வாசிப்பது எப்படி?
ஆசிரியர் - செல்வேந்திரன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 99
பக்கங்கள் 94
நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தினை வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. அது இன்று நிறைவேறிவிட்டது. என்னதான் இருக்கிறது இந்த புத்தகத்தில் என்று வாசிக்கும் பொழுது ஒவ்வொன்றும் நம்மை ஆழ்ந்த சிந்தனைகளைச் சிந்திக்க ஒரு அடித்தளமாக இருக்கிறது.
நம்மில் பெரும்பாலோனோர்கள் நமக்கு எல்லாமே தெரியும் என்ற சிந்தனையுடன் எப்போதும் திரிவது வழக்கம். ஆனால் உண்மையில் அது சரியானதா என்றால் விடையேதும் நம்மிடம் இருக்காது அதுதான் நிதர்சனமான உண்மை நிலவரம், இது சில நேரங்களில் கலவரங்களாகக் கூட மாறிப்போயிருக்கும் ஏனெனில் அது வீண் விவாதங்களால் ஏற்படும் விபரீதங்கள்.
வாசிப்பு நமது அறிவுக்கு ஒரு பெரிய வாசலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
// ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு ஆசிரியரின் முதன்மையான பதில் "கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துத்தான் ஆகவேண்டும்" என்கிறார்.//
//சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன, அவற்றைச் சுவாசிக்கத் தேவை வாசிப்பு என்கிறார்// - நமது இளைய தலைமுறை மற்றும் நம்மில் பெரும்பாலோனோர் நமக்கு முன்னே இருக்கும் பெரும்பாலான நலத்திட்டங்கள்,வேலை வாய்ப்புகள் மேலும் பல்வேறு விதமான திட்டங்கள் எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்வதே இல்லை என்பதே உண்மையான நிலை. இன்றளவும் நம்மில் எத்தனைப் பேர் நாளிதழ் வாசிக்கின்றோம் என்ற கேள்விக்குப் பதில் பெரும்பாலும் இல்லை என்பதே தான் இருக்கும்.
ஆற்றில் குதித்து விட்டால் கரை சேரவேண்டும் என்றால் நீந்தியாக வேண்டும், ஒவ்வொரு கணமும் கை மற்றும் கால்களை அசைத்துக்கொண்டே முன்னேற வேண்டும் அதுபோலவே தான் நாம் ஒவ்வொரு நாளும் நமது அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் தான் இந்த போட்டி நிறைந்த உலகின் ஒரு வெற்றியாளனாக வலம் வரமுடியும் என்பது தவிர்க்க முடியாத ஒரு நிலை. அதற்காகவாவது நாம் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
வாசிப்பு என்பது இன்று நாம் அடிமையாகி வாசிக்கும் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸாப் போன்றவற்றில் வரும் அவதூறுகளையும், சினிமா மற்றும் கேளிக்கை நிறைந்த செய்திகளையும் வாசிப்பது அல்ல வாசிப்பு,வாசிப்பு நமது அறிவுக் கண்ணைத் திறந்து நமக்குத் தேவையான எத்தனையோ செய்திகள்,விவரங்கள் நிறைந்து கிடக்கிறது அவற்றை மட்டும் கிரகித்து கொள்வதே ஆகச் சிறந்த வாசிப்பாகும். அதனால் முற்றிலும் கவனம் சிதறவேண்டாம் என்று சொல்லவில்லை மற்றவற்றை ஊறுகாய் போலவும் தேவையானவற்றை உணவு போலவும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.
நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் பற்றி ஆசிரியர் இவ்வாறாகக் கூறுகிறார். //ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களை சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.// இவ்வாறான சிறப்புகளை டிவைசைகளால் ஒரு போதும் கொடுத்துவிடமுடியாது என்கிறார்.
//மேலும் நீங்கள் ஒரு நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள் மாறாக நீங்கள் வாசித்ததைச் சொல்லுங்கள் போதும் என்கிறார்// - இதைத்தான் நமது வாசிப்பை நேசிப்போம் குழுமம் செய்கிறது.
வாசிப்பு என்பது நமக்கான அறிவு வாசலைத் திறந்து நம்மை வேறொரு உலகிற்குக் கூட்டிச்செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை. வாசிப்போம் வாசிப்பினை ஒரு குறிக்கோளாக வைத்துக் கொண்டு வாழ்வோம்
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
17 டிசம்பர் 2022
No comments:
Post a Comment