Wednesday, 14 December 2022

காஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு ஆசிரியர் : பா. ராகவன்

 காஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா. ராகவன் 
கிண்டில் பதிப்பு 
விலை ரூபாய் 125
பக்கங்கள் 339

ஒரு தேசம் - மூன்று பக்கமும் நசுக்கபடுகிறது. எப்படி தாக்குப்பிடிக்கும், ஒரு நிலத்தின் மீது எத்தனை அத்துமீறல்கள். அதுதான் காஷ்மீரின் வரலாறு.  ஆங்கிலேயர் காலத்தில் கூட அமைதியாக இருந்த இந்த தேசம் இப்போது கலவர பூமியாக மாறியது எப்படி என்ற கேள்விகளுக்கு பல்வேறு வரலாற்றுச் செய்திகளை இந்த நூலின் வழியே நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஆம், மன்னராட்சி நடந்த காலத்தில் இந்த பூமி அமைதியாகவே இருந்தது. ஆங்கிலேயரின் காலத்தில் இந்த தேசத்திற்கென விலை கொடுத்து வாங்கி தந்து சொந்த நாடக வைத்திருந்தவர் மன்னர். 

காலப்போக்கில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகி போனதால் அங்கே மத பிரச்சினை சற்று தலை தூக்க ஆரம்பித்தது. இந்த பிரச்சினை தேசத்தில் மக்களாட்சி வேண்டும் என்ற ஒரு மந்திரத்தினை சொல்லிக்கொண்டே கலவரத்தில் தொடங்கியது.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் விடுதலை பெற்ற பிறகு இவற்றுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த பூமி யாருக்குச் சொந்தம் என்று இவர்கள் சோறுபோட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர். ஆனால் உண்மையாகவே காஷ்மீர் மக்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர தேசம் வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நேரு மற்றும் ஜின்னா காலத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினை இன்றளவும் தீராத ஒரு பிரச்சினையாகவே தான் இருக்கிறது. அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்  என்பதையும் அதற்கான பல்வேறு ஆதாரங்களையும் அடுக்கி வைக்கிறார் ஆசிரியர்.

நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வாஜ்பாயி,வி.பி.சிங் என பல்வேறு பிரதம மந்திரிகள் வந்தார்கள் சென்றார்கள் ஆனால் இந்த பூமியின் பிரச்சினை தீர்த்ததாக இல்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர் யாருடன் சேருவது என்ற போட்டியில் பாகிஸ்தான் தரப்பு முன்னெடுத்தது மதம் ஏனெனில் காஷ்மீர் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் இருக்கிறீர்கள் அதனால் இது எங்கள் தேசம் என்றது, அதே சமயம் இந்தியா பூகோள ரீதியாகவும் மற்றும் மன்னர் எழுதிக்கொடுத்த ஆவணத்தின் அடிப்படையிலும் இந்த தேசம் எங்கள் நாட்டின் ஒரு மாநிலம் அவ்வளவுதான் என்றது. ஆனால் இங்கே கவனிக்கக் கூடிய விஷயம் இந்த இரண்டு பங்காளிகளும் மக்களின் ஆசை என்ன என்பதைக் கேட்கவே இல்லை அதற்கான எந்த வித முன்னெடுப்புகளை எடுத்ததாகத் தெரியவில்லை.  இவர்கள் இருவருக்கும் இருந்த அச்சம் வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் தனி தேசம் வேண்டுமென்றால் என்ன செய்வது அதனாலே கூடிய வரையில் இவர்களாகவே ஆட்சி செலுத்தினர். மக்களாட்சி என்ற முறையில் நடந்தது பல்வேறு ஆட்சி.

பாகிஸ்தான் ஒரு பக்கம் தனது நாடு என்று சொல்லிக்கொண்ட சுதந்திர காஷ்மீர் என்று வைத்துக்கொண்டு தங்களின் பொம்மை ஆட்சியாளர்களின் உதவியாக அங்கிருக்கும் வளங்களை எல்லாம் தங்களுடையதாக்கிக் கொள்கிறது மட்டுமல்லாது அங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமாக அந்த பகுதியினை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்த தேசத்தின் வரலாற்றில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை இது யாருக்குச் சொந்தமான பூமி என்றுதான். ஒரு புறம் தனி சுதந்திர தேசம் வேண்டுமென்ற காஷ்மீர் பெரும்பான்மை மக்கள்,மற்றொரு புறம் பாகிஸ்தான், வேறொரு புறம் சீன ஆக்கிரமிப்பு, ஆனால்  சட்டத்தின் படி இந்த பூமி இந்தியாவின் ஒரு மாநிலம்    என்பது தான் நிதர்சனமான உண்மை. இதற்கெல்லாம் என்ன முடிவு என்று விடை தெரியாத பல்வேறு போராட்டங்கள், சூழ்ச்சிகள், மேல்மட்ட பேச்சுவார்த்தைகள், மாநாடு, அமைதி பேச்சுவார்த்தைகள் என ஒரு புறம்  அமைதி நிலவரங்கள் அதே சமயம் ஆங்காங்கே பொழிந்து கொண்டிருந்த குண்டு மழை என இந்த பூமியின் வரலாற்றில் குண்டு துளைக்காத இடமே இல்லையென்றே தான் சொல்லவேண்டும்.      

பாகிஸ்தான், தன்னால் முடிந்த வரை பல்வேறு விதமான இயங்களைச் சோறுபோட்டு வளர்த்து தன்பக்கம் இழுக்க முயன்றுகொண்டே தான் இருக்கிறது. அதே சமயம் தன்வசம் இருக்கும் மாநிலத்தில் தேர்தல் நடத்தி ஆட்சி செய்துவந்தது இந்தியா. 

எத்தனை போர்கள், போராட்டங்கள், குழப்பங்கள், அத்துமீறல்கள், இனக்கலவரங்கள், படுகொலைகள்,  இனத்தின் மீதான வெறி தாக்குதல்கள்,அகதிகளாகிப்போன பல்வேறு மக்கள், அண்டை தேசத்திலிருந்து வந்து ஆக்கிரமிப்புகள், சுரண்டல்கள் மற்றும் சுயநலன்களை மையமாகக் கொண்ட பல்வேறு தந்திரங்கள் என இந்த தேசம் பார்த்தது கொஞ்சம் அல்ல ஏராளமான அடையாளங்களை சுமந்துகொண்டு இந்த பூமி இன்றும் தனது இயற்கை எழிலை வைத்துக்கொண்டு பிரமிக்க வைக்கிறது.


இந்த புத்தகம் காஷ்மீரின் வரலாற்றுப் பக்கங்களை மிகத் தெளிவாக ஆராய்ந்து பல்வேறு விதமான விவரங்களை நமக்குக் கொடுத்துள்ளது.  இந்த புத்தகம் காஷ்மீர் பிரச்சினையின் முழுமையான வரலாற்றை ஆராய்வதுடன், அந்த பிரச்சினைகளை உயிர்ப்புடன்  வைத்திருக்கும் அரசியல் மற்றும் அவற்றிலிருந்து பெரும் பல்வேறு விதமான விளைவுகளையும் அதன்  ஆழங்களையும் விரிவாக ஆராய்ந்து நமக்கு ஒரு சரியான வரலாற்றுப் பதிவுகளைக் கொடுத்திருக்கிறது.


அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 

14 டிசம்பர் 2022

No comments:

Post a Comment