Friday, 16 December 2022

நூறு நாற்காலிகள் - ஆசிரியர் - ஜெயமோகன்

நூறு நாற்காலிகள் 

ஆசிரியர் - ஜெயமோகன் 


நூறு நாற்காலிகள் - ஓர் பழகுடியினத்து சிறுவன் ஆசிரமத்தின் உதவியுடன் சிவில் சர்விஸ் வரை படித்து தனக்கான பணியில் சேரும்போது அவனுக்கு அது இட ஒதுக்கீட்டின் வழியே தான் கிடைத்தது என்று ஆதிக்க சாதியினர் பார்ப்பது ஒருபுறமும், அவன் மீது அலாதி பாசம் கொண்ட அவனது தாய், தெருவில் அலைந்து எச்சில் சோறு எடுத்துத் தின்று மேலும் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை ஒரு புறமும் அவனது பதவியின் மீது காதல் கொள்ளும் ஒரு உயர் சாதிப் பெண் திருமணம் செய்துகொள்வதும் என அவனது வாழ்க்கை மூன்று புறமும் இருந்தும் இடைவிடா தாக்குதல்களுக்கு ஆளாகித் தான் ஒரு நேரத்தில் தனித்து விடப்பட்டவன் போல நினைக்கும் அவனைப் பற்றிய   ஆழ்ந்த கருத்தை மிகவும் வலிமையான சொற்களால் அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். உண்மையிலே மனதில் ஒரு விதமான வலியினை ஏற்படுத்திதான் செல்கிறது ஒவ்வொரு வார்த்தையும். 

நாடோடியாகத் திரியும், நாயாடி என்ற ஒரு இனத்திலிருந்து  ஒரு சிறுவன் வயிற்றுச் சோற்றுக்காக ஒரு ஆசிரமத்தின் வாசலில் வந்து சேருகிறான்  ஆனால் அந்த ஆசிரமம் அவனுக்கு உணவு கொடுத்துக் கூடவே  அவனைப் பெரிய படிப்பு படிக்கவைக்கிறார். அதற்கு பாவக்கணக்காக அவன்  அந்த கணத்திலிருந்து அவனுடைய அம்மாவை விட்டு விலகி அந்த ஆசிரமத்திலே  தங்கிப் படிக்கிறான். 

அவன் பட்டம் படிக்கும் வரையில் அம்மாவைப் பார்க்காமலே தனது படிப்பைப் படித்துமுடிக்கிறான். பட்டம் படித்து முடித்து பிறகு அவன் சிவில் சர்வீஸ் படித்து அதற்கான நேர்காணலுக்கு அலுவலகம் செல்கிறான். 

அப்படியாக அவன் சந்திக்கும் முதல் அடி அவனது சாதியினை முன்னிறுத்தித் தான் ஆரம்பிக்கிறது. அப்படிதான் அங்கிருந்து அவனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு விதத்தில் அவனிடம் அவனுடைய சாதியினை முன்னிறுத்தியே சொல்லிக்காட்டுகிறது.

சிவில் சர்வீஸ் பணியிலிருந்தாலும் நீ எங்களுக்கெல்லாம் கீழ் தான் என்று அவனுக்குக் கொடுக்கும் நாற்காலியிலிருந்தே ஆதிக்க சாதியினர் சொல்கின்றனர்.

அவன் காதல் திருமணமும் செய்துகொள்கிறான்,   அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. நன்றாக ஓடிக்கொண்டிருந்த அவனது வாழ்வில் இடை இடையே வந்துபோகும் அவனது அம்மா.

அவ்வாறாக வரும் அவனது அம்மா செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே ஒரு பெரிய தாக்கத்தினை செய்கிறது. அவன் தாயோ வீதியில் சுற்றித் திரிபவள் அவள் எப்படி ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பாள் அவளுக்கு அவளது சுதந்திர உலகமே தேவைப்படுகிறது ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் செய்யும் பல்வேறு காரியங்கள் முகம் சுழிக்க வைக்கிறது.

அவள் தனது மகன் காப்பானைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவள் தனது பலம்கொண்ட குரலில் அலறி கேட்கும் ஒரு சில வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் பொது மனது ஒரு பக்கம் வலிக்கத்தான் செய்கிறது அதே சமயம் அவளின் வலியானது அவள் வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறாள்.

ஏலே மக்கா காப்பான், தனக்கு அந்த நாற்காலியும், சட்டையும், அந்த வெள்ளைத்தோல் பெண்ணும் வேண்டாமடே, ஏன் கூட வந்துடுடா காப்பான் நின்ன நான் பாத்துக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் நம்மை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை நம்மை விட்டு விலகிச் செல்வதுபோல ஒரு வித உணர்வு  தோன்றுகிறது.

அவனுக்கும், அவனது பணியில் ஏற்படும் ஒவ்வொரு அடியும் ஒரு சேர ஒரு நேரத்தில் அவனுக்குள்ளேயும் அவனது மனம் சொல்லும், ஒரு விதத்தில் அம்மா சொல்வது அத்தனையும் உண்மைதானோ என்று மீண்டும் மீண்டும் அவனது மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திச் செழிக்கிறது.

இறுதியில், அவனது அம்மா ஒரு இடத்தில் அதும் ஹாஸ்பிடல் என்று கூடச் சொல்லமுடியாத இடத்தில் இருந்து மரண படுக்கையிலிருந்து மீட்டுவருகிறான். அங்கேயும் அவன் சந்திக்கும் மருத்துவர், தனது சாதியின் பெயரால் வெறும் பேருக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறார். இதுவும் சாதியின் என்று கொடிய பேயின் கையில் சிக்கித் தவிக்கும் மனநோயாளிகளினால் அரங்கேற்றப்பட்ட அவலம் என்று தான் சொல்லவேண்டும்.

அவன் ஒவ்வொரு முறையும், தனது  மக்களிடம் இருந்து பெறுகின்ற மனுக்களுக்குத் தன்னால்  ஏதும் செய்யமுடியவே இல்லைய என்ற தனது இயலாமையை தனது மன வருத்தம் கொண்டு அது நேரும்  ஒவ்வொரு கணமும் அவன் தனக்குள்ளே அழுது சாகிறான்.

தனக்குப் படிப்பு இருந்தும், திறமை இருந்தும் தனக்கான நாற்காலி கிடைக்காதது என்ற உண்மை நிலையினை புரிந்துகொள்கிறான்.  இது என்று தீரும் என்ற நிலை புரியாமலே செல்கிறது..... 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்

16 டிசம்பர் 2022             



         

Thursday, 15 December 2022

யாருக்காக அழுதான்? - ஆசிரியர் - ஜெயகாந்தன்

 யாருக்காக அழுதான்? 

