கல்யாணக் கனவுகள்
கதை மாந்தர்களின் கதை
ஆசிரியர் - வெங்கட் நாகராஜ்
விலை ரூபாய் 100
பக்கங்கள் 94
தொடர்ந்து பயண கட்டுரைகளாகவே நமக்குக் கொடுத்து வந்த ஆசிரியர் ஒரு புது முயற்சியாகச் சிறு கதைகளாகத் தான் பார்த்துப் பழகிய கதை மாந்தர்களின் கதையினையும் நெகிழ்ந்து போன சில நிகழ்வுகளையும் தன் கதையின் களமாகக் கொண்டு 20 விதமான கதை மாந்தர்களின் கதைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு எதார்த்த உண்மையினை அடையாளம் காட்டுகிறது. இவர் பயணக் கதையினை சொல்லுவதே போலவே மிகத் தெளிவாகவும் அழகாகவும் கொஞ்சம் கதைக்குத் தகுந்த உணர்ச்சியுடனும் கதை சொல்லியிருக்கிறார்.
வாருங்கள் கதைக்குள் செல்வோம்..
இருபது விதமான கதைமாந்தர்களின் கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையிட்டு நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார்.
அலமேலு போல வருமா என்ற கதையின் அம்சமாக இருக்கும் ராமு தாத்தா மற்றும் துணைவியார் அலமேலு பாட்டி என இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையினை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
சௌந்திரம் - ஒரு பாசக்கார பாட்டியின் கதை. விருத்தாசலத்தில் பிறந்து டில்லியில் வாக்கப்பட்டு வந்து கிராமத்துச் செய்தி முதல், விளையாட்டு, அரசியல் மற்றும் உலக அளவில் விவரம் தெரிந்த சௌந்திரம் பாட்டியின் கதை.
பெத்த மனம் பித்து, போதைக்கு அடிமையாகி தன் அடையாளத்தை அழித்துக்கொள்ளும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. மூன்று பெண் பிள்ளைகள் இருந்தும் வாழ்வின் விலாசம் புரியாமலே பயணிக்கும் ஒரு வழிப்போக்கன்.
ஆண்டாள் பாட்டி, எத்தனை சுறுசுறுப்பு மற்றும் கைப்பக்குவமான சமையல். பிறந்த மண்ணை விட்டு பொழிப்புக்காக வேற இடம் சென்றாலும் பிறந்த மண்ணின் மீதான பாசமும் பற்றும் போகாதென்பது உண்மையே. தங்களின் பூர்விக வீட்டை விற்கப்போவதாகச் சொன்னதும் வேண்டாமென்று சொல்லி தனியாளாய் புறப்பட்ட ஆண்டாள் பாட்டி அருமை.
சோமு அண்ணாவின் கடன் அன்பை முறிக்கும் - ஆனால் இங்கே அன்பு மட்டுமல்ல ஒரு தலைமுறையே முறிந்து போனது சோகமானதே... உலக நடப்பு என்ன செய்வது.
உதிரதம் என்ற இந்த கதையின் வழியே பெண்களின் உழைப்பின் பெருமையினை சிறப்பாகச் சொல்கிறார்.
கல்யாணக் கனவுகள் - இன்றைய சூழலில் நீடித்த கல்யாண பந்தம் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. இங்கே இந்த ஆண்மகனின் கல்யாண கனவு கல்யாணத்திற்கு முன்பே முறிந்து விட்டது. எதிர்பார்ப்புகள் கூடியிருக்கும் இந்த மன நிலையில் இருக்கும் இவர்களைப் போல உள்ளவர்களின் எதிர்காலம் கல்யாணம் வெறும் கனவாகவே இருக்குமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
சிங்காரம் சரக்கு நல்ல சரக்கு, அந்தமான் பயணத்தில் கண்டெடுத்த முத்து தான் இந்த சிங்காரம் - இட்லிக் கடை - பிரபலமான இட்லிக் கடை. கண்டிப்பாகச் சுவைத்துவிட வேண்டும் என்ற ஆசை!!
என் சீட்டு கிடைக்கவில்லையே. வயோதிகம் என்பது வரம் ஆனால் நம்மில் பலருக்கு அது ஒரு சாபமாகவே தான் இருக்கிறது. அப்படித்தானே இந்த சுப்பி பாட்டியின் நிலைமை, என்பது வயதிலும் எல்லா வேலையும் செய்தாலும் அவரின் நிலைமை சொந்த மகளிடம் கூட ஒரு பாரமாகவே தான் இருக்கிறார். ஒரு வழியாகச் சீட்டு அவனுக்குக் கிடைத்து விடுதலை கிடைத்தது.
