Saturday, 10 December 2022

குறத்தி முடுக்கு ஆசிரியர் : ஜி. நாகராஜன்

குறத்தி முடுக்கு 

ஆசிரியர் : ஜி. நாகராஜன் 

காலச்சுவடு பதிப்பு 

விலை ரூபாய் 100

பக்கங்கள் 95

ஜி. நாகராஜன் அவர்களின் எழுத்துலகம் ஒரு தனிதன்மையானது. பெரும்பாலும் அவரின் எழுத்துக்கள்  விளிம்புநிலையில் இருக்கும் சாதாரண மக்களை பற்றியும் மேலும் அவர்களே தான் அவர் கதையின் மாந்தர்களாகவே வலம் வருபவர்களாக இருப்பார்கள். அதில் அவர் வெற்றியும் கண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த குறத்தி முடுக்கு, விலைமாதர்களை மையமாக கொண்டு அவர்கள் வாழ்வியலில் இருக்கும் அவலங்களையும் அதே சமயம் அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என ஒரு கண்பார்வையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எவ்வாறு பெரும்பாலான பெரும் நகரங்களில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிகள், அவை எவ்வாறு இயங்குகின்றனவோ அதேபோலவே இவர் கூறும் திருநெல்வேலியின் குறத்தி முடுக்கு என்ற இடமும் அதே நிலைமையினை கொண்டதாகவே தான் இருக்கிறது என்ன ஒரு வித்தியாசம் இது ஒரு கிராமம் அவைளேல்லாம் பெருநகரம் அவ்வளவுதான்.

ஒரு பத்திரிக்கையாளராக தன்னை முன்னிறுத்தி, அதன் வழியாக அந்த இடத்தில அரங்கேறும் அலாதி உறவுகளுக்குள் இருக்கும் ஒரு தனித்தன்மையினை தனது கதை சொல்லும் திறமையிலே அருமையாக சொல்லிச்செல்கிறார்.

தான் ஒரு விலைமாதாக இருந்தாலும் தனக்கென ஒரு குழந்தை வேண்ண்டுமென்ற ஆசை, அவள் கற்பகமாக இருந்தும் அவளால் அந்த குழந்தையினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற ஒரு சூழலிலே அவள் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.

தங்கம், ஒரு விலைமாது என்றாலும் அவளின் கவனிப்பிற்கு அடிமையான பத்திரிக்கையாளர், அவளது ரெகுலர் வாடிக்கையாளராகவே மாறுகிறார். மேலும் அவளுக்காக என்ன வேண்டுமானுலும் செய்ய தயாராக இருக்கும் இவர் ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்துகொள்ளவாவும் துணிந்துவிடுகிறார். ஆனால் அதே நேரத்தில் அவரது மனதில் ஏற்படும் ஒரு விதமான மனக்குழப்பங்கள் ஒரு சராசரி மனிதனாகவே தன்னை வெளிப்படுத்துகிறார். அதாவது ஒரு விலைமாதுவை திருமணம் செய்துகொண்டால் அதன் பிறகு வாழ்வில் என்ன பிரச்சினை வரும் மட்டுமல்லாமல் நான் எப்படி உறுதியாக அவளுக்கு உண்மையாக இருப்பேனா அல்லது அதே நேரம் அவள் இறுதிவரை எனக்கு உண்மையாக இருப்பாளா என்ற கேள்விகள் அவரது மனதில் ஏற்படுவது ஒரு எதார்த்தமான உண்மையே. என்னதான் நான் ஒரு முற்போக்கு சிந்தனையாளன் என்றாலும் அவ்வாறான எண்ணங்கள் வராமலிருக்குமா என்ன?. 

தங்கத்திற்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் அவர் இறுதிவரையில் அவளை நினைத்து தனது வாழ்வின் சுகதுக்கங்களை வாழ்ந்து செல்கிறார்.

அந்த குறத்தி முடுக்கு வந்து சேரும் ஒரு தேவதை, தனது நிலையினை எண்ணி அங்கிருந்து எப்படியாவது தப்பித்துவிடாவது நினைக்கலாம் ஆனால் அவள் தான் தற்கொலை செய்துகொள்ள முனைவது ஒருவிதத்தில் இந்த வாழிவில் நித்தம் நித்தம் சாவதைவிட ஒரே அடியாக செத்துவிடலாம் என நினைத்தாளோ என்னவாவோ.

தனது அக்கா புருஷனோட தம்பியை தனது உருவாக்கிக்கொண்டு அவனுக்கென இருந்த குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு, காலம் கடந்து பிறகு தான் செய்த தவறை எண்ணி வருத்தப்படுவதால் என்ன புண்ணியம், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல அல்லவா இருக்கிறது. அவள் இறுதியில் வேறொருவனுடன் திருவனந்தபுரத்தில் வாழும் நிலையினை பார்த்து தான் மனம் வருந்தும் நாயகன்.

குறத்தி முடுக்கில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி தன்மையினை கொண்டுள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அத்தான் அவனது பிடியில் சிக்கி தவிக்கும் பெண்கள். எதோ நூறு ரூபாய்க்கு வாங்கிவந்தேன் என்று ஒருவன் சொல்லுவது மனதில் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. சமுதாயம் ஒவ்வொருவரையும் எப்படியாவது ஒரு பின்னணியில் ஒரு தவறான செயலுக்கு உந்தி தள்ளுகிறது அவ்வாறு தள்ளுப்படும் ஒவ்வொருவரும் எதோ ஒரு குற்ற பின்னனியில் தனது மீதம் வாழ்க்கையினை வாழ்ந்து தொலைக்க வேண்டிய காட்டியதில் தான் வாழ்கிறார்கள் அல்ல அல்ல வாழ்ந்துகொண்டு சாகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆசிரியர், கையாண்டுள்ள உரையாடல்கள், இந்த குறத்தி முடுக்கில் இருப்பவர்களின் அகா வாழ்க்கையினை மிக அழகா சித்தரிக்கிறார். அதாவது ஒரு நாற்பது வயதுள்ள ஒருவன் அந்த வீதியில் வருகிறான், அவனை எதிர்கொண்ட ஒருவன் அவனிடம் ஏது இந்த பக்கம் என்று கேட்கும் பொது அவன் தனது மனைவி பிறந்த வீட்டிற்கு போயிருக்கிறாள் என்று சாதாரணமாக சொல்லிச்செல்கிறான். இதுபோலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது உரையாடல்களின் வழியே தங்களின் மற்றொரு வாழ்க்கையின் வெளிப்பாட்டினை சொல்லிச்செல்கின்றனர்.

மொத்தத்தில் பல்வேறு மனிதர்களின் நிறைவேறாத நிராசைகளைத் தனது எழுத்துக்கள் வழியே அந்த விளிம்புநிலை மனிதர்களின் குரலாகச் சொல்லிச்செல்வதில் ஜி. நாகராஜன் தனி ரகம் தான்.


அன்புடன், 

தேவேந்திரன் ராமையன்

11 டிசம்பர் 2022   

                                    

  

  

No comments:

Post a Comment