முறை குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும், ஏற்பாகவும் நிராகரிப்பாகவும், அழகிய கவர்ச்சியாகவும், அபாய எச்சரிக்கையாகவும் என வினோதமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தியவர் தனக்குக் கணித ஆசிரியராக அறிமுகமான விசேஷ ஆளுமையான ஜி நாகராஜன் அவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் ஏற்ற தருணங்கள் மற்றும் பின்னடைவுகள் எனக் குறிப்பிடுகையில், 1975 முதல் 1970 வரையிலான 25 ஆண்டுகள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டப் பட்ட காலம். க.நா.சு., சி.சு. செல்லப்பா என இருவரும் இருபெரும் இயங்களாகச் செயல் பட்ட காலம் என்கிறார்.  

மேலும் பல சுவாரசியமான கேள்விகளும் அதற்கு ஈடான பதில்களும் என இந்த தொகுப்பு முழுவதும் வாசிக்க வாசிக்க ஆர்வம் கூடிக்கொண்டே இருக்கிறது.

அருமையானதொரு தொகுப்பினை வாசித்த அனுபவங்களுடன்...

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்   

08 ஜூலை 2021                                 


No comments:

Post a Comment