ஆசிரியர் - ஜெயகாந்தன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 117

பக்கங்கள் 73



ஜெயகாந்தனின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கும் என்பார்கள் அது உண்மைதான். நான் இந்த புத்தகத்தினை 2020 ல் வாங்கினேன் ஆனால் முதல் சில பக்கங்கள் வாசித்து விட்டு ஓரம்கட்டிவைத்துவிட்டேன். ஏனோ இன்று என் கண்ணில் பட்டது உடனே வாசித்துவிட்டேன் அதுவும் ஒரே நாளில். 

வாசித்து முடித்த இறுதிக்கணத்தில் அவனும் அழுகிறான் கூடவே நானும் அழுதேன் இதுதான் உண்மை.

வாருங்கள் கதைக்குள் செல்வோம்.      அந்த ஊரின் ரயில்வே நிலையம் அருகில் வெறும் நான்கு அறைகள் கொண்ட ஒரு விடுதி இருக்கிறது. அது முதலியாருக்குச் சொந்தமானது அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவருவதற்காகவே  மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டுவருகிறது .

இந்த கதை ஒரு நாள் இரவில் ஆரம்பித்து மறுநாள் மாலையில் முடிகிறது. எத்தனை கனமான இதயம் கொண்ட மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.

கதை இருவருக்கும் இடையே ஏற்படும் உரையாடல்களைக் கொண்டு பாதி முடிந்துவிடுகிறது. மறுநாள் விடுதி விடுமுறை என்பதால் பெரும்பாலான வேலைக்காரர்கள் அன்று இரவு  இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்கச் சீவி சிங்காரித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஆனால் கோவிந்தசாமி நாயுடுவும், சோசப்பு மட்டும் போகவில்லை. அவர்களை ஆச்சரியமாகப் பார்த்த முதலியார் நாயுடுவிடம் கேட்கிறார் ஏன் நீ மட்டும் போகவில்லை என்று அது அவர் மறுநாள் அவருடைய குடும்பத்தைப் பார்க்கக் கிராமம் செல்லவேண்டி இருப்பதால் சினிமாவின் மீது ஆர்வம் இல்லை  என்கிறார் ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் சோசப்பு தனது வேலையில் அந்த நேரத்திலும் மேசை எல்லாத்தியும் சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.

எப்போதும் அமைதியாகவே இருக்கும் சோசப்பு அன்று மூன்று குரங்குகள் சேர்ந்து இருக்கும் ஒரு குரங்கு பொம்மை கையில் வைத்துக்கொண்டு தூங்கப்போனான். அவனருகில் தூங்க வந்த கோவிந்தசாமி நாயுடு, சோசப்பிடம் கேட்கிறார்ஏன்டா நீ எப்போதுமே கவலையே இல்லாமல் இருக்கிறாயா, எப்படிடா என்றார். அவனின் சுபாவம் அவன் யாருக்கும் தீங்கு செய்யமாட்டான், அதுபோலவே அவன் எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் வேலை செய்துகொண்டே இருப்பான்.  அவன் தனது மனதில் பூட்டி வைத்திருக்கும் பல்வேறு ரகசியங்களை மனம் திறந்து சொல்கிறான். அவன் முருகேசனிலிருந்து எப்படி சோசப்பானான் பிறகு அவனது மனைவி, அவனின் நண்பன் தனது மனைவியின் கணவனானது எனத் தனது முகத்துக்குள் மறைத்து வைத்திருந்த சோகங்கள் அணைத்துக் கொட்டித்தீர்த்தான் அத்தனையும் கேட்ட கோவிந்தசாமி நீ சாதார மனிதன் இல்லடா நீ உண்மையாகவே ஆண்டவன் தான் என்று மனமுருகிச் சொல்கிறார்.

அவனுக்கு அழுகையே தெரியாது, அழித்ததும் கிடையாது. ஆனால் அன்று இரவு ஒரு ஆள் முழு போதையுடன்  ரூமிற்கு வருகிறான், அவன்  போதையில் தனது பரிசை தவறிவிடுகிறான்.  அந்த பரிசை எடுத்துக்கொடுத்த சோசப்பிடம் காலையில் மறக்காத கொடுடா என்று சொல்கிறான் ஆனால் அவன் அப்போதே முதலியாரிடம் கொடுத்துவிடுகிறேன்.

மறுநாள் காலையில், எழுந்த அவன் தனது பர்ஸை காணோம் என்றும் எங்கோயோ குடிபோதையில் தவற விட்டுவிட்டோனோ என்று கேட்கிறான். அவன் நேற்றிரவு தவறவிட்டதை  மறந்துபோனான் என்று நினைத்துக் கொண்ட முதலியார் அந்த பர்ஸை மறைத்துவைத்துவிடுகிறார்.

அவன் சந்தேகமெல்லாம் சோசப்பின் மேல் தான், இதனால் சோசப்பு பெரும் சோதனைக்கும் உள்ளாகிறான், அடிக்கிறார்கள் ஆனாலும் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்கிறான். முதலாளி முதலியார் தந்து தேவைக்குப் பணம் வேண்டுமென்று இருந்ததால் அந்த பர்ஸை மறைத்துவைத்து விடுகிறான். இறுதியில் ஒரு பெரும் நாடகத்திற்குப் பிறகு மாலை ஊருக்குப் போன கோவிந்தசாமி திரும்பி வருகிறான். சம்பவத்தைத் தெரிந்துகொண்ட அவன்,சோசப்பு ஒரு தெய்வமடா அவனையா திருடன் என்று சொல்கிறீர்கள் என்று ஆவேசமடைந்த தருணத்தில் முதலியார் எப்படியோ பர்ஸை கொண்டு அவனது அறையில் வைத்துவிடுகிறார்.

இறுதியில் அவனது பர்ஸை கண்டவன், சோசப்பிடம்  மன்னிப்பு கேட்கிறான் ஆனால் அவன் அப்போதும் மௌனமே சாதிக்கிறான்.

