Sunday 4 July 2021

தெறிகள் - (முன்னுரைகள் - மதிப்புரைகள்) - வாசிப்பனுபவம்

தெறிகள்  

முன்னுரைகள் - மதிப்புரைகள்  

சி மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 50

பக்கங்கள் 99



வாசிப்பை நேசிப்போம் குழுவில் நடக்கும் மாதம் ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் சி மோகன் அவர்களின் புத்தகங்கள் வாசித்து அனுபவங்களைப் பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக வாசித்த புத்தகம் தான் "தெறிகள்". இந்த நூல் சி. மோகன் அவர்கள் இலவசமாகக் கடந்த மாதம் அறிவித்ததில் தரவிறக்கம் செய்தது. 

எழுத்தாளர் சி. மோகன் அவர்களின் இந்த இ-புத்தகம் அவர் 1977 முதல் 40 வருடங்களாகப்  பல புத்தகங்களுக்காக எழுதிய முன்னுரைகளையும், புத்தகங்களுக்கான மதிப்புரைகளையும் தொகுத்து இரண்டு பகுதியாகக் கொடுத்திருக்கிறார். இந்த இ - புத்தகத்தின் வழியே நமக்குப்  பல பிரபலமான எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும்  அதுபோலவே பல  நல்ல புத்தகங்களின் அறிமுகமும் கிடைப்பது  என்பது உறுதியானதே.... 

பகுதி 1 - முன்னுரைகள் 

க.நா.சு. ஓர் இலக்கிய இயக்கம், இந்த தலைப்பில் நவீனத் தமிழ் இலக்கியத்தில் பெரும் பங்காற்றிய க.நா.சு. அவர்களைப் பற்றிய அறியத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார். நூற்றாண்டுகளைக் கடந்து இன்னும் நமது கைகளிலே க.நா.சு. அவர்களின் புத்தகங்கள் தவழ்கின்றன என்றால் அது அவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த தொண்டின் காரணம்தான். இவர் "உலகத்து சிறந்த நாவல்களை" நமது தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல் எண்ணற்ற உலகின் தலை சிறந்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் உலகளாவிய நாவலாசிரியர்கள் என எல்லோரையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவரின் இலட்சிய நோக்கம் தமிழ் நாவல் வளம் பெறவேண்டும் என்பதே அந்த இலட்சியத்தை அடைத்தும் காட்டியவர்.

யூமா. வாசுகி - இருளின் தோழமையில் கவித்துவ ஒளி. - நவீனத் தமிழ் கவிதை வெளியில் யூமாவின்  பங்கினை பற்றிய மிக நேர்த்தியான ஒரு சிறிய விளக்கமும் அவரின் பெருமைகளை "தோழமையின் இருள் என்ற கவிதை" தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை வழியே சொல்லியிருக்கிறார். 

குமார் மூர்த்தி - படைப்பும் மனோபாவம். ஈழத்து மண்ணின் கதைகளைச் சொல்லும் விதமும் அவரின் மனோபாவமும் எப்படியிருக்கிறது என்பதை தாஸ்தாயெவ்ஸ்க்கி யின் "கரமசோவ் சகோதரர்கள்" என்ற நாவலில் வரும் கதையின் போக்கும் அவரின் மனோபாவத்திற்கும் ஈடாக "குமார் மூர்த்தியின் கதைகள்" என்ற தொகுப்பிற்கான  முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

பாம்பாட்டிச் சித்தன் - புலரும் புதிய பாதை.     "குற்றவுணர்வின் மொழி" நூலுக்கான முன்னுரையில், பாம்பாட்டிச் சித்தரின் படைப்பையும் அவரின் நேர்த்தியான பாதையினையும், இந்த முதல் தொகுப்பில் இருக்கும் நவீனத்துவம்,எதிர் நவீனத்துவம் இரண்டும் இசைந்து உருவாகியிருக்கும் கவிதைகள் எனச் சிறப்பான ஒரு பார்வையினை பகிர்ந்துள்ளார்.

