Thursday 3 September 2020

சாயாவனம் - வாசிப்பு அனுபவம்

நூல் : சாயாவனம் 

ஆசிரியர் : அமரர் சா. கந்தசாமி  



இந்த நூலினை வாசிக்கும் போது நான் பிறந்து வளர்ந்த மண்ணில் மீண்டும்  ஒரு நடை பயணம் போனது போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது!

கதையின் களமாக இருக்கும் மாங்குடி, மல்லிகை கொல்லை, சீர்காழி , வைத்தீஸ்வரன் கோவில், குத்தாலம், கூறைநாடு,  மாதானம், மாயவரம் மற்றும் கும்மோணம் என சுற்றி உள்ள அனைத்து ஊர்களும் நான் சுற்றி திரிந்த ஊர்களே என்பதால் இந்த கதையின் மீது ஒரு அதீத ஆர்வம்.  ஆனால் கதையில் வரும் முக்கியமான இடம் சாயாவனம் (சீர்காழி - பூம்புகார் சாலையில் இருக்கும் ஒரு சிவன் ஆலயத்தின் ஊர் பெயர் - மயிலாடுதுறையிலிருந்து 20 கிலோ மீட்டர்).

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பான காலத்தில் இந்த கதை தொடங்கிறது, கதையின் நாயகன் சிதம்பரம் தனது சிறுவயதில் தாயுடன் பிழைப்பதற்காக இலங்கை சென்று வெகுநாட்களுக்கு பிறகு  இப்போது ஒற்றை ஆளாய் திரும்பி தனது தாய் மாமன் சிவனாண்டி தேவர் ஊரான சாயாவனத்துக்கு வருகிறான்.  வந்தபின்னர் அந்த ஊரின் பெரிய நிலக்கிழாரான சாம்பமூர்த்தி  ஐயரிடமிருந்து ஒரு பெரிய வனத்தினை வாங்கி அதில் ஒரு சர்க்கரை ஆலை அமைக்கவேண்டி அந்த காட்டினை அழிக்கிறான் அதற்க்கு அவனது மாமா சிவனாண்டி தேவர் பெரும் உதவியாக இருக்கிறார்.

காலம் காலமாக நடப்பது தான்  அப்போதெல்லம் காட்டினை அழித்து விவசாயத்திற்க்காக வயல் வெளிகளை உண்டாக்கினார்கள்  ஆனால் நாமோ இப்போது அந்த வயல்வெளிகளை அழித்து வீடுகளை உண்டாகிறோம்.

ஆசிரியர், இந்த கதையில் பயன்படுத்தியிருக்கும் வட்டார வழக்கு மிக அருமை. ஒரு கிராமத்து திருமணம் நடைபெரும் விதமும் அதற்க்கு வருகை தரும் உறவினர்கள் எவ்வாறு அப்போதெல்லாம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னேரே வருவதும் வந்து திருமண வேலைகளை கூட நின்று செய்வதும் என நமக்கெல்லாம் கிடைக்காத அந்த தருணத்தினையும் மற்றும் அந்த ஊரின் எல்லாத்திசையிலும் அந்த விழாவின் வீட்டு உறவினர்கள் காணப்படுவதையும் இந்த கதையின் வாயிலாக பல விதமாக சொல்லியிருப்பது வாசிக்கும் நாம் அந்த திருமண விழாவிறக்கு சென்று வந்த ஒரு உணர்வு வருகறது.

குறிப்பாக சிவனாண்டி தேவர் தனது மருமகள் குஞ்சம்மாளையும் மற்றும் தனது பேத்தியையும் பாப்பா என்று செல்லமாக அழைக்கும் விதம் அந்த நிலத்தில் எவ்வாறு பெண்களை பாப்பா என்று வெகுவாக அழைக்கும் குறிப்பினை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒரு வனத்தை அழித்து ஆலை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை மிக அழகாக விளக்கியிருக்கிறார். ஒரு வனம் அழியும் பொது அந்த வானத்தையே தனது வாழ்விடமாக எத்தனை பிற உயிரனங்கள் இருந்திருக்கும் அவையெல்லாம் எப்படி அழியும் என்பதையும் மற்றும்  நமக்கு கிடைக்கும் காற்று முதல் என பல வழிகளில் நாம் என்னவெல்லாம் இழப்போம் எல்லாம் ஏராளம் என்பதும் ஆனால் உணவு உற்பத்தி தேவையின் காரணமாக ஆலை கட்டுவதும் தேவை என்பதையும் மறைக்க முடியாது என்பன சில உண்மைகளையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் ஒரு வனத்தில் இருக்கும் பலவிதமான செடி கொடிகள் முதல் நெடு மரங்கள் வரை ஒவ்வொன்றாய் பெயருடன் கொண்டு சென்ற விதம் அருமை. நாயுருவி செடி நமது உடல்களில் ஒற்றிகொள்ளும் என்றும்,  தேனீக்கள் முதல் எலி, காக்கை மற்ற பறவைகள், சுற்றி திரியும் மாடுகள், நரிகள் என பல்வேறுபட்ட உயிரனங்கள் அந்த வனத்தில் வாழ்வதாகவும் இந்த வனம் அழிந்தால் இவையெல்லாம் எங்கே போகுமே என்று ஒரு கேள்வியுடன் கதையினை நகர்த்தி செல்கிறார்.       

இதற்க்காக இவர்கள் இந்த வனத்தினை அழிக்கும் வேலையினை ஆரம்பித்த விதம் நன்றாக இருந்தது ஆனால் போக போக வனத்தை அழிக்க எடுத்துக்கொண்ட வழியே தவறானதாக ஆகிவிட்டது  அதனால் சிவனாண்டி தேவரின் புளிய  மரங்கள் அழிந்து போனதும், சிதம்பரம் கட்டிய புது வீடு எரிந்து போனதும், பல உயினர்கள் நெருப்போடு சாம்பலாகி போனதும்  அரும்பாடுபட்டு சீர்செய்த மூங்கில் மரங்களும் சாம்பலாகி போனதும் என நினைத்து பார்க்காத அளவுக்கு தீ அவர்களின் கனவை புரட்டி போட்டுவிட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முடிவில் வனம் அழிந்து சிதம்பரம் தனது இலக்கான சர்க்கரை ஆலையினை கட்டி முடிக்கிறான்.

காலப்போக்கில் அவனது ஆலையின் வெல்லத்திற்கு நல்ல சந்தையும் மதிப்பும் கிடைத்து வியாபாரத்தில் வெற்றி கொள்கிறான் ஆனால் சிவனாண்டி தேவரின் புளியமரங்கள் எரிந்து போனதால் இப்போது அவர் கையிருப்பு புளி தீர்ந்து போனதால் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, திருவென்காடு மற்றும் காவேரிப்பட்டினம் போய் புளி கொள்முதல் செய்து வாணிபம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார் என்பதும் ஆனால் அவரால் முன்பு போல தரமான சுவையான புளி கொடுக்க முடியவில்லை என்பதே வனத்தினை அழித்ததற்கு வினையாகி போனது......   

  அவரின்  வியாபாரம் சீர்கெட்டு போனதே ஒரு எதிர் வினை.


நாமும் மரம் வளர்ப்போம் - இயற்கை அன்னையினை பாதுகாப்போம்!!

நன்றியுடன் 

ராம. தேவேந்திரன்  

     

No comments:

Post a Comment