Thursday, 22 July 2021

நடைவழி நினைவுகள் தொகுதி - 2 - வாசிப்பனுபவம்

 நடைவழி நினைவுகள் தொகுதி  - 2 

ஆசிரியர் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 103

"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில்  பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த புத்தகம் தான் " நடைவழி நினைவுகள் தொகுதி  - 2 ". இந்த இ - புத்தகம் கடந்த மாதம் கிண்டில்  இலவசமாக தரவிறக்கம் செய்தது. 

இந்து தமிழ் நாளிழதில் ஞாயிறு பதிப்பாக தொடர்ந்து 64 வாரங்கள் வெளிவந்த தொடரின் ஒரு பகுதியின் தொகுப்பே இந்த புத்தகம். இந்த தொகுப்பில் 16 வாரங்களின் கட்டுரைகள் இருக்கிறது. 

முதலில் ஆசிரியர் சி. மோகன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் ஏனெனில் நாம் இதுவரை இவர்களின் படைப்பை மட்டுமே வாசித்திருப்போம் முற்றிலும் மாறாக இந்த தொகுப்பு வழியே ஆகச்சிறந்த படைப்பாளிகளின் வாழ்க்கையினை ஒரு புதிய தலைமுறைக்கு எளிய வழியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த தொகுப்பில்,  நகுலன், ஜி. நாகராஜன், சார்வாகன்  மற்றும் சுந்தர ராமசாமி என்ற நான்கு தமிழ் இலக்கிய ஆளுமைகளின் இலக்கிய வாழ்க்கையினை பற்றிய அருமையானதொரு தொகுப்பு. இந்த புத்தகத்தின் வழியே நாம் ஒரு நூற்றாண்டு காலம் வரையிலான இலக்கியவாதிகளை அறிந்து கொள்ள உதவும் அருமையான பொக்கிஷம். 

நகுலன்  (1921-2007)

நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பு வெளியில் முன்னுதாரணமற்ற படைப்பு பயணத்தை மேற்கொண்டவர் நகுலன் என்றும் எப்படி எப்படி எழுதினால் என்னைத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன் என்று நகுலன் குறிப்பிட்டார் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

முற்றிலும் புதிதான தனிப்பாதை வகுத்துக் கொண்டு பிரத்தேயமாக தனி மொழியில் அபூர்வமான பிராந்தியங்களுக்குள் தனது பயணத்தினை மேற்கொண்டவர் நகுலன். காலம், வாழ்க்கை, மனிதர்கள், தருணங்கள், வார்த்தைகள் என எல்லாவற்றிலும் திகைப்பும் வியப்பும் கொண்டிருந்தது     இவர் எழுதிய எட்டு நாவல்களும் என்கிறார். நாவல்கள் மட்டுமல்லாமல் கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரைகள் என எழுத்தின் எல்லா பரிணாமங்களிலும் பயணம் செய்தவர் நகுலன் என்கிறார்.

தொடக்கத்தில் சி சு செல்லப்பாவின் எழுத்து இதழின் மூலமாகவே இவரின் கவிதைகள் கட்டுரைகள் வெளிவந்தன. இவரின் ஆரம்பக் கால இலக்கிய பயணத்தில் இவரின் எழுத்துக்களைப் புத்தகமாக்கச் சாதகமான சூழ்நிலை தமிழ்ப்  படைப்புலகில் கிடைக்கவில்லை. சொந்தமாகவே சில புத்தகங்களை வெளியிட்டார். தனது ஒரு நூல் தொகுப்பான ஐந்து தொகுப்பு வெளியீட்டின் போது இந்த இலக்கிய சூதாட்டத்தில் என் கடைசி பைசாவும் போகும் வரை விளையாடி  பார்க்கவேண்டும் என்ற துணிவே இந்த தொகுப்பின் மூலதனம்.

காலங்கள் மாறி அவரின் எழுத்துக்களின் மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்ட தருணம், அவரும் தனது முதிர் வயதினை நெருங்கியிருந்தார்.  நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவருடைய தனித்துவமான உயரிய பங்களிப்பென்பது அவரின் கலை மேதைமையின் அபூர்வமென்றே சொல்லவேண்டும்.

கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்து தனது வாழ்நாள் முழுவதும் தனிமையாகவே வாழ்ந்து, நகுலன் என்ற பெயரில் தமிழிலும் மற்றும் தனது இயற்பெயரான டி. கே. துரைஸ்வாமி என்ற பெயரில் ஆங்கிலத்திலும்  எழுதினார் என்ற அருமையான தகவல்கள்.

