Wednesday 7 July 2021

சுந்தர ராமசாமி - சில நினைவுகள் (வாசிப்பனுபவம்)

சுந்தர ராமசாமி - சில நினைவுகள் 

சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய்  49

பக்கங்கள் 50



"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து கிண்டில் பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக வாசித்த நான் வாசித்த மூன்றாவது புத்தகம் தான் "சுந்தர ராமசாமி - சில நினைவுகள்". இந்த கிண்டில் இ - புத்தகம்,  ஆசிரியர் சி. மோகன் அவர்கள் கிண்டிலில் கடந்த மாதம் அறிவித்ததில் தரவிறக்கம்  செய்தது. 

எழுத்தாளர் சி. மோகன் அவர்களின் இந்த இ-புத்தகம் கிண்டிலில் வெளியிட்ட முதல் புத்தகம் இ-புத்தகம் என்கிறார். இந்த புத்தகத்தில் தனது கலையுலக ஆசானான சுந்தர ராமசாமி அவர்களைப் பற்றிய நினைவலைகள்.


1975, ஜனவரி 31 ம் தேதி, தனது 22 வயதில் முதன் முதலாக மதுரை ரயில் நிலையத்தில் சுந்தர ராமசாமி அவர்களைச் சந்தித்ததிலிருந்து அவருடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பு மற்றும் அவர் நம்மை விட்டுப் பிரிந்த தருணம் வரை நடந்த நிகழ்வுகளை  உணர்ச்சிப்பூர்வமாக  இந்த புத்தகத்தின் வழியே நம்முடன்பகிர்ந்து கொள்கிறார்.

வாருங்கள் நாமும் இவர்களின் நாற்பது ஆண்டுக்கால நட்புறவைப் பார்த்துவரலாம்.

முதல் முதலாக சந்தித்த தருணத்தில் ஏற்படும் படபடப்பு எனத் துவங்கும் இந்த நினைவலைகள், அந்த முதல் சந்திப்பே நல்லதொரு தொடக்கமாக இருந்திருக்கிறது. மோகன் ஒரு 22 வயது இளைஞனாக இருப்பார் என்று சு. ரா. அவர்கள்   எதிர்பார்க்கவில்லை என்கிறார். ஆச்சரியத்துடன் ஆரம்பித்த அந்த முதல் சந்திப்பு. இந்த முதல் சந்திப்பு தான் தனது வாழ்வைத் தீர்மானித்த ஒரு சக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது என்கிறார்.


சுந்தர ராமசாமி அவர்கள் தனது 20 வயதிலிருந்து எழுதுவதைத் துவங்கியவர் 35 வயதிற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் எழுதுவதிலிருந்து விலகியிருந்திருக்கிறார். சிறுபத்திரிக்கைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சு.ரா அவர்கள் "காகங்கள்"  என்ற அமைப்பை உருவாக்கினார் அதன் காரணமாக நான் தொடர்ந்து சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதுவும் எனக்கு ஒரு முக்கியமான காரணம் என்னுடைய இந்த இலக்கிய பயணத்திற்கு என்கிறார். இந்த அமைப்பின் மூலமாக மலையாள எழுத்தாளர்கள் தொடர்பும் கிடைத்தது.

ஒரு அப்பா இடத்தில் இருந்து காதல் திருமணம் செய்து  வைத்துக் கூடவே இரண்டு நாட்கள் இருந்து பின்னர் சென்ற போது அக்கம்பக்கத்தினர் அப்பா ஊருக்குப் போய்விட்டார்களா என்று கேட்கிற அளவுக்கு அவரின் நட்பு 

இந்த காகங்கள் அமைப்பின் கூட்டங்கள் தொடர்ந்து  கொண்டே இருந்த நேரத்தில் "கிரியாராமக்ரிஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது அதன் காரணமாகச் சென்னைக்கு வரவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. 

"ஜே. ஜே. சில குறிப்புகள்" என்ற நாவலுக்காக மீண்டும் நாகர்கோவில் போகவேண்டிய நிலைமை இந்த முறை தங்கிய நாட்களுக்குப் பிறகு சு.ரா. அவர்களின்  கடிதத்தில் மறைந்த நண்பர் கிருஷ்ணன் நம்பியின் இடத்தை நிரப்பி விட்டாய் என்று குறிப்பிட்டிருந்தார் என்கிறார்.

சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்ற போது இந்த முறை ஏ.கே. பி. அவர்களைச் சந்தித்தது பின்னர் ஒரு முறை ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தது என மறக்கமுடியாத நிகழ்வுகள். ஹரிஹர ஐயர் அவர்களின் கைப்பக்குவத்தில் உருவான பட்சணங்கள் என அருமையான அனுபவம் நிறைந்த பயணம் என்கிறார்.

ஜே. ஜே. நாவலை எம்.கோவிந்தனுக்கு வாசித்துக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் அதன் வழியே கிடைத்த புதிய அறிமுகங்கள் என அனுபவங்கள் சேர்ந்துகொண்டு இருக்கிறது.

சுந்தர ராமசாமி ஆரம்பித்த "காலச்சுவடு"  பதிப்பகத்தில் ஜி. நாகராஜனின் படைப்புகளைத் தொகுத்துக் கொண்டுவர வேண்டி  பணியாற்ற மீண்டும் சுந்தர ராமசாமி அழைத்தார் அதற்காக மீண்டும் சேர்ந்து பணி செய்ய முடிந்தது என்கிறார்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இருந்த நட்பில் அவருடைய கடைசிக் கட்டத்தில் சில ஆண்டுகள் தொடர்பே இல்லாமல் போனது ஒரு விதமான துரதிர்ஷ்டம் என்கிறார். அவர் நம்மை விட்டுப் பிரிந்த போன அந்த சமயத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் சு.ரா. அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் போலக் கலங்கிக் கொண்டிருந்த நிகழ்வுகள்.


நல்லொதொரு நினைவுகளின் தொகுப்பினை வாசித்த அனுபவம்.       


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

07 ஜூலை 2021

   

No comments:

Post a Comment