Saturday, 16 July 2022

ஒரு புளியமரத்தின் கதை -வாசிப்பனுபவம்

ஒரு புளியமரத்தின் கதை 

ஆசிரியர் - சுந்தர ராமசாமி 

காலச்சுவடு பதிப்பகம் 

தமிழ் கிளாசிக் நாவல் 

பக்கங்கள் 220  


தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் வரும்  இந்த "ஒரு புளியமரத்தின் கதை"  என்ற நூல் சுந்தர ராமசாமியின் எழுத்தில் மிக ஆழமான சிந்தனைகளை எளிதான வார்த்தைகளால் கொடுத்திருக்கிறார்.

ஒரு புளியமரத்தின் முழு வாழ்க்கையும் சொல்லிச்செல்லி இந்த கதையில் மரமும் ஒரு மனிதனைப் போலத் தான் உயிரோடே தான் இருக்கிறது. இறுதியில் நம்மைப் போலவே தான் அதுவும் இறந்து(பட்டு)போகிறது என்ற ஒரு இயல்பான விவரத்தினை பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி எடுத்துச்செல்கிறார்.

தான் பார்த்தும், தாமோதர ஆசானிடம் கேட்டுத் தெரிந்தும் கொண்ட ஒரு பெரிய பின்னணிகொண்ட இந்த புளியமரத்தின் கதையினை தனது அனுபவமாகச் சொல்லும் விதம் மற்றும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கதையினை சொல்லப்படும் விதம் அருமை.       

ஒரு மரத்தினை சுற்றி விவசாயம் நிறைந்து இருந்த காலத்திலிருந்து அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகரமயமாகிப் போனதும் அந்த மரம் மட்டும் இத்தனை மாற்றங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே தான் இருந்தது.

முனிசிபாலிடி அவ்வப்போது எடுக்கும் ஒரு முடிவுகளிலிருந்து அந்த மரம் பாடும் பாடு, கூடவே ஒவ்வொரு வருடமும் ஏலத்தில் வரும் வருமானம் என ஒரு காலத்தில் இந்த புளியமரத்தின் வருமானம் முனிசிபாலிட்டிக்கு முக்கிய வருமானமாக இருக்கிறது.

அரசியல் மற்றும் வியாபாரத்தில் வரும் காழ்ப்புணர்ச்சி அதனால் ஏற்படும் விரோதங்கள், அதற்காக இவர்கள் செல்லும் எல்லை என பல்வேறு நிலைகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இந்த புளியமரத்தின் உயிரோடு சேர்ந்தே நடக்கிறது.

மரத்தின் வளர்ச்சியினை தாமோதர ஆசான் சொல்லும் விதமும் அதைக் கேட்பதற்காக அவருக்குப் பிரியமான யாழ்ப்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு மற்றும் செலவுகளைச் செய்து கொடுத்தும் அவரிடம் இருந்து கதையினை கேட்டுத் தெரிந்துகொள்ளும் விதத்தில் தான் எத்தனை ஆர்வம். இவரைப் போல ஒரு கதைசொல்லி எங்கள் கிராமத்திலும் இருந்தார் அவர் எப்போதும் பீடி குடித்துக்கொண்டே எங்கள் கிராமத்தில் அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையார் கோவிலருகில் அமர்ந்துகொண்டு சொன்ன கதைகள் ஏராளம் அவற்றை நினைவு படுத்திச் சென்றது தாமோதர ஆசானின் கதாபாத்திரம். 

ஆரம்பக்காலத்தில் புளிக்குளம் என்ற ஊரில் நடு குளத்தில் சிறு தீவுபோல காட்சிதந்த இந்த  புளியமரம், பிறகு காலத்தின் சூழலால் நிலத்திற்கு இடம்பெயர்ந்து இப்போது இருக்கும் இடத்திற்கு வந்த கதையும், அந்த மரத்தில் செல்லம்மாள் தூக்கிலிட்டு இறந்துபோனதும் அப்போது அவர் அங்கே வந்து அந்த மரத்தினை அனைவரிடம் இருந்து காப்பாற்றியதும் பிறகு ஒருநாள் மகாராஜாவிற்கு ஏற்பட்ட ஒரு சோக கதையும் என இந்த மரத்தின் பல்வேறு பரிணாமத்தின் வளர்ச்சியும் அதன் கூடவே வளர்ந்த அந்த நகரமும் என அவரின் கதை வாசிக்கும் நம்மையே நேரில் கதை கேட்ட ஒரு நிலைக்கு அழைத்துச் செல்கிறது இவரின் எழுத்து.

காதர், ஒன்றுமில்லாமல் இருந்த தனது கசப்பான ஆரம்பக்கால வாழ்க்கையினை மறந்து பிற்காலத்தில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு முன்னேறியதும், கூடவே தனது முதலாளியின் மகளையே காசுக்காகத் திருமணம் செய்துகொண்டு பிறகு அவளை வேண்டாமென்று சொல்வதும், ஒரு காலத்தில் முழு கடையும் தனியாக நடத்த ஆரம்பித்து புகையிலை வியாபாரத்தில் வரும் வாய்ப்பினை விடாமல் பிடித்துக் கொண்டு செல்வது எனச் சொல்கிற கதையில் அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் நிலவரங்களை மிக நேர்த்தியாக இந்த கதாபாத்திரத்தின் ஊடக நமக்குச் சொல்கிறார்.

தாமுவும் எப்படியாவது தனது வியாபார எதிரிகளை அழித்துவிட்டுத் தான் மட்டும் தான் கோலோங்கி இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னால் முடிந்த அளவிற்குச் செல்கிறான்.

எம். சி. ஜோசப், முனிசிபாலிடி தலைவர் தன்னால் முடிந்த வரையில் தனது அதிகாரங்களை எடுத்துக்கொண்டு முனிசிபாலிடி ஊழியர்களை எப்படி நடத்துவது மற்றும் அந்த முனிசிபாலிடிக்கு உள்ளடங்கிய இடங்களை எல்லாம் எப்படிக் கையாள்வது கூடவே தலைதூக்கும் ஒவ்வொருவரையும் எவ்வாறு அடக்கி வைப்பது என்று தனக்கு இருக்கும் அரசியல் பலத்தாலும் அதிகார பலத்தாலும் முடிந்த வரை முயன்றுபார்க்கிறார்.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த புளியமரத்தினை கதையினை முழு பலத்துடன் தாங்கி செல்கிறது.     

