Saturday, 17 July 2021

காலம் கலை கலைஞன்

 காலம் கலை கலைஞன்

சி மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 47


"வாசிப்பை நேசிப்போம்"
 குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த எட்டாவது  புத்தகம் தான் "காலம் கலை கலைஞன்". இந்த இ - புத்தகம்,  ஆசிரியர் சி. மோகன் அவர்கள் கிண்டிலில் கடந்த மாதம் இலவசமாக அறிவித்ததில் தரவிறக்கம்  செய்தது.

"தீராநதி" என்ற இதழில், 2002 ஜூன் முதல் டிசம்பர் வரை தொடராக வெளிவந்ததின் தொகுப்பு தான் இந்த "காலம் கலை கலைஞன்" என்ற புத்தகம்.  

இந்த தொகுப்பின் வழியே, ஒரு ஆகச் சிறந்த படைப்பாளர் என்றால் யார், ஒரு வாசிப்பாளர் யார் மேலும் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என பல்வேறு விதமான விவரங்களை உள்ளடக்கிய ஒரு அருமையான புத்தகம் இது.

கலை என்பது கனவு, கலாச்சாரம், அர்த்தங்கள், நுண்மைகள், அறங்கள் என பல்வேறுபட்ட சாத்திய கூறுகளினை சார்ந்த ஒரு தனி உலகம் என்கிறார் ஆசிரியர்.

ஒரு படைப்பாளி என்பவர் தனது படைப்பின் மூலம் வெளிக்காட்டும் கருத்து எல்லா காலகட்டத்துக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. ஆனால் ஒரு படைப்பாளிக்கு இன்றைக்கு இருக்கிற பொறுப்பு என்பது "கனவுகளற்றுப் பதவிக்கும் சமூகத்திற்கான கனவுகளைக் கண்டடைய வேண்டியதாகத் தான் இருக்கிறது. இந்த பொறுப்பினை ஒரு படைப்பாளி மிக நேர்த்தியாகக் கையாளவேண்டும் என்கிறார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறி உருவான அமெரிக்கர்கள் ஏற்படுத்திய தனிமனித வெற்றியை மட்டும் குறிக்கோள்களாகக் கொண்டு இன்று உலகம் முழுவதும் இது ஒரு அடையாளமாக முன்னிறுத்தியிருக்கிறது மட்டுமல்லாமல் சுய பாதுகாப்பு என்று மக்களை ஒரு வட்டத்துக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள்  என்கிறார்.  ஆனால் நமக்கான கனவுகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய பொறுப்பையும் தகுதியினையும் காலம் ஒவ்வொரு படைப்பாளியிடமும் கேட்டுநிற்கிறது என்று குறிப்பிடுகிறார்.

ஒரு ஆகச் சிறந்த படைப்பாளியானவன், இன்றைய சூழலில் அலுவலக சுவருக்குள் அடைந்து கிடக்கும்  நம்மை, இந்த அவலமானநிலையிலிருந்து வெளிக்கொணரத் தனது படைப்பினை ஒரு சக்தியாகக் கொடுப்பவன் தான் என்கிறார். வாழ்வின் உட்சபட்ச சத்தியங்களுக்கு அழைத்துச் செல்லும் மிகப் பெரிய சக்திதான் கலை மற்றும் இலக்கியம் எனவே இத்தனை சாதியினை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கலையினை எவ்வாறு படைக்க வேண்டும் என்பதில் மிக நேர்த்தியான முறை இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

எப்படி இந்த சமுதாயத்தில் ஒரு தனி மனிதன் எப்படி தன்னை சுற்றியுள்ள உறவுகள் , நட்புகள் என பல்வேறு விதமான புரிந்துகொள்ளலுக்கு ஆளாகிறானோ அதைப்போலவேதான்  ஒரு கலைப் படைப்பும் பல்வேறு கோணங்களிலிருந்து வரும் எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு  படைப்பாளியிடம் இருந்து தனித்து இருக்கிறது. 

