நூல் : வெட்கமறியாத ஆசைகள்
(சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்
அமேசான் மின்னூல்.
விலை : ₹99
நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான "வெட்கமறியாத ஆசைகள்" இந்த தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதையினையும் நடப்பு காலகட்டத்தில் இருக்கும் சில சமூக அவலங்களையும், சமுதாய வாழ்வியலையும் கொண்டு மிக அழகாகவும் சில கேள்விகளை சமுதாயத்திற்கும் கேட்டு தனது கதையின் ஊடே நமக்கு கொடுத்திருக்கிறார். நண்பரின் எழுத்து எதார்தத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.
1. வெட்கமறியாத ஆசைகள்:
இன்றைய சூழலில் எப்படியாவது பிரபலமாகவேண்டும் என்று ஆசை எல்லோருக்குள்ளும் துளிர்விட ஆரம்பித்தவுள்ளது. அப்படிதான் இந்த கதையில் வரும் நாயகி பரதம் கற்றுக்கொண்டு பள்ளிநாட்களில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுகிறாள். அப்படியே தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தாள், அவளின் விதி அவளிடன் கூடவே இருந்த தோழிகளின் வழிகாட்டி படி அவள் எப்படியாவது திரையில் தோன்றி பிரபலமாக வேண்டும் என்று. அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுத்தாலும் அந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. இவளின் நாகரீக வளர்ச்சியினால் பெற்றோர்களையே பிரிந்து தனிமையில் தள்ள பட்டாள். சமூக வலைத்தளத்தில் இவளின் புகைப்படம் பலரால் விரும்பப்பட்டது. அடுத்த கட்டத்திற்கு அவளின் வாழ்க்கை நகர்கிறது ஆனால் கூடவே இன்னல்களும் இலவசமாக இணைந்து கொள்ள வாழ்வின் வழி தெரியாமல் வாழ்க்கையினை முடித்துக்கொள்கிறாள். நண்பர் சமுதாயத்தில் உலவும் நடப்பு காரியத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
2. த்ரில் :
இன்றைய இளைஞர்கள் பெரிதும் கவர்ந்து உள்ள இந்த த்ரில் வண்டி பந்தயம். இந்த பந்தயத்திற்க்காக இளைஞர்கள் எவ்வாறு தங்கள் உயிரையும், தங்கள் பெற்றோரையும் பற்றி கவலைப்படாமல் தங்கள் இலக்கு மட்டும் தான் ஒரே குறிக்கோள்களாக இருப்பது கொஞ்சம் வருத்தம் தரக்கூடிய விஷயம் தான். நண்பர் இந்த கருத்தினை மையமாக வைத்து இந்த கதை நரகர்த்தியுள்ளார். தடம் மாறி போகும் இந்த இளைஞனில் வாழ்க்கை விபத்தில் முடிகிறது. அவன் எப்போதும் தனது ஒரே இலக்கு பந்தயத்தில் வெற்றிபெறுவது மட்டுமே அதற்காக எவ்வாறெல்லாம் தன் பெற்றோரை துன்பப்படுத்தி பந்தயத்திற்கு வண்டி வாங்கி அதே வண்டியில் உயிரை விட்டதும் பல இளைஞர்களின் இன்றைய அவலம்.
3. நூதனத்திருட்டு:
பெட்ரோல் பங்கில் நடக்கும் பல்வேறுவிதமான மோசடிகளை மையமாக கொண்டு இந்த கதை செல்கிறது. இந்த கதை நம்மில் பெரும்பாலோனோர் ஓடிக்கொண்டே இருக்கிறோம், அந்த வேக பயணத்தில் நம்மை அறியாமலே நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை கவனிக்காமல் சென்றுவிடுகிறோம், அவற்றில் சில நேரம் நாம் பணத்தை கூட இழந்துவிடுகிறோம். அப்படிதான் எப்படியெல்லாம் நாம் நம்மை அறியாமல் சுரண்டப்படுகிறோம் என்பதை மிக தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நண்பர்.
4. ஜே ஃஎப் சி:
நாம் நமது பாரம்பரியத்தை விட்டு வெளிநாட்டு பழக்கவழங்கள் மீது கொண்டுள்ள ஒரு மாயையான மோகத்தினை முன்னிறுத்தி இந்த கதை நரகர்கிறது. நாம் எவ்வாறு மேலைநாட்டு துரித உணவின் மீது கொண்ட ஆர்வத்தால் எவ்வாறு நமது உடல் நலம் மற்றும் நமது பாரம்பரியம் சிதைந்து போவதை தனது ஆதங்கத்தினை ஒரு நிகழ்வின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார் நண்பர்.