தன்னை சுற்றிலும் நடக்கும் பல்வேறு சாதி மத வேறுபாடும், அவற்றைச் சரிப்படுத்தவும் தான் செய்தது சரியென நிலை நிறுத்தவும் ஒவ்வொருவரும் செய்யும் அல்லது செய்யத் தூண்டும் பல்வேறு  துரோகங்களும் இதற்குள் புகுந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அரசியலும் அதற்காக ஏற்படும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் என எல்லாவற்றையும் ஒரு தனிமரமாக நின்று மௌனமாக வளர்ந்து நிற்கும் புளியமரத்தை ஒரு சிலர் மதத்தின் அடிப்படியில் கடவுளாக்கவும் ஒரு சிலர் இடையூறு என்று சொல்லித் தகர்க்கவும் என போட்டிப்போட்டுக் கொண்டு நடத்தும் பல்வேறு சூழ்ச்சிகளை மையமாகக்கொண்டு இந்த மரத்திற்கும் மனிதருக்கும் இருக்கும் உறவினால் எவ்வாறு சக மனிதர்கள் தங்களைப் பிளவுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புதமான தமிழ்  இலக்கியத்தில் ஒரு பெரும் படைப்பாகவே தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

தமிழ் இல்லை இந்திய இலக்கியத்தின் ஒரு மைல்கல் என பல்வேறு வகையில் கூறப்படும் இந்த நாவல், கண்டிப்பாக எப்போதும்  வாசிப்பவர்களின்  மனத்தில் ஒரு  சிறிய தாக்கத்தினையும் ஒரு காலத்தில் நடந்தேறிய அரசியல் சூழல்களையும் நினைவுபடுத்திச் செல்லும் என்பது தான் இந்த நாவலின் மைல்கல் ஆக இருக்கிறது.

மேலும் தமிழிலிருந்து ஆங்கிலம்,மலையாளம், இந்தி மற்றும் ஹீப்ரு என்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

16 ஜூலை 2022 


   

    

     

மூன்றாம் உலகப்போர் - வாசிப்பனுபவம்

மூன்றாம் உலகப்போர்  - வாசிப்பனுபவம் 

ஆசிரியர் - கவிஞர் வைரமுத்து

கிண்டில் பதிப்பு 

பக்கங்கள் 540


இந்த புத்தகம் விவசாயிகளின் துயரத்தினையும், தரிசாக மாறிப்போன நமது விவசாய நிலங்கள் எல்லாம் இப்போது எப்படி பல்வேறு தொழிற்சாலைகளாகவும், பல்வேறு வகையான அடுக்கு மாடி வீடுகளாகவும் பரிணாமம் பெற்றிருப்பதையும், உலகெலெல்லாம் உணவளிக்கும் விவசாயம் எவ்வாறு அழிந்து போகிறது என்பதை பற்றியும், மேலும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தால் வளரும் நாடுகள் எவ்வாறெல்லாம் நசுக்கப்படுகிறது என்பதை இந்த மூன்றாம் உலகப்போர் என்று நூலின் வழியே தெரிந்துகொள்ளமுடிகிறது.

தொன்று தொட்டு நடக்கும் விவசாயிகளின் தற்கொலைக்கு, கடன் ஒரு முக்கிய மூலகாரணம் என்பதையும் அதனுடன் கூடி  ஒவ்வொரு விவசாயியும் எப்படியாவது தனது நிலம் தரிசாக கூடாது என்று நினைத்து அதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டு எவ்வாறு விவசாயம் செய்கிறான் என்பதற்கு இன்றளவும் மாற்றுக்கருத்தே இல்லை அதுதான் நிதர்சனமான உண்மையும் கூட.

இந்த நூல் ஒரு கிராமத்தில் வாழ்கின்ற விவசாயிகளை முன்னிறுத்தி அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும், அவர்களின் அன்றாட  வாழ்க்கை நிலையினையும், சமுதாயத்தில் அவர்களின் நிலைமையும்,  அதே சமுதாயத்திற்கு அவர்கள் கொடுக்கும் தங்களுடை விலைமதிப்பில்லா பங்களிப்பையும் மிக தெளிவாக விவரித்து மிக தெளிவாக நகர்கிறது கதையின் ஓட்டம்.

கண்டிப்பாக  சொல்லியே ஆகவேண்டும், இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்தமுதல் இறுதிவரை "கருத்தமாயி" என்ற கதாபாத்திரதின் ஆளுமையாக  எனது மனக்கண்ணில் வாழ்ந்தவர் மறைந்த அய்யா "பூ.ராமு" அவர்கள் தான்.

சின்னப்பாண்டி, எமிலி மற்றும் இஷிமோரா என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வழியே தான் சொல்ல நினைத்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இந்தியாவில் கடைக்கோடியில் இருக்குக்ம் ஒரு கிராமம் எப்படி இருக்கும் அங்கே வாழும் மனிதர்களின் வாழ்க்கை நிலை எப்படியிருக்கும் என்பதையும் அட்டணம்பட்டி என்ற கிராமத்தில் வாழும் மனிதர்களோடு நம்மையும் சில காலம் வாழ வைத்திருக்கிறார்.

கருத்தமாயி, சிட்டம்மா, முத்துமணி மற்றும் சின்னப்பாண்டி குடும்பத்தினை மையமாக வைத்து அவர்களை சுற்றி அந்த கிராமத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை மிக இயல்பான நடையில் எடுத்துச்செல்கிறார்.     

வளர்ந்த நாடுகளின் லாபத்திற்காக ரசாயன உரங்களை வளரும் நாடுகளின் மீது சுமத்தியது. இந்த ரசாயன உரம்  இன்று நமது மண் வளத்தினை முற்றிலும் நஞ்சாக்கிவிட்டது. இயற்கை விவசாயம் என்ற   நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ரசாயன உரமில்லாமல் விவசாயம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு படு பாதாளத்தில் நிற்கிறோம். இதிலிருந்து கரை சேர வழி என்ன என்பதை தேட கூட முடியாத நிலையில் வாழ்கிறார்கள் இன்றைய விவசாயிகள்.

வேளாண்மை கல்லூரிக்கு விருந்தினராக அமெரிக்காவில் இருக்கிற எமிலிக்கு அழைப்பு கொடுத்து அவள் இந்தியா வருகிறாள். அதே சமயம் ஜப்பானிலிருந்து வரும் இஷிமோராவும், கல்லூரியில் இருக்கும் சின்னப்பாண்டியும் ஒரு நேர்கோட்டில் சேருகிறார்கள். இவர்களின் கூட்டு முயற்சியினால் அட்டணம்பட்டி ஒரு மாதிரி கிராமமாகி போகிறது. இந்த முயற்ச்சிக்கு சின்னப்பாண்டி எதிர்கொள்ளும் ஏராளமான சிக்கல்கள் என எல்லாவிதத்திலும் குறைவில்லாமல் செல்கிறது கதை.

புவிவெப்பமாதல், தாராளமயமாக்கல் மற்றும் தானியார்மயமாக்கல் என இந்த மூன்று முக்கிய காரணங்களை சிறப்பாக விவரித்து இருக்கிறார். 

ஒரு கிராமத்தில் இருக்கும் விளை நிலங்களை தனியாரிடம் விலைபேசி விற்று கொடுக்க குறுக்கு வழியில் செல்லும் பெரிய மகன் அதற்க்கு எதிராக ஊரை ஒன்று சேர்த்து போராடுகிறான்.

இந்த நூல் மொத்தத்தில் இயற்கை விவசாயம் எவ்வாறு அழிந்து போனது மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளையும் தெளிவாக சொல்கிறது. 

