Wednesday, 26 May 2021

எரியும் பனிக்காடு - நூல் வாசிப்பு அனுபவம்

 எரியும் பனிக்காடு - நூல் வாசிப்பு அனுபவம்


தமிழகத்த்தின் உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ‘ரெட் டீ’ ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பல  ஆண்டுகள் கழித்து முதல்முதலாக ‘எரியும் பனிக்காடாக’த் தமிழில் வந்தது.   


இன்றைக்கு திரைப்படங்களில் மற்றும் மலை நகரங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது  தேயிலைத் தோட்டங்கள் தான். ஆனால் அந்த தேயிலை தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்தக் கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன லட்சோப லச்சம்  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையில் கலந்த ரத்தத்தின் கதைதான் ‘எரியும் பனிக்காடு.’

இந்த கதையினை படித்த பின்னர் நான் விரும்பி பருகும் தேநீரில் எத்தனையோ இருண்ட முகங்களின் மறைந்த சோகம் இருக்கிறதோ என்ற நடுக்கத்துடன் தான் பருக வேண்டியிருக்கிறது. 

ஒவ்வொரு டீ எஸ்டேட்டும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் செத்துபோயோ அல்லது கொல்லப்பட்டோ அவர்களின் ரத்தமும் சதையும் உரமாக போட்டுத்தான் இந்த தேயிலை புதர்கள் எல்லாம் வளர்ந்து இருக்கிறது என்றால் அது தவறு இல்லை அதுதான் உண்மையும் கூட.

பிரிட்டிஷ்காரர்களோட நன்மைக்காக இந்தியாவில் தேயிலைத்  தொழிலை உருவாக்கியதில் நம் நாடு எத்தனை பெரிய விலை கொடுத்து இருக்கிறது. மனிதர்களின் ரத்தத்தை உரிஞ்சும் அட்டைகளும் அதைவிட மோசமாக உறிஞ்சும் மேஸ்திரிகளும், தொரைகளும் எப்படி கூலிகள் எல்லோரையும் கொடுமை படுத்தி வாழக்கையை சீரழிக்கிறார்கள் என்பது தான் இந்த கதையின்    
 
கதைக்கு வருவோம்.
 
1925ஆம் ஆண்டு, ஒரு டிசம்பர் இரவு...திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மயிலோடை அங்கு  சுமார் முப்பது வீடுகளே இருந்தன. அவற்றில் ஓடு போடப்பட்ட ஒரேயொரு செங்கல் வீட்டைத் தவிர மற்றவை அனைத்துமே பனையோலையால் வேயப்பட்ட, ஒற்றை அறை களைக் கொண்ட குடிசைகள்தான். சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை. சில குடிசைகளில்தான் மலிவான மரங்களாலான கதவுகள் காணப்பட்டன. மற்றவற்றில் மூங்கில் தட்டிகளையும், பனை யோலைகளையும் கொண்டு கைகளால் செய்யப்பட்ட படல்களே கதவுகளாகப் பயன்பட்டு வந்தன. மக்கள் அத்தனை பேரும் தாழ்த்தப் பட்டவர்கள். பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்தே தங்கள் வயிற்றுப்பாட்டைக் கவனித்து வந்தார் கள்.

அந்த கிராமத்தின்  குடிசைகளில் ஒன்றில் ஒரு கிழிந்த பாயில் கருப்பன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். இரவின் நிசப்தத்தினூடே அவ்வப்போது யாரோ உலுக்கி விட்டது போல அவனுடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. நெடுநேரத்துக்கு முன்பே விழிகளிலிருந்து உறக்கம் விடைபெற்றுச் சென்றிருந்தது. இரவெல்லாம் ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலை நேரத்தில் புதுவேகம் பெற்று குடல்களைப் பிடுங்கியெடுக்க மனது மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டுவதற்கான திட்டங்களைப் பரபரப்புடன் வகுத்துக் கொண்டிருந்தது. ராபட்டினி கிடந்த வாலிபனின் வயறு எத்தனையோ சோக கீதங்களை கதறி கொண்டுயிருந்தது.