ஆசிரியர் சி. மோகன் அவர்கள், நகுலன் அவர்களுடன் சந்தித்த தருணங்களையும், இருவருக்குமிடையே ஏற்பட்ட கடிதங்களின் வழியான உறவுகள் என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பெற்ற விருதுகள் என மிக நுட்பமாக்கத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

நகுலன் அவர்களின் நூற்றாண்டு இந்த வருடம் என்பதால் தமிழ் இலக்கியத்தின் உயரிய பெருமிதமாக நாம் கொண்டாட வேண்டும் என்ற தனது ஆசையினையும் குறிப்பிட்டிருக்கிறார்.                   

ஜி நாகராஜன் (1929-1981)

ஜி நாகராஜன் அவர்கள் ஆரம்பத்தில் பணியாற்றிய ஆசிரியர் பணியாகட்டும், ராணுவத்தில் செய்த பணியாகட்டும், தனியாக நடத்திய டியூஷன் வகுப்பாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் தனது பங்கினை சிறப்பாகவே செய்து இருக்கிறார். கொள்கை ரீதியாக ஒரு கட்சியிலும் தனது பங்கினை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.

இவரின் ஆரம்பக்கால எழுத்துகள்  பிரபலமாகாமலிருந்திருக்கிறது. இவரது ஒரு சில எழுத்துக்களை மட்டும் முதலில் பித்தன் பட்டறை என்ற பதிப்பகத்தின் மூலம் அவரே வெளியிட்டார். குறிப்பாகக் குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே மற்றும் அதிக சிறுகதைகள் என இவரின் படைப்புகள் ஏராளம். இவரின் படைப்புகள்  எல்லாம் வாழ்வின் விளிம்பில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய எழுத்துக்கள். இந்த நூல்களே இவரின் மனோநிலையினை தெளிவாக எடுத்துக்காட்டும். பின்னர் இவரின் நூல்கள் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இவரின் நூல்கள் அவரின் வாழ்நாளில் பிரபலமாகாமல் அவர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகே பெருமளவு மக்களிடம் சென்று சேர்ந்தது அதுமட்டுமல்லாமல் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் இவரின் படைப்புகள் மொழிபெயர்க்கவும் பட்டது.

ஒரு பெரிய ஆளுமை தனது வாழ்நாளில் எப்படிச் சறுக்கிப் போனார் என்பதை மிகத் தெளிவாக எழுத்தாளர் சி மோகன் அவர்கள் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் தடம் மாறாமல் இருந்திருந்தால் நமக்கு எண்ணற்ற பொக்கிஷங்களைத் தனது எழுத்துக்கள்  வழியே கொடுத்திருப்பாரோ என்னவோ. 

எழுத்தாளர் சி மோகன் குறிப்பிடும் அவரின் மரணச் செய்தியும் அந்த நிகழ்வு நடந்த விதமும் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெகு சிலரே என்பதும் மனதை நெருடுகிறது.


சார்வாகன் (1929-2015)

காந்திய மனோபாவமும், மார்க்ஸியக்  கொள்களையும்இந்தியத் தத்துவ மரபின் ஞானமும் இசைந்து உறவாடிய படைப்பாற்றல் கொண்டவர் சார்வாகன் என்கிறார்.  சி.சு.செல்லப்பா, க.நா.சு , வெங்கட் சாமிநாதன், நகுலன் மற்றும் சுந்தர ராமசாமி போன்ற கலைத்துவ படைப்பாளிகளால் போற்றப்பட்டவர் இவர்.

தொழில் ரீதியாக ஒரு தொழு நோய் மருத்துவராகவும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முன்னேற்பாடுகள் மற்றும் தொழுநோயினால் கைகள் முடக்கப்பட்டவர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மருத்துவ முறையினை கண்டுபிடித்தவர் என்றும் அந்த முறைக்கு "ஸ்ரீனிவாசன் சிகிச்சைமுறை" என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டது என்றும் இவர் மருத்துவத்தில் கொடுத்த அர்ப்பணிப்பிற்குப் பத்மஸ்ரீ விருதும் பெற்றார் என அருமையான  தகவல்களினை குறிப்பிட்டிருக்கிறார்.

ஆரம்பக்காலத்தில் இவர் எழுதிய எழுத்துக்கள் புத்தகமாகாமல் போனதால் என்னவோ இவர் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவைத்திருந்தார். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து எழுதத் தொடங்கினார் ஆனாலும் இவை எல்லாம் நூலக வெளிவரவில்லை அப்போது தான் கிரியா பதிப்பதின் மூலமாக சார்வாகரின் எழுத்துக்களை நூலாக வெளியிட வேண்டி அவரை சந்தித்து அவருடன் ஏற்பட்ட நெகிழ்வான நிகழ்வுகளையும் மேலும் அவரின் "வளை" என்ற கதைக்கு அது    "த பர்ரோ" என்ற கதையின் நகல் என்று விமர்சனம் வந்ததால் தொகுப்பிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று பெருந்தன்மையுடன் கேட்டுக்கொண்டார் என்கிறார். இவரின் எழுத்துக்கள் 30 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன ஒரு புத்தகமாக வெளிவருவதற்கு என்பது மிகவும் வருந்தக் கூடிய நிலையே.