அதுவரையில் அழவே தெரியாதவன், தனது முழு பலம் கொன்டு வாய்விட்டுக் கதறி அழுகிறான். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

15 டிசம்பர் 2022                        

        


Wednesday, 14 December 2022

காஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு ஆசிரியர் : பா. ராகவன்

 காஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா. ராகவன் 
கிண்டில் பதிப்பு 
விலை ரூபாய் 125
பக்கங்கள் 339

ஒரு தேசம் - மூன்று பக்கமும் நசுக்கபடுகிறது. எப்படி தாக்குப்பிடிக்கும், ஒரு நிலத்தின் மீது எத்தனை அத்துமீறல்கள். அதுதான் காஷ்மீரின் வரலாறு.  ஆங்கிலேயர் காலத்தில் கூட அமைதியாக இருந்த இந்த தேசம் இப்போது கலவர பூமியாக மாறியது எப்படி என்ற கேள்விகளுக்கு பல்வேறு வரலாற்றுச் செய்திகளை இந்த நூலின் வழியே நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஆம், மன்னராட்சி நடந்த காலத்தில் இந்த பூமி அமைதியாகவே இருந்தது. ஆங்கிலேயரின் காலத்தில் இந்த தேசத்திற்கென விலை கொடுத்து வாங்கி தந்து சொந்த நாடக வைத்திருந்தவர் மன்னர். 

காலப்போக்கில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகி போனதால் அங்கே மத பிரச்சினை சற்று தலை தூக்க ஆரம்பித்தது. இந்த பிரச்சினை தேசத்தில் மக்களாட்சி வேண்டும் என்ற ஒரு மந்திரத்தினை சொல்லிக்கொண்டே கலவரத்தில் தொடங்கியது.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் விடுதலை பெற்ற பிறகு இவற்றுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த பூமி யாருக்குச் சொந்தம் என்று இவர்கள் சோறுபோட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர். ஆனால் உண்மையாகவே காஷ்மீர் மக்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர தேசம் வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நேரு மற்றும் ஜின்னா காலத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினை இன்றளவும் தீராத ஒரு பிரச்சினையாகவே தான் இருக்கிறது. அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்  என்பதையும் அதற்கான பல்வேறு ஆதாரங்களையும் அடுக்கி வைக்கிறார் ஆசிரியர்.

நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வாஜ்பாயி,வி.பி.சிங் என பல்வேறு பிரதம மந்திரிகள் வந்தார்கள் சென்றார்கள் ஆனால் இந்த பூமியின் பிரச்சினை தீர்த்ததாக இல்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர் யாருடன் சேருவது என்ற போட்டியில் பாகிஸ்தான் தரப்பு முன்னெடுத்தது மதம் ஏனெனில் காஷ்மீர் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் இருக்கிறீர்கள் அதனால் இது எங்கள் தேசம் என்றது, அதே சமயம் இந்தியா பூகோள ரீதியாகவும் மற்றும் மன்னர் எழுதிக்கொடுத்த ஆவணத்தின் அடிப்படையிலும் இந்த தேசம் எங்கள் நாட்டின் ஒரு மாநிலம் அவ்வளவுதான் என்றது. ஆனால் இங்கே கவனிக்கக் கூடிய விஷயம் இந்த இரண்டு பங்காளிகளும் மக்களின் ஆசை என்ன என்பதைக் கேட்கவே இல்லை அதற்கான எந்த வித முன்னெடுப்புகளை எடுத்ததாகத் தெரியவில்லை.  இவர்கள் இருவருக்கும் இருந்த அச்சம் வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் தனி தேசம் வேண்டுமென்றால் என்ன செய்வது அதனாலே கூடிய வரையில் இவர்களாகவே ஆட்சி செலுத்தினர். மக்களாட்சி என்ற முறையில் நடந்தது பல்வேறு ஆட்சி.

பாகிஸ்தான் ஒரு பக்கம் தனது நாடு என்று சொல்லிக்கொண்ட சுதந்திர காஷ்மீர் என்று வைத்துக்கொண்டு தங்களின் பொம்மை ஆட்சியாளர்களின் உதவியாக அங்கிருக்கும் வளங்களை எல்லாம் தங்களுடையதாக்கிக் கொள்கிறது மட்டுமல்லாது அங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமாக அந்த பகுதியினை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்த தேசத்தின் வரலாற்றில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை இது யாருக்குச் சொந்தமான பூமி என்றுதான். ஒரு புறம் தனி சுதந்திர தேசம் வேண்டுமென்ற காஷ்மீர் பெரும்பான்மை மக்கள்,மற்றொரு புறம் பாகிஸ்தான், வேறொரு புறம் சீன ஆக்கிரமிப்பு, ஆனால்  சட்டத்தின் படி இந்த பூமி இந்தியாவின் ஒரு மாநிலம்    என்பது தான் நிதர்சனமான உண்மை. இதற்கெல்லாம் என்ன முடிவு என்று விடை தெரியாத பல்வேறு போராட்டங்கள், சூழ்ச்சிகள், மேல்மட்ட பேச்சுவார்த்தைகள், மாநாடு, அமைதி பேச்சுவார்த்தைகள் என ஒரு புறம்  அமைதி நிலவரங்கள் அதே சமயம் ஆங்காங்கே பொழிந்து கொண்டிருந்த குண்டு மழை என இந்த பூமியின் வரலாற்றில் குண்டு துளைக்காத இடமே இல்லையென்றே தான் சொல்லவேண்டும்.      

பாகிஸ்தான், தன்னால் முடிந்த வரை பல்வேறு விதமான இயங்களைச் சோறுபோட்டு வளர்த்து தன்பக்கம் இழுக்க முயன்றுகொண்டே தான் இருக்கிறது. அதே சமயம் தன்வசம் இருக்கும் மாநிலத்தில் தேர்தல் நடத்தி ஆட்சி செய்துவந்தது இந்தியா. 

எத்தனை போர்கள், போராட்டங்கள், குழப்பங்கள், அத்துமீறல்கள், இனக்கலவரங்கள், படுகொலைகள்,  இனத்தின் மீதான வெறி தாக்குதல்கள்,அகதிகளாகிப்போன பல்வேறு மக்கள், அண்டை தேசத்திலிருந்து வந்து ஆக்கிரமிப்புகள், சுரண்டல்கள் மற்றும் சுயநலன்களை மையமாகக் கொண்ட பல்வேறு தந்திரங்கள் என இந்த தேசம் பார்த்தது கொஞ்சம் அல்ல ஏராளமான அடையாளங்களை சுமந்துகொண்டு இந்த பூமி இன்றும் தனது இயற்கை எழிலை வைத்துக்கொண்டு பிரமிக்க வைக்கிறது.


இந்த புத்தகம் காஷ்மீரின் வரலாற்றுப் பக்கங்களை மிகத் தெளிவாக ஆராய்ந்து பல்வேறு விதமான விவரங்களை நமக்குக் கொடுத்துள்ளது.  இந்த புத்தகம் காஷ்மீர் பிரச்சினையின் முழுமையான வரலாற்றை ஆராய்வதுடன், அந்த பிரச்சினைகளை உயிர்ப்புடன்  வைத்திருக்கும் அரசியல் மற்றும் அவற்றிலிருந்து பெரும் பல்வேறு விதமான விளைவுகளையும் அதன்  ஆழங்களையும் விரிவாக ஆராய்ந்து நமக்கு ஒரு சரியான வரலாற்றுப் பதிவுகளைக் கொடுத்திருக்கிறது.


அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 

14 டிசம்பர் 2022

Saturday, 10 December 2022

குறத்தி முடுக்கு ஆசிரியர் : ஜி. நாகராஜன்

குறத்தி முடுக்கு 

ஆசிரியர் : ஜி. நாகராஜன் 

காலச்சுவடு பதிப்பு 

விலை ரூபாய் 100

பக்கங்கள் 95

ஜி. நாகராஜன் அவர்களின் எழுத்துலகம் ஒரு தனிதன்மையானது. பெரும்பாலும் அவரின் எழுத்துக்கள்  விளிம்புநிலையில் இருக்கும் சாதாரண மக்களை பற்றியும் மேலும் அவர்களே தான் அவர் கதையின் மாந்தர்களாகவே வலம் வருபவர்களாக இருப்பார்கள். அதில் அவர் வெற்றியும் கண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த குறத்தி முடுக்கு, விலைமாதர்களை மையமாக கொண்டு அவர்கள் வாழ்வியலில் இருக்கும் அவலங்களையும் அதே சமயம் அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என ஒரு கண்பார்வையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எவ்வாறு பெரும்பாலான பெரும் நகரங்களில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிகள், அவை எவ்வாறு இயங்குகின்றனவோ அதேபோலவே இவர் கூறும் திருநெல்வேலியின் குறத்தி முடுக்கு என்ற இடமும் அதே நிலைமையினை கொண்டதாகவே தான் இருக்கிறது என்ன ஒரு வித்தியாசம் இது ஒரு கிராமம் அவைளேல்லாம் பெருநகரம் அவ்வளவுதான்.

ஒரு பத்திரிக்கையாளராக தன்னை முன்னிறுத்தி, அதன் வழியாக அந்த இடத்தில அரங்கேறும் அலாதி உறவுகளுக்குள் இருக்கும் ஒரு தனித்தன்மையினை தனது கதை சொல்லும் திறமையிலே அருமையாக சொல்லிச்செல்கிறார்.

தான் ஒரு விலைமாதாக இருந்தாலும் தனக்கென ஒரு குழந்தை வேண்ண்டுமென்ற ஆசை, அவள் கற்பகமாக இருந்தும் அவளால் அந்த குழந்தையினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஒரு சூழலிலே அவள் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.

தங்கம், ஒரு விலைமாது என்றாலும் அவளின் கவனிப்பிற்கு அடிமையான பத்திரிக்கையாளர், அவளது ரெகுலர் வாடிக்கையாளராகவே மாறுகிறார். மேலும் அவளுக்காக என்ன வேண்டுமானுலும் செய்ய தயாராக இருக்கும் இவர் ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்துகொள்ளவாவும் துணிந்துவிடுகிறார். ஆனால் அதே நேரத்தில் அவரது மனதில் ஏற்படும் ஒரு விதமான மனக்குழப்பங்கள் ஒரு சராசரி மனிதனாகவே தன்னை வெளிப்படுத்துகிறார். அதாவது ஒரு விலைமாதுவை திருமணம் செய்துகொண்டால் அதன் பிறகு வாழ்வில் என்ன பிரச்சினை வரும் மட்டுமல்லாமல் நான் எப்படி உறுதியாக அவளுக்கு உண்மையாக இருப்பேனா அல்லது அதே நேரம் அவள் இறுதிவரை எனக்கு உண்மையாக இருப்பாளா என்ற கேள்விகள் அவரது மனதில் ஏற்படுவது ஒரு எதார்த்தமான உண்மையே. என்னதான் நான் ஒரு முற்போக்கு சிந்தனையாளன் என்றாலும் அவ்வாறான எண்ணங்கள் வராமலிருக்குமா என்ன?. 

தங்கத்திற்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் அவர் இறுதிவரையில் அவளை நினைத்து தனது வாழ்வின் சுகதுக்கங்களை வாழ்ந்து செல்கிறார்.

அந்த குறத்தி முடுக்கு வந்து சேரும் ஒரு தேவதை, தனது நிலையினை எண்ணி அங்கிருந்து எப்படியாவது தப்பித்துவிடாவது நினைக்கலாம் ஆனால் அவள் தான் தற்கொலை செய்துகொள்ள முனைவது ஒருவிதத்தில் இந்த வாழிவில் நித்தம் நித்தம் சாவதைவிட ஒரே அடியாக செத்துவிடலாம் என நினைத்தாளோ என்னவாவோ.

தனது அக்கா புருஷனோட தம்பியை தனது உருவாக்கிக்கொண்டு அவனுக்கென இருந்த குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு, காலம் கடந்து பிறகு தான் செய்த தவறை எண்ணி வருத்தப்படுவதால் என்ன புண்ணியம், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல அல்லவா இருக்கிறது. அவள் இறுதியில் வேறொருவனுடன் திருவனந்தபுரத்தில் வாழும் நிலையினை பார்த்து தான் மனம் வருந்தும் நாயகன்.

குறத்தி முடுக்கில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி தன்மையினை கொண்டுள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அத்தான் அவனது பிடியில் சிக்கி தவிக்கும் பெண்கள். எதோ நூறு ரூபாய்க்கு வாங்கிவந்தேன் என்று ஒருவன் சொல்லுவது மனதில் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. சமுதாயம் ஒவ்வொருவரையும் எப்படியாவது ஒரு பின்னணியில் ஒரு தவறான செயலுக்கு உந்தி தள்ளுகிறது அவ்வாறு தள்ளுப்படும் ஒவ்வொருவரும் எதோ ஒரு குற்ற பின்னனியில் தனது மீதம் வாழ்க்கையினை வாழ்ந்து தொலைக்க வேண்டிய காட்டியதில் தான் வாழ்கிறார்கள் அல்ல அல்ல வாழ்ந்துகொண்டு சாகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆசிரியர், கையாண்டுள்ள உரையாடல்கள், இந்த குறத்தி முடுக்கில் இருப்பவர்களின் அகா வாழ்க்கையினை மிக அழகா சித்தரிக்கிறார். அதாவது ஒரு நாற்பது வயதுள்ள ஒருவன் அந்த வீதியில் வருகிறான், அவனை எதிர்கொண்ட ஒருவன் அவனிடம் ஏது இந்த பக்கம் என்று கேட்கும் பொது அவன் தனது மனைவி பிறந்த வீட்டிற்கு போயிருக்கிறாள் என்று சாதாரணமாக சொல்லிச்செல்கிறான். இதுபோலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது உரையாடல்களின் வழியே தங்களின் மற்றொரு வாழ்க்கையின் வெளிப்பாட்டினை சொல்லிச்செல்கின்றனர்.