எல்லோரும் படிக்கவேண்டி ஒரு நூல்,எண்ணற்ற விவரங்களை கொண்டுள்ளது.

தொலைந்து போன நமது இயற்கை விவசாயத்தினையும் அவற்றுடன் கூடிய இயற்கை வாழ்வினையும் திரும்பப் பெறமுடியுமா முடியாதா என்ற கேள்விக்கு விடை தெரியாத ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

16 ஜூலை  2022              

Thursday, 10 February 2022

ஆலவாயன் - பெருமாள் முருகன்

ஆலவாயன்  


பெருமாள் முருகன் தனது "மாதொருபாகன்" நாவல் மூலம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டவர். ஒரு படைப்பாளர், எதோ ஒரு தருணத்தில் எங்கோ பார்த்தோ அல்லது கேட்டோ இருக்கும் சில நிகழ்வுகளைத் தனது படைப்புக்கள் மூலம்  கொண்டுவர நினைப்பதும் அவற்றை இந்த உலகிற்கு தனது எழுத்துக்களின் மூலமாக வெளிப்படுத்துவார்கள்.  ஆனால், அதன் விளைவாக எதிர்கொள்கின்ற இடையூறுகள் இருக்கத்தான் செய்கிறது.

தனது கற்பனையின் வழியில் பெருநோம்பிற்கு சென்ற பொன்னாவின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும் அதை அவள் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும்  இரண்டு விதமாக சொல்லியிருக்கிறார்.  அவற்றில் ஒன்று அர்த்தநாரி - இங்கே காளி தற்கொலைக்கு  முயன்று அவன் தனது தாயால் காப்பாற்றிவிட்டு பிறகு பொன்னாவிடம் பேசாமலே இருப்பதும் இந்தக் கொடுமையெல்லாம் எதிர்கொண்டு தனது வாழ்க்கையை நடத்திச் செல்லும் பொன்னா ஒரு கட்டத்தில் உயிரையே மாய்த்துக்கொள்ள முயல்கிறாள் அப்போது அவளின் கையினை பிடித்துக் கொள்கிறான் காளி என்று முடித்திருக்கிறார். ஆனால் இங்கே பொன்னாவிற்கும் காளியிற்கும் இடையே இருக்கும் ஊடல் மிக அழகாகச் சொல்லியிருப்பார்.

"ஆலவாயன்"   - இது பொன்னா மற்றும் காளியின் வாழ்வில் வரும் இரண்டாவது கற்பனையின் போக்கில் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இங்கே, தனது மனைவி இப்படிச் செய்துவிட்டாளே என்று மனம் வருந்தி தொண்டுப்பட்டிக்கு வந்த  காளி  தான் ஆசையாக வளர்த்த பூவரச மரத்தின் வாதில் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்து விடுகிறான்.

குழந்தை வேண்டும் என்று பெருநோம்பிற்க்கு  போய் வேறொரு ஆணுடன் இருந்து வந்தது தனது கணவருக்குத் தெரியாது என்பதை அவன் இறந்த பிறகு தான் பொன்னா தெரிந்து கொள்ளுகிறாள். விதவையாகவும் அதே சமயத்தில் கர்பிணியாகவும் இருக்கும்  பொன்னா, தனது மீதி காலத்தில்  சந்திக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

கணவனை இழந்தவள் , விதவை கோலம் பூண்டு வெள்ளை சீலை கட்டி தொண்டுபட்டியில் அடைபட்டுக் கிடப்பது ஒருபக்கம் வலியாக இருந்தாலும் மற்றொருபக்கம் தன்னுடன் உயிருக்கு உயிராக    இருந்த காளி மாமா இப்படி தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டானே என்ற வருத்தம் தான் அவளை ஒரு பைத்தியக்காரியாக மாற்றியுள்ளது.

பொன்னாவிற்க்கு துணையாக காளியின் அம்மா சீராயும்  அவளுடன்  பொன்னாவின் அம்மா வல்லாயி இருந்து பார்த்துக்கொள்கிறார்கள்.  

ஆரம்பத்தில் கணவன் போன இடத்திற்கே நாமும் போய்விடலாமென நினைக்கும் பொன்னா, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வாழ்க்கையினை  வாழ நினைத்து   தான் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறாள்.  பொன்னாவின் பாத்திரம் மிக நேர்த்தியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கணவன் இறந்த பிறகு,  அவன் வாழ்ந்த தொண்டுப்பட்டியில் முழுவதும் வாழவேண்டி அங்கேயே   குடிசை போட்டு பண்ணையம் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் காளியின் நினைவை நினைத்து நினைத்து உருகி வாழ்கிறாள். அவள் தொண்டுப்பட்டியில் பார்க்கும் ஒவ்வொரு அடையாளமும் காளியின் முகத்தினை அவளுக்கு நினைவூட்டுகிறது. 

காளி, இறந்த பிறகு அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. கணவன் இறந்த பிறகு இதுபோல நடந்தால் அவர்களின் வழக்கப்படி ஊர்க்கூட்டி, எல்லோருக்கும் இது தனது கணவனின் கருதான் என்று தெரியப்படுத்த வேண்டும். அந்த நிகழ்வில் பல்வேறு விதமான பேச்சுக்கள் என இயல்பான நடைகள் அந்த ஊர்க்கூட்டத்தில் நடக்கிறது. 

அவள் தான் நினைத்த விதத்தில் தொண்டுப்பட்டியினை மாற்றிச் சீரமைக்கிறாள். அவன் போனபிறகு அந்த இடத்திலே வாழ்வதுதான் அவனுக்கு அவள் செய்யும் உபகாரம் என நினைத்து நிரந்தரமாக அங்கேயே வாழ்கிறாள்.

பொன்னாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் காளியே வந்து உனக்குப் பிறந்திருக்கிறான் என்றார்கள் ஆனால் அவள் மனதில் அவனுக்குப் பெயர்  வைக்கும் பொழுது, எனது பெயரை வைப்பாயா என்று கேட்ட அந்த "ஆலவாயன்" நினைவுக்கு வருகிறான். இதுதான் எத்தனை இயல்பான ஒரு காரியம். 

காளியின் சித்தப்பாவின் வாழ்க்கை கதை மிகவும் சுவாரஸ்யமான கதையாகவே செல்கிறது. நாடோடியாக நடமாடும் அவர், தனது சகோதரர்களிடம் இருந்து தனது சொத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைவும் மேலும் அவரின் வாழ்க்கை முறையும் பெரும்பாலான கிராமங்களில் இப்படி ஒருவர் இருப்பதை நினைவுகூர்கிறது.

இந்த ஆலவாயன் கதையில் வரும் ஒவ்வொரு வரியும் கிராமத்து மண்வாசனையும் அந்த வட்டாரத்து வழக்கும், நையாண்டியும் நக்கலும் கலந்து இயல்பான சொல்லாடல்கள் நிரம்பிய ஒரு முழுமையான கதை இது.

