Wednesday 21 July 2021

நடைவழி நினைவுகள் தொகுதி - I - வாசிப்பனுபவம்

 நடைவழி நினைவுகள் தொகுதி  - I 

ஆசிரியர் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 



"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த புத்தகம் தான் " நடைவழி நினைவுகள் தொகுதி  - I ". இந்த இ - புத்தகம் கடந்த மாதம் கிண்டியில் இலவசமாக தரவிறக்கம் செய்தது. 

இந்து தமிழ் நாளிழதில் ஞாயிறு பதிப்பாக தொடர்ந்து 64 வாரங்கள் வெளிவந்த தொடரின் ஒரு பகுதியின் தொகுப்பே இந்த புத்தகம். இந்த தொகுப்பில் 16 வாரங்களின் கட்டுரைகள் இருக்கிறது. 

முதலில் ஆசிரியர் சி. மோகன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் ஏனெனில் நாம் இதுவரை இவர்களின் படைப்பை மட்டுமே வாசித்திருப்போம் முற்றிலும் மாறாக இந்த தொகுப்பு வழியே ஆகச்சிறந்த படைப்பாளிகளின் வாழ்க்கையினை ஒரு புதிய தலைமுறைக்கு எளிய வழியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த தொகுப்பில், க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, ப.சிங்காரம் மற்றும் தி. ஜானகிராமன் என்ற நான்கு தமிழ் இலக்கிய ஆளுமைகளின் இலக்கிய வாழ்க்கையினை பற்றிய அருமையானதொரு தொகுப்பு. இந்த புத்தகத்தின் வழியே நாம் ஒரு நூற்றாண்டு காலம் வரையிலான இலக்கியவாதிகளை அறிந்து கொள்ள உதவும் அருமையான பொக்கிஷம். 

க. நா. சுப்ரமண்யம் (க.நா.சு.) - (1912-1988).

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான சக்தியாகத் திகழ்ந்தவர் க. நா. சு. அவர்கள். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், படைப்பிலக்கிய அறிமுகம், கதைச் சுருக்கம் மேலும் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் மற்றும்  மொழிபெயர்ப்பு, சிறுபத்திரிக்கை இயக்கம்  எனத் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு இலக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஒரு இருபது ஆண்டுக் காலத்தினை  (1945-65) தீர்க்கமாக நிர்மாணித்தவர் என்றே சொல்லலாம்.  

உலக இலக்கியத்தினை தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும். தமிழ் வாசகர்களுக்கு உலகத்தின் இலக்கியத்தினை கொடுக்கவேண்டும் என்ற முனைப்போடு ஏராளமான நாவல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.

ஆங்கிலத்தில் ஏராளமா கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் புத்தகமாக வெளிவரவில்லை என்பது நமக்கான துரதிர்ஷ்டம் என்று சொல்கிறார்.  மேலும் ஒரு சில   தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழின் சிறப்பினை உலகளவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

ஆசிரியர், க.நா.சு. அவர்களிடம் பழகிய நிகழ்வுகளையும், இவர்களின் சந்திப்பில் ஏற்பட்ட இணக்கமாக உறவுகளையும், அவர் வீட்டிற்கு அருகாமையில் வாழ்ந்த அனுபவத்தினையும், முதிர்ந்த வயதிலும் பூதக் கண்ணாடி கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த தருணத்தையும் வாசிக்கும் போது அந்த நிகழ்வுகள் நம் கண் முன்னே ஒரு திரைக்காட்சி போலவே தெரிகிறது.

வயதான காலத்தில் வடக்கே ஒரு செமினாருக்கு செல்ல வேண்டிய தருணத்தில் தான் மட்டும் செல்வதாகவும் அதற்காகத் துணை தேவையில்லை என்ற மனத்துணிச்சலும், நாம்  இறக்கும் வரை தான் இந்த உடல் நம்மளுடையது மூச்சு போனபிறகு அது நமது பிரச்சினை இல்லை என்று மிக அழகாக வாழ்வின் சூட்சமத்தைச் சொல்வதும் மனதை நெகிழ வைத்தது.