மொத்தத்தில் பல்வேறு மனிதர்களின் நிறைவேறாத நிராசைகளைத் தனது எழுத்துக்கள் வழியே அந்த விளிம்புநிலை மனிதர்களின் குரலாகச் சொல்லிச்செல்வதில் ஜி. நாகராஜன் தனி ரகம் தான்.


அன்புடன், 

தேவேந்திரன் ராமையன்

11 டிசம்பர் 2022   

                                    

  

  

கன்னித்தீவு - ஆசிரியர் : சி. சரவணகார்த்திகேயன்

 கன்னித்தீவு 

ஆசிரியர் : சி. சரவணகார்த்திகேயன் 

கிண்டில் பதிப்பு 

விலை  ரூபாய் 100

பக்கங்கள் 381


கன்னித்தீவு - என்றதும் நமக்கு ஞாபகம் வருவது தினத்தந்தியில் வரும் படத்துடன் கூடிய கதைதான். அது எத்தனை ஆண்டுகாலமாக வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த கன்னித்தீவு ஒரு இளஞ்ஜோடிகளின்  அழகான காதல் கதையும் அதே சமயம் கதையின் நாயகியான   பார்வதி ஒரு கர்ப்பிணிப் பெண். அவள்  ஒரு எதிர்பாராத ஆபத்தில் சிக்கி அதிலிருந்து தப்பித்து ஒரு தீவிற்குள் வந்து அடைக்கலம் புகுந்து பிறகு   பல்வேறு திருப்பங்களுடன் அந்த தீவில் வசிக்கும் மக்களுக்கும் மேலும்  மரியாவிற்கும் இடையே ஏற்படும் இணக்கமான உறவு, அதற்கு ஏற்றாற்போன்ற  சூழலையும் தொய்வில்லாமல் எடுத்துச் செல்லும் கதையினை மிக்க அருமையாக அமைத்து  அடுத்தடுத்து என்ன என்ன என்று எதிர்பார்க்கத் தூண்டும் வகையிலான ஆவலைக் கூட்டும்  அற்புதமான  எழுத்துக்களைக்  கொண்டு இந்த கன்னித்தீவினை கடல்போல  அருமையாகக்  கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர். 

கல்லூரியில்  படிக்கும் இருவர், அவர்களிடையே  ஏற்படும் காதல். பொதுவாகக் காதல் சாதி மதம் பார்த்து வருவதில்லை. அதுபோலவே தான் இவர்கள் காதலும், அதற்காக இவர்கள் காதலை விட்டுவிடாமல் தங்கள் வீட்டோரை விட்டுப் பிரிந்து வந்து காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு இளஞ்ஜோடிகளின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு அவர்களின் இயல்பான வாழ்க்கையின் ஓட்டத்துடன் இந்த நாவலை மிகவும் சிறப்பாக எடுத்துச்செல்கிறார். நிகழ் காலத்தில் மட்டுமல்ல எந்த  காலகட்டத்திலும் வாழும் இளம் தம்பதியினரின் கலந்துரையாடல் எவ்வாறு இருக்கும் என்ற பின்னணியில் ஆசிரியர் இந்த இளம்ஜோடிகளின் உரையாடல்களை அருமையாக அமைத்திருக்கிறார். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் இவர்களுக்கிடையே இருக்கும் நெருக்கத்தையும், அலாதியான   அன்பையும்  அருமையாக வடிவமைத்திருக்கிறார்  ஆசிரியர்.

நிகழ்கால அரசியல் பற்றியும் ஆங்காங்கே மேற்கோள்காட்டி கதையின் காலத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அரசியல் இல்லாமல் ஒரு சமகாலம் நகராது என்பதற்குப் பலமாக பல்வேறு இடங்களில் அரசியல் இடம்பெற்றுள்ளது.  

கதையின் காலம் 2004 - அதாவது சுனாமி வந்த வருடம். இயற்கையின் சீற்றத்திலிருந்து எவ்வாறு ஒரு பழங்குடியினர் மீண்டனர் அதே சமயத்தில் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு வாழும் நாம் எவ்வாறு பாதிப்படைந்தோம் என்ற ஒரு பெரிய கேள்வியும் அதற்கான பதிலையும் மரியா என்ற பெண்ணையும் அவளுடன் பார்வதிக்கு ஏற்படும் உறவையும் வைத்து மிக நுட்பமாக எடுத்துச் செல்கிறார்.

ஒரு கர்ப்பிணிப் பெண், தனது அலுவல் நிமித்தமாக அதாவது தேர்தல் பணிக்குச் செல்கிறாள். தனது கணவனுக்கும் பெற்றோருக்கும் சொல்லாமல் அந்தமான் தீவிற்குச் செல்கிறாள். அவளின் பொல்லாத நேரம் அவளை பெரும் இன்னலில் கொண்டு சேர்க்கிறது. அங்கே நிகழும் சூழ்நிலைகள் அவளுக்குச் சாதகமானதாக இல்லை. அவர்கள் கூடவே பழங்குடி இனத்தின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி ஆய்வு செய்யும் நோக்குடன் வரும் ரசூல் மற்றும் அவருடன் இருக்கும் நிக்கி என இந்த மூவரும் பயணிக்குப் பயணம். அந்த தீவினை நோக்கிப் பயணப்படுகிறார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போல் நிலைமை இல்லாமல் அவர்கள் சென்ற வேலை கொஞ்சம் கூட எடுபடவில்லை. மாறாக அந்த சூழலில் பார்வதி ஒரு முடிவெடுக்கவேண்டி நிலை வருகிறது. அப்படி ஏற்பட்ட நிலையில்  பார்வதி எடுக்கும் அந்த முடிவு அவளையும் அவளுடன் கூட வந்த அனைவரையும் ஒரு பெரிய இன்னலில்  கொண்டுவிட்டுவிடுகிறது. அதில் சிலர் இறந்தே போகின்றனர். 