5. நேரக்கடத்தி :
நேரக்கடத்தி நல்ல பொருத்தமான தலைப்பு. இன்றைய சமூக நிலையில் நாம் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் நேரத்தில் நமது வாழ்க்கை முறை பெரும்பாலும் இணையத்தின் உதவியோடு நடந்தேறுகிறது. அப்படியாக நமது குழந்தைகளின் படிப்பு முழுவதும் இணையத்தின் வழியே என்பதால் பெரும்பாலும் திறன் பேசி இல்லாத வீடே இல்லை என்று சொல்லுமளவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலிலே நமது குழந்தைகள் எவ்வாறெல்லாம் தடம் மாறி செல்கின்றனர் என்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படி இங்கே ஒரு மாணவன் தனது தந்தையின் திறன்பேசியில் விளையாட்டு விளையாடி தந்தையின் வங்கி கணக்கில் இருந்து அதற்க்கு தொகையும் செலுத்தி அதற்க்கான தடயத்தினை தெளிவாக மறைத்து தான் ஏதும் செய்யாத நல்ல பிள்ளைபோலவே வளம் வருகிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிய வர அப்பாவுக்கு பெருத்த அவமானம் காரணம் அவர் கொடுத்த காசோலை திரும்பியது வங்கி கணக்கில் பணம் இல்லையென்று. இவையெல்லாம் நாம் நம் குழந்தைகளை கவனிக்காமல் இருந்ததனால் மட்டுமல்ல குழந்தையின் மீது ஒவ்வொரு பெற்றோரும் வைக்கும் நம்பிக்கைக்கு அவர்கள் செய்யும் கைமாறு தான் இந்த அவலம்.
6. நிராசை:
திறமை மட்டும் நம்மை மேலே எடுத்து செல்லும் என்பது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு ஆகாது என்பதற்கு சமம். ஆம் இந்த கதை ஒரு நிராசையாகவே இருக்கிறது. விளையாட்டில் திறமை இருந்தும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்து அதை சரியாக பயன்படுத்தி தனது திறமையினை வெளிப்படுத்தியும் மீண்டும் அந்த வாய்ப்பு வராமலே போகும்போது அந்த திறமையுள்ள இளைஞனின் வாழக்கை எந்த பக்கம் நோக்கி பயணப்படுவது என்று திசை தெரியாமல் போவது இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் நிலை தான். அதற்க்கான தீர்வு தற்கொலை என்பதுதான் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, உலகில் வாழ எத்தனையோ நேர்வழி இருக்கிறது அதற்க்கு ஏற்றாற்போல ஒரு முடிவிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
7. ஏளனம் :
வாழ்க்கை என்ற பயணத்தில் காசு பணம் இன்று வரும் நாளை போகும் என்பது ஒரு பெரிய எதார்த்தம். அதை புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இந்த உலகில் தடம் பதித்து போகிறார்கள். புரியாமல் வாழ்பவர்கள் தண்டனை பெற்று போகிறார்கள். ஆம் நாம் அன்றாடம் பார்க்கும் பலரது நடவடிக்கை, அவர்கள் காசு பணம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் அவரகள் வாழ்க்கை முறை மாறுவதும் ஏழைகளை உதாசின படுத்துவதும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் செல்வந்தர்களாக இருப்பவர்களை தேடி போய் உறவாடுவதும் என அவர்களின் அன்றாட நடவடிக்கை நம்மை சில நேரம் நெருடதான் செய்யும் என்ன செய்வது அதுதான் இன்றைய நிலவரம். அப்படி சமுதாயத்தில் முளைத்த ஒரு புல்லுருவியின் கதைதான் இந்த ஏளனம்.