வானம் பார்த்த பூமி, வானம் பொய்த்து போனதால் வாழவாதரம் இல்லாமல் போன பல குடும்பங்களின் ஒன்றே இந்த கருப்பன் வள்ளி குடும்பம். இரவு முழுவதும் பசியோடு தூங்க முடியாமல் எப்படியாவது நாளைக்கு உணவுக்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று ஒரே தீர்மானத்துடன் பொழுது விடிவதற்குள் அவன் கயத்தாறு நோக்கி சென்றான். எங்கு கேட்டும் வேலை கிடைக்க வில்லை பசியின் கொடுமை ஒருபுறம் வேறு வேலை இல்லாமல் எப்படி திரும்புவது என்ற வழி தெரியாமல் அந்த கடைவீதியில்  அவன் தடுமாறிக்கொண்டிருந்தான்.

வாழ வழி தெரியாமல் இருந்த கருப்பனின் வாழ்வில் வந்த ஒரு வசந்தம் போல சில பகடு வார்த்தைகளை கொண்டு அவனை அந்த நகரத்திற்கு வரவழைத்தான் மேஸ்திரி சங்கரபாண்டியன்.

சங்கரபாண்டியனின் ஆசை வார்த்தை கேட்டு எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுவதாக நம்பி தனது மனைவி வள்ளியுடன் அந்த நரகத்தை நோக்கி நகர்வலம் போனான். 

அந்த கிராமத்தில் இருந்து இதுவரைக்கும் நடை பயணத்தை தவிர வேறு எந்த பயணமும் கண்டிராத கருப்பனின் முதல்  பேருந்து பயணம், ரயில் பயணம் செய்வதை மிக அழகா காட்சிப்படுத்த பட்டுள்ளது. அவன் தான் பிறந்து வளர்ந்த வீடும் ஊரும் விட்டு பிரிய மனம் வராமல் தவிக்கும் அவனது தவிப்பு நம்மையும் ஒரு நிமிடம் அந்த இடத்தில் இருந்து யோசிக்க வைக்கிறது.

ஆனைமலைக்கு செல்லும் அந்த பயணம் ஆரம்பத்தில் சுவாரஷ்யமாக இருந்தாலும் கொஞ்சம் போக போக தான் தெரிந்தது. எங்கோ வழி மாறி போன பயணிகள் போல ஒவ்வொருவரும் பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை. அடிமைகளாக சென்று கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு அடிமைகளும் உணர ஆரம்பித்தனர். 

பாலைவனத்தின் பயணம் போல இருந்தது அவர்களின் அந்த பயணம். இறுதியில் ஆனைமலைக்கு வந்து சேர்ந்தனர். 

எண்ணற்ற கனவுகளோடு கூலி அடிமைகளாக வந்த கருப்பன்....  லைனில் ஒரு குடிசையில் மூன்று குடும்பம் வாழ வேண்டிய கட்டாயம், தனக்கு தனி வீடு தருவதாக சொல்லியிருந்த கங்காணி சங்கரபாண்டியனிடம் கேட்ட பொது அவனின் முகமே வேற முகமாக இருந்தது, நா கூசும் வார்த்தைகளால் வசை பாடினான், அதை கேட்டு மிரண்டு போன கருப்பன் முதல் முதலாக உணர்ந்தான் அவன் செய்த தவறை நினைத்து.

வாழ்வதற்கு கொஞ்சம் கூட முடியாத அந்த குடிசைகளில் வாழ கற்று கொண்டனர். தேயிலை தோட்டத்தின் வேலை ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பல வித அவஸ்தைகளை அனுபவித்து மெல்ல மெல்ல வேலை கற்று கொள்ள ஆரம்பித்தனர்.    

ஒரே வருடத்தில் நிறைய காசு சம்பாதிச்சு பெரிய பணக்காரனாக திரும்பி ஊருக்கு வந்துவிடலாம் என்ற பெரிய கனவுடன் வந்த கருப்பனுக்கு இங்கு வந்து பார்த்ததும் அது நடக்குமா என்ற சந்தேகம் வந்தது அதுபோலவே பல இடையூறுகளுக்கு இடையே வாழ ஆரம்பித்த அவனின் வாழ்வில் மீண்டும் மீண்டும் வரும் பெரிய இடிகள் சில தங்க கூடியதாகவே இருந்தாலும் சில தாங்க முடியாததாக தான் இருந்துதது.

