கமலி
சி மோகன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 100
பக்கங்கள் 155
"வாசிப்பை நேசிப்போம்" குழுவில் நடக்கும் மாதம் (ஜூலை 2021) ஒரு எழுத்தாளர் என்ற போட்டிக்கு இந்த மாதம் எழுத்தாளர் "சி மோகன்" அவர்களின் புத்தகங்கள் வாசித்து, வாசித்த அனுபவங்களைக் குழுவில் பகிர வேண்டும் என்ற போட்டி. இந்த போட்டிக்காக நான் வாசித்த ஆறாவது புத்தகம் தான் "கமலி". இந்த இ - புத்தகம், ஆசிரியர் சி. மோகன் அவர்கள் கிண்டிலில் கடந்த மாதம் இலவசமாக அறிவித்ததில் தரவிறக்கம் செய்தது.
வாசித்து முடித்தவுடன் இதற்கு எப்படிப் பதிவு எழுதுவது என்று கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஆழ்ந்த சிந்தனை.
ஆசிரியர் சி மோகன் ஒரு அருமையான கதைக் களத்தினை கையாண்டிருக்கிறார். இன்றைய சூழலில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்களின் விடுதலை உணர்வை மையமாகக் கொண்ட கமலி என்ற பெண்ணின் வழியே நம்மைக் கதைக்குள் அழைத்துச் செல்கிறார்.
சமூகத்தில், திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் பெண் ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறாள் என்பது உண்மைதான் ஏனெனில் சமுதாயம் நம்மால் தானே உருவாக்கப்பட்டது. அந்த கூட்டையே நாம் தானே கட்டமைத்துக் கொண்டோம். கூடு என்பது ஒரு பாதுகாப்பிற்காக தானே கட்டமைக்கப் பட்டது.
கூட்டுக்குள் இருக்கும் கிளி அந்த கூட்டை விட்டு வெளியே வரும்போது எத்தனையோ இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியாமலே வெளியில் இறங்கும் கிளிகள் கூண்டுக்கு வெளியுலகில் தோன்றும் வண்ணங்களின் மீது கிடைக்கும் மையலில் மயங்கி மயங்கி கவர்ச்சியான வண்ணத்தினை நெருங்குகிறது. பல நேரங்களில் நாய் வேடம் தரித்த ஓநாய்களும் திரியும் உலகம்தானே இது. நாய் எது ஓநாய் எது என்று பாகுபடுத்திப் பார்க்கத் தெரியாத எத்தனையோ கிளிகள் இன்று இல்லாமலே போகிறது அல்லது வண்ணங்களின் சிறைக்குள் அகப்பட்டு ஆயுள் முழுவதும் ஒரு கைதியாகவே வாழ நேரிடுகிறது.
நாம கதைக்குள் வருவோம், திருமணம் ஆகி பலவருடங்கள் எல்லாவிதத்திலும் நன்றாக வாழும் கமலிக்கு எதோ ஒரு சிறிய விதத்தில் ஏற்படும் ஒரு விதமான ஏக்கம் அந்த ஏக்கத்திற்கு ஊக்கமருந்தாக வந்து சேரும் கண்ணன் எனக் கதை பயணிக்கிறது.
கமலி, அழகான உரையாடல்கள், மனதை கிளர்ச்சியூட்டும் நிகழ்வுகள், வாழ்வின் அந்தரகங்ள் நிறைந்த அழகான பயணம். உணர்ச்சிகள் ததும்பும் நினைவுகள் என அமர்க்களமான கதையோட்டம். கதையின் ஓட்டம் அழகான நதியில் ஓடும் நீரினை போல அதன் போக்கிலே போய்க்கொண்டிருக்கிறது.
அழகான குடும்பம், அன்பால் நிறைந்த பெற்றோர்களின் அரவணைப்பில் வளர்ந்த கமலி, நல்ல படிப்பும் அறிவும் கொண்டவளாகத் திகழ்கிறாள். திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழையும் கமலிக்குப் புகுந்த வீடும் நிறைவான வீடாகவே இருக்கிறது. வாழ்வின் அடையாளமாக "நந்திதா" என்ற அழகிய மகளும் அன்பான கணவன் ரகுவும் இருக்க, கமலியின் வாழ்க்கை சீரான பாதையில் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது.