இன்றைக்குத் தழைத்தோங்கி இருக்கும் தமிழ் இலக்கியத்தின் ஆணி வேறாக இருந்த ஒரு பெரிய ஆளுமையினை பற்றித் தெரிந்து கொள்ள உதவியாக இருந்த இந்த புத்தகமும் ஆசிரியரும் நமக்கு கிடைத்த வரமே.

சி. சு. செல்லப்பா  ( 1912-1998)

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மற்றுமொரு மகத்தான இயக்க சக்தியாகத் திகழ்ந்தவர் சி. சு. செல்லப்பா அவர்கள். காந்தியுக அர்ப்பணிப்போடும் லட்சிய பிடிமானத்தோடும் செயல் முனைப்போடும் கலை நம்பிக்கையோடும் மேலும் வைராக்கிய சித்தத்தோடும் இயங்கிய ஒரு மகத்தான சக்தி தான் இவர் என்கிறார்.

சிறுபத்திரிக்கை ஆரம்பித்து அதை நடத்த இருந்த பொருள் எல்லாம் செலவழித்து இறுதியில் முடியாமல் நிறுத்திவிட்டார். இந்த காலகட்டத்தில் இவர் கொண்ட வைராக்கியம் "எழுத்து" என்ற  சிறுபத்திரிக்கையாக வெளியிடப்பட்டது.

இவரின் எழுத்துக்கள் மிகவும் நேர்த்தியாகவும், இவர் நடத்திய சிறுபத்திரிக்கை பெரும்பாலான கவிஞர்களுக்கு ஒரு பாதையினை வகுத்துக் கொடுத்ததையும் மேலும் இவரின் நாவலைப் பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்திலிருந்ததும் பெருமைக்குரியதே என்கிறார்.

ஆசிரியர், இவரைச் சந்தித்த தருணத்தையும், அவர் இரண்டு கைகளிலும் இரண்டு துணிப்பையில் முழுவதும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு  அவற்றினை விற்பதற்காக   வந்ததும் அப்போது அவரை பார்த்து நெகிழ்ந்து போய் நான் தூக்கி வருகிறேன் என்றதற்கு வேண்டுமெனச் சொன்னதுமட்டுமல்லாமல் இது எனது சுமை நான் தான் சுமக்க வேண்டும் என்ற லட்சியத்தினை வெளிப்படுத்தியதும் இதுபோல இன்று மனிதர்களைக் காண்பது எளிதாகிப் போய்விட்டது என்பது தான் உண்மை.

தனது இறுதிக்காலத்தில் மகனுடன் பெங்களுரில் வசித்த போது, அவரைத்தேடி வந்த விருதினையும் வெகுமதியினையும் வேண்டாமென்று சொல்வதும் பிறகு அதற்குப் பதிலாக அவரின் "சுதந்திர தாகம்" என்ற நாவலினை அச்சாக வெளியிடுவதைத் தெரிந்து கொண்ட போதும் இவரின் மீது பெரும் மதிப்பு கூடுகிறது.

ப. சிங்காரம் (1920-1997)

நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓர் பெரிய இடத்தை பிடித்துவிட்டு சென்றிருக்கிறார் இவர். புலம் பெயர்  இலக்கியத்தில் தமிழில் உருவான முழு முதல் நாவல் இவருடையதுதான் என்பது மிகப் பெரிய உண்மை.

ஆரம்பக்காலத்தில் இவரின் நாவல்கள் யாராலும் அங்கீகரிக்கப் படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ப. சிங்காரம் அவர்களின் நாவல்கள் மற்றும் அவரை பற்றி வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர் சி மோகன் தான் என்று அவர் சொல்லியிருக்கிறார் சிலரிடம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டுக்காலம் தனிமையில் வாழ்ந்த ப.சிங்காரம் அவர்கள், தன்னை இந்த உலகத்திலிருந்தே தனித்துக் கொண்டார். யாரையும் சந்திக்காமல், இலக்கியத்தின் மீது வேறெந்த விதத்திலும் ஈடுபாடுகள் இல்லாமல் இருந்தார். 