கடும் குளிர், விட  அடை மழை, இதெல்லாம் புதியது தான் இருந்தாலும் அவற்றை வெற்றி கொள்ள முடியாமல் படும் இன்னல்கள் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போனது. காய்ச்சல் அவற்றிக்கு ஒரு நல்ல வசதி கிடையாது. மருத்துவர் இல்லாமல் வெறும் வார்டு பாய் தான் அங்கே சகலமும் அவன் தான் இந்த அடிமைகளின் வைத்தியர். சுத்தமான தண்ணீர் கிடையாது, வீடு கிடையாது இவற்றால் ஒவ்வொரு வருசமும் வரம் காய்சாலின் விளைவாக எத்தனையோ அடிமைகள் உயிரையே தியாகம் செய்தனர். இந்த நரகத்தில் இருந்து எப்படியாவது வெளியே தப்பித்து போகலாம் என்று நினைக்கும் அடிமைகள் எஸ்டேட்டை விட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொள்ள காவலாளிகள். ஏன் சில எஸ்டேட்டில் கூலிகளை சங்கிலி போட்டு கட்டி வைத்திருக்கிறார்கள், இந்த கொடுமைகளை எல்லாம் மிக தெளிவாக எல்லா மேஸ்திரிகள் செவ்வனே செய்தனர். 

வருட கடைசியில், ஜனவரி மாதம், கூலிகளுக்கு கணக்கு தீர்க்கப்படும் நேரம் அப்போது வருடம் முழுதும் உழைத்ததற்கு மிகவும் சொற்பமான கூலியே கிடைக்கும் அதுவும் எந்த படிப்பறிவும் இல்லாத இந்த அடிமைகளுக்கு அவர்களின் உரிமை என்ன என்பதுவே தெரியாமல் ஆட்டு மந்தைகள் போலவே அடிமைகள் ஏமாந்து போனார்கள்.  

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த கூலி நேரம் வந்தது, கருப்பன் எதிர்பார்த்த எந்த ஒரு சந்தோஷமும் அவனுக்கு கிடைக்க வில்லை, நோயினால் வேலை செய்யமுடியாத நாட்களெல்லாம் கூலி இல்லை, ரேஷன் கொடுத்ததற்கு காசு பிடித்தம், கம்பளிக்கு காசு என ஏராளமான பிடித்தம் போக மீதி கிடைத்தது மிக சொற்பமான காசேதான். அதிலிருந்து மேஸ்திரி கொடுத்த முன்பணம் கொடுக்க முடியவில்லை, காலிச்செட்டியாரின் கடைக்கு கொடுக்க வேண்டிய கடன் பலமடங்காக பொய் கணக்கு எழுதி வசூல் செய்து விட்டான். 

பாவம் இந்த அடிமைகள், இவர்களின் ரத்தம் அட்டை உறிஞ்சுவது என்னமோ கொஞ்ச நாட்கள் மட்டுமே ஆனால் அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் இந்த கள்வர்களால் உரிஞ்சப்படுகிறது. கேட்க ஆளில்லை தொரைகள் முதல், மேஸ்திரி, செட்டி கடைக்காரன் என இவர்களின் வாழ்வில் என்றேற்ற அட்டை பூச்சிகள் நாள் தோறும் உரிஞ்சுகொண்டே தான் இருந்தது.

ஒரு வருடம் முடிந்ததும் கருப்பனுக்கு ஊருக்கு போகவேண்டிய அளவுக்கு பணம் இல்லை, மீண்டும் அவன் கடன் பட்டிருந்தான். அந்த கடனில் இருந்து தப்பிக்க எப்படி முடியும் என்று யோசிக்க கூட முடியமால் மீண்டும் அடுத்த வருஷதிற்கு வேலை செய்ய தயரான நிலையில் கருப்பனுக்கு வள்ளியும்....

தொரைமார்களின் காம விளையாட்டுக்கு உடன்படாத வள்ளியின் நிலை அவள் செய்த வேலைக்கு ஈடான கூலி கொடுக்க வில்லை, மாறாக அவள் வஞ்சிக்கப்ட்டால்.     அவள் கடினமாக உழைத்த உழைப்பை தொரைமார்களின் ஆசை நாயகிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

முள் படுக்கையில் அந்த பரிதாப பட்ட அடிமைகளின் வழக்கை நகர்கிறது. இரண்டு வருடமும் கடந்தது இதில் மீண்டும் மீண்டும் கடன் உயர்ந்து கொண்டே தான் இருந்தது. காய்ச்சலில் இருந்து தப்பிக்க தாயத்து தருவதாக ஏமாற்றும் ஒருவன் என கருப்பன் மேலும் கடன் படவேண்டியிருந்தது.
பல கனவுகளின் இறுதியாக இரண்டாம் ஆண்டும் முடிந்தது ஊருக்கு போக தேவையான காசு கருப்பனுக்கு கிடைக்க வில்லை. மீண்டும் ஒரு பெருத்த ஏமாற்றம் அனால் இந்த வருஷம் வள்ளியின் உடல் நிலை சரியில்லாமல் போனது. மீண்டும்  மூன்றாவது ஆண்டு கருப்பன் அடிமை வாழக்கை முள் மீது நடக்க தொடர்ந்தது. 