நா. முத்துக்குமார் - பால்ய நதி. தனது இளமைக் காலத்தில் வாழ்ந்த கிராமங்களின் பெருமைகளையும் தற்போது வாழும் நரகத்தின் போக்கினையும் எந்த விதமான வெறுப்பு விருப்பில்லாமல் அவரின் எழுத்துகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார் நா. முத்துக்குமார்  என்றும் அவரின்  "கிராமம், நகரம், மாநகரம்" என்ற நூலுக்கான  தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

அறியப்படாத நவீன கலைவெளி. "வண்ணங்களின் வாழ்க்கை" என்ற நூலுக்கான முன்னுரையில் ஆசிரியர் சுந்தர புத்தன் அவர்களின் நவீனத்துவமான எழுதும் நடையும் உரையாடல்களின் வடிவம் என இவர் மேற்கொண்டுள்ள யுத்தியினை வரவேற்கத்தக்கது என சொல்லியிருக்கிறார்.

டயன் அக்கர்மென்காதலெனும் ஜீவநதி. - "காதல் வரலாறு" என்னும் நூலுக்கான முன்னுரையில் ஆசிரியர் டயன் அக்கர்மென் அவர்களின் ஆழ்ந்த பார்வையில் காதல் என்ற வார்த்தையின் அர்த்தங்களும் அவரின் வெவ்வேறான பரிணாமங்களும் மிக அழகா தந்து மெல்லிய மனதிலிருந்து வெளிக்காட்டியிருக்கிறார் என்றும் சி. மோகன் அவர்கள் தான் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்த ஒருநூலின் வழியே  பெற்ற பிரமிப்பை இந்த "காதல் வரலாறு" என்று நூலினை வாசித்த போது மீண்டும் அந்த பிரமிப்பினை பெறமுடிந்தது என்கிறார்.

விக்டர் பிராங்கல் - வாழ்வின் அர்த்தம்விக்டர் பிராங்கல் என்ற உளவியல் நிபுணரின் வதைமுகாம் அனுபவத்தில் மனித வாழ்வின் அர்த்தம் சார்ந்த "வாழ்வின் அர்த்தம் - மனிதனின் தேடல்"  என்ற  நூலுக்குக் கொடுத்த முன்னுரையில் அவர் ஒரு வதை முகாம் எப்படி இருக்கும் அங்கு எவ்வாறான நெருக்கடி மற்றும் சித்திரவதைகள்  இவற்றுக்கு இடையே மனிதன் உயிர் வாழக் கிடைக்கும் கொஞ்சம் நம்பிக்கை தான் என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்த நூல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை - தமிழ் சினிமாவில் ஓர் அபூர்வ நிகழ்வு. - மு. சந்திரகுமார் எழுதிய "லாக்கப்என்ற நாவலைத் தழுவி தமிழில் வெற்றிமாறன் அவர்களால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் விசாரணை. குற்றமே புரியாத நான்கு இளைஞர்கள் செய்யாத குற்றத்தினை செய்ததாக ஒப்புக்கொண்டு இறுதியில் உயிர்விடும் காட்சிகள் மனதைக் கலங்கத்தான் செய்யும். ஒரு உண்மை சம்பவத்தைப் பலமாகக் கொண்டு கொஞ்சம் புனைவுகளைச் சேர்த்து வெற்றிமாறன் மிக நேர்த்தியாகக் கொடுத்திருப்பார். குற்றங்களின் உலகமே வெற்றி மாறனின் படைப்புலகம் என்றும் மேலும் வெற்றிமாறன் இந்த படத்துக்காக ஒவ்வொரு முறையும் புதிய புதிய முயற்சிகள் மற்றும் மாற்றங்கள் என மெருகூட்டியதை நினைவு கூறுகிறார் "விசாரணை - திரைக்கதை" என்ற புத்தகத்திற்கான  தனது முன்னுரையில்.


பகுதி 2 - மதிப்புரைகள்    

சார்வாகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு - இவர் எழுதத் தொடங்கி 30 ஆண்டுகள் கடந்து தான் இவரின் முதல் தொகுப்பே வெளிவந்தது தமிழ்ப் பதிப்பு சூழலின் சீர்கேடு என்று சொல்கிறார். 1993 ல் இந்தியா டுடேவிற்கு சார்வாகனின் சிறுகதைத் தொகுப்பினை பற்றிய மதிப்புரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

"ஈரம் கசிந்த நிலம்"  என்ற நாவல் கொங்குநாட்டைச் சார்ந்த கள்ளிப்பட்டி என்ற கிராமத்தின் உயிரோட்டத்துடனும் சுவாசங்களுடனும் இந்த நாவல் உருவாகியிருக்கிறது. இந்த நிலத்தின் மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமாக காட்டியிருக்கும் ரவீந்திரனின் எழுத்து மிக நேர்த்தியானது என்று 1993 ல் இந்தியா டுடேவிற்கு கொடுத்த மதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.  

