Saturday, 29 May 2021

மரபும் புதுமையும்

 # காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள் 113
மரபும் புதுமையும் .





பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் இந்த கட்டுரைகள் மூலமாக நாம் நமது மரபுகளை முற்றிலுமாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைத் தனது கேள்விகளாலும் சொல் திறமையாலும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். நமது உணவு முறையாகட்டும், விருந்தோம்பல் முறையாகட்டும், மருத்துவமாகட்டும், விவசாயமாகட்டும், உறவுமுறையாகட்டும், அல்லது வாழ்வியல் முறையாகட்டும் அனைத்தைதயும் நாம் எல்லாவகையிலும் சற்றே பாதை மாறிப் போகிறோம் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார் இந்த மரபும் புதுமையும் என்ற கட்டுரையின் வழியாக.

தமிழ்ப் புத்தாண்டு.
பேராசிரியர் பொங்கல் அதாவது அறுவடை திருவிழாவினையே நமது புத்தாண்டு என்று மிகத் தெளிவாக விளக்கத்துடன் விவரித்துள்ளார். நமக்குக் கிடைத்து உணவுப் பொருள்களுக்கு அதை அறுவடை செய்ய இருக்கும் எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லும் விதம் கொண்டாடப் படுகிற விழாதான் இந்த பொங்கல் திருவிழா அதுவே நமது புத்தாண்டு.
பொதிய மலை பிறந்த மொழி வாழ்வறியும் காலம் எல்லாம் - ஆதியிலே கல்வி கற்பது எல்லாருக்கும் சமமானது இருக்கவில்லை அதுவும் ஒரு சில வகுப்பினர்களே படிக்க வேண்டும் என்ற காலத்திலிருந்து உ வே சா பலவகையான இலக்கியங்களை மீட்டு எடுத்து அச்சிட்டு நமக்குக் கொடுத்திருக்கிறார் என்ற ஒரு விவரத்தையும் அவரின் செயல்பாடுகளையும் இந்த கட்டுரை வழியாக விளக்கியுள்ளார்.

வைதீகத்தின் இருண்ட முகம்:
துறவு என்பது ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த காலத்தில் துறவறம் செல்லும் பெண்களுக்கு மரியாதைகள் இல்லாமல் அவமானப்பட்டார்கள் என்பதையும் சமணர்களின் கோயில்கள் பறிக்கப்பட்டது பற்றியும் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கும் ஒரு கட்டுரை.
ராசராசன் சோழன் ஏக ஆதிபத்தியம் மற்றும் ராசராசனை கொண்டாடுவதும் என இரண்டு கட்டுரைகளில் ராசராச சோழனின் பல அறியத் தகவல்களை விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் பேராசிரியர். ராசராசன் பயன்படுத்திய உத்திகள், ஆட்சிமுறை, பயன்படுத்திய அளவுமுறைகள், கோயிலுக்குத் தேவையான பொருள்களைத் தடை இன்றி கிடைக்கச் செய்த முன்னேற்பாடுகள் அவற்றைச் சரிபார்க்க வைத்திருந்த காரிய கர்த்தாக்கள் எனப் பல விவரங்கள் இந்த இரண்டு கட்டுரையில் அடங்கியிருக்கிறது.

அன்னம் பஹி கூர்வீத:

இந்த கட்டுரையில் நமது உணவு முறைகளும் அவற்றை நாம் எவ்வாறு உற்பத்தி செய்கிறோம் என்பதையும் என்ன என்ன உணவுகளை நாம் பாரம்பரியமாக உண்டு வந்தோம். எப்படி உணவு பற்றிய சடங்குகள் நடந்தன, நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் என ஏராளமான விவரமும் ஆனால் இப்போது அயல்நாட்டு துரித உணவு முறை நமக்குள் ஆட்சி செலுத்துவதையும் அதனால் நாமும் நமது சங்கதிகளும் எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

தெய்வங்களின் உணவுரிமை.

நாம் நமது தெய்வங்களுக்கு காணிக்கையாக வெகுகாலங்களாகவே ஆடு வெட்டி படையல் வைத்ததும் அதற்காக உற்றார் உறவினர் என கூட்டம் கூடி கொண்டாடி மகிழ்வதும் என நாம் நமது பாரம்பரியத்தின் அடையாளமாக வாழ்ந்து வந்தோம் என்பதையும் விளக்கியுள்ளார். இன்றோ வஞ்சகத்தினால் ஐம்பது வருசத்துக்கு முன்னாள் போட்ட ஒரு சட்டம் இப்போது நடைமுறைக்கு வந்து உயிர்ப் பலி கொடுக்கக் கூடாது ஏன் கட்டளை போட்டது அரசாங்கம். எவ்வளவோ சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படாமல் இருக்கும் போது ஏன் எங்கள் தெய்வநம்பிக்கையில் கைவைக்கவேண்டும் என கேள்விகளைக் கொண்டு மேலும் பல தகவல்களை கொண்டுள்ளது இந்த கட்டுரை.

