Friday, 30 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 3 - வாசிப்பு அனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 3

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 40

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறுவிதமான சூழல்களைச் சார்ந்த நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 3".

விளாதிமிர் நபகோவ்(1899-1977):

இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர். ஆரம்பக்காலத்தில்  தனது படைப்புகளை ரஷ்ய மொழியில் எழுதியவர் பின்னாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிறகு முழு நேர எழுத்தாளராக மாறினார். இறுதியில் சுவிட்சர்லாந்துக்குக் குடிபெயர்ந்து அங்கேயே இறந்து போனார்.

இவரின் வெகுவான படைப்புகளில், மிகச் சிறந்த படைப்பாக  "சந்தேகங்களும் குறியீடுகளும்"   என்ற சிறுகதையாகச் சொல்கிறார்.  

சந்தேகங்களும் குறியீடுகளும்: இந்த கதை, வயதான பெற்றோர்கள் தங்களது மகன் நான்காண்டுக்காலமாகத் தொடர்ந்து குணப்படுத்த முடியாத நோயில் இருக்கும் மகனுக்கு, இந்த பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்ற சந்தேகத்துடன் பரிசீலிக்கின்றனர் . அவர்கள் தங்கள் மகனின் பிறந்த நாளினை கொண்டாட அவனிருக்கும் இடத்திற்குச் செல்கின்றார்கள் ஆனால் அவர்களின் பயணத்தில்  வழியெங்கிலும் எதிர்பார்க்காத பல்வேறு தடைகள். ஒருவழியாக போய்ச்சேர்கின்றனர் ஆனால் அவனைப் பார்ப்பது இப்போது அவனுக்கு நன்றாக இருக்காது என்று செவிலியர் சொல்கிறாள். மனமுடைந்தவர்கள் வாங்கி சென்ற பரிசுப் பொருள்களை அங்கே வைத்துவிட்டு வராமல் பிறகு கொண்டு போகலாம் என்று திரும்புகின்றார்கள்.  மகனுக்கு இருக்கும் இந்த வினோதமான நோயானது, கண்ணுக்குப் புலப்படாத அசுர சக்தி தான் தன் மகனை வாதப்படுத்துகிறது என்று தீர்க்கமாக நினைத்தாள் அம்மா. 

தங்கள் மகனின் நிலைமையினை கண்ட இந்த வயோதிக பெற்றோர்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் பாசம் மற்றும் உணர்ச்சியின் உச்சக்கட்டம். இறுதியில் அவர் ஒரு முடிவெடுக்கிறார் இனிமேல் மகனை அங்கே விடவேண்டாம் நமது வீட்டுக்கே கொண்டுவந்துவிடுவோம்    என்று கலந்து பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் மீண்டும் ஒலிக்கும் தவறான தொலைப்பேசி அழைப்பு இவர்களின் நிலையினை கொஞ்சம் இடையூறு கொடுத்தது. தன் மகனை நாளைக்கு வீட்டிற்கே அழைத்துவரப் போகிறோம் என்ற நிறைவில் அவனுக்கு வாங்கி வந்த பரிசுப்பொருள்களை ஆவலுடன் உற்று நோக்குகிறார் அவற்றின் வண்ணங்களை ரசித்துக்கொண்டிருக்கிறார் அந்த நாடு ராத்திரியில்.

ஜார்ஜ் லூயி போர்ஹே (1899-1986): அர்ஜெண்டினாவில் பிறந்த இவர் தனது 56ஆவது வயதில் கண் பார்வையினை முற்றிலும் இழந்தவர் தொடர்ந்து கொடுத்த இலக்கியப் படைப்புகள் ஏராளம். இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை உலகில் சிகரம் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். இறுதியில் தனது 87 ஆவது வயதில் ஜெனிவாவில் இறந்தார். 