8. சிம்னி அன்ட் ஹாப்:
நாகரீக வாழ்வின் எல்லாமே புதுமைகள் தான் என நினைக்கும் இன்றைய மக்களின் நிலையில் இருந்து இந்த கதை பயணிக்கிறது. மனைவி தனக்கு பழக்கமான பக்கத்து வீட்டு சமையலறை போலவே நாமும் மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஒரு நாள் கணவனால் நிறைவேற்ற படுகிறது. ஆனால் அதற்குள் அவர்களுக்குள் எத்தனை போராட்டம், சச்சரவு, கருத்து வேறுபாடுகள் என பல பிரச்சினைகள் இடை இடையே வந்து வந்து போகிறது ஆனால் காரியத்தில் கண்ணாக இருந்து தனது தேவையினை பெற்றுக்கொள்ளும் மனைவி. ஆனால் அதற்காக தன் கணவன் எத்தனை கடன் பட்டான் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றே. நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை, கதையின் கருத்து அதைத்தான் இங்கே என் மொழியில் சொல்லிச்செல்கிறேன்.
9. விபரீத ராஜயோகம்:
இந்த கதை நடப்பு நாட்களில் பெரும்பாலும் எல்லோராலும் தெரிந்த ஒரு சம்பவமே என்று தான் தோன்றுகிறது. வாழக்கை என்பது கண்ணாடி போன்றது அதை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பதை பலரும் நன்றாக தெரிந்து பார்த்துக்கொள்கின்றனர். பராமரிக்க தெரியாதவர்கள் அந்த கண்ணாடியை தவற விட்டு சிதைந்து போன பிறகு அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முனைகிறார்கள் அது ஒருக்காலும் இயலாத ஒன்றே என்று அவரகள் அடைந்த தோல்வியின் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை. சுயநலமிக்க சிலர் நாம் நன்றாக வாழ எதைவேண்டும் என்றாலும் செய்யலாம் சமூகத்தின் மீதோ அல்லது சுற்றம் மற்றும் அக்கம் பக்கத்தினர் பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் தான் இவ்வாறு வாழ்கிறார்கள். சுயநலத்தின் உச்சம் தான் இந்த கதையின் கருத்து.
10. ஸ்டைரீன்:
வணிகம் செய்கிறோம் என்ற போர்வையில் மக்களுக்கு உகந்து வராத பல கொடிய செயல்களை எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் துணிந்து செய்யும் சிலரின் செயல்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த கதை. சரியான உரிமம் பெறாமல் ரசாயன நிறுவனம் செயல்படுகிறது. இது ஒரு தனிமனிதனின் செயல் அல்ல இதற்க்காக பலர் பின்னாடி இருந்து இயக்குகின்றனர் ஏனெனில் ஏழைகளின் உயிர் அவர்களுக்கு விலையில்லா ஒரு பொருள் அவ்வளவுதான். இந்த கதையின் மூலமாக ரசாயன கசிவு ஏற்பட்டு எண்ணற்ற உயிர்கள் போனதும் ஆனால் அதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்பதே விடையில்லை கேள்வியாகத்தான் தெரிகிறது.
11. உப்பரிகை:
பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாக படித்த இருவரும் தீடீரென விழும் காதல் வாழக்கை எப்படி கொரோனா காலத்தில் நடக்கிறது என்பதுதான் இந்த உப்பரிகை சொல்லும் செய்தி. இரண்டு வருடமாக தாங்கள் இருவரும் சுற்றி திரிந்த இடங்களெல்லாம் இப்போது ஊரடங்கால் மீண்டும் மீண்டும் சுற்றி திரிய முடியவில்லை என்ற வருத்தத்துடன், சமூகத்தில் பலபேர் ஒரு வேளை உணவிற்கு என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் இந்த சூழலில் இவர்களுக்கு காதல் லீலை பாட களமும் காலமும் தடையாக இருக்கிறதே என்ற வேதனையுடன் நாட்களை நகர்த்தி மீண்டும் ஊரடங்கு முடிந்து ஆரம்பமாகிறது அவர்களின் காதல் காட்சி 2.0.....
மொத்ததில் ஒவ்வொரு கதைகளும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்கால செயல்களை அடிப்படியாக கொண்டு மிக அழகாவும் தெளிவாகவும் சொல்ல வந்ததை ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
ஒரே ஒரு குறைதான் சொல்லவேண்டும், பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, வளரும் ஆசிரியர் ஆதலால் தாய்மொழியின் ஆதிக்கம் அதிகமிருந்தால் அனைவராலும் வரவேற்கப்படும் என்பது என் கருத்து.
ஒரு முறை வாசித்து பாருங்கள் ..
வாழ்த்துகள் சகோ 💐💐💐
தொடரட்டும் தங்கள் எழுத்து பயணம்.....
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
30 மே 2021
No comments:
Post a Comment