மாதொருபாகனின் முடிவுக்கு, தனது மனதில் தோன்றிய இரண்டு விதமான முடிவில் காளியின் இறப்பில் அவன் தன்மானம் கொண்டவன் என்ற அவனது நிலையினையும் அதே நேரத்தில் தன்னை இப்படி தனியாகத் தவிக்க விட்டுவிட்டு போய்விட்டானே என்று என்னும் பொன்னாவின் பின்னாளில் வாழ்க்கையும், அவள் பெற்றெடுக்கும் குழந்தையும் அதற்கு அவள் நினைவாகப் பெயர் வைக்கும் விதமும் தனது மனதில் இருந்ததை சொல்லியிருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

10 பிப்ரவரி 2022 

                       

Tuesday, 1 February 2022

அம்மா வந்தாள்

அம்மா வந்தாள்  

தி. ஜானகிராமன் 

காலச்சுவடு பதிப்பகம் 

பக்கங்கள் 180

விலை ரூயாய் 225


அம்மா வந்தாள், இது நான் வாசிக்கும் ஆசிரியர் தி. ஜானகி ராமன் அவர்களின் இரண்டாவது  நாவல். 

முதலில் வாசித்தது  மோகமுள். இந்த நாவல் ழுவதும் கும்பகோணம், காவேரி அதன் கரையோரம் இருக்கும் கல்லூரி மற்றும் பாபநாசம் கூடவே சென்னையும் கலந்து அந்த கதையின் பாத்திரங்கள் வாழ்ந்திருப்பது போலவே இந்த அம்மா வந்தாளிலும் காவேரி கரையில் இருக்கும் சித்தன் குளம் என்ற  ஒரு கிராமமும் கதையின் மற்றொருபுறம் சென்னை என அப்புவும் அவனைச் சுற்றியுள்ள வாழும் எல்லா கதா பாத்திரங்களும்  வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆசிரியர் இந்த கதையினை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுதியிருக்கிறார்.  அந்த காலகட்டத்தில் நடந்தோ அல்லது அவர் பார்த்தோ இருக்கலாம் இந்த கதையில் வரும் மாந்தர்கள். ஆனால் அந்த கதை வந்த காலத்தில் அவர் பிறந்த ஊருக்குள்ளே அவரை விடாமல் தடுத்து வைத்தார்கள் என்ற ஒரு செய்தியும் நமக்கு தெரிகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் விதவை திருமணம் இல்லை ஆனால் அன்று இவர் சொல்லும் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கலாம் ஏன் இன்றும் கூட உறவுகள் மீறல் நடக்காமலா இருக்கிறது. இது பிறருக்குத் தெரியாமல் ரகசியமாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் மீறல் தான் என்றாலும் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்வதில்லை  ஏனெனில் நாம் சமுதாயம் என்ற ஒரு அழகான வேலிக்குள் பத்திரமாக இருக்கிறோம் என்ற ஒரு வகையான உணர்வுதான் காரணம்.  

அம்மா வந்தாளைப் பொருத்தவரை, இந்த கதை அவர் கண்ட பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையின் சாரத்தினை கொண்டு ஒரு கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார். ஆனால் பல்வேறு வகையில் இந்த கதைக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் வரம்பு மீறும் மனிதக் குலம் இல்லாமல் இல்லைதான் என்பது தான் நிதர்சனம்.

என்னதான் கதையில் ஆரம்பம் முதல் கடைசி வரிவரை "அப்பு" இடம்பெற்றிருந்தாலும் கதையின் ஆதாரமாகவும் மேலும் வலுசேர்க்கும் மையப்புள்ளியாகவும்  "அலகாரத்தம்மாள்" தான் பயணிக்கிறாள். ஏனெனில் ஒரு தாயாகவும், மனைவியாகவும் தனது நிலையினை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அலங்காரத்தம்மாள், அவள் தனது வாழ்வில் தேர்தெடுத்து பயணிக்கும் ஒரு மாற்றுப்பாதையினால் ஏற்படும் அனைத்துவகையான இடர்பாடுகளையும் சரியாக எடுத்துச்சொல்லாமல் இல்லை. இதுவே கதைக்கு மிகுந்த பலமாகவே இருக்கிறது என்றே சொல்லலாம்.

அலகாரத்தம்மாளுக்கு, தன்னை ஒரு கணம் கூட இம்சிக்காத கணவர் "தண்டபாணியை" விட "சிவசு" ஏன் முக்கியமானவனாகி போனான் என்பது பற்றி விடை தெரியாமலே இருக்கும் ஒரு வினாவாகவே தான் இருக்கிறது. அதுவும் தண்டபாணி கணவர் என்றும் குடும்பத்தில் அவரின் நிலையை வைத்துக்கொண்டு சிவசுவின் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டதும் மேலும் தன்னை ஒரு முக்கியமான நபராக நிலைபெற்று, எப்படி அலகாரத்தம்மாளால்  இதுபோலவே இறுதிவரையில் அதே இடத்தில் உழன்றுகொண்டிருக்க முடிந்தது.

அப்புவை, அலகாரத்தம்மாள்  எப்போதுமே தனது கடைசி மகன் என்று சொல்லும்போதெல்லாம் அவனுக்குக் கீழ் இருக்கும் மூன்று குழந்தைகள் பிறகு எப்படி என்ற கேள்வி எழுகிறது.

அப்பு, தனது பெரும்பாலான வாழ்க்கையினை வேதம் படிப்பதிலே கழித்துவிட்டு, கிராமத்துச் சூழலிலிருந்து சென்னைக்கு வருகிறான். அது அவனுக்கு ஏனோ அந்த சென்னை பட்டினம், கிராமத்து நிம்மதியினை கொடுக்கவில்லை. அழகான குடும்பம் அண்ணன், தம்பி, தங்கை, அப்பா மற்றும் அழகான அம்மா என எல்லோரிருந்தும் அவனுக்கு அங்கே இருக்க முடியாமல் செய்யும் அம்மாவின் செயல் என்ன செய்வது. அம்மா அவனை அன்பாகக் கவனிக்கிறாள் ஆனாலும் அவனுக்கு அவளை ஏறெடுத்து பார்க்கக்கூட முடியாத சங்கடத்தில் ஏன் இன்னும் இங்கே இருந்து வெந்துபோகவேண்டும் என்றும் மனம் போராடுகிறது.  அப்பு தனது அம்மாவைப் பற்றிய நிலையினை கேட்கும்போதெல்லாம் நிலைகொள்ள முடியாத ஒரு தவிப்பிற்கு ஆளாகிறான். அப்படித்தான் இந்து அப்புவின் அம்மாவை பற்றி அவனிடம் சொல்லும்போதும் அவளிடம் தனது கோபத்தைக் காட்டிய அப்புவிற்கு  இன்றுஅவள் சொன்னதெல்லாம்  உண்மையாகவே தன் கண் முன்னே நடக்கிறது என்று பார்க்கும் போது அவனின் மனம் படும் வேதனையினை மிகவும் எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்.

