Saturday 24 July 2021

நடைவழி நினைவுகள் தொகுதி - 4 - வாசிப்பனுபவம்

நடைவழி நினைவுகள் தொகுதி  - 4 

ஆசிரியர் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 50

பக்கங்கள் 84 


இந்து தமிழ் நாளிழதில் ஞாயிறு பதிப்பாகத் தொடர்ந்து 64 வாரங்கள் வெளிவந்த தொடரின் ஒரு பகுதியின் தொகுப்பே இந்த புத்தகம். இந்த தொகுப்பில் 16 வாரங்களின் கட்டுரைகள் இருக்கிறது. 

இந்த தொகுப்பின் மூலம் நான்கு இலக்கிய ஆளுமைகளின் பல குறிப்புகளை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆசிரியர் சி. மோகன் அவர்கள் தாம் நெருங்கிப் பழகியது பல்வேறு இலக்கிய ஆளுமைகள் மற்றும் அவர்களுடன் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிகள் செய்ததும் அதன் வழியே அவர்களின் நினைவின் நீங்காமல் இருக்கும் சில குறிப்புகள் நமக்கு அந்த ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஆவணமாக இருக்கிறது. அதற்காக அவருக்கு நமது நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.

தருமு சிவராம் (பிரமிள்): ஈழத்தின் திருகோணமலையிலிருந்து தனது எழுத்து பிரவேசத்தினை "சி. சு. செல்லப்பா" அவர்களின் "எழுத்து" என்ற சிறுபத்திரிக்கையின் மூலமா பிரவேசித்தவர் இதுமட்டுமல்லாமல் பேராற்றால் மிக்க படைப்பு சக்தியாகவும் , அறிவின் விசாரமுமான பிரமிப்புகளுடன் இவரது இலக்கியத்தின் மீதான பார்வையிருந்தது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பின்னர் இங்கிருந்து பாரிஸ் போகவேண்டிய கனவுடனே இங்கு வந்தவர் தன் வாழ்நாள் முழுதும் இங்கேயே முடித்துக்கொண்டார். 

தான் முதலில் மதுரை ரயில் நிலையத்தில் தருமு சிவராமுவை சந்தித்த தருணங்கள், அவர் பழகிய விதங்கள், ஒருநாள் மதிய உணவிற்காக வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் அப்போது  வெங்கட் சாமிநாதன் அவர்கள் வந்ததும் ஆனால் இவர்கள் இருவரும் ஏதோ ஒரு பிணக்கில் இருப்பது தெரியவந்தது. ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணியவருக்கு இவர்கள் இருவரும் மறுநாள் சகஜமாகப் பழகிய விதம் ஒரு பெரிய  மகிழ்ச்சியான  தருணமாக இருந்தது என்கிறார். சக எழுத்தாளர்களிடம் இருந்த பிணக்கின் காரணமாக இவருக்கு விரிசல் ஏற்பட்டது. 

ஆனால் பிறகு சென்னை வந்த பின் அவராகவே வந்து தன்னை சந்தித்தது மிகவும் அருமையான தகவல். தன் கால இருப்பிலிருந்து, காலாதீத வெளிகளில் தன் படைப்பாக்கப் பயணங்களை மேற்கொண்ட ஒரு நட்சத்திரவாசி அவர் என்று குறிப்பிடுகிறார்.   இருந்தாலும் அவர் தன் காலத்துக்கும் சமூகத்துக்கும் மொழிக்கும் அளித்தது பெரும் கொடை எனில் சமூகம் அவருடைய ஆற்றல்களைப் பூரணமாக பெற்றுக்கொள்ளத் தவறியது பெரும் அவலமான ஒரு நிகழ்வே எனக் குறிப்பிடுகிறார். 

எஸ். சம்பத்: "இடைவெளி" என்ற தமிழின் மிகவும் பெறுமதியான நாவல் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் இவர். சம்பத்துடன் சேர்ந்து இடைவெளிக்கான எடிட்டிங் பணி செய்ய ஆரம்பத்தில் சம்பத்து அவர்களுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது ஆனால் முதற்சந்திப்பின் போது ஏற்பட்ட இணக்கமான சூழ்நிலையில் காரணமாகப் பின்னர் அப்பணியில் உற்சாகத்துடன் ஈடுபட்டார் என்கிறார். 

இவர்களின் நெருக்கமான இந்த நட்பு பயணம் வெகு விரைவிலே முடிவிற்கு வந்துவிட்டது, அவருடைய புத்தகம் வெளியாதவற்கு முன்னரே அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். தன் வாழ்வில் பல சிறந்த படைப்புகளை கொண்டுவரவேண்டும் என்ற ஆசை வெறும் கனவாகவே போய்விட்டது நமக்கும் ஒருவிதமான இழப்பேயாகும். அவருடைய நாவலில் வரும் தினகரன் என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை போலவே இவருடைய வாழ்வும் சாவினை வெகு சீக்கிரமே கண்டுவிட்டது.   