அப்படியே நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில் அவள் எடுத்த துணிச்சலான முடிவு அவள் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்கவில்லை. இடையில் ஏற்பட்ட விபத்திலிருந்து எப்படித் தப்பித்து ஒரு தீவிற்கு வந்து சேர்கிறாள். பிறகு அவளுடன் கூடவே வந்த நிக்கியும் அதே கரையில் வந்து ஒதுங்கியிருக்கிறான் என்று ஒருபுறம் நிம்மதியும் மறுபுறம் அவனால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்று ஒரு பக்கம் நினைக்கிறாள் அதே சமயம் யாருமில்லாமல் தனியே எப்படி இந்த புதிய இடத்தில் இருக்கப்போகிறோம் என்ற குழப்பத்தில் அவள்  இருக்கிறாள். அதேசமயம் தன்னுடன் சக மனிதன் ஒருவன் இருந்தால் நல்லது,  பயமில்லை என்று அவள் ஒருமுடிவெடுத்து  அவள் செய்யும் வேலை அவளை மீண்டும் பிரச்சினையில் கொண்டு விடுகிறது. மனிதர்களின் சிலர் மிருகமாகவும் வாழ்கிறார்கள் என்பதற்கு நிக்கி போன்ற ஒரு சிலர் வலம் வரவே செய்கிறார்கள். 

பார்வதியும், நிக்கியும் அந்த தீவு வாசிகளிடம் சிக்கிக்கொள்ளும் வேளையில் அவர்கள் நிக்கியை கொண்றுவிடுகிறார்கள்.  ஆனால் அதேசமயம் பார்வதியினை ஒருத்தி அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறாள். அதுமுதல் அவளை மரியா பெயர்வைத்து அவளை அப்படியே  பார்வதி நினைத்துக்கொள்கிறாள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து பரிமாற்றம் அதனால் அங்கே ஏற்படும் பல்வேறு சூழல்கள் அவற்றை எப்படியெல்லாம் பார்வதி கடந்து செல்கிறாள். அங்கிருந்து அவள் தப்பித்து வர வழிசெய்து கொடுக்கிறாள் மரியா ஆனால் மீண்டு அவளுக்கு அதே தோல்வி மீண்டு அதே தீவு. அப்போது ஏற்படும் சுனாமி பேரலை அவற்றிலிருந்து அந்த தீவு மக்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதைப் பார்க்கும் பொது நாம்தான் அறிவியல் வளர்ச்சி கொண்டுள்ளோம் என்று சொல்கிறோம் ஆனால் அதே நேரத்தில்   

ஒரு நல்ல நாவல் வாசித்த தருணமாக இருந்தது இந்த கன்னித்தீவு. தீவுகள் எப்போதுமே கன்னியாகவே இருக்கும் மனிதர்களால் காமுறும்வரை. தீவுகள் கன்னிகளாகவே இருந்தால் அழகுதான்.

இயற்கை என்பது எல்லோருக்கும் பொதுவானது தான் ஆனால் நாகரிகம் என்ற பேரில் நாம் முதலில் அழித்து வருவது இயற்கையைத் தான். உதாரணம் இன்றளவும் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் பல்வேறு கிராமங்கள், தங்களுடைய எழில்மிகு அடையாளத்தினை இழந்து வேறொருமுகம் தேடி தனது சொந்த முகத்தினை இழந்து நிற்கும் அவலநிலையைத் தான் நாம் கொடுத்திருக்கிறோம்.      

அருமையான அட்டை படம். அந்த கடலோர தீவில் சேரும் கர்ப்பிணிப்பெண்ணின் நிலைமையும் அவள் அந்த தீவு முழுவதும் நிறைந்திருக்கிறாள் என்பதையும் அருமையாகச் சொல்லும் படம். 

இறுதியில் மனிதர்கள் நாம் எங்குச்சென்றாலும் நம்மால் எதாவது ஒரு மாற்றம் ஏற்படும் அது உண்மைதான் அவற்றில் அந்த தீவிற்கு ஒரு புதுமையினை கொடுத்துவந்தால் பார்வதி அதே நேரம் அங்கே மூன்று உயிர்கள் பறிபோனதும் மறைமுகமாகக் காரணமாகிறாள்.   


அன்புடன்

தேவேந்திரன் ராமையன் 

10 டிசம்பர் 2022

    

Sunday, 4 December 2022

இக்கிகய்

 இக்கிகய் 

ஆசிரியர் : ஹெக்டர் கார்சியா & பிரான்ஸ்செஸ்க் மிராயியஸ்  

தமிழில் - பி.எஸ்.வி. குமாரசாமி 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 257

பக்கங்கள் 216


ஹெக்டர் கார்சியா & பிரான்ஸ்செஸ்க் மிராயியஸ் ஆகிய இவர்கள் டோக்கியோவில் இருக்கும் ஒரு சிறிய மது விடுதியில் கலந்துரையாடும் போது உதித்ததுத் தான் இந்த புத்தகத்திற்கான கரு என ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இக்கிகய்  இருக்கிறது, அவற்றைப் பயன்படுத்தி நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசுகிறது இந்த புத்தகம். மனிதன் நீண்ட காலம், எவ்வாறு மகிழ்ச்சியாக வாழும் ரகசியத்தினை பற்றிப் பேசும் அருமையான புத்தகம். ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொருவரும் தினமும் தனது உறக்கத்திலிருந்து மிகவும் உற்சாகமாக எழுவதற்கான காரணத்தினை இந்த இக்கிகய் வெளிப்படுத்துகிறது. 

உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் நீங்கள் நீண்ட காலம் வாழும் கலையினை அறிந்துகொள்வீர்கள் என்கிறார்கள் ஆசிரியர். லோகோ சிகிச்சையில் கிடைக்கும் பயன்களை மிகவும்  


நீண்ட ஆயுளுக்கான கின்னஸ் சாதனை படைத்த கிராமமாக ஓகிமி இருக்கிறது இதற்குக் காரணம் இங்கு வாழ்ந்தவர்கள் எல்லோரும் நீண்ட ஆயுளுக்கான வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கே பெரும்பாலான மக்கள் நூறு வயதினை தாண்டி வாழ்கின்றனர். இது அவர்கள் பாடும் பாட்டு தான் அவர்களின் கள்ளங்கபடமற்ற மனநிலையினை காட்டுகிறது. 

ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் வேண்டுமா?

குறைவாய் சாப்பிடுங்கள் நன்றாய் ருசித்து !

முன் தூங்கி முன் எழுங்கள்.

எழுந்தவுடன் செல்லுங்கள் காலார நடக்க.

அன்றாடம் ஓட்டுகிறோம் வாழ்க்கையை நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் .

வாழ்க்கை பயணத்தைத் தொடர்கிறோம் குதுகூலத்துடனே.

நண்பர்களுடன் ஆடி பாடுகிறோம் பிணக்கின்றி.

வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ 

அனைத்தையும் அனுபவிக்கிறோம் ஆனந்தமாய்!

கவலைப்படுவதில்லை நாங்கள் எங்களின் 

விரலின் மூப்பைப் பற்றி!

நீங்களும் உங்கள் விரல்களை 

அசைத்துக்கொண்டிருந்தால் அலுங்காமல் 

குலுங்காமல் ஓடி வரும் உங்களை நோக்கி 

அந்த நூறு வயது!!...