ஆனால் இந்த வருடமாவது ஊருக்கு திரும்ப போகவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற இடைவிடாமல் உழைக்க தொடங்கினார்கள். இந்த வருசமும் ஊருக்கு போக முடியாமல் போக கூடாதென்று முடிவே எடுத்திருந்தார்கள். இந்த வருடம் பலவகையான மாற்றங்கள்.வள்ளியின் உடல் நலம் பாதிக்க தொடங்கியிருந்தது இருந்தாலும் அவள் விடுப்பு எடுக்காமல் உழைத்து கொண்டே தான் இருந்தால். 

வார்ட் பாய் டாக்டராக வேலை பார்த்ததால் தான் நிறைய சாவுகள், காங்கிரசு காரர்கள் எப்போ வேண்டுமானாலும் இங்கே வருவார்கள் என்று பயத்தால் ஒரு படித்த டாக்டரை நியமிக்க வேண்டிய காட்டுயா சூழல் அப்படியாக ஒரு புதிய டாக்டர் வருகிறார் அதற்க்கு பிறகு கொஞ்சம் அடிமைகள் நல்ல மருத்துவம் கிடைத்தது. 

இங்கே கூலிகள் மட்டும் அடிமைகள் இல்லை இங்கு வேலைக்கு வரும் எல்லோருமே அடிமைகள் தான், காலில் செருப்பு போடக்கூடாது, தொப்பி போட கூடாது, தொரைகள் வரும்போது பவ்வியமாக அவர்களை மரியாதையை செலுத்த வேண்டும். இது போல கொடுமைகள் ஒரு முடிவுக்கு வரவே இல்லை.

புதிதாக வந்த டாக்டர் சில மாறுதல்களை கொண்டுவந்தார். எழுத்தர் அப்பாவு, ஜான்சன் இவர்கள் எல்லாம் சேர்ந்து கிறுஸ்துமல் விடுமுறைக்கு அருகில் இருக்கும் மலைக்கு ஒரு பயணம் மேற்கொண்டனர். இது வரை தேயிலை தோட்டத்தின் இரண்டு பக்கம் மட்டுமே தெரிந்த நமக்கு அந்த அழகிய மலையில் எவ்வளவு ரம்யமான காட்சிகள் இருக்கிறது என்று இந்த பயணத்தில், அப்பாவு மிக அழகா விவரிக்கிறார். 

இந்த வருஷம் வள்ளியின் உடல் நிலை படு மோசமாவே இருந்தது இந்த நிலையில் கருவுற்று இருக்கிறாள். பூசாரி இந்த முறையும் தனது பங்குக்கு கருப்பனிடம் ஏமாற்றிகொண்டே தான் இருந்தான்.  வள்ளி இனி நாம இரண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போகமாட்டோம் என தீர்மானித்துவிட்டால். இருந்தாலும் புதிய மருத்துவர் கொஞ்சம் நல்ல முறையில் வைத்தியம் பார்ப்பதால் தெரிவிடுவோம் என்ற நம்பிக்கை கருப்பனுக்கும் வள்ளிக்கும் வந்தது. 
ஆனால் விதி அவளின் உயிர் இந்த தேயிலை தோட்டத்துக்கு உரமாக வேண்டும் என்று இருக்கிறது                                            
                                
தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது ‘எரியும் பனிக்காடு’.பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள்தான் இந்நவீனமாக உருப்பெற்றன.

இன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.

அன்புடன், 
தேவேந்திரன் ராமையன் 
26 மே 2021
 

2 comments:

  1. மனதைக் கரைக்கிறது உங்கள் எழுத்து

    ReplyDelete
  2. நல்லதொரு நூல்... படிக்கும்போதே வேதனை தான். எப்படியெல்லாம் மனிதர்கள் சுரண்டல்காரர்களாகவும், மோசடி செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

    ReplyDelete