Monday 19 December 2022

இரண்டாம் உலகப்போர் ஆசிரியர் : பா. ராகவன்

இரண்டாம் உலகப்போர் 

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 75

பக்கங்கள்   69



இந்த புத்தகம், இரண்டாம் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான புத்தகம், பல்வேறு  விவரங்களைத் தாங்கிய இந்த புத்தகம் மிகவும் எளிமையாக இரண்டாம் உலகப்போரை பற்றி பேசுகிறது. கிட்டதட்ட 4-5 ஆண்டுகள் நடந்த முதலாம் உலகப்போர் ஒருவழியாக முடிந்து உலகம் அமைதியான   சூழலுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் 1939 ல்  இரண்டாம் உலகப்போருக்கான ஆரம்பத்தை  ஆரம்பித்தார் ஹிட்லர்.

ஹிட்லர் என்ற ஒரு மனிதன் இல்லாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகப்போர் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. என்ன செய்ய, அது  நடந்து முடிந்துவிட்டது. இப்போது அது வரலாறு இனி நாம் அதை பற்றி படிக்கத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்ய முடியும்.

ஜெர்மனி  நாடு முதலாம் உலகப்போரின் போது தோல்வியடைந்து உலகநாடுகளுக்கு அடங்கி போனதால், அந்நாடு பல்வேறு இழப்பீடுகள் கொடுக்கவேண்டிய கட்டாயதிற்குள்ளானது. மட்டுமல்லாது பல்வேறு நிலங்களையும் இழந்து ஒரு நிபந்தனைக்குரிய அரசராகவே இருந்துவந்தது.  ஹிட்லர் இதையே தனது தரப்பில் சாதகமாக எடுத்துக்கொண்டு, ஜெர்மனி மக்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தி, அதையே முக்கிய பலமாக வைத்து கொண்டு ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார். அவ்வாறு ஆட்சி பீடத்தில் வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது மக்களிடமும் உலகின் பல்வேறு நாடுகள் மீது விரோதத்தினை விதைத்தார். அது மக்களிடையே தீவிரமடைந்தது அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்தார்.
 
முதலாவதாக, ஏன் நமது தேசத்தின் மண்ணையும் பொன்னையும் பிற நாடுகளுக்கு கொடுக்கவேண்டும் என்று எடுத்த தீர்மானத்தின் விளைவாக பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து அப்படியே கிடைத்த வெற்றியின் சுவையால் அவரின் அட்டூழியம் தொடர்ந்து மேலோங்கியது. அவருக்கு துணையாக இத்தாலியும் கைகோர்த்து கொண்டது.  இவர்களின் பசிக்கு இறையாகிப்போனது ஒட்டுமொத்த ஐரோப்பாவும்.

கிடைத்த வெற்றியின் ருசியில் மூழ்கிய ஹிட்லர், மேலும் மேலும் ஆடிய ஆட்டம் கூடிக்கொண்டே போனது தான் மிச்சம். இதற்கிடையில் சோவியத்திடம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால் அதையும் மீறி ஹிட்லர் ஒரு கட்டத்தில் சோவியத்தின் மீது தனது ஆட்டத்தினை ஆரம்பித்தார். பொதுவாகவே எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவர் மதித்தாக வரலாறே இல்லை. 

மற்றொருபுறம் ஜப்பான்,ஜெர்மனியுடன் கைகோர்த்து தனது தரப்பிலிருந்து முடிந்த வரை அட்டூழியம் செய்தது அதன் விளைவாக அமெரிக்காவின் மீது தனது தாக்குதலை காட்டியது. இதை கேட்ட ஹிட்லரும் அமெரிக்கா மீது போர் தொடுத்தார் அப்படியாக போன தருணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் முழு பலத்தையும் காட்ட ஆரம்பித்தது. அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் சோவியத் நாடுகள் ஆடிய கடுமையான ஆட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாயமால் திணறிய ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.

ஹிட்லர் தற்கொலைக்கு பிறகு சரணடைய வேண்டியநிலைக்கு வந்தனர் ஜெர்மன் மற்றும் ஜப்பான்.  மொத்தம் ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த போர் கிட்டத்தட்ட 40,000,000 லிருந்து  50,000,000  உயிர்கள் பலிவாங்கியது மிகவும் கொடூரமான ஒரு நிகழ்வே. இவை அனைத்திற்கும் காரணம் ஒரு மனிதனின் வெறிச்செயல் என்று தான் சொல்லவேண்டும்.

அன்புடன்.     

தேவேந்திரன் ராமையன் 
19 டிசம்பர் 2022                      


No comments:

Post a Comment