பாபிலோனில் லாட்டரி:    இந்த கதை பாபிலோனில் லாட்டரி எவ்வாறு உருவானது மற்றும் அதன் பின்னணி என்ன,யாரெல்லாம் இவற்றால் ஏமாற்றப்படுகிறார்கள், எப்படி தண்டனை வழங்கப்படுகிறது என ஒரு வரலாறே சொல்கிறது. மத ரீதியாகவும், மக்களின் வாழ்நிலை ரீதியாகவும் எளியோர் வலியோர் எனப் பாகுபாடுகள் நிறைந்த சமுதாயத்தில் எவ்வாறு அடிமைகள் இருக்கிறார்கள் என்றும், லாட்டரி நடத்தும் முறை அவற்றில் எவ்வாறு அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் கொண்ட நம்பர்களை உருவாக்குவது என பல்வேறு நிலைகளை விளக்கமாகச் சொல்லிச் செல்கிறது இந்த கதை. லாட்டரி நடத்தும் கம்பெனி மிகவும் வலிமையானது என்றாலும் மக்கள் படும் அல்லல் மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் பாபிலோன் அதிர்ஷ்டத்தின் எல்லையில்லா விளையாட்டு என்று சொல்வதே சிறந்தது என்கிறார்கள். இந்த கதையின் வழியே லொட்டரியில் இருக்கும் எல்லாவிதமான பிரச்சினைகளும் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

டெடுயூஸ் பரோவ்ஸ்கி (1922-1951): பொலிஷ் நாட்டில் பிறந்த இவர், மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். சிறுகதைகள் , பத்திரிக்கைகள் என பல்வேறு விதத்தில் தனது படைப்புகளை மிகவும் ஆக்கபூர்வமாக  வெளிக்காட்டினார். அரசியல் காரணத்தால் வெகுகாலம் தலைமறைவாக வாழ்ந்த இவர் கடைசியில் கைது செய்து வதை முகாமில் இரண்டாண்டுகள் இருக்க நேரிட்டது. இவரின் எழுத்துக்களில் பெரும்பான்மை மிகவும் அரசியல் மையமாக வைத்து இருக்கிறது.

"இரவு உணவு" -  இந்த சிறுகதை வதை முகாமில் நடக்கும் ஒரு இரவின் கொடுமைகளை முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. இவரின் எழுத்து கதை சொல்லும் அழகு வசீகரமாகவே இருக்கிறது. இரவு உணவிற்காகக் காத்திருக்கும் வதை முகாமில் இருக்கும் எல்லோரும் எவ்வாறு தங்கள் மனநிலை இருந்தது, அந்த இரவு எப்படி உலகத்தில் இருக்கிறது என்பதை அங்கே பகல் போய் இரவு தொடங்க ஆரம்பமாகிற இயற்கை அழகினை வெகு அற்புதமாக வர்ணிக்கிறார். அவ்வாறு இருக்கும் இயற்கையின் ரம்மியத்தில் திடீரென வரும் புயல்வேகத்தில் ஆவேசமாக வீசும் காற்று என்று சொல்லிக்கொண்டே பிறகு அந்த அமைதியாக இருந்த அந்த வதை முகாமில் திடீரென வரும் ஒரு புயல்.

அமைதியின் ஆழ்ந்த நேரத்தில் எல்லோரும் இரவு உணவிற்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் இருபது ரஷ்ய வீரர்கள் கைகளை முட்கம்பிகளால் பின்புறமாகக் கட்டப்பட்டு அழைத்து வருகின்றார்கள்.

பிறகு எல்லோருக்கும் இன்று இரவு உணவு இல்லையெனச் சத்தமாக அறிவிக்கிறார்கள். பசியுடன் நிற்கும் அந்த வீரர்களைப் புதிதாக வந்த ராணுவ வீரர்கள் பின்புறமாகத் துப்பாக்கி ஏந்தி அவர்களை கமாண்டர் அறிவித்தவுடன் சுட்டுக் கொள்கின்றனர், பிறகு பிரேதங்களை ஓரத்தில் குவித்துவிட்டுச் செல்கின்றனர்.

என மிக உருக்கமாக வெளிப்படும் வதை முகாமின் வதைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் போது மனதில் ஒருவிதமான அதிர்வு உணர்வுகள் எழுகிறது.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 ஜூலை 2021

No comments:

Post a Comment