நடைவழி நினைவுகள் தொகுதி - 3
ஆசிரியர் : சி. மோகன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 50
பக்கங்கள் 87
இந்து தமிழ் நாளிழதில் ஞாயிறு பதிப்பாகத் தொடர்ந்து 64 வாரங்கள் வெளிவந்த தொடரின் ஒரு பகுதியின் தொகுப்பே இந்த புத்தகம். இந்த தொகுப்பில் 16 வாரங்களின் கட்டுரைகள் இருக்கிறது.
இந்த தொகுப்பின் மூலம் நான்கு இலக்கிய ஆளுமைகளின் பல குறிப்புகளை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆசிரியர் சி. மோகன் அவர்கள் தாம் நெருங்கிப் பழகியது பல்வேறு இலக்கிய ஆளுமைகள் மற்றும் அவர்களுடன் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிகள் செய்ததும் அதன் வழியே அவர்களின் நினைவின் நீங்காமல் இருக்கும் சில குறிப்புகள் நமக்கு அந்த ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆவணமாக இருக்கிறது. அதற்காக அவருக்கு நமது நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.
அசோகமித்திரன்: 60 ஆண்டுகளுக்கு மேலான தொடர் எழுத்தியக்கம் இவருடையது. 272 சிறுகதைகள், 13 குறுநாவல்கள், 9 நாவல்கள் மேலும் விமர்சனம், அனுபவிப்பதில் என வெகுவான எழுத்துக்களை நமக்காகப் படைத்தவர். அவருக்காக, இருவரும் சேர்ந்து செய்த பல படைப்பு பணிகளில் ஏற்பட்ட இணக்கமான உறவுகள், உரையாடல்கள் எனப் பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறப்பாக இருக்கிறது.
அசோகமித்திரனின் நுண்ணுணர்வும், சூட்சம தொனியும், செய்நேர்த்தியும், பரிவான குரலும் அதேசமயம் கூர்மையான கிண்டலும் அம்சங்களாக அவருடைய எழுத்துக்களில் வெளிப்பட்டன அதுமட்டுமல்ல அவரின் வாழ்விலும் பரிவு மனிதர்களிடமும், கலைப்பொருட்கள் மீதும் அந்த பரிவு இருந்தது என்கிறார் ஆசிரியர். மோகன் அவர்களின் நண்பர் டக்ளஸ் அவர்கள் பரிசாகக் கொடுத்த ஒரு ஓவியத்தினை மிகவும் பத்திரமாகக் காத்துவைத்திருந்தார் தனது முதுமையின் காரணமாக மகன் வீட்டுக்குக் குடிபெயர்ந்த பொது அந்த ஓவியத்தினை என்னிடமே கொடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச்சொன்னார் என்று குறிப்பிடுகிறார்.
நான் இவருடைய "ஒற்றன்" படித்திருக்கிறேன், மிகவும் யதார்த்தமாகவும் அவர் அந்த நகரத்தில் சந்தித்த புது புது மனிதர்களையும், புதிய சூழ்நிலைகளையும், நிகழ்வுகளையும் மிக அழகாகச் சொல்லியிருப்பார்.
மா. அரங்கநாதன்: மரபும் நவீனமும், தத்துவமும் புனைவும் கூடி முயங்கிய கலை மனம் மற்றும் சைவ சித்தாந்த கலை இலக்கியத்தின் நவீன படைப்பாளி மட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், நவீனத் தமிழ் இலக்கியத்தில் நுட்பமான பார்வையும், உலக இலக்கிய பரிச்சயமும், சமய ஞானிகளின் தரிசனங்களில் மனத்தோய்வும், ஜோதிட மற்றும் என்கணித ஈடுபாடும் கொண்டவர் இவர் என்கிறார். இவர் 90 சிறுகதைகள், இரண்டு நாவல்கள், 46 கட்டுரைகள் என பல்வேறு பரிணாமங்களில் தனது படைப்பினை கொடுத்துள்ளார். இவரின் மறைவுக்குப் பிறகு இவரின் நினைவாக "அரங்கநாதன் இலக்கிய விருது" என்ற விருதினை வருடம்தோறும் இருவருக்கு வழங்கப்படுகிறது.
வெங்கட் சாமிநாதன்: வெங்கட் சாமிநாதனின் புதுக்குரல், ஆவேசமும் தார்மீகமும் கொண்டது. ஆரம்பக்காலத்தில் "எழுத்து" இயக்கத்தின் மூலமாகவே தனது எழுத்துகளுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானார். இவருடைய எழுத்தியக்கமானது சிறுபத்திரிக்கை வட்டத்துக்குள்தான் எப்போதும் இருந்திருக்கிறது அதன் பாதிப்பில் தான் அவர் சிறுபத்திரிக்கையின் மீது அதிக ஈடுபாடுகள் கொண்டு அவற்றை செழிவுபடுத்தினார்.
ந.முத்துசாமி: ஆரம்பக்காலத்தில் எழுத்து இயக்கம் மூலமாக அறிமுகமாகி, கால வளர்ச்சியினூடாக தனித்துவமிக்கவராக திகைத்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்கிறார் ஆசிரியர். முதலில் எழுத்து கலையில் அதிக ஆர்வம்கொண்ட இவர் காலப்போக்கில் தனது லட்சியமான நாடக கலையின் மீது பெரும் ஈடுபாடுகளைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக "கூத்துப்பட்டறை" என்ற பயிற்சிப் பட்டறையை நண்பர்களின் நிதி உதவியுடன் இந்த நாடக கலையின் வளர்ச்சிப் பாதையினை ஆரம்பித்தார். ஆசிரியர் சி.மோகன் அவர்களின் நட்பும் பிறகு அது நீண்டகாலம் தொடர்ந்து இருந்ததும் அவருடைய மகன் இவர் மீது கொண்ட நட்பும் என பல்வேறு சுவரசியாமான நிகழ்வுகள் தெரியவருகிறது. 1977ல் ஆரம்பித்த இந்த கூத்துப்பட்டறை இவரின் நீண்ட கால நெடும்பயணமாக இன்றளவும் பயணித்துக்கொண்டேதான் இருக்கிறது. தனது வாழ்நாளில் ஒரு நிறைவான கலை வாழ்வு வாழ்ந்த கனவு மனிதர் தான் இவர் மட்டுமல்ல இவரின் காலம் தமிழ்ச் சிறுகதைப் பரப்பிலும், நவீன நாடகப் பரப்பிலும் என்றென்றும் நீடித்து நிலைத்து இருக்கும் என்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
24 ஜூலை 2021
No comments:
Post a Comment