லோகோ மற்றும் மோரிட்டோ சிகிச்சை முறை எப்படி ஒரு மனிதன் தனக்கான இருத்தலைத் தெரிந்துகொள்கிறானோ அப்போதிலிருந்து அவன் அவனுக்கான வாழ்க்கையினை வாழ ஆரம்பித்துவிடுகிறான் என்கிறது.

நாம் ஏன் வாழ்கிறோம் என்ற இலக்கினை தெரிந்து கொள்வதும் முக்கியம் அதே சமயம் எவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் எவ்வாறு திளைத்திருப்பது என்ற ரகசியத்தினையும் உணர்ந்துகொண்டால் வாழ்வே சிறப்பாகும் என்கிறார்கள்.

உலகில் பல்வேறு பகுதிகளில் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள் இருக்கின்றனர் ஆனால் ஜப்பான் மட்டும் தான் அதிகம் மக்கள் நூறு வயதினை தாண்டியவர்களாக வாழ்கின்றனர். அதற்கான ரகசியத்தினை இந்த புத்தகம் சொல்கிறது.

வாசிக்கும் நமக்கு வேண்டிய உத்வேகமும் மற்றும் ஊக்கமும் கொடுக்கக் கூடிய நூலாக இருக்கிறது இந்த நூல்.  நம்முடைய தனிப்பட்ட இக்கிகயயை கண்டுபிடிக்கத் தேவையான வழிகளை இந்த புத்தகம் வழங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் அவரச போக்கைக் கைவிட்டுவிட்டு நமக்கான நோக்கத்தினை கண்டறிந்து அதற்கான எல்லா வகையான வழிகளையும் கண்டடைந்து தமது வாழ்க்கையினை சிறப்பாக வாழ இந்த நூல் ஒரு அற்புதமான வழிகாட்டியாக இருக்கிறது.

இந்த நூலின் உதவியோடு நாம் கண்டடைந்த இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும் ஆனந்தமாகவும் வாழ்வோம்.


அன்புடன்

தேவேந்திரன் ராமையன் 

03 டிசம்பர் 2022



    


             




ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரை விலக்கும் ஓர் அருமையான நூல்!

எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரை விலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும்.
இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.

Friday, 25 November 2022

இறவான் - வாசிப்பனுபவம்

இறவான் - வாசிப்பனுபவம்  

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 300

பக்கங்கள் 409


ஒரு புத்தகத்தினை வாசிக்கும் போது  பெரும்பாலும் நாம் அந்த கதையின்  கதாபாத்திரத்துடன் பயணிப்போம் ஆனால் இந்த இறவானை வாசிக்கும் போது  நமக்குக் கதையின் ஓட்டத்துடன் கூடிய இசையும் அதன் சுரங்களையும் உணர முடிகிறது. இந்த இசையெனும் அலை கடலில் நீந்த வைத்த ஆசிரியருக்கு ஒரு பெரிய நன்றியினை சொல்லியே ஆகவேண்டும்.

ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் ஜோசப், சந்தானப்பிரியன் எனத் தான் வாழும் காலத்தில் தனது அடையாளத்தினையும் மேலும் உலகுக்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம் தான் நம் கதையின் நாயகன்.

இதற்காக எவ்வளவு மெனக்கெடல் தேவைப்பட்டிருக்கும். இசையின் முழுவடிவத்தைனயும் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒரு பெரிய இசை மேதை பற்றிய கதையில், கதையின் நாயகன் எந்த ஒரு இசையின் இலக்கணமும் படிக்காமல் தனது அதீத ஞானத்தால் அவன் இசையின்  மேதையாக வருவது இந்த கதையின்  உயிரோட்டமாக இருக்கிறது.

நாயகன் ஒரு அதீத இசை மேதையாக வலம்வருவதற்குத் தேவையான எல்லா பின்புலங்களும் மிகக் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நாயகன், தன்னை பற்றி அறிமுகம் செய்யும் விதம் முற்றிலும் ஒரு மாறுபாடான வித்தியாசமான பார்வையிலிருந்து வந்திருக்கிறது. தன்னை பற்றிச் சொல்லவே தான் தற்கொலை செய்துகொண்டு வந்துள்ளேன் என்று சொல்லும் நாயகன் தன்னை ஒரு யூதன் என்றும் ஆனால் அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் என்னிடம் இல்லை என்றும் ஆனால் நான் அவற்றை  நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் எனக்கில்லை என்று  சொல்லும் விதமே கதையின் நாயகனின் முழு குணாதிசயங்களையும் வெகுவாக புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஒரு வாசகனின் மனதில் நாயகன் எவ்வாறு உருவமைக்கப்படுகிறான் என்பதற்கு அவனின் ஆரம்ப அறிமுகம் போதுமானதாக இருக்கிறது. 

ஏழு சுரங்களுக்குள் அடங்காத இவனின் இசை "காற்றாற்று வெள்ளம்" போலக் கரை புரண்டு ஓடுகிறது. இந்த கதையின் நாயகன், தன்னை  "ஆபிரகாம் ஹராரி" என்றும்  தனது முன் பிறவியைச் சொல்லுவதும் ஆனால் அவற்றை நான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த எந்த ஒரு நிரூபணமும் என்னிடமில்லை என்று சொல்லி தனது நிஜ வாழ்க்கையின் அடையாளமான பெயரை "எட்வின் ஜோசப்" என்று சொல்லிக்கொள்ள பெரும்பாலும் விரும்பாதவனாகவே வலம்வருகிறான். ஆம் இவனின் வாழ்க்கையினை கொஞ்சம் திரும்பி பார்த்தால், நமக்கு நன்றாகப்  புரிந்து விடும் இவன் ஒரு சாதாரண மனிதன் இல்லையென்று. இவனின் ஒவ்வொரு செயலும் முற்றிலும்  மாறுபட்டே இருக்கிறது.

மும்பையில் பிறந்த எட்வின் ஜோசப், ஒரு காலகட்டத்தில்  தனது  பிறப்பின் நோக்கமே இஸ்ரேல் போய்ச் சேர்வது தான் ஏனெனில் தான் ஓர் யூதன் என்றும் அதனால் யூதனுக்கான மண்ணில் தான் நான் இருக்கவேண்டும் என்றும் தனக்கான ஒரு இலக்கினை வைத்துக் கொண்டு தனது பயணத்தினை ஆரம்பிக்கிறான். 