தாஸ்தாயெவ்ஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள்"  எப்படி ஆரம்பத்தில் உருவான நிலையிலிருந்து முடியும் போது தன்னை தானே செதுக்கிக் கொண்டதோ அதைப்போலவே தான் ஒரு படைப்பு தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. அதுபோல டால்ஸ்டாய் தன்  கதையில்  "அன்னா கரீனாவை" மிக மோசமான பெண் என்று சித்தரிக்கிறார் ஆனால் இறுதியில் அன்னா புரிந்து கொள்ளவேண்டியவள் என்று கதை தனது போக்கில் செதுக்கிக்கொள்கிறது அதைப்போலத் தான் படைப்பாளி தன் சுயத்தைக் கதைக்குள் திணிக்காமல் இருக்கவேண்டும் அப்படி இருக்கும் ஒரு படைப்பாளி தான் ஆகச்சிறந்த படைப்பாளி என்கிறார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து நிகழ்ந்தேறிய கலை, இலக்கிய வெளிப்பாடுகள் மேற்கத்தியப் பாதிப்புகளிலிருந்து உருவாகின எனவும், நம் கலையின் வளமான மரபின் தொடர்ச்சியையும், சாயல்களையும் இந்த வளர்ச்சி இழந்து விட்டிருந்தன என்கிறார்.  நவீன கலை இலக்கியத் தோற்றத்திலிருந்து மட்டுமல்லாமல் தொடர்ந்து வளரும் கலைகள் குறிப்பாக ஓவியக் கலை ஒரு பெரிய சிற்பக்கலைகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். ஆனால் நவீன கலை பெரும்பாலும் மேற்கத்தியக் கல்வித்துறைசார்ந்த நம்மிடம் வளர்ந்தது மட்டுமல்லாமல் தமிழில் நாவல், சிறுகதை ஆகியவையும் இந்த பின்புலத்தில் தான் அமைந்திருக்கிறது என்கிறார்.

நவீன கலையின் உயர் மரபு பஞ்சாபி பெண்ணான அம்ரிதா செர்-கில்லிடமிருந்துதான் 1930களில் தொடங்க ஆரம்பித்தது என்றும் மேலும் வங்கத்தில் 20 ஆம் நூற்றாண்டில் அபனீந்திரநாத் தாகூர் தலைமையில் உருவான புத்துயிர் இயக்கம் தான் மிக முக்கியமானது அதுபோல தமிழ் இலக்கியத்தின் உயர் மரபு  புதுமைப்பித்தன் மற்றும்  மௌனியிடம் இருந்து தொடங்குகிறது என்றாலும் மிக முக்கியமான இயக்கம் என்பது க. நா. சு தான் என்கிறார்.

தொடக்கத்தில் நவீன கலை ஊடகங்களைக் கையிலெடுத்தவர்கள் அரசாங்கக் கல்வி பெற்ற மேல் சாதியினர்தாம் என்றும் அவர்கள் நவீனத்துவ சிந்தனைகளுக்கு உள்ளே போயிருந்தால் தங்கள் சாதி சார்ந்த குற்ற உணர்விலிருந்து இவர்கள் தப்பிக்க முடியாது அதனால் தான் இவர்கள் நவீனத்துவத்தின் உள்ளார்ந்த பாதிப்புக்கு ஆளாகாமலேயே நவீன ஊடகங்களில் இவர்கள் செயல்பட்ட முரண்பாடுகளிருந்து தான் நம் தாழ்ச்சி தொடங்குகிறது இருந்தாலும் இவர்கள் ஒரு சமூகத்திற்கு இழைத்த அநீதிகளை அறிந்துணர்ந்திருந்தால் இவர்கள் இழைத்த குற்றவுணர்வு இவர்களை ஆடிக்கொண்டிருக்கும் என்கிறார்.

இன்று மனித வாழ்க்கை ஒரு பொறியில் சிக்கிக் கொண்டு இருக்கிறது அதுவும் அன்றாட நடைமுறைகளைச் சார்ந்த குறுகிய வட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டது. இதன் காரணமாக நமக்கு ஏற்படும் சில நெருடல்களுக்கு விடை கொடுக்கவும் நமது இருப்புக்கான மாறுபட்ட சாத்தியப்பாடுகளையும், கனவுகளையும் வசப்படுத்தும் ஓர் கலை வடிவம் தான் நாவல். தமிழ் நாவல்களில் குறிப்பாகச் சொல்லப்போனால்,  "இடைவெளி" யின் மூலம் சம்பத், "புயலிலே ஓர் தோணி"யின்  மூலம் ப.சிங்காரமும், மேலும் "நினைவுப்பாதை" மற்றும் "வாக்குமூலம்" வழியே நகுலனும் , "விஷ்ணுபுரம்" வழியே ஜெயமோகனும் சில எல்லை வரை நாவல் ஊடகத்தின் வழியே பயணித்திருக்கிறார்கள் என்கிறார்.

நல்லதொரு  அருமையான விவரங்களை உள்ளடக்கிய அற்புதமான கலை தொகுப்பு தான் இந்த "காலம் கலை  கலைஞன்" .

முக்கியமாக வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 ஜூலை 2021

  

No comments:

Post a Comment