மஞ்சள் மோகினி
சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : சி. மோகன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 70
பக்கங்கள் 185
ஆசிரியர் சி.மோகன் அவர்களின் அதிகளவு கட்டுரைகளும், ஒரு நாவலும் வாசித்த பிறகு அவரின் இன்னொரு பரிமாணமான சிறுகதைத் தொகுப்பினை வாசித்த அனுபவத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.
"மஞ்சள் மோகினி" - இது சி.மோகன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு, இந்த தொகுப்பில் வெவ்வேறு பரிணாமங்களும், கதைக்களங்களும் கதை மாந்தர்களும் பயணிக்கும் வித்தியாசமான 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
கதைகள் உருவாவதே எப்போதும் கதைசொல்பவர்களின் அனுபவங்களும் அக்கம் பக்கம் நடக்கும் நிகழ்வுகளும் மனதினை பாதித்த பல்வேறு சம்பவங்களும் கதையோட்டமாக வெளிப்படும் உன்னதமே கதைகள்.
அப்படியாக வெளிப்பட்ட கதைகளே நாம் இங்கே காணப்போகிறோம்.
ஓடிய கால்கள்:. இந்த கதை ஆசிரியர் தனது ஆசானாகவும், நண்பராகவும், சக படைப்பாளியாகவும் என பல்வேறு பரிணாமங்களில் திகழ்ந்த ஒரு ஆளுமையின் கடைசி இரண்டு நாட்களையும் அவருக்கு நடந்த இன்னல்களையும் கதையாகச் சொல்லியிருக்கிறார்.
மரணவாடை: நெருக்கமாக இருக்கும் ஒருவரின் மரணம் நம்மையறியாமலே நம் மனதில் ஒரு பெரும் போராட்டத்துடன் வெளிப்படும் என்பது இயற்கையான நிகழ்வே. அப்படியாக தனக்கு நெருங்கிய ஒருவரின் மரணம் அந்த சிறுவனை எவ்வாறெல்லாம் போராடவைக்கிறது.பள்ளிக்கூடத்தில் எப்போதும் எந்த ஒரு வகுப்பினையும் தவறாமல் படிக்கும் சிறுவனுக்கு அன்றோ எப்படியாவது கிளம்பவேண்டும், அங்கே நிகழ்ந்த ஒரு மரணத்திற்கு தன் அண்ணன் தன்னை வந்து கூட்டிக்கொண்டு போவான் என்ற எதிர்பார்ப்புடன் போராடுகிறான். இறுதியாகவே வீடு வந்து சேர்ந்தவனுக்கு வந்த செய்தி உயிர் நண்பன் மரணமடைந்த செய்தி...
மருதாயிக் கிழவியின் காகிதப் பைகள்: கிராமத்தில் வாழும் பாட்டியின் மரணம் ஒரு பெரிய இழப்புதான். விடுமுறை நாட்களை மகிழ்வோடு கழிக்க பாடிவீட்டை தவிர வேற எதாவது சொர்க்கம் உண்டோ. அப்படியாக வாழ்ந்த மருதாயி கிழவியின் மரணமும் பாட்டி சேகரித்து வைத்திருந்த காகிதப்பைகளும், பாட்டிக்குத் தெரியாமல் இருந்த பிரியாணி பிறகு மிகவும் பிடித்த போன உணவாகப் பிரியாணி மாறியது என மனதினை கனக்கும் ஒரு வாழ்க்கையின் அனுபவம்.
ரகசிய வேட்கை: ரகசிய வாழ்க்கையின் ஒரு ரகசிய வேட்கை. பொதுவாகக் கிராமங்களில் வயது வந்த பெண்களை வயல்வெளிகளில் காத்து கருப்பு பிடித்து விட்டதாக அவளுக்கு பல்வேறு விதமான சாமியோட்டு வார்கள். அதுபோலவே இங்கு இந்த கதையின் நாயகிக்கு இருக்கும் ரகசிய வேட்கை அவளின் தேகம் ரகசியமான வாழ்வு எனக் கதை செல்கிறது. இறுதியில் அந்த வேட்கைக்கு விலையாகக் கணவனின் உயிர்.
அம்மாவின் மரணம்: சிறுவயதில் இழப்பு என்பது ஒரு பெரிய இழப்பாகும். தனது மனதில் இருக்கும் ஏக்கங்களுக்கு ஒரு உருவம் கொடுத்து நம் கூடவே இருப்பதுபோல ஒரு பிரமையிருக்கும், அந்த சிறுமியின் மனதில் ஆடிக்கொண்டிருக்கும் அந்த அம்மாவின் நினைவுகளும், நிகழ்வுகளும் அதை அவள் வெளிக்காட்டாமல் ரகசியமாகப் பூட்டி வைத்திருக்கும் சம்பவங்கள் எனப் பாசத்தின் போராட்டம் இறுதியில் அந்த அம்மாவின் மரணம் ஆனால் அது அவளுக்குத் தெரியாமலே போனது அவள் அவளுடைய நண்பர்களுடன் தூங்கிவிட்டாள்.