மீண்டும் 2013 ல், சார்வாகரின் முழு கதை தொகுப்பிற்காகச் சந்திக்க நேர்ந்ததும் அப்போது அவருடன் ஏற்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அருமையாக இருக்கிறது மேலும் க்ரீன் டீ பற்றிய தவல்கள் மிகவும் உபயோகமானது.

பணி ஓய்வுபெற்ற பிறகும் அமைதியாக வீட்டிலே முடங்கி கிடைக்காமல் மருத்துவ உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியராகவும், உலக சுகாதார நிறுவனத்தின்  சார்ப்பாக உலகின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ முகாம்களில் ஒரு சிறந்த நெறியாளராகச் செயல்பட்டார் மேலும் அவர் மருத்துவத்திற்காக எழுதிய பல்வேறு கட்டுரைகள் இன்றளவும் மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுவதுவும் ஒரு தலை சிறந்த மருத்துவராகத் திகழ்ந்த இவர் மருத்துவராகவும், ஒரு படைப்பாளியாகவும் அவர் தன் வாழ்வினை நிர்மாணித்தது அவர் மனிதர்கள் மீது கொண்ட ஆழ்ந்த பரிவும் படைப்பூக்கமும் தான் என்கிறார் .     

 

சுந்தர ராமசாமி (1931-2005)

முதல் முதலாக சந்தித்த தருணத்தில் ஏற்படும் படபடப்பு எனத் துவங்கும் இந்த நினைவலைகள், அந்த முதல் சந்திப்பே நல்லதொரு தொடக்கமாக இருந்திருக்கிறது. மோகன் ஒரு 22 வயது இளைஞனாக இருப்பார் என்று சு. ரா. அவர்கள்   எதிர்பார்க்கவில்லை என்கிறார். ஆச்சரியத்துடன் ஆரம்பித்த அந்த முதல் சந்திப்பு. இந்த முதல் சந்திப்பு தான் தனது வாழ்வைத் தீர்மானித்த ஒரு சக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது என்கிறார்.

சுந்தர ராமசாமி அவர்கள் தனது 20 வயதிலிருந்து எழுதுவதைத் துவங்கியவர் 35 வயதிற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் எழுதுவதிலிருந்து விலகியிருந்திருக்கிறார். சிறுபத்திரிக்கைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சு.ரா அவர்கள் "காகங்கள்"  என்ற அமைப்பை உருவாக்கினார் அதன் காரணமாக நான் தொடர்ந்து சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதுவும் எனக்கு ஒரு முக்கியமான காரணம் என்னுடைய இந்த இலக்கிய பயணத்திற்கு என்கிறார். இந்த அமைப்பின் மூலமாக மலையாள எழுத்தாளர்கள் தொடர்பும் கிடைத்தது.

ஒரு அப்பா இடத்தில் இருந்து காதல் திருமணம் செய்து  வைத்துக் கூடவே இரண்டு நாட்கள் இருந்து பின்னர் சென்ற போது அக்கம்பக்கத்தினர் அப்பா ஊருக்குப் போய்விட்டார்களா என்று கேட்கிற அளவுக்கு அவரின் நட்பு 

இந்த காகங்கள் அமைப்பின் கூட்டங்கள் தொடர்ந்து  கொண்டே இருந்த நேரத்தில் "கிரியாராமக்ரிஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது அதன் காரணமாகச் சென்னைக்கு வரவேண்டிய வாய்ப்பு கிடைத்தது. 

"ஜே. ஜே. சில குறிப்புகள்" என்ற நாவலுக்காக மீண்டும் நாகர்கோவில் போகவேண்டிய நிலைமை இந்த முறை தங்கிய நாட்களுக்குப் பிறகு சு.ரா. அவர்களின்  கடிதத்தில் மறைந்த நண்பர் கிருஷ்ணன் நம்பியின் இடத்தை நிரப்பி விட்டாய் என்று குறிப்பிட்டிருந்தார் என்கிறார்.

சுந்தர ராமசாமி ஆரம்பித்த "காலச்சுவடு"  பதிப்பகத்தில் ஜி. நாகராஜனின் படைப்புகளைத் தொகுத்துக் கொண்டுவர வேண்டி  பணியாற்ற மீண்டும் சுந்தர ராமசாமி அழைத்தார் அதற்காக மீண்டும் சேர்ந்து பணி செய்ய முடிந்தது என்கிறார்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இருந்த நட்பில் அவருடைய கடைசிக் கட்டத்தில் சில ஆண்டுகள் தொடர்பே இல்லாமல் போனது ஒரு விதமான துரதிர்ஷ்டம் என்கிறார். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 ஜூலை 2021 


No comments:

Post a Comment