Saturday, 10 December 2022

கன்னித்தீவு - ஆசிரியர் : சி. சரவணகார்த்திகேயன்

 கன்னித்தீவு 

ஆசிரியர் : சி. சரவணகார்த்திகேயன் 

கிண்டில் பதிப்பு 

விலை  ரூபாய் 100

பக்கங்கள் 381


கன்னித்தீவு - என்றதும் நமக்கு ஞாபகம் வருவது தினத்தந்தியில் வரும் படத்துடன் கூடிய கதைதான். அது எத்தனை ஆண்டுகாலமாக வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த கன்னித்தீவு ஒரு இளஞ்ஜோடிகளின்  அழகான காதல் கதையும் அதே சமயம் கதையின் நாயகியான   பார்வதி ஒரு கர்ப்பிணிப் பெண். அவள்  ஒரு எதிர்பாராத ஆபத்தில் சிக்கி அதிலிருந்து தப்பித்து ஒரு தீவிற்குள் வந்து அடைக்கலம் புகுந்து பிறகு   பல்வேறு திருப்பங்களுடன் அந்த தீவில் வசிக்கும் மக்களுக்கும் மேலும்  மரியாவிற்கும் இடையே ஏற்படும் இணக்கமான உறவு, அதற்கு ஏற்றாற்போன்ற  சூழலையும் தொய்வில்லாமல் எடுத்துச் செல்லும் கதையினை மிக்க அருமையாக அமைத்து  அடுத்தடுத்து என்ன என்ன என்று எதிர்பார்க்கத் தூண்டும் வகையிலான ஆவலைக் கூட்டும்  அற்புதமான  எழுத்துக்களைக்  கொண்டு இந்த கன்னித்தீவினை கடல்போல  அருமையாகக்  கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர். 

கல்லூரியில்  படிக்கும் இருவர், அவர்களிடையே  ஏற்படும் காதல். பொதுவாகக் காதல் சாதி மதம் பார்த்து வருவதில்லை. அதுபோலவே தான் இவர்கள் காதலும், அதற்காக இவர்கள் காதலை விட்டுவிடாமல் தங்கள் வீட்டோரை விட்டுப் பிரிந்து வந்து காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு இளஞ்ஜோடிகளின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு அவர்களின் இயல்பான வாழ்க்கையின் ஓட்டத்துடன் இந்த நாவலை மிகவும் சிறப்பாக எடுத்துச்செல்கிறார். நிகழ் காலத்தில் மட்டுமல்ல எந்த  காலகட்டத்திலும் வாழும் இளம் தம்பதியினரின் கலந்துரையாடல் எவ்வாறு இருக்கும் என்ற பின்னணியில் ஆசிரியர் இந்த இளம்ஜோடிகளின் உரையாடல்களை அருமையாக அமைத்திருக்கிறார். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் இவர்களுக்கிடையே இருக்கும் நெருக்கத்தையும், அலாதியான   அன்பையும்  அருமையாக வடிவமைத்திருக்கிறார்  ஆசிரியர்.

நிகழ்கால அரசியல் பற்றியும் ஆங்காங்கே மேற்கோள்காட்டி கதையின் காலத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அரசியல் இல்லாமல் ஒரு சமகாலம் நகராது என்பதற்குப் பலமாக பல்வேறு இடங்களில் அரசியல் இடம்பெற்றுள்ளது.  

கதையின் காலம் 2004 - அதாவது சுனாமி வந்த வருடம். இயற்கையின் சீற்றத்திலிருந்து எவ்வாறு ஒரு பழங்குடியினர் மீண்டனர் அதே சமயத்தில் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு வாழும் நாம் எவ்வாறு பாதிப்படைந்தோம் என்ற ஒரு பெரிய கேள்வியும் அதற்கான பதிலையும் மரியா என்ற பெண்ணையும் அவளுடன் பார்வதிக்கு ஏற்படும் உறவையும் வைத்து மிக நுட்பமாக எடுத்துச் செல்கிறார்.

ஒரு கர்ப்பிணிப் பெண், தனது அலுவல் நிமித்தமாக அதாவது தேர்தல் பணிக்குச் செல்கிறாள். தனது கணவனுக்கும் பெற்றோருக்கும் சொல்லாமல் அந்தமான் தீவிற்குச் செல்கிறாள். அவளின் பொல்லாத நேரம் அவளை பெரும் இன்னலில் கொண்டு சேர்க்கிறது. அங்கே நிகழும் சூழ்நிலைகள் அவளுக்குச் சாதகமானதாக இல்லை. அவர்கள் கூடவே பழங்குடி இனத்தின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி ஆய்வு செய்யும் நோக்குடன் வரும் ரசூல் மற்றும் அவருடன் இருக்கும் நிக்கி என இந்த மூவரும் பயணிக்குப் பயணம். அந்த தீவினை நோக்கிப் பயணப்படுகிறார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போல் நிலைமை இல்லாமல் அவர்கள் சென்ற வேலை கொஞ்சம் கூட எடுபடவில்லை. மாறாக அந்த சூழலில் பார்வதி ஒரு முடிவெடுக்கவேண்டி நிலை வருகிறது. அப்படி ஏற்பட்ட நிலையில்  பார்வதி எடுக்கும் அந்த முடிவு அவளையும் அவளுடன் கூட வந்த அனைவரையும் ஒரு பெரிய இன்னலில்  கொண்டுவிட்டுவிடுகிறது. அதில் சிலர் இறந்தே போகின்றனர். 