மற்ற மரணம் - லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பு. - இந்தியா டுடேவிற்கு 1994 ல்  மற்ற மரணம் என்ற சிறுகதையின் தொகுப்பிற்கு எழுதிய மதிப்புரையினை வாசிக்கும் போது நமக்கு லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இருக்காதென்றே சொல்லவேண்டும் மிக நேர்த்தியானதொரு தகவல்களை இந்த மதிப்புரையில் சொல்லியிருக்கிறார்.

ஜெயமோகனின் "மண்- சிறுகதைத் தொகுப்பு" மற்றும் "நாவல்"    -  1996 ல் இந்தியா டுடே வில் ஜெயமோகனின் மண் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக எழுதிய மதிப்புரையிலிருந்து, ஜெயமோகன் ஒரு தனித்துவமான படைப்பாளியாக எழுச்சி பெறுவார் என்கிறார். ஆனால் 1996 இல் காலச்சுவட்டுக்கு எழுதிய மதிப்புரையில் ஜெயமோகனின் "நாவல் புத்தகத்திற்கு"  பல விதமான  கேள்விகளையும், வெவ்வேறு விதமான பரிசீலனையும் முன் வைத்துச் செல்கிறார். தமிழ்  நாவல்கள் மீது ஜெயமோகன் கொண்ட பார்வை சரியானதா இல்லையா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இராஜேந்திரசோழனின் - எட்டு கதைகள் - சிறுகதைக்கு.பா.ரா மற்றும் தி ஜானகி ராமன் என்று நீளும் மரபில் இராஜேந்திரசோழனின் பெயரும் சேர்க்கிறது. யதார்த்த பாணியிலான மற்றும் நவீனத்துவத்துடனும் இவரின் காதல் இருக்கிறது ஆனால் இவர் படைப்புலகிலிருந்து விலகிச் சென்றது கலையுலகிற்கு ஒரு பெரிய இழப்பே என்கிறார்.

அம்பையின் "காட்டில் ஒரு மான்" - சிறுகதையில் பெண்களின் நிலையினையும் நவீனத்தின் பெண்கள் என்ற பின்னிலையில் இவர் ஒரு பெரிய பங்கினை வகித்திருக்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் படைப்புலகில் பெரும்பங்கினை ஆற்றிவரும் அம்பை மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு "காட்டில் ஒரு மான்" என்ற தொகுப்பிற்காக இந்தியா டுடேவிற்கு எழுதிய மதிப்புரையில் அம்பையின் கதைகளைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் - திருச்சிக்கு அருகே ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஆதிமூலம் எவ்வாறு ஒரு புகழ்பெற்ற கோட்டோவியரானார் என்பதையும் அவரின் ஓவியத்தில் ஒளிந்து இருக்கும் தனித்தன்மை எனச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் .

செழியனின் "ஓவிய மொழி" -  கும்பகோணம் ஓவிய கல்லூரியில் பயின்று தனது கிராமத்துப் பின்னணியின் வெகுவான ஓவியங்களைக் கொடுத்த செழியன். தனது 80 கோட்டோவியகங்ளை "ஓவிய மொழி" எனும்  ஒரு புத்தகமாக  வெளியிட்டிருக்கிறார். இந்த புத்தகத்தின் பற்றிய இந்தியா டுடே வில் எழுதிய மதிப்புரையில் தமிழக ஓவியங்கள் புத்தக வடிவம் பெறுவதே இல்லை அதை முறியடித்து செழியன் இந்த புத்தகத்தை வெளியிட்டது ஒரு அபூர்வ நிகழ்வாகக் குறிப்பிடுகிறார்.