ஆனாலும் ஆசிரியர் சி மோகன் அவர்கள், ப. சிங்காரத்திடம் பழகிய நாட்களையும், அவர் பழகிய விதத்தினையும் மிகச் சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் ஒருநாள் ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது, உடல் நலக்குறைவால் தனது கைகளால் சாப்பிட முடியாத நிலையிலிருந்த மோகன் அவர்களுக்கு உடனே உணவகத்தின் உரிமையாளரிடம் தட்டு தேக்கரண்டியும் எடுத்துவரச் சொல்ல அப்போது தட்டு இல்லாததால் அருகில் இருக்கும் பாத்திரக்கடையில் போய் வாங்கிவரச் சொல்லித் தானே காசு கொடுத்ததும் மனதை நெகிழ வைக்கிறது.

ஒரு கலைஞனின் படைப்பு சமகால கலைஞர்களால் அங்கீகரிக்கப்பட வில்லை என்றும் அதே படைப்பும் அந்த படைப்பாளியையும் பின்னர் புகழின் உச்சிக்கு அந்த படைப்பே எடுத்துச் சென்றது என்றால் அது ப. சிங்காரம் அவர்களை மட்டுமே என்றால் அதில் தவறேதுமில்லை.   

தி. ஜானகிராமன்  (1921-1982)     

தி. ஜானகி ராமன் அவர்களின் படைப்புகள் என்றென்றைக்குமான உணர்வுகளின் நெகிழ்ச்சியான கதையாடல்கள் மூலம் தனது வாசகர்களை வசப்படுத்தியவர்.  

இவர் நவீனத்துவ மையப் போக்கிலிருந்து விலகி நித்திய மதிப்புகள் கொண்ட புத்தெழுச்சி மிக்க படைப்பிலக்கியத்தினை வடிவமைத்தவர் என்கிறார். செவ்வியல் மறுமலர்ச்சி படைப்புக்களைக் கொடுத்தவர் என்ற புகழுக்கு இவரே சொந்தமானவர்.

தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த நுட்பங்கள் கூடிய மகத்தான படைப்பு சக்தி இவர் எனப் பெயர்பெற்றவர். ஆரம்பக்காலத்தில் வெளியான "கொட்டுமேளம்", "சிவப்பு ரிக்ஷா" என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்பு பதிப்புரிமை காரணத்தினால் மறுபதிப்பு பெறவேயில்லை. தி. ஜானகி ராமன் நண்பர் ஒருவருக்குச் செய்த உதவியால் இந்த பதிப்புரிமை காலம் கடந்து போனதும் இறுதியாக மீண்டும் அவைகள் மறுபதிப்பு பெற்ற விவரங்கள் சிறப்பானது.

தி. ஜானகி ராமன் அவர்களுடன் நடந்த முதல் சந்திப்பும் பிறகும் அந்த சந்திப்பின் வழியே வலுவான உறவு உருவானதும் அதன் காரணமாக இவர்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தது. 

பெரும்பாலும் இவருடைய படைப்புகள், மனித இருப்பின் நெருக்கடிகளையும், சமூக மதிப்புகளிலும், கலாச்சார மதிப்புகளிலும் நிகழ்ந்த மாற்றங்கள், குடும்ப அமைப்பில் உருவான மாற்றங்கள் அதன் காரணமாக ஆண் - பெண் உறவுகளுக்கிடையேயான சிக்கல்கள் என நவீன தொழில் முறை அமைப்பின் வளர்ச்சி மற்றும் நிலவுடைச் சமூகம் எனப் பல நெருக்கடிகளை பின் பலமாகக் கொண்டுதான் இவரின் படைப்புகள் வெளிப்படுகிறது.

இவரின் சிறந்த நாவல்களான, மோகமுள், அம்மா வந்தாள், உயிர்த்தேன் என பெரும்பாலான நாவலின் பாத்திரங்கள் அன்பின் வேட்கையாகவே திகழ்கிறது. பெண்கள் பெரிதும் பேரழகாகவே வருவதும் இவரின் படைப்பின் பலம் என்கிறார்.  தன்மறதியின் லயிப்போடு மாய்ந்து மாய்ந்து வியந்து வியந்து எழுதிச்செல்கிறார் என்று வியப்பாகவே குறிப்பிடுகிறார்.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

21 ஜூலை 2021            

No comments:

Post a Comment