Saturday 29 May 2021

விலங்கு பண்ணை

 விலங்கு பண்ணை

எழுத்தாளர்_ஜார்ஜ் ஆர்வெல் - தமிழி்ல் க.நா.சு
பக்கங்கள் 172



சமீபத்தில் கிண்டலில் இலவசமாக கிடைத்த “1984" என்ற பிரபலமான நாவல். ஏற்கனவே கிடைத்த விலங்கு பண்ணையும் வாங்கிவைத்திருந்தேன். நமது குழுவில் அதாவ்து "வாசிப்பை நேசிப்போம்" குழுவில் அதிமாக வாசிக்க பட்ட இந்த இரண்டு நாவல்களையும் ஒருசேர வாசித்தாக வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன்.
முதலில் நான் இந்த கதையின் ஆசிரியர் "ஜார்ஜ் ஆர்வெல்" நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இப்படியொரு மகத்தான சிந்தனையை தனது நாவல் மூலமாக அந்த காலகட்டத்தில் சொல்லியிருப்பது ஒரு மாபெரும் காரியம்தான், அவரை எப்படி பாராட்டுவது? - அவரின் சிந்தனையினை என்னவென்று சொல்வது!!!

1940 களில் எழுதப்பட்ட இவ்விரு புதினங்களும் உலக அளவில் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு பிரபலமானவை.

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு கருத்துக்களை கொண்ட எண்ணிலடங்கா நூல்கள் இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் வாசிப்போரின் கவனத்தில் படுகிறதா என்றால் அது ஒரு ஆச்சரியத்துக்குரிய கேள்விக்குறியாக தான் இருக்கும் என்பதில் ஐயமேதில்லை.

அப்படித்தான் தான் சமீபத்தில் நான் வாசித்த "1984" மற்றும் "விலங்கு பண்ணை" என்ற இந்த மகத்தான சிந்தனை கொண்ட இந்த இரண்டு நூல்கள். வாசித்த பின்னர் என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது இந்த நூல்கள் . ஆம் அதில் வியப்பேதுமில்லை.
"ஜார்ஜ் ஆர்வெல்" அவர்கள் எழுதிய இந்த இரண்டு நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதில் ஒன்றான " விலங்கு பண்ணை (Animal Fram)" என்ற நூல் கம்யூனிச எதிர்ப்பு நாவலாக விமர்சனம் செய்யப்பட்டாலும் இன்று கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில், ஆதிக்கவாதிகள் எதை ஏதேச்சதிகார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வினாவை எழுப்பி ஒரு அரசியல் விவாதத்தை தொடங்க இந்த நாவல் உதவியாக இருக்கும். புரட்சியில் ஆரம்பித்து ஒரு பெரிய நோக்கத்திற்காக செயல்பட்ட அந்த புரட்சி பின்னாளில் எப்படி மாறுகிறது எனபதை ஒரு பண்ணையின் விலங்குகளை மையமாக வைத்து மிக அழகாக சித்தரித்து உள்ளார்.

"ஜோன்ஸ்" என்ற ஒரு பண்ணையார் தன்னுடைய பெரிய பண்ணையில் பல்வேறு மிருகங்களைக் கொண்டு தனது நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு சராசரி மனிதனின் சாதாரணமான நோக்கமே இலாபம் ஈட்டுவதுதானே? ஆனால் இந்த நோக்கத்திற்க்காக, தொடர் உழைப்புக்கு ஆட்படும் விலங்குகள் தங்களுக்குத் தேவையான மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வது எப்படி என முடிவெடுக்கவும், அந்த முயற்சியாக ஒருநாள் அணைத்து விலங்குகளும் சேர்ந்து "ஜோன்ஸ்" அவர்களை பண்ணையை விட்டு வெளியேற்றிவிட்டு தங்களாவே பண்ணையை நிர்வாகம் செய்ய ஆரம்பிக்கிறது ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும் அதிவிரைவில் நிர்வாகத்தில் வெற்றியும் கொண்டு மற்ற பண்ணையாளர்கள் மிரளவும் வைக்கின்றது இந்த விலங்குகள்.