பிரபஞ்சன்: மானுடம் வெல்லும், வானம் வசப்படும் என்பதைத் தனது கலை நம்பிக்கையாகக் கொண்ட ஒரு இலக்கிய சக்திதான் இவர். தான் முதலில் சந்தித்த போது அவர் உதிர்த்த வார்த்தைகளும் ,இறுதியாக அவர் பேசிய வார்த்தைகளுக்கும் இடையேயான வாழ்வின் வளர்ச்சியும் ஆனால் அந்த உறவு அதேயளவிலிருந்ததும் பெருமைக்குரியது தான். வைத்தியலிங்கம் என்ற இயற்பெயருடன் பாண்டிச்சேரியில் பிறந்து எழுத்துலகில் பிரபஞ்சன் என்ற பெயருடன் இருக்கும் இவர், மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை மனப்பூர்வமாக உணர்ந்து தன் வாழ்வை வெகு சுபாவமாகப் பேணியவர் இவர் என்கிறார்.

மு. வேடியப்பன்பவா. செல்லத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னெடுப்பில் "எழுத்துலகில் பிரபஞ்சன் 55" என்ற ஒரு நாள் நிகழ்வினை நடத்தி அதன் வழியாக அவருக்குப் பெரிய பண உதவியும் அதற்கு வந்த முதலமைச்சர் தங்கள் மண்ணில் மைந்தருக்குப் பாண்டிச்சேரி அரசு சார்பாக  ஒரு விழாவும் பரிசும் வழங்கினார். பிறகு அவர் மரணமடைந்த போது  அரசு மரியாதையுடன், குண்டுகள் முழங்கத் தேசியக்கொடி போர்த்தி ஒரு தமிழ் படைப்பாளிக்கு  அஞ்சலி செய்தது   இதுவே முதலாகும் என்கிறார்.

இவரின் படைப்புகள் ஒரு பெரிய சக்தியாகவே இருந்தது என்றும் தமிழில் வரலாற்று நாவல்கள் இல்லையென்ற குறையை நான் நிவர்த்தி செய்துவிட்டேன் என்று தனது இரண்டு வரலாற்று நாவல்களுக்கும் பிறகு அவரே சொல்லியிருக்கிறார்.  சக மனிதர்களை நேசித்த படைப்பு மனம் கொண்டவர் பிரபஞ்சன் அவரை கொண்டாடுவது நாம் நம் வாழ்வினை சக மனிதர்களுடன் கொண்டாடுவதாகும் என்கிறார்.


கோபி கிருஷ்ணன்: தமிழ் இலக்கிய  எழுத்துலகில் பெரும்பாலான படைப்பாளிகள் பெரிதும் சந்திக்கின்ற ஒரு பெரிய மாய பிம்பம் தான் வறுமை, அப்படிப்பட்ட வறுமையின் காரணமாக பல்வேறு படைப்பாளிகள் பெரிதும் அல்லல்களுக்கு உட்பட்டு சிலர் மேற்கொண்டு செல்ல முடியாமல் போனதும் உண்டு. 

ஆனால், கோபி கிருஷ்ணன் அவர்கள் வாழ்வில் பெரிதும் அலைக்கழித்து அல்லல் பட்டும் தனது மனதின் விருப்பமாக இருந்த எழுத்து அவருடைய வாழ்வில் வெளிப்பட்டது. தனது வாழ்வில் பொருளாதார நெருக்கடியின் காரணமாகச் சந்தித்த ஏராளமான பிரச்சினைகள் எனப் பட்டியலிடலாம்.

இருபது ஆண்டுக்கால எழுத்து பயணத்தில் இவர் எழுதியது எண்பத்தாறு சிறுகதைகள், நான்கு குறுநாவல்கள், மற்றும் கட்டுரைகள், நேர்காணல்கள் என பல்வேறு முகமாக தனக்குச் சுற்றியுள்ள மனிதர்களை மையமாகவே கொண்டே இருந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் இவர் அடிக்கடி தன் பணியினை மாற்றிக்கொண்டே இருப்பார் அப்படியாக இவர் பல்வேறு இடங்களில் பணி செய்து இருக்கிறார். மனநோய் சம்பந்தப்பட்டவர் பற்றிய ஏராளமான கட்டுரைகள் என வெளிப்படுத்தியுள்ளார்.

மனநோய் என்பது ஒரு நோயல்ல அதுவும் ஒரு மொழி என்ற ஞானத்தை நமக்குக் கோபியின் படைப்பின் வழியாக நாம் அறிந்துகொள்ளமுடிகிறது என்பதை இந்த எழுத்துக்களின் வழியே குறிப்பிடுகிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

24 ஜூலை 2021             

No comments:

Post a Comment