அம்மாவின் நடத்தையினை பற்றி அப்பாவிடம் பேசும்போதும்  அதற்கு அவர் கொடுக்கும் எதார்த்தமான பதிலும் அப்புவிற்கு இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. பிறகு அக்காவின்  வீட்டிற்கு போகும் அப்புவிற்கு அக்கா, அம்மாவைப் பற்றிய விவரங்களையெல்லாம் சொல்லும்போதும் அவனுக்கு ஒரு வியப்பாகவே இருக்கிறது. நானும் இந்த குடும்பத்தில் ஒரு ஆள் தானே ஆனால் என்னை தவிர மற்ற எல்லோருக்கும் ஏன் ஊருக்கே தெரிந்திருக்கும் இந்த செய்தி ஏன் எனக்கு மட்டும் தெரியாமல் போனது என்ற வருத்தமும் அவனை மேலே ஆட்கொள்ள ஆரம்பிக்கிறது.

இத்தனை வருடம் வாழ்ந்த சித்தன்குளத்தில் இருக்கும் அத்தை பவானியம்மாளும், தனக்காகவே காத்து கொண்டிருக்கும்  இந்துவும் மற்றும் தன்னை மெருகேற்றிய வேதபாடசாலையும் போதுமென்ற அவனின்  நீண்ட மனப்போராடத்திற்கு பிறகு அவன் இங்கே வருகிறான். அவன் வருகைக்காக இந்து காத்துக்கொண்டேதான் இருக்கிறாள். இந்துவும் அப்புவின் வாழ்விலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு பெண் என்று போகிறது இவனின் வாழ்க்கை. 

சித்தன்குளத்திற்கு மீண்டும் சென்னையிலிருந்து புறப்படும் போது அம்மா அவன்கூடவே ரயில் ஏற்றி விட வருகிறாள் அப்போது அவள் தன்நிலையினை அவனிடம் சொல்கிறாள் அவள் செய்வது தவறென்றும் தெரிந்தும் அதிலிருந்து தன்னால் மீண்டுவர முடியாததையும் அவனிடம் சொல்லியழுகிறாள் அதற்கு அப்புவின் காலில் விழுந்து அந்த பாவத்தையெல்லாம் எரிச்சுடனும் என்கிறாள். அம்மாவின் இந்த செயலை தெரிந்துகொண்டுதானே இங்கிருந்து போகிறாய் என்றும் அதுவும் திரும்ப வரமாட்டாயா என்று அம்மா கேட்கும் கேள்விகளுக்கு அப்பு மனம் படும் வேதனைகளை அருமையாகச் சொல்கிறது.

இந்து, கல்யாணம் பண்ணிக்கொண்டு போனவள் மீண்டும் தனியாக வந்துவிட்டாள். பவானியம்மாள் வீட்டிலே தான் விதவையாக இருக்கிறாள் அவளுக்கு அப்புவென்றால் சிறுவயதிலிருந்தே விருப்பம். அப்பு இங்கு வேதம் சொல்லிக்கொள்ள வந்த நாள்முதல் அவன் மீது இந்துவிற்கு ஒரு தனி பிரியம் ஆனால் அவளுக்குக் கல்யாணம் செய்து வேறு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அவள் விதி அந்த வீடு நிலைக்காமல் திரும்பி இங்கேயே வந்துவிடுகிறாள். அப்புவிடம் தனகானவன் நீ தான் என்றும் வெளிப்படையாகவே சொல்கிறாள் ஆனால் அப்புவிற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கிறது அவள் தான் வாழ்வின் பாதியென்று. 

தண்டபாணி, தனது அறிவுத்திறமையால் நீதிபதியையும், வங்கி சேர்மனையும் மற்றும் பல்வேறு  பெரியவர்களையெல்லாம் வேதத்திற்கு பதில் தெரியவில்லை என்றால் தட்டிக்கேட்கும் திறமையும் குணமும் இருக்கும் இவர் தனது மனைவி  வேறொரு ஆடவனுடன் இருந்து மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டாள் என்பது தெரிந்தும் அவளை எதுவே சொல்லாமல் அவள் பிரிவைத் தாங்கமுடியாமல் இருப்பது அவருடைய வெறுமையைக் காட்டுகிறது. தனது வெறுப்பை ஒரே இடத்தில மட்டும் தான் அவர் வெளிப்படுத்துகிறார் அதுவும் மனைவிக்கு எத்தனையோ பெயர் இருந்தும் இதுபோல அலகாரத்தம்மாள் என்ற பெயரை ஏன் வைத்தார்கள் என்று குமுறும் போது மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார்.

ஒரு அழகான குடும்பத்திற்குள், தன்னிடம் இருக்கும் சில சௌகரியங்களை வைத்துக்கொண்டு உறவாகப் போகும் குடும்பத்தில் ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் சிவசு போலப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்று சொல்வது? யார் மீது குறைசொல்வது?

அலகாரத்தம்மாள், தான் இப்படி மாறிவிட்டோமே என்ற தனது நிலையினை தெரிந்துகொண்ட  பிறகு தனது மகனான அப்புவை வேதம் படிக்க வைக்க விரும்புகிறாள். அதன்படியே அவனை வேதம் சொல்லிக்கொள்ளவைக்கிறாள்வெகுகாலமாக இருக்கும் இந்த செயல் பாவம் என்று தெரிந்தும், இது தனது  காலைச் சுற்றிய பாம்புபோல தொடர்ந்துகொண்டிக்கிறது என்றும் அப்புவிடம் சொல்லித் தான் செய்த இந்த தவற்றுக்குப் பிராயச்சித்தமாக உனது காலில் விழுந்து, தான் செய்த அந்த பாவத்தை எல்லாம் எரிச்சுடனும் என்றும் சொல்வதும், பிறகு அவன் இருக்கும் சித்தன்குளத்திற்கு வருவதும் அங்கிருந்து அப்பு மீண்டும் சென்னைக்கு வரமாட்டான் என்று தெரிந்துகொண்ட பிறகு தான் காசிக்குப் போகிறேன் அங்கே போய் என் பாவத்தையெல்லாம் தொலைத்து நானும் தொலைந்து போகிறேன் என்கிறபோது அப்பு அப்பாவை பற்றிக் கேட்கும் போது அவள் சொல்லும் அந்த வார்த்தைகளில் அவள் தனது கணவர் பற்றி என்ன நினைத்து இருக்கிறாள் என்பதை  "அது ஞானசூரியன், கருணாமூர்த்தி நான் செய்ததெல்லாம் பார்த்துக்கொண்டு என்னை கருக்கிபோடாம இருந்ததே அதுவே பெரிது" என்று மிக இயல்பாக சொல்வது தான் சிறப்பானது. இதுநாள் வரை நான் செய்த தவருக்கு நான் மட்டும் தான் மடியவேண்டுமே தவிர எந்த விதத்திலும் அப்பா பாதிக்க கூடாதே என்று சொல்லிக்கொண்டே தனது முடிவை நோக்கி  காசிக்குப் போகிறாள்.