எதிர்பாராத திருப்பங்களுக்குள் தன்னை உட்படுத்திக்கொள்ளும் கமலி அந்த சூழ்நிலையினை வெகு இலகுவாகச் சமாளித்துத் தான் நினைத்த பாதையில் பயணிக்கிறாள். இதுவே இவள் ஆசைப்பட்டுப் பயணிக்கும் பாதையில் சக பயணியாக ஈடுகொடுத்து பயணம் செய்யும் கண்ணன் என இவர்களின் புதிய தேடல் மனமும் உடலும் சார்ந்த ஒருவிதமான புதிய தேடல் தான்.
கமலிக்கு, தன் கணவனிடம் எந்த வித குறைகளும் இல்லை ஆனால் அவள் ஏன் கண்ணன் மீது காதல் கொள்கிறாள்? தனக்காகவே இருக்கும் கணவன் எந்த தவறும் செய்யக் கூடாது, அந்த வீட்டின் மதிப்பு மரியாதையும் அவளுக்கு வேண்டும், தான் தன் கணவன் மீது செலுத்தும் அன்பும் குறையாதாம் இவை எல்லாம் இருக்கக் கண்ணன் மீது கொண்ட காதல் இவற்றையெல்லாம் ஒரு படி மேலாக அவளின் அதீத ஆன்மாவாகவே இருக்கிறது.
கமலி, தான் வாழ நினைக்கும் வாழ்க்கையினை வாழ்ந்து பார்க்கிறாள், அவளுக்குக் காலமும் சூழ்நிலையும் துணையாக இருக்கிறது. கொஞ்சம் கனவிலும் மீதி நினைவிலும் வாழ்கிறாள்.
கிராமத்துப் பழமொழி போல "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" - கூழ் குடிக்கவேண்டும் ஆனால் மீசையில் ஓட்டக்கூடாது என்றால் அது எப்படி சாத்தியம் அதுபோலவே தான் வாழும் இந்த திருமண பந்த வாழ்க்கையில் இருக்கும் சமூக அந்தஸ்து கிடைக்க ரகு வேண்டும், ரகுவின் விலாசத்தில் கண்ணனின் வாரிசு சுமக்க வேண்டும்.
கமலி, வெகு சாமர்த்தியமாக தனது விளையாட்டில் ஒவ்வொரு காயினையும் நகர்த்துகிறாள். இவள் திட்டம் போட்டு விளையாடும் இந்த விளையாட்டில் விவரம் ஏதும் தெரியாமல் ஒரு ஆட்டக்காரன் தான் ரகு.
வாழ்வுக்குள் ரகசியங்கள் இருக்கலாம் ஆனால் ரகசியங்களே வாழ்க்கியாக இருந்தால், அந்த ரகசியங்கள் காக்கப் படவேண்டும் தான், அது எத்தனை காலங்கள் எதோ ஒரு தருணத்தில் ரகசியம் உடைக்கப்படும் அந்த நேரத்தில் ரகசியத்திற்குள்ள இருக்கும் தன்னை நம்பிய உயிர் அதுவும் ஊன்கூடவே வாழ்ந்த அந்த ஒரு உயிர் எந்த பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது மிகச் சுலபமானதாக இருக்க முடியாதுதான்.
தனது தந்தைக்கு நினைவாகத் தான் எழுத ஆரம்பிக்கும் நாவல், கண்ணன் கொடுக்கும் சுகத்தில் மறந்தே போனது இங்கே இவளின் சுயநலம் தான் தலை தூக்கி நிற்கிறது.
இன்றைய சூழலில் குடும்பம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு தனது ஆசைகளுக்கான வாழ்க்கையினை தேடுவதை விட மொத்தத்தில் குடும்பத்திலிருந்து விடுபட்டு தனக்கு வேண்டிய வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாமே?.
தனக்கான ஒருவன் இருக்கும் போது, தனது ஏக்கங்களுக்கும், புதிய தேடலுக்கும், விருப்புகளுக்கும் , கனவுகளுக்குமாய் எண்ணற்ற இன்பம் புதைந்து கிடக்கிற இந்த உடலின் ஆசைகளை ஏன் தன்னவனிடம் தனித்துக் கொள்ள முயலுவதில்லை என்ற கேள்விகளுக்கு விடையேதும் இல்லை!!.
கமலி, ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் அவளுக்கு நிகர் அவளேதான் !!
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
14 ஜூலை 2021
No comments:
Post a Comment