இறந்து போனவன் - தான் உயிரோடு இருக்கும் போதே இறந்து போனதாகச் சகா நண்பர்களுக்கு செய்தி கொடுக்கும் ஒரு வாலிபன் கடன் தொல்லையால் கடக்க முடியாமல் பதுங்கி செல்லும் இவன் - வாழ்வில் வரும் ஏற்ற தாழ்வுகளை எப்படி எதிர்கொள்வான்?
திவச சாப்பாடு - இது ஒரு வேளை உணவினை தகப்பனாரின் திதிக்காகக் கொடுப்பதற்காக நகரத்தில் ஒரு ஆள் தேடும் கதையில் அந்த உணவுக்காக வரும் ஒருவரின் கதை - தான் சுயநலமில்லாமல் உழைத்துக் கூட பிறந்த சுயநலவாதிகளை வளர்த்து காலத்தின் கடைசியில் தனிமரமாக பட்டுப்போவதை என்னவென்று சொல்வது.
70 வருடத் திருமண வாழ்வில் பிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதிக்கு கொரோன காலத்தில் ஏற்பட்ட ஒரு முடிவு - காலத்தின் கொடுமை வேரென்ன சொல்ல இறுதியில் கணவரின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை!!
பாரம் குறைந்தது - இந்த கொடுமையான காலத்தில் ஏராளமானோருக்கு ஒரு வேளை உணவென்பதே ஒரு பெரிய வரமாகிப் போனது. அப்படி இருந்த ஒருவருக்கும் கிடைத்த ஒரு வேலையினால் பத்து நாள்களுக்கான உணவே கிடைத்தது அவன் மனதிலிருந்த பாரம் குறைந்து போனது.
நமக்கு யாரென்று தெரியாத போதும் உதவும், சுகுமாரனைப் போல சில உள்ளங்கள் இங்கே வாழ்வதால் தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நல்ல காலம் பொறந்திருக்கு - சில நேரங்களில் எவ்வளவு கடுமையான சூழல் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு என்று ஒரு நல்ல நேரம் ஓடிக்கொண்டே தான் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கே சுக்வீந்தரின் கதை சொல்லுகிறது.
மீண்டும் ஒரு கல்யாணக் கனவுகள் - சமூகத்தில் ஒரு பெண் திருமணமாகாமல் இருந்தால் எத்தனை வகையான பேச்சுகள், தொல்லைகள் எனச் சொல்லும் கதை. இங்கே ஒரு குடும்பத்தில் இருக்கும் நான்கு சகோதரிகளும் மணமாகாமல் தங்கள் வாழ்வில் எல்லாம் இருந்தும் கல்யாணம் ஒரு கனவாகவே இருக்கிறது என்ற வலியுடன் வாழ்வதும் கடினம்தான்.
எத்தனை சுயநலமான உலகம் இது - கொஞ்சம் மன நிலை சரியில்லாத தம்பியின் வேலையில் வரும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு அவன் வாழ்க்கையினை சுரண்டும் அண்ணன் குடும்பம் நினைத்தாலே மனம் பரமாகிறது அதுவும் பணி ஓய்வுக்குப் பின் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு அவரை அனாதை இல்லத்தில் விட்டிருப்பது எந்த வகையில் எடுத்துக்கொள்வது.
சிலநேரங்களில் நாம் பயணிக்கும் வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர் கொஞ்சம் போதையிலிருந்தால் நாம் என்ன செய்யமுடியும்? நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் அவன் விட்ட வழி வண்டி செல்லும் .......
அவயாம்பா பாட்டியின், பார்வையில் கொரோன என்ற ஒரு புதிய கொள்ளை நோய் ஏன் இப்படி இந்த உலகத்தை உலுக்குகிறது என்ற போதும் இந்த கொடூர கொரோன அவையாம்பா பாட்டியையும் விட்டு வைக்கவில்லை. தனியே தனிமைப் படுத்த பட்ட பாட்டி நாளே நாளில் விடைபெற்றார்.
மூர்க்க குணத்தின் லாபம் வாழ்க்கை இழப்பது என்பதை நிரூபிக்கும் வகையாக இந்த கதை அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு கதைக்கும் முன்னர் கொடுத்திருக்கிற பொன்மொழிகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
இந்த கதைகள் எல்லாம் நாம் நம் வாழ்நாளில் எங்காவது ஒரு ஓரத்தில் சந்தித்த ஒரு நிகழ்வினை நமக்கு நினைவுபடுத்திச் செல்கிறது.
வாழ்த்துக்கள் நண்பரே, இன்னும் ஏராளமான கதைமாந்தர்களின் கதைகளுக்காகக் காத்திருக்கிறோம்...
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
05 ஜூலை 2021
எனது மின்னூலுக்கான விமர்சனம் - இங்கேயும் முகநூல் குழுமங்களிலும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி நண்பரே.
ReplyDeleteமிக்க நன்றி சார் 🙏🙏
ReplyDelete