இராமர் பாலம்:

இராமர் பாலம் என்பது மணல் திட்டா அல்லது பாலம் என்று சில விவரங்களைச் சொல்லியிருக்கிறார். சேது என்றால் தென்னாடு என்பது வட நாட்டில் பயன்படுத்தும் ஒரு சொல் அதுபோல அவர்களின் இராமாயணத்தில் ராமரின் முடிவு வேறுமாதிரியாகவும் தென்னகத்தில் வேறுமாதிரியாகவும் இருப்பதால் இந்த பாலம் என்பது வெறும் கதைதான் என்கிறார் பேராசிரியர். ஏன் இராமாயணத்தில் ஒரே தேசத்தில் இரண்டு வேறுபட்ட முடிவு என்பது ஒரு பெரிய கேள்விக்குள்ளானதே. அதைத்தான் மிக தெளிவாகவும் பல விளக்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

சாதிய ஆய்வுகள் நேற்றும் இன்றும்:

இந்த கட்டுரையில் சாதிகள் பற்றி பலர் செய்த ஆய்வுகளையும் அவற்றின் தீர்வுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் தங்களின் அடையாளம் தெரியாமல் போன பல சிறிய சாதிகளைப் பட்டியலிடுகிறார் பேராசிரியர். நடந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் எவ்வாறும் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்று வாழ்வின் வழிதெரியாமல் இருப்பதையும் அவர்கள் எப்படி மற்றவருக்குள் மறைந்தும் உடைந்தும் போனார்கள் என்று சொல்கிறார்.

உலகமயமாக்கல் பின்னணியில் பண்பாடும் வாசிப்பும்:
புத்தகங்கள் வெறும் காகிதமும் மையும் மட்டுமல்ல அதற்குள் எழுதியவரின் ஆன்மாவும் இருக்கிறது, ஒரு செடியின் வேருக்கும் விழுத்துக்கும் உள்ள தொடர்பு போலப் புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு என்கிறார் பேராசிரியர். வாசிப்பு என்பது யோசிப்பைத் தரவேண்டும் அதன் மூலம் சமூக மாற்றம் வர வேண்டும் என்பதையும் உலகமயமாக்கலின் மூலம் ஒரு பொருளைப் பழசாக்கி நம்மை மீண்டு மீண்டும் வாங்கத் தூண்டுவதே ஆகும். அதுபோல உலகத்தின் எல்லா சந்தை பொருள்களும் நம்மிடையே வந்து நமது அடையாளத்தினை தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த பாரம்பரியத்தின் அடையாளங்களை அடகுவைத்து விட்டோம் என்பதை விளக்கமாக விளக்கியுள்ளார்.

டங்கள் என்னும் நயவஞ்சகம்..:

இந்த கட்டுரை என்று சொல்வதைவிட இதை ஒரு தனி நூலாகவே வெளியிடலாம். எண்ணிலடங்கா தகவல்களைக் கொண்ட இந்த ஒரு கட்டுரை “டங்கள் திட்டம்” அதாவது “காட் ஒப்பந்தத்தின்” வழியாக உலகமயமாக்கமும் அதனால் நம் நாட்டுப் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விடையாகப் பல தகவல்களை இந்த கட்டுரையில் விவரமாக விவரித்துள்ளார் பேராசிரியர். நமது நாடு பல்வேறுபட்ட சிறு தொழில்களினால் கட்டிய சிலந்தி வலைப்போல பின்னி பிணைந்து இருக்கும் ஒரு முறையான தொழில்முறை தான் நமது முறை. ஆனால் இன்று வந்த இந்த உலகமயமாக்கலின் விளைவாக சின்ன சின்ன தொழில் நசுங்கி போய் விட்டது. ஒரு காலத்தில் தனக்கு தேவையான வருமானத்தை தான் செய்யும் தொழிலில் ஈட்டினார்கள் ஆனால் இன்றோ அவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் சிதைந்து போனார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
09 ஏப்ரல் 2021

No comments:

Post a Comment