மற்ற பண்ணைகளிலும் இந்த புரட்சி ஏற்படுத்த ஏற்ற நேரம் எப்போது வரும் என்பதை குறித்தும் விவாதிக்க பண்ணைக் கொட்டிலில் விலங்குகள் அனைத்தும் ஒன்றுகூடுகின்றன. விவாதக் கூட்டம், பண்ணைக் கொட்டிலில் மூத்த மற்றும் அறிவார்ந்த மிருகங்களாக ‘கிழட்டு மேஜர்’ நெப்போலியன் மற்றும் ஸ்நோபாலின் பன்றிகளின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவாக, நமக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும் காரணமாக இருப்பது நம் உழைப்பை சுரண்டி கொண்டு நம்மை வதைபடுத்தி சுகமாக வாழும் மனிதர்களாகிய பண்ணை உரிமையாளர்களே. அதன்பின் பண்ணையின் பெயர் பலகையை “விலங்கு பண்ணை” என மாற்றப்படுகிறது. புரட்சிகரமான “இங்கிலாந்தின் மிருகங்கள்” என்ற பாடலை இசைக்கின்றன. இந்த பாடலை எல்லா விலங்குகளும் மனப்பாடம் செய்துகொள்கிறது. தங்களுக்கான கல்வி, விவசாய உற்பத்தி, உழைப்பு நேரம் முதலானவற்றை அமைத்துக் கொள்கின்றன. இந்த் நிர்வாகத்தில் இருந்து நிறைய விதிமுறைகள் சொல்லப்படுகிறது. வயதான காலத்தில் உழைப்புக்கு ஓய்வு அதற்காக தனி ஒரு நிலம் அதில் வரும் வருமானம் எல்லாம் ஓய்வூதியத்திற்கு பயன்படுத்தபடும் என்ற திட்டம் மற்றும் தங்களுக்கு தேவையான அனைத்தும் நாமே உற்பத்திக்கொள்ள வேண்டும் என பல்வேறு கொள்கைகள் வாசிக்கும் போதே மிரளவைக்கிறது.
எப்படி ஒரு அதிகாரத்தில் இருந்த மனிதன் தனது அதிகாரம் பறிபோனதும் அதை எப்படியாவது மீட்டெடுக்க முற்படுவான் அதுபோல தான் சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஜோன்ஸ், சில மனிதர்களின் உதவியுடன் பறிபோன ப ண்ணையினை கைப்பற்ற வருகிறார். எப்படியும் மனிதர்கள் நம்மை விரட்ட வருவார்கள் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த விலங்குகள் தகுந்த முன்னேற்பாடுக ளுடன் தங்களுக்கு ஏற்பட்ட போரில் மிக அருமையான வெற்றியும் பெறுகின்றன.

வஞ்சகமும், பதவியாசையும் யாரைத்தான் விட்டது எப்படி தனக்கு அடுத்த போட்டியாக இருப்பவனை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது அப்படித்தான் இங்கு அந்த பிரச்சினை ஆரம்பமாகிறது, எவ்வாறு ஒரு புரட்சி ஒரு கொள்கையினை நோக்கியிருந்தாலும் பதவி ஆசையினால் நெப்போலியன் பன்றி, ஸ்நோபாலை விரோதியாக எண்ணி அதற்கு எதிராகக் கருத்துக்களைப்பரப்பி துரோகி என்று சொல்லி ஸ்நோபாலை தீர்த்துக்கட்ட தான் ரகசியமாக வளர்த்த வெறி நாய்களையே அனுப்புகிறது. எப்படியோ இந்த சூழ்ச்சியில் இருந்து உயிர் தப்பித்த ஸ்நோபால் பண்ணையை விட்டே ஓடிவிடுகிறது.