                             

                     

 

Thursday, 27 January 2022

ஹிட்லர் - ஆசிரியர் பா.ரா



இந்த வருடத்தின் முதல் பதிவாக ஆசிரியர் பா.ரா. அவர்களின் "ஹிட்லர்" புத்தகத்தின் வாசிப்பனுபவத்தினை பகிர்ந்துகொள்கிறேன்.

ஹிட்லர் - உலகமே  அறிந்த ஒரு கொடுங்கோலன் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவரை பற்றிய முழு விவரங்களும் அடங்கிய ஒரு புத்தகம் தான் இது.

ஆசிரியர் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் ஹிட்லரின் கடைசி நாட்களை அறிமுகப்படுத்தி நம்மை அதே விறுவிறுப்புடன் ஹிட்லரின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். 

ஹிட்லர் குழந்தைப் பருவம் முதல் அவர் அலைந்து திரிந்த தெருக்கள் மற்றும் அவர் உணவிற்காகப் பட்ட துயரங்கள் என அவரின் இளைமை பருவத்தில் எதிர்கொண்ட பல்வேறு நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாகக் கொடுத்துள்ளார். 

ஹிட்லரின் தந்தை பெயர் "அலாய்ஸ் ஷிக்கெல்கிரபர் " என்பதும் அவரின் வாழ்க்கை முறையினால் தனது இளமைப் பருவத்தில் பட்ட பெரும் துயரமே இவரின் வயதில் ஒரு பெரிய சர்வாதிகாரியாக மாற்றியது என்றால் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஹிட்லர் முதலில் ராணுவத்தில் ஒரு சாதாரண வீரராகத் தான் சேர்ந்தார் அதுவும் அவர் நேரடியாகப் போரிடவில்லை.  பணியில் சேர்ந்து புதிது என்பதால் இவரைத் தகவல் தொடர்பின் பணியினை கொடுத்தார்கள் ஆனால் அந்த பனியின் போது ஒருமுறை காலில் குண்டு பட்டுவிட்டது.

இப்படி எளிமையான ஒரு சிப்பாயாகச் சேர்ந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு தேசத்தின் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரண காரியமாகாது அதுவும் உலகமே பார்த்துப் பயந்து போகும் ஒரு சர்வாதிகாரியாக உருவெடுப்பது என்பது நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு பெரிய காரியம் அதைச் சாதித்தார் பிறகே அதுவே அவருக்குச் சாவு மணியினை கொண்டுவந்தது.

நாஜி என்ற ஒரு கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்சியின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு தனக்கு எதிராக இருந்தவர்கள் அனைவரையும் முறியடித்து ஒரு புதிய புரட்சியினை மக்களிடம் எடுத்துச் சென்று கொஞ்சமாக ஆட்சி பீடத்தில் அமரும் அளவிற்கு எவ்வாறு வளர்ந்தார் என்பது பற்றிய முழுமையும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

ஒரு இனத்தின் மீது இருக்கும் வெறுப்பானது எந்த அளவிற்கு கொடூரமாக இருக்கும் என்பதற்கு இவர் மட்டும் தான் இதுவரை உலகில் உதாரணமாக இருப்பார் என்றே தோன்றுகிறது. யூதர்களின் வாழ்வில் இவர் நடத்திய இனவெறி தாக்குதல் கொடூரத்தின் உச்சம் ஆனால் எப்படி ஒரு மனிதருக்குள் அத்தனை வன்மம் . ஏன் என்பதற்கு விடையே இல்லை. யூதர்களை வதைமுகாம்களில் இப்படி பல்வேறு பட்ட கொடுமைகளுக்கு இவர் எப்படி நினைத்திருப்பர்.         

ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணமும் அதனால் அவர் புரிந்த போர்களும் என ஒவ்வொரு வரியும் ஹிட்லரின் உண்மையான வாழ்க்கையினை தெரிவிக்கிறது.

ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியன் என பல்வேறு பட்ட பெரிய நாடுகளுடன் தனது எதிர்ப்பை கொண்டு அவர்களை எதிர்த்துப் போரிட முயன்றார் ஆனால் இந்த நாடுகளுடனான போர் தோல்வியில் முடிந்தது இது அவர் ஐரோப்பா கண்டத்தில் செய்த போர்த் தந்திரம் எல்லாம் பலன் கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.  

எத்தனையோ உயிர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்த ஒரு கொடுங்கோலன், அவர் வளர்ந்துவந்த முழு வாழ்வையும் நமக்கு இந்த புத்தகம் அறிமுகப்படுகிறது என்பது உறுதியாகச் சொல்லலாம்.


ஆனால் உலகில் கொடுங்கோல் தொடர்ந்து  நிலையில்லாமல் போகும் என்பது உண்மையானதுதான்.  அன்று ஏப்ரல் 30, 1945 ஹிட்லர் தனது சாவின் கடைசி தருணத்தில் பகைவரின் நிலையினை எண்ணி அஞ்சி பதுங்கி காதலி ஈவாவுடன் பதுங்குகுழியில்  தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர். 


        

மாதொருபாகன்

மாதொருபாகன்  

பெருமாள் முருகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 115/50

பக்கங்கள் 285


பெருமாள் முருகனின் மாதொருபாகன், குழந்தை இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதியினரைப் பற்றிய மிக அருமையான நாவல் இது. ஆரம்பத்தில் இந்த நாவலுக்கு பெரும்பான்மையான மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. காரணம் இந்த நாவலில் இவர் சொல்லும் ஒரு தெய்வ நம்பிக்கையின் ஆதாரமாக குழந்தை பேரு இல்லாத பெண்கள் பெருநோம்பிக்கு போவதைப் பற்றிப் பேசும் கதைதான் இந்த மாதொருபாகன்.

மாமனார் வீட்டில் காளி வைத்துக் கிளப்பிய பூவரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருக்கும் காளியின் இயல்பான வாழ்க்கையில் ஆரம்பித்து தனது வீட்டுத் தொண்டியில் வளர்த்த பூவரச மரத்தின் கிளையில் கயிறு போட்டு தற்கொலை முயற்சிசெய்வது வரை இந்த மாதொருபாகன் பயணிக்கிறான். 


காளி மற்றும் பொன்னா புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதிகள். சீராயின் ஒரே மகனான காளி, சிறுவயது முதல் அம்மாவோடு மட்டும் தான் வளர்ந்தான் அப்பா இளம் வயதிலே இறந்து போனதால் தனியாகவே வாழ்ந்த குடும்பம் சீராயின் குடும்பம். தனது பிள்ளையினை நல்ல குணத்தோடு வளர்த்தால் சீராயி.

முத்து, காளியின் உயிர் கூட்டாளி, இவர்களின் நெருங்கிய நட்பால் முத்துவின் தங்கையான பொன்னாவை காளி கட்டிக்கொண்டான்இளமைப் பருவத்தில் அப்படி இப்படி இருந்த காளி பொன்னாவை கட்டிய பிறகு அவன் அவளே கதி என்று இருந்தேவிட்டான்.