அப்படியே நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில் அவள் எடுத்த துணிச்சலான முடிவு அவள் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்கவில்லை. இடையில் ஏற்பட்ட விபத்திலிருந்து எப்படித் தப்பித்து ஒரு தீவிற்கு வந்து சேர்கிறாள். பிறகு அவளுடன் கூடவே வந்த நிக்கியும் அதே கரையில் வந்து ஒதுங்கியிருக்கிறான் என்று ஒருபுறம் நிம்மதியும் மறுபுறம் அவனால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என்று ஒரு பக்கம் நினைக்கிறாள் அதே சமயம் யாருமில்லாமல் தனியே எப்படி இந்த புதிய இடத்தில் இருக்கப்போகிறோம் என்ற குழப்பத்தில் அவள்  இருக்கிறாள். அதேசமயம் தன்னுடன் சக மனிதன் ஒருவன் இருந்தால் நல்லது,  பயமில்லை என்று அவள் ஒருமுடிவெடுத்து  அவள் செய்யும் வேலை அவளை மீண்டும் பிரச்சினையில் கொண்டு விடுகிறது. மனிதர்களின் சிலர் மிருகமாகவும் வாழ்கிறார்கள் என்பதற்கு நிக்கி போன்ற ஒரு சிலர் வலம் வரவே செய்கிறார்கள். 

பார்வதியும், நிக்கியும் அந்த தீவு வாசிகளிடம் சிக்கிக்கொள்ளும் வேளையில் அவர்கள் நிக்கியை கொண்றுவிடுகிறார்கள்.  ஆனால் அதேசமயம் பார்வதியினை ஒருத்தி அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறாள். அதுமுதல் அவளை மரியா பெயர்வைத்து அவளை அப்படியே  பார்வதி நினைத்துக்கொள்கிறாள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து பரிமாற்றம் அதனால் அங்கே ஏற்படும் பல்வேறு சூழல்கள் அவற்றை எப்படியெல்லாம் பார்வதி கடந்து செல்கிறாள். அங்கிருந்து அவள் தப்பித்து வர வழிசெய்து கொடுக்கிறாள் மரியா ஆனால் மீண்டு அவளுக்கு அதே தோல்வி மீண்டு அதே தீவு. அப்போது ஏற்படும் சுனாமி பேரலை அவற்றிலிருந்து அந்த தீவு மக்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதைப் பார்க்கும் பொது நாம்தான் அறிவியல் வளர்ச்சி கொண்டுள்ளோம் என்று சொல்கிறோம் ஆனால் அதே நேரத்தில்   

ஒரு நல்ல நாவல் வாசித்த தருணமாக இருந்தது இந்த கன்னித்தீவு. தீவுகள் எப்போதுமே கன்னியாகவே இருக்கும் மனிதர்களால் காமுறும்வரை. தீவுகள் கன்னிகளாகவே இருந்தால் அழகுதான்.

இயற்கை என்பது எல்லோருக்கும் பொதுவானது தான் ஆனால் நாகரிகம் என்ற பேரில் நாம் முதலில் அழித்து வருவது இயற்கையைத் தான். உதாரணம் இன்றளவும் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் பல்வேறு கிராமங்கள், தங்களுடைய எழில்மிகு அடையாளத்தினை இழந்து வேறொருமுகம் தேடி தனது சொந்த முகத்தினை இழந்து நிற்கும் அவலநிலையைத் தான் நாம் கொடுத்திருக்கிறோம்.      

அருமையான அட்டை படம். அந்த கடலோர தீவில் சேரும் கர்ப்பிணிப்பெண்ணின் நிலைமையும் அவள் அந்த தீவு முழுவதும் நிறைந்திருக்கிறாள் என்பதையும் அருமையாகச் சொல்லும் படம். 

இறுதியில் மனிதர்கள் நாம் எங்குச்சென்றாலும் நம்மால் எதாவது ஒரு மாற்றம் ஏற்படும் அது உண்மைதான் அவற்றில் அந்த தீவிற்கு ஒரு புதுமையினை கொடுத்துவந்தால் பார்வதி அதே நேரம் அங்கே மூன்று உயிர்கள் பறிபோனதும் மறைமுகமாகக் காரணமாகிறாள்.   


அன்புடன்

தேவேந்திரன் ராமையன் 

10 டிசம்பர் 2022

    

No comments:

Post a Comment