வெங்கட் சாமிநாதனின் - "அக்ரஹாரத்தில் கழுதை" என்ற திரைக்கதை நூலுக்கு இவரின் அபிப்ராயத்தை வைகை இதழுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த கதையின் சிறப்புகளையும் மேலும் ஒரு சில நெருடலான நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் மீண்டுமொரு வாசித்து விட்டு புதிதாக ஒரு மதிப்புரை எழுதுவேன் என்று முடித்துள்ளார்.

வஸந்தின் 'கேளடி கண்மணி" - பெரும்பாலான திரைப்படங்கள் புத்தகங்களாக வெளிவருவதில்லை என்பது ஒரு பெரிய குறையே ஏனெனில் ஒரு திரைப்படத்தை நாம் புத்தகமாக வாசிக்கும் போது ஒவ்வொரு காட்சிக்கும் நமது மனதுக்குள் ஒரு கற்பனை உருவெடுக்கும் என்பது எவ்வளவு பெரிய ஆதிக்கசக்தி.  வசந்தின் திரைக்கதை புத்தக வெளியீடு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை இங்கே நம்மிடம் பகிர்ந்துள்ளார்.              

விக்ரமாதித்யன் - எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன். -  இவர் விக்ரமாதித்யனை பற்றி மிக அழகாக விவரிக்கிறார், அவர் வாழ்வின் மீதும், மொழியின் மீதும் தீராத மோகம் கொண்டவர் என்றும் வெற்று கோப்பையினை உறிஞ்சும் போது கூட ஒருவிதமான கற்பனை ஊற்றெடுக்கும் என உறுதியானவர் என்றும் குறிப்பிடுகிறார். மொழியின் மீதுகொண்ட தீராத காதலால் கடந்த 40 ஆண்டுகாலமாகத் தரித்திரத்தோடே தொடர்ந்து வாழ்ந்து வந்தார் எனவும் மேலும் படைப்புலகில் தனித்துவமிக்க மொழிநடையினை கொண்டவர்கள் பாக்கியசாலிகள் அந்த மிகப்பெரிய பாக்கியம் இவருக்குக் கிடைத்தது எனவும் அவரின் சிறப்புகளைப் பதியவைத்துள்ளார்.  கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டபோது வாசித்த கட்டுரை - வழியே அவருக்கான பாராட்டுகளாக இந்த வாசிப்பு இருந்திருக்கிறது.

நிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்.  தமிழச்சி தங்க பாண்டியன் தனது முனைவர் பட்டத்திற்காகச் செய்த ஆய்வேட்டின் தமிழாக்கம் ஒரு பெறுமதியான புத்தகம். இந்த நூலில் ஏனெஸ்ட் மக்கின்ரயரின் மகத்தான நாடகங்களை நமக்கு அறிமுகப்படுகிறார். பன்முக திறமையினை தன்னகத்தே கொண்டுள்ள தமிழச்சி அவர்களின் வெளித்தெரியாத இன்னும் ஒரு திறமை உள்ளே ஒளிந்து இருப்பதாகவும் அதன் வெளிப்பாடே இந்த "நிழல் வெளியில்" என்ற நூலுக்கு வித்தாகும் எனவும் மேலும் தமிழச்சியின் படைப்பில் மக்கின்ரயர் ஒரு மன சித்திரமாக நம் மனதில் பதிகிறார் என்றே  சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

எழுத்தாளர் சி. மோகனின் படைப்பில் வெளியான இந்த இ-நூலினை வாசித்து முடித்தவுடன் ஏராளமான தகவல்கள் மற்றும் ஒரு புத்தகத்திற்கு எவ்வாறு மதிப்புரை எழுதவேண்டும் அவற்றுள் என்ன என்ன விதமான கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டும் என அவரின் எழுத்து போக்கிலிருந்தே நமக்குத் தெரிகிறது.

இந்த நூலின் தலைப்பான "தெறிகள்" தகுந்தவாறே ஒவ்வொரு கட்டுரைகளும் தெறிக்கவிட்டிருக்கிறார்.

நல்லதொரு தொகுப்பினை வாசித்த திருப்தியுடன் இங்கே நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..

கட்டாயம் வாசிக்க வேண்டியதொரு புத்தகம்.

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன்        

  04 ஜூலை 2021

          

      


  

              

                    

   .    


         


No comments:

Post a Comment