இந்த கதையில் வரும் சொல்லாடல்கள் எல்லாம் அந்த புவிப்பரப்பையும் அங்கே வாழும் மனிதர்களின் இயல்பான உரையாடல்கள் அப்படியே உயிரோட்டத்துடன் செல்கிறது. இதுவே இந்த கதையின் பலமாகவே இருக்கிறது.

குழந்தை இல்லாமல் போகவே, காலப்போக்கில் காளியின் முக்கியமான இடமாக அவனது  "தொண்டு பட்டி" மாறிப் போனது. அவன் உறங்குவதும் பகல் பொழுதினை கழிப்பதும் அந்த தொண்டு பட்டியில் தான்.

"கள்ளும், சாராயமும் இவர்களின் வாழ்வில் கூடவே வருகிறது. மாமனும் மச்சானும் சேர்ந்து சாராயமும் கள்ளும் குடிக்கும் பழக்கம் காளியும் முத்துவும் சேர்ந்து செய்யும் பொது தெரிகிறது.

ஒவ்வொரு வரியிலும் அந்த மண்ணின் வாசமும் அங்கே விளையும் விவசாயமும் அதை அனுபவிக்கும் மனிதர்களும், ஆடுகளும், மாடுகளும் அவர்களின் கூடவே ஓடி விளையாடிச் செல்லும் பறவைகளும் என எல்லாவற்றையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 

பொன்னாவுக்கு, குழந்தை இல்லை என்பதால்,   அவளின் கிராமத்தில் மற்றும் உறவினர்கள் வீட்டில் நடக்கும் எல்லா சுப காரியத்திலும் அவளை ஒதுக்கி வைக்கிறார்கள். அதனால் அவள் அடையும் வேதனை வலி அளவிட முடியாதது தான். இந்த சமூகத்தில் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் பெறப்படும் அவமானம் அதனால் அந்த பெண் படும் துயரம், வலி, வேதனை என ஒரு பெண் எதிர்கொள்ளும் எல்லாவிதமான சமுதாய சீண்டல்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்கிறார் கதையின் போக்கில் பொன்னாவின் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நிகழ்வுகளில் விளக்குகிறார் ஆசிரியர்.

காளியும், பொன்னாவும் வாழும் வாழ்க்கையில் குழந்தை இல்லையென்பதைத் தவிர வேறேதும் குறையில்லாமல் வாழும் வாழ்க்கை, தொண்டு பட்டி, அங்கே இருக்கும் கட்டுத்தரையும் ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் அங்கிருக்கும் மரங்களில் வாழும் பறைவைகளும் எனத் தொண்டு பாட்டியில்  காளி அருமையாக வாழ்கிறான்.

கரட்டூர் தேவாத்தா மாசாமியின் திருவிழாவான  "பெரு நோன்பி திருவிழா" கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த பகுதி மக்களுக்குக் குழந்தை இல்லையெனில், பெண்கள் பெரு நோன்பியன்று இரவு சாமி வரம் தேடிச் செல்வது வழக்கம் என்றும் அதற்காகக் கடந்த இரண்டு வருடமாகக் காளியின் அம்மா சீராயி பொன்னாவை போகச் சொல்கிறாள் ஆனால் காளியின் மனம் வேதனை படும் என்று பொன்னா போக மறுத்துவிட்டாள். இப்படியே காலம் உருண்டோடிக்கொண்டேயிருந்தது ஆனால் இந்த வருடம் சீராயி மற்றும் பொன்னாவின் வீட்டில் அனைவரும் சேர்ந்து மச்சான் முத்துவிடம் சொல்லி காலியிடம் பேசச் சொல்லி அவன் சம்மதித்துவிட்டான் என்று பொன்னாவிடம் பொய்  சொல்லவிட்டு அவளை பெரு நோன்பிற்குப் போகச் சம்மதித்து அவளை அழைத்துச் செல்கிறார்கள் பொன்னாவின் பெற்றோர்.

நாடு இரவில் இந்த தகவல் தெரிந்து கொண்ட காளியின் மனம் படும் வேதனை கொஞ்சமல்ல. இந்த பெருத்த மனவேதனையினால் அவன் தனது தொண்டு பட்டியில் இருக்கும் பூவரசு கிளையில் மாட்டிக்கொள்ளப்போகிறான். அப்போது சீராயி வந்து காப்பாற்றிவிடுகிறாள். இப்படியே செல்கிறது இந்த மாதொருபாகன்.

ஆசிரியரின் இந்த கதையின் முடிவை மக்கள் எதிர்த்ததின் விளைவாக இந்த கதையின் தொடர்ச்சியாக "அர்த்தநாரி" மற்றும் "ஆலவாயன்" என தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்.     


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

26 ஜனவரி 2022

Tuesday, 25 January 2022

ஹிட்லரின் - வதைமுகாம்கள்  

ஆசிரியர் மருதன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 210

பக்கங்கள் 232 



இந்த வருடத்தின் முதல் வாசிப்பாக பா.ரா. அவர்களின் "ஹிட்லர் வாழ்க்கை வரலாறு" வாசித்ததிலிருந்து, ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி வாசிக்கவேண்டும் என்று ஆரம்பித்த  தேடலில் கிடைத்தது தான் ஆசிரியர் மருதனின் " ஹிட்லரின் - வதைமுகாம்கள்".

உலகிலேயே ஹிட்லர் எடுத்த கொடுங்கோலன் என்ற பெயருக்கு  இணையாக வேறு யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள்  என்று தான் நினைக்கிறேன். இந்த புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியும், வாசிக்கும் போது வாசிக்கும் நமக்குக் கிடைக்கும் வலியே இவ்வளவு கொடுமை என்றால் இந்த கொடூரத்தை அனுபவித்த மக்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

நேற்றுவரை பக்கத்துக்கு வீட்டில் வசித்தவர்கள் இன்று ஒரு இனத்தின் அடையாளமாக மாறி அழிக்கப்பட வேண்டியவர்களாக எப்படி நினைக்கமுடிந்தது என்று பார்க்கும் போதும் மனிதம் எங்கே சென்றது என்ற கேள்வி எழாமல் இல்லை ஆனால் நாம் என்ன செய்யமுடியும். 

இந்த ஒட்டுமொத்த இன அழிப்பு என்பது ஹிட்லர் என்ற ஒற்றை ஆளால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது என்றால் அது சாத்தியமாகாது தான். என்னதான் ஹிட்லர் என்ற ஓர் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர் கூட இருந்த பெரும்பாலான விசுவாசிகளின் ஒத்துழைப்பது இல்லாமல் இது நிறைவேற்றியிருக்க முடியாது தான். இத்தனை பெரிய இனப் படுகொலைக்குப் பின்னால் ஒரு சமூகமே இருந்திருக்கிறது என்று பார்க்கும் போது அவர்களுக்கு எவ்வாறு இந்த நஞ்சினை விதைத்தார்கள் இந்த நாஜிகள்.