ஸ்நோபால் வெளியில் சென்றபின் நெப்போலியன் ஓர் சர்வாதிகாரிகாரியாகவே செயல்படத் தொடங்குகிறது. அதற்காக மற்ற விலங்குகள் மனதை மாற்றுதல், பயத்தை உண்டாக்குதல், புரட்சிக்குப்பின் எழுதப்பட்ட அனைவருக்குமான சட்டத்தில் இரவோடு இரவாக மாறுதல் கொண்டு வருவது, ஸ்நோபாலின் பல அரிய திட்டங்களைத் தான் ஏற்படுத்தியது போன்ற தோரணையைக் காட்டிக்கொள்வது, தற்போது அனுபவித்து வரும் இன்னல்களுக்கும் ஸ்நோபாலின் திட்டம்தான் காரணம் எனத் தவறாகக் கருத்துப் பரப்புவது என அனைத்து தவறான காரியங்களை செய்கிறது. இதற்குத் துணையாக தான் அடியாளாக வளர்த்த வெறிநாய்கள், ஸ்க்வீலர் மற்றும் பன்றி இனத்தைத் துணைக்கு வைத்துக்கொள்கிறது. எப்போதுமே பொதுக்கூட்டம் ஒருவனின் பின் செல்வதையே செய்கிறது அதுவும் கண்மூடித்தனமாக நம்பி அந்த ஒருவன் செய்யும் அக்கரமங்களை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போலவே பின்தொடரும் கூட்டம் போலத்தான் இங்கே மற்ற விலங்குகள் சென்றன...
காலப்போக்கில் புரட்சிக்குப்பின் எழுதப்பட்டுக் கடைபிடிக்கப்பட்ட அனைத்து விதிகளிலும் மாற்றத்தைச் செய்து பன்றி இனமே உயர்ந்தது என்ற கருத்தை விலங்குகளின் மத்தியில் விதைத்துவிடுகிறது நெப்போலியன். அதோடு மனிதர்கள் அனைவரும் தீயவர்கள் அல்ல எனவும், நெப்போலியன் ஒருவரே தலைவர் அவர் என்ன சொன்னாலும் எதிராகக் கேள்வி கேட்கக்கூடாது என்ற மனப்பான்மையையும் வளர்த்து விடுகிறது. நெப்போலியன் இரண்டு காலில் நடக்கும் மனித உருவமாக மாறி மாறி தெரிவதுடன் மட்டுமல்லாமல் தான் ஒரு சர்வாதிகாரியாவே உருவெடுத்திருப்பதை கண்டு மற்ற விலங்குகள் ஒன்னும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்ற சிந்தனையுடன் நாவல் முடிகிறது.

விலங்குகளை கொண்டு மிக ஆழந்த சிந்தனையின் ஒரு நாவல் மூலமாக சொல்வதென்பது ஒரு பெரிய செயல். இந்த நாவல் வாசிக்க ஆரமித்தது முதல் முடியும் வரை அடுத்தென்ன என்ற ஆர்வமும் ஒரு விதமான எதிர்பார்ப்பும் இருந்துகொண்டே தான் இருந்தது.

நமக்குள் எப்படி ஒரு சிறிய குழுவில் இருந்துகொண்டு தலைவர் யாரென்று தேடுகிறோம் அப்படி யாரவது ஒருவனை தலைவன் என்று சொல்லி நாம் அவனை கண்டு பயப்படுகிறோம் நாம் அவனுக்கு அடிமையாகிவிடுகிறோம் காலப்போக்கில் அந்த அடிமைத்தனம் பொது சட்டமாக மாறுகிறது.

அப்படிப்பட்ட அடிமைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அல்லாமல் தங்கள் சந்ததிகளையும் அந்த அடிமை சங்கிலியில் பூட்டி போட்டு கடைசிவரைக்கும் அடிமையாகவே இருந்து மடிகிறார்கள் என்பதை இந்த நாவல் மூலமாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இன்றைய உலகின் எதார்த்த வாழ்வியலை மிக தெளிவாக ஒரு பண்ணையில் இருக்கும் விலங்குகளை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு நமக்கு தெளிவான சிந்தனையினை சொல்லியிருக்கிறார்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்
22 ஏப்ரல் 2021

No comments:

Post a Comment