Friday 16 December 2022

நூறு நாற்காலிகள் - ஆசிரியர் - ஜெயமோகன்

நூறு நாற்காலிகள் 

ஆசிரியர் - ஜெயமோகன் 


நூறு நாற்காலிகள் - ஓர் பழகுடியினத்து சிறுவன் ஆசிரமத்தின் உதவியுடன் சிவில் சர்விஸ் வரை படித்து தனக்கான பணியில் சேரும்போது அவனுக்கு அது இட ஒதுக்கீட்டின் வழியே தான் கிடைத்தது என்று ஆதிக்க சாதியினர் பார்ப்பது ஒருபுறமும், அவன் மீது அலாதி பாசம் கொண்ட அவனது தாய், தெருவில் அலைந்து எச்சில் சோறு எடுத்துத் தின்று மேலும் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை ஒரு புறமும் அவனது பதவியின் மீது காதல் கொள்ளும் ஒரு உயர் சாதிப் பெண் திருமணம் செய்துகொள்வதும் என அவனது வாழ்க்கை மூன்று புறமும் இருந்தும் இடைவிடா தாக்குதல்களுக்கு ஆளாகித் தான் ஒரு நேரத்தில் தனித்து விடப்பட்டவன் போல நினைக்கும் அவனைப் பற்றிய   ஆழ்ந்த கருத்தை மிகவும் வலிமையான சொற்களால் அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். உண்மையிலே மனதில் ஒரு விதமான வலியினை ஏற்படுத்திதான் செல்கிறது ஒவ்வொரு வார்த்தையும். 

நாடோடியாகத் திரியும், நாயாடி என்ற ஒரு இனத்திலிருந்து  ஒரு சிறுவன் வயிற்றுச் சோற்றுக்காக ஒரு ஆசிரமத்தின் வாசலில் வந்து சேருகிறான்  ஆனால் அந்த ஆசிரமம் அவனுக்கு உணவு கொடுத்துக் கூடவே  அவனைப் பெரிய படிப்பு படிக்கவைக்கிறார். அதற்கு பாவக்கணக்காக அவன்  அந்த கணத்திலிருந்து அவனுடைய அம்மாவை விட்டு விலகி அந்த ஆசிரமத்திலே  தங்கிப் படிக்கிறான். 

அவன் பட்டம் படிக்கும் வரையில் அம்மாவைப் பார்க்காமலே தனது படிப்பைப் படித்துமுடிக்கிறான். பட்டம் படித்து முடித்து பிறகு அவன் சிவில் சர்வீஸ் படித்து அதற்கான நேர்காணலுக்கு அலுவலகம் செல்கிறான். 

அப்படியாக அவன் சந்திக்கும் முதல் அடி அவனது சாதியினை முன்னிறுத்தித் தான் ஆரம்பிக்கிறது. அப்படிதான் அங்கிருந்து அவனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு விதத்தில் அவனிடம் அவனுடைய சாதியினை முன்னிறுத்தியே சொல்லிக்காட்டுகிறது.

சிவில் சர்வீஸ் பணியிலிருந்தாலும் நீ எங்களுக்கெல்லாம் கீழ் தான் என்று அவனுக்குக் கொடுக்கும் நாற்காலியிலிருந்தே ஆதிக்க சாதியினர் சொல்கின்றனர்.

அவன் காதல் திருமணமும் செய்துகொள்கிறான்,   அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. நன்றாக ஓடிக்கொண்டிருந்த அவனது வாழ்வில் இடை இடையே வந்துபோகும் அவனது அம்மா.

அவ்வாறாக வரும் அவனது அம்மா செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே ஒரு பெரிய தாக்கத்தினை செய்கிறது. அவன் தாயோ வீதியில் சுற்றித் திரிபவள் அவள் எப்படி ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பாள் அவளுக்கு அவளது சுதந்திர உலகமே தேவைப்படுகிறது ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் செய்யும் பல்வேறு காரியங்கள் முகம் சுழிக்க வைக்கிறது.

அவள் தனது மகன் காப்பானைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவள் தனது பலம்கொண்ட குரலில் அலறி கேட்கும் ஒரு சில வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் பொது மனது ஒரு பக்கம் வலிக்கத்தான் செய்கிறது அதே சமயம் அவளின் வலியானது அவள் வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறாள்.

ஏலே மக்கா காப்பான், தனக்கு அந்த நாற்காலியும், சட்டையும், அந்த வெள்ளைத்தோல் பெண்ணும் வேண்டாமடே, ஏன் கூட வந்துடுடா காப்பான் நின்ன நான் பாத்துக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் நம்மை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை நம்மை விட்டு விலகிச் செல்வதுபோல ஒரு வித உணர்வு  தோன்றுகிறது.

அவனுக்கும், அவனது பணியில் ஏற்படும் ஒவ்வொரு அடியும் ஒரு சேர ஒரு நேரத்தில் அவனுக்குள்ளேயும் அவனது மனம் சொல்லும், ஒரு விதத்தில் அம்மா சொல்வது அத்தனையும் உண்மைதானோ என்று மீண்டும் மீண்டும் அவனது மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திச் செழிக்கிறது.

இறுதியில், அவனது அம்மா ஒரு இடத்தில் அதும் ஹாஸ்பிடல் என்று கூடச் சொல்லமுடியாத இடத்தில் இருந்து மரண படுக்கையிலிருந்து மீட்டுவருகிறான். அங்கேயும் அவன் சந்திக்கும் மருத்துவர், தனது சாதியின் பெயரால் வெறும் பேருக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறார். இதுவும் சாதியின் என்று கொடிய பேயின் கையில் சிக்கித் தவிக்கும் மனநோயாளிகளினால் அரங்கேற்றப்பட்ட அவலம் என்று தான் சொல்லவேண்டும்.

அவன் ஒவ்வொரு முறையும், தனது  மக்களிடம் இருந்து பெறுகின்ற மனுக்களுக்குத் தன்னால்  ஏதும் செய்யமுடியவே இல்லைய என்ற தனது இயலாமையை தனது மன வருத்தம் கொண்டு அது நேரும்  ஒவ்வொரு கணமும் அவன் தனக்குள்ளே அழுது சாகிறான்.

தனக்குப் படிப்பு இருந்தும், திறமை இருந்தும் தனக்கான நாற்காலி கிடைக்காதது என்ற உண்மை நிலையினை புரிந்துகொள்கிறான்.  இது என்று தீரும் என்ற நிலை புரியாமலே செல்கிறது..... 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்

16 டிசம்பர் 2022             



         

No comments:

Post a Comment