நிலவெளி அச்சம்: ரகசியமாய் வாழ்வது கடினமான வாழ்வே!! அப்படிதான் இந்த கதையில் வரும் ரகசியமான உறவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் அதுவும் நிலைக்காத உறவு நீண்ட நாட்கள் செல்வது எப்படி. ரகசியம் காக்கப்பட்ட வலையின் துணி நைந்து போனாலே கிழிந்து விடுவதுபோல கட்டிவைத்திருந்த ரகசியமும் வெளிவரும் அப்படியான தருணம் இந்த நிலத்தில் வாழ்வது ஒருவிதமான அச்சமாகவே இருக்கும்.
கடல் மனிதனின் வருகை: இந்த கதையில் முதியவர் தொலைந்து போன தன் மகனின் ஆன்மா மருவுருவத்தில் கடல் மனிதனாக வந்தது என்று பூரிப்புடன் இருக்கும் அவருக்கும் அந்த கிராமத்திற்கும் அந்த கடல் மனிதனால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் என விரிந்து செல்லும் கதையில் ஒரு திருப்பமாக ஊர் அம்மனுக்கு இது பிடிக்கவில்லை என்று சொல்லி கடல் மனிதனை ஊருக்குள் விடவேண்டாம் என்று உத்தரவிடுகின்றனர். செய்யவதரியாது முதியவரும் தனது மகனின் ஆன்மாவுடன் பயணமாகிறார்.
நாக உடல்: வீட்டுக்குள் பிரவேசித்த நாகப்பாம்பினை பாட்டியும் மாமாவும் அடித்துக்கொள்கிறார்கள், பிறகு வீட்டின் கொல்லையில் அதைப் புதைக்கின்றார்கள். இது கிராமங்களில் நடக்கும் சாதாரணமான ஒரு நிகழ்வு ஆனால் பட்டணத்திலிருந்து வந்தவர்களுக்கு இது கொஞ்சம் பயமானதாகவே இருக்கும்.
கண்ணாடி அறை: ரயில் பயணத்தில் ஏற்படும் இதமான நினைவுகள் கூடவே ஏற்படும் கனவுகள் என வாழ்வின் எல்லையற்ற ஆசைகளைக் கனவுகளின் வழியே வாழும் ஒரு இன்பமான வாழ்க்கை இவற்றில் நிர்வாணம் என்பது கண்ணாடிக்கு முன்னே கலையாகவே உணரும் உயிரின் வேட்கை.
பட்டுபூச்சியும் கல்வீணையும்: பிறந்து வளர்ந்த மகளை ஒருவரிடம் மற்றும் விட்டுவிட்டு மற்றொரு பெற்றோர் (அப்பாவோ அல்லது அம்மாவோ ) பிரிந்து போகும் தருணம் கொடுக்கும் வலியினை சொல்ல வார்த்தைகள் இல்லை. இங்கே மீண்டெழும் பழைய நினைவுகள் நெஞ்சினில் குத்தும் அம்புகளாய் வலி வலியதே என்று உணர தோன்றும்.
கைவிடப்பட்ட தொட்டிச்செடிகள்: திடீரென ஒருநாள், அந்த நாள் புதிதாக நம்மிடம் இருந்த எல்லா உறவுகளும் விட்டுச் சென்றால் அந்த தருணம் நிர்க்கதியாக நிற்க வேண்டிய சூழல் வரும் அந்த சூழ்நிலையினை ஒரு வராண்டாவில் யாரும் கண்டுகொள்ளாமல் காய்த்துப்போகும் தொட்டிச்செடிகளுக்கு உவமையாகச் சொல்லுவது உணர்ச்சியின் விளிம்பு.
உயிர் மீட்கும் தருணம்: அன்றாட வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு தற்கொலைதான் என்றால் என்னாவது இந்த உலகம். அப்படிதான் தனக்கு, தனது பெற்றோர்களிடம் ஏற்பட்ட ஒரு சிறிய தகராரால் உயிரினை மாய்த்துக்கொள்ள ஆயத்தமாகும் நண்பர் கடைசி தருணத்தில் நண்பருடன் மதுவருந்தி விட்டுப் போகலாம் என்று வரும் வேளையில் தெய்வீகமாக வரும் ஒரு அழகின் ஒளி அவனின் வாழ்வினை மீட்டெடுக்கிறது என்றால் அது அற்புத தருணமே!!
சிதைவு: தனது காதலனைத் தேடி வரும் காதலிக்கு அவன் இல்லையெனக் கிடைக்கும் செய்தி, அதை அவள் எவ்வாறு ஏற்றுக்கொள்வாள்?. அந்த கடினமான செய்தியும் ஆனால் அவனுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமலே பயணிக்கும் அவளுக்கு இருக்கும் மனநிலையினை உணர்ச்சியின் வெளிப்பாடாகக் கொண்டுசெல்லும் கதை.
மஞ்சள் மோகினி: தனிமையில் வாழும் மனிதனுக்கு மனதில் ஏற்படும் எல்லையற்ற ஆக்கங்களுக்கு இதமாக உருப்பெறும் எண்ணங்கள் எண்ணற்றவை. அப்படித்தானே இங்கும் வலம் வருகிறாள் மஞ்சள் மோகினி. கற்பனை வலம் கரைபுரண்டு பயணிக்கிறாள் இந்த மஞ்சள் மோகினி.
ஒவ்வொரு காதையும் மிக ஆழான ஒரு கருத்தினை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கிறது. சில எளிதில் புரிந்துகொள்ள கூடியவைகளாகவே இருக்கிறது சில அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
27 ஜூலை 2021
No comments:
Post a Comment