இந்த பயணத்தின் முக்கிய உந்து சக்தியாக அவனுக்கு அவனின் இசையறிவு இருக்கிறது.  இந்த நாவல் முழுவதும் அவன் அவனது இலக்கினை அடைந்தானா இல்லையா என்பது நோக்கிச் செல்லும் ஒரு அழகிய  இசைப்பயணமாகவே வீரநடை போட்டுக்கொண்டு கூடவே நம்மையும்  அவனுடன் அலுப்பில்லாமல் பயணிக்க வைக்கிறது. 

சிறுவயதில் தனது வீட்டிலிருந்து  புறப்படுகிற எட்வின், தான் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவனுக்கு ஒரு புதிய அனுபவத்தினை கொடுக்கிறது. முதலில் ஒரு நாள் இரவு அவன் உறங்க ஒதுங்கும் பள்ளிக்கூடம், பிறகு அவனுக்காகக் காத்திருக்கும் விருத்தசேதனம் செய்யும் முதியவர் அந்த வழியே அவன் செல்லும் போது முதல் முதலாக அவன் காணும் அந்த பெண் பிறகு அவன் காணும் தேவாலயம் என அவனுக்கு ஒவ்வொன்றும் புதிதாகவே இருக்கிறது. இவ்வாறாக அவன் காணும் ஒவ்வொன்றும் அவன் ஒரு யூதன் என்ற உணர்வினை அவனுக்குள் விதைத்துக் கொண்டே செல்கிறது. 

நடுத்தரமான குடும்பத்தில் இருக்கும் பெற்றோருக்கு தங்களது குழந்தை மற்ற குழந்தையிலிருந்து வேறுபட்டு இருக்கிறான் என்பதைப் பார்த்துக்கொண்டு எப்படி ஒரு சாதாரணமான பெற்றோர்களால் இருக்க முடியும்.  எந்த பெற்றோர்கள் தான் ஒத்துக்கொள்வார்கள்.

இவனின் பெற்றோருடைய நிலையும் அதுபோலவேதான். தனது மகன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாகப் போக முடிவெடுக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை மிகவும் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தனது மகனைத் தேடி அலைவதும் அவனுக்காக தங்கள் வாழ்விடத்தினையே மாற்றிக் கொள்வதும் என அவர்கள் செய்யும் தியாகம் அளவிடமுடியாதது. ஆனால் அவன் அவனின் இலக்கினை நோக்கிய தனது பயணத்தில் தான் குறியாக இருக்கிறான்.

ஒரு நேரத்தில் தனது மகனுக்காக தங்களது வாழ்விடத்தினையே மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்ற முடிவெடுத்து அதன்படி குடியும் பெயர்ந்துவிடுகிறார்கள். ஆனால் அவன் அவனாகவே தான் வாழ்ந்து செல்கிறான். அவன் யாருக்காகவும் மாறவில்லை, அவன் எடுக்கும் அத்தனை முடிவுகளும் அவனுக்காகவே அவனால் எடுத்துக்கொண்ட முடிவுகளாகவே இருக்கிறது.             

எப்போதுமே ஜீனியஸ்கள் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் தானாகவே வளர்கிறார்கள். அதுபோலவே தான் இந்த கதையின் நாயகனும்,  தான் ஒரு இசையின் மேதை என உணர்ந்து கொண்டு அவன் அந்த துறையின் மேல்தட்டுக்குப் பயணிக்கிறான் அவ்வாறாகவே அவன் தன்னை உருவாக்கிக்கொள்கிறான். அவன் தன்னை தானே செதுக்கிக்கொள்கிறான். அவன் நடந்து செல்லும் பாதைகள் எல்லாமே கரடு முரடான பாதைகள் தான் இருந்தாலும் அவன் அதை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சு மெத்தை என நினைத்து நிதானமாகப் பயணிக்கிறான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனது குறிக்கோள்களைப் பற்றி மட்டுமே நோக்கி எடுத்துச்செல்கிறது. தனது இலக்கினை மற்றும் நினைத்துச் சிந்திக்கத் தெரிந்த ஒரு வித்தியாசமான மனிதன் இவன் உண்மையில் ஒரு இசையின் ஜீனியஸ்தான்.

சென்னைக்கு வந்த நமது நாயகன் மேலும் தனது இலக்கினை நோக்கி நகர்ந்தானா இல்லையா என்பது தான் அவனின் பெரிய சவாலாகவே இருந்தது. பிறகு இவன் ஆரம்பிக்கும் டெவில் இசை குழுமம் அதற்காக அவனுடன் சேரும் ஜானவிபெஸ்கிகருணாகர மூர்த்தி மற்றும்  ரகு என ஒரு அழகான இசை குழுமம் சேர்ந்துவிட்டது.

பிறகு சினிமாவிற்கு இசையமைக்கும் வாய்ப்பு கூடவே தயாரிப்பாளரின் மகளைத் திருமணம் செய்துகொள்ளும் நிர்ப்பந்தம் இதற்காகத் தனது பெயரினை சந்தானப்பிரியன் என்று மாற்றிக்கொள்ளுவது கொஞ்சம் மேலும் அவன் சிறுவயதில் கேட்ட குரலுக்குச் சொந்தமானவள் என அவன் தனது கனவுலகத்திலும் நினைவுலகத்திலும் தனது சிந்தனையினை அடிக்கடி மாற்றி மாற்றிச் சிந்தித்து அவனின் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த இசையின் குரலுக்காக அதுவும் ஒரு பெண்ணின் குரலுக்காகத் தனது தேடலை மேற்கொண்டு இறுதியில் கண்டுகொண்ட மரியாவினை வைத்து தனது இசையில் அக்குரலில் கேட்கத் துடிக்கிறான்.  அதற்காகவே இந்த படத்தின் அவளைப் பாடவும் வைத்து அதையும் சாதித்துவிட்டதாக அவன் தனது மனதில் நிலைநிறுத்திவிட்டு அவன்  அங்கே இருந்து அவன் தனது இலக்கினை நோக்கிப் பயணப்படுகிறான்.

இங்குக் கதையின் நாயகன் ஒரு காமகனாகவோ அல்லது கஞ்சா புகைக்கும் போதை அடிமையாகவோ பெரும்பாலும் வந்தாலும் அவன் தன்னை அவ்வாறாக நிலை நிறுத்திக் கொள்ளாமல் தனக்கென ஒரு இலக்கினை வைத்துக்கொண்டு அதற்காகவே செல்கிறான். அந்த பெரும் கனவு அவனுக்கான பெரும் கனவு அவன் தனது இசையில் ஒரு சிம்பொனி அமைக்கவேண்டும் என்பதுவே.

இறுதியில் அவன் தனது சிம்பொனியினை அமைத்தானா இல்லையா என்பது தான் மீதி பயணம். மொத்தத்தில் இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு இசைமேதையின்  கதை. 


என்றும் அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 நவம்பர் 2022