யூதர்கள் இருந்தால் நாம் வாழமுடியாது, நமக்குச் சேரவேண்டியது எல்லாம் அவர்கள் இருப்பதால் கிடைக்காமல் போகிறது ஆகவே அவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்ற எண்ணத்தினை ஜெர்மனியின் மக்களிடம் புகுத்தியது தான் நாஜிகளின் பெரிய வெற்றியே. 

யூதர்களைத் தேடித் தேடி அழித்தார்கள். ஜெர்மனியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தம் ஐரோப்ப்பிவில் இருக்கும் அணைத்து யூதர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கென அடையாளங்களை வெளிப்படையாக காட்டச்சொன்னதும், அதன் அடிப்படையில் அவர்களைக் கைது செய்ததும், அவர்களின் உடைமைகளைச் சூறையாடி மட்டுமல்லாமல் அவர்களை வதை முகாம்களுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.

எத்தனைவதைமுகாம்கள், ஆஷ்விட்ஸ்,பெல்செக்செம்னோபுச்சன்வால்ட்,  டாச்சவ்ரேவன்ஸ்ப்ருக்ஸ்டுட்டாப்தெரெசின்ஸ்டாட்கெய்ஸ்ர்வால்ட்கெம்னாட்ரெப்ளின்காமஜ்டானெக்மாத்தாசென்சாஷ்சென்ஹாசென் என பல்வேறு வதைமுகாம்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த யூதர்களைக் கைதிகளாக இந்த முகாம்களில் அடைத்து வைத்து அவர்களின் உழைப்பினை சுரண்டிக்கொண்டது மட்டுமல்லாமல் உழைக்க முடியாதவர்களை கொன்று குவித்ததும் அப்படி கொல்லப்பட்டவர்களை அள்ளிக்கொட்டுவதற்கும் யூதர்களையே பயன்படுத்தினார்கள் என்றால் அது கொடூரத்தின் உச்சம் என்றே தான் சொல்லவேண்டும்.

இவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்து ரயிலில் ஏற்றியதும், அந்த ரயில் பயணத்தில் மூச்சுக் காற்று கூட விட இடமில்லாமல் மக்களை அடைத்துவைத்து கதவை மூடி செய்யாத ரயில் பயணத்தினை அவர்கள் சொல்லும்போது உலகில் இதைவிட வேறொரு கொடுமை இல்லை என்கிறார்கள்.

கைது செய்த இவர்களுக்கு இருந்த அணைத்து அடையாளங்களை அழித்துவிட்டு அவர்களுக்கு எண்கள் மட்டுமே அடையாளமாகக் கொடுத்தனர். இவர்களில் உயிர்பிழைத்து வந்தவர்கள் சொல்வது எங்களின் ஒட்டுமொத்த அடையாளத்தினையும் அழித்து விட்டு ஒரு நரகத்தில் வாழ்ந்தோம் என்கிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர்கள் அல்லாமல் பெரும்பாலோனோர் தற்கொலையும் செய்து கொண்டார்கள் என்பது இன்னும் பெரிய கொடூரம் தான்.  இவர்களைக் கொன்று குவித்த விதம் ஒவ்வொருவரின் மனதில் எத்தனை விதமான வன்மம். ஒரு சக மனிதன், எப்படி ஒரு மனிதனைக் கூட்டமாக வைத்துக் கொல்ல முடியும்? அப்படித்தான் செய்திருக்கிறார்கள் நாஜிகள்

யூதர்களைக் கைது செய்து, வதை முகாம்களுக்கு அழைத்து வந்து அவர்களின் அடையாளத்தினை அழித்து, உடல் முழுவதும் முடியினை மழித்து, ஆடைகளை அகற்றி, அவர்களுக்கு என ஒரு எண்ணைக் கொடுத்து கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து அவர்களின் உடலில் பலம் இருக்கும் வரை அவர்களின் உழைப்பினை சுரண்டி பிறகு கொன்றதும் அப்பப்பா நெஞ்சம் பத பதைக்கிறது.            

வதை முகாம்களுக்கு வரும் பெரும்பாலோனோர் காஸ் சாம்பருக்குள் செல்வதும்,  அவர்களுக்கு நாம் எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே செல்வார்கள். குளிக்கச் செல்லுங்கள் என்று உள்ளே அனுப்புவார்களாம் அதுதான் அவர்களின் கடைசி தருணம் எனத் தெரியாமல் சென்றவர்கள் எத்தனை பேர்கள்.

குழந்தைகள் கூட விட்டுவைக்க வில்லை இவர்கள். இவர்களின் மனதில்  எப்போதும் யூதர்கள் அழியவேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் இருந்திருக்கிறது போலும்.

தங்கள் உழைப்பினை சுரண்டிக் கொண்டு நம்மால் உழைக்க முடியாத தருணம் வரும் போது எப்படிய கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்ட சில யூதர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதைத் தெரிந்து கொண்ட நாஜிகள் தற்கொலை நடக்காமலும் பார்த்துக்கொண்டார்கள்.  யூதர்களை வேலை வாங்குவதற்காக ஒரு யூதரைத் தான் தலைவனாக நியமித்து அவர்கள் கைக்கொண்டே அவர்களை அடிக்க வைத்து வேடிக்கை பார்த்தார்கள். அது நிகழவும் செய்தது யார்தான் ஒரு பதவி கொடுத்தால் அந்த போதையிலிருந்து விலகுவார்கள். அப்படி அவர்களில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவன் என நியமித்தனர்.

லட்சக் கணக்கில் தமது இனம் அழிந்து போன போதும் எஞ்சி உயிர்வாழ்ந்த சிலர் விடுதலைக்குப் பிறகு அனுபவித்த துயரம் ஒன்றல்ல இரண்டல்ல என்று தான் சொல்லவேண்டும். தனது உறவினர்கள் தேடி அலைந்தவர்கள் வெகு வானவர்கள். வயிறு காய்ந்து ஒட்டிப் போன பிறகு அவர்களால் உணவினை உட்கொள்ள முடியாமல் இறந்து போனவர்கள் ஏராளம். மனநிலை சோர்ந்து போனவர்கள் ஏராளம்.    


வதைமுகாம்கள் நாஜிகள் ஆரம்பித்தது இல்லை என்றும் இது பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டனால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் பிறகு பல்வேறு நாடுகளில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த புத்தகம் வதைமுகாம்களின் முழு விவரத்தினையும் மிக எளிமையாக விவரிக்கிறது. மேலும் பல்வேறுபட்ட நபர்கள் இந்த முகாம்களிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வெளியிட்ட கருத்துக்களையும் விவரமாக விளக்குகிறது.

வரலாற்றில் கரை படிந்த அந்த கொடூர முகத்தின் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவாகச் சொல்கிறது இந்த புத்தகம்.

இத்தனை விதமான கொடூரத்தின் மையமாக இருந்த ஹிட்லர் தனது காதலியுடன் ரகசிய அறையில் தற்கொலை செய்துகொண்டார். உலக ஜனநாயகத்தின் குரல்வளையினை நெரித்த கொடுங்கோலன் இறுதியில் உயிருக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டது வரலாற்றில் அவர் பதித்து போன தடம்.