Sunday 27 September 2020

திருவாரூர் டூ திருவாரூர்

நூல்          : திருவாரூர் டூ திருவாரூர்

ஆசிரியர்   : இரா.அபர்ணா

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


இந்த மின்னூலின் வழியே சகோதரி அபர்ணா திருவாருரிலிருந்து நம்மை கண்களை கட்டி அழைத்து செலகிறார் வாருங்கள் நாமும் தொடருவோம் தொடர் வண்டியினுடன்....

'திருவாரூர் டூ திருவாரூர்'னு இருக்கே, ஒருவேள திருவாரூர் பத்தின புத்தகமா இருக்குமோ! அதுவும் பயண நூல்னு வேற இருக்கு, அப்பனா திருவாரூர் முழுக்க சுத்துனத புத்தகமா எழுதிருப்பாங்களோ என்ற ஆவலுடன் பக்கத்து ஊர்காரனாகிய நான் வாசிக்க தொடங்கினேன் ஆனால் சகோதரியின் வேண்டுகோளின் பட “கண்டிப்பா எனக்கு நீங்க மன்னிப்பு குடுக்கனும்” ஆகவே மறப்போம் மன்னிப்போம் என்று தொடருவோம் தொடர்வண்டியின் கூடவே..,,


ஓடி ஓடி களைச்சு போன தொடர்வண்டி தன்னோட வேகத்த கொறச்சு மெதுவா ஒட ஆரம்பிச்சது. அந்த சன்னல் தொலைக்காட்சில ரொம்பவே அழகான ஒரு காட்சிய பார்த்தோம். பிரம்மாண்டமான ரெண்டு மலைகள், அதுக்கு நடுல மிகப்பெரிய ஆறு, இதுக்கு பக்கத்துல ரொம்பவே அழகான ஒரு கோவில். கைகளும் கால்களும் சிறைக்குள்ள அடைபட்ட மாதிரி இந்தத் தொடர்வண்டி கம்பிகளுக்குள்ள சிறைபட்டுப் போக, கண்கள் மட்டும் துரிதமா செயல்பட்டு அந்தக் காட்சிகள காணொலி எடுத்து காலத்துக்கும் அழியாத நினைவா அத பாதுகாப்பா மூளைங்கற ஹார்ட்டிஸ்க்ல சேமித்தது. 

விஜயவாடாவோட செழிப்புக்குக் காரணம்னு சொல்லப்படற 'கனக துர்கா கோவில'தான் நம்ம இப்ப கடந்து வந்தோம்.

இன்ப அதிர்ச்சியா சுவையான சிக்கன் பிரியாணி எங்களுக்குக் கெடச்சது. எங்க இருந்து கிடைச்சுதுனு கேக்குறிங்களா, எங்க கூட பயணிச்சுட்டு இருந்த தோழி விஜயவாடாவ சேர்ந்தவங்க. விஜயவாடா நிறுத்தத்துல அவங்கள வந்து சந்திச்ச அவங்க அப்பா அம்மா, ஆனா 'கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல'னு சொல்வாங்களே, அதுதான் என் நிலைமை. புரட்டாசி பரிதாபங்கள்ல இதுவும் ஒன்னு.


இந்த சன்னல் தொலைக்காட்சி அப்படி ஒரு காட்சியதான் காட்டிட்டு இருக்கு. திரும்புற பக்கமெல்லாம் பச்சை வயல்கள். அத குறுக்கிடற ஆறுகள். தூரத்துல தெரியுற மலைகள். இதெல்லாம் பார்த்துட்டு வந்ததுல என் வயிறு கூட பசிய மறந்திடுச்சு.


இந்தத் தொடர்வண்டி கடைல உங்க பயணத்துக்குத் தேவையானது எல்லாம் நீங்க இருக்க இடம் தேடி வரும்.  அப்படி அந்தக் கடைல எங்கள ரொம்ப கவர்ந்த பொருள் அல்வா. நம்ம ஊர்ல கெடைக்காத அல்வாவானு கேக்குறிங்களா. ஆமாங்க இது மாம்பழ அல்வாவாம். அதுவும் ரெண்டு வகை. ஒன்னு பழுத்த மாம்பழ அல்வா, இன்னொன்னு பழுக்காத மாம்பழ அல்வா. இந்தத் தொடர்வண்டி கடைல நாங்க வாங்குன முதல் பொருள் இதுதான். ஆகா ஓகோன்னு புகழ்ற அளவுக்கு இல்லைனாலும் வித்தியாசமான ஒரு சுவை. கண்டிப்பா மகாராஷ்டிரா போனிங்கனா சாப்ட்டு பாருங்க. இது மாதிரி விதவிதமான உணவ சாப்ட்டு பாக்குறதுக்காச்சும் எல்லாரும் கண்டிப்பா ஒரு பயணம் போகனும்.


வேற்றுமையில் ஒற்றுமைங்கறத பறைசாற்றிக்காட்றது தொடர்வண்டி. எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை வேறுபட்ட மொழிகள். பல வருசத்துக்கு அப்றம் சொந்த ஊருக்கு போற எதிர்பார்ப்போட சிலர். எங்கள மாதிரி சுற்றுலா போற குதூகலத்தோட பலர். புத்தக வாசிப்பில் சிலர், உரையாடலில் சிலர், விளையாட்டில் சிலர், வேடிக்கையில் சிலர், உறக்கத்தில் சிலர், உணவோடு சிலர், கைபேசியில் தொலைந்து போன பலர்.


இந்தப் பயணம்தான் பாருங்களேன் எத்தன நமக்கு சொல்லித் தருதுனு. வேறுபட்ட மனிதர்களோட அறிமுகம், அறியாத பல இடங்கள கண்ணால பார்க்கக் கூடிய வாய்ப்பு, நண்பர்கள் பத்தின புரிதல் இப்படி ஏராளமா அடுக்கிட்டே போகலாம்.

வாங்கிட்டு இருக்கைக்கு வந்த அப்றம்தான், கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் அவசரப்பட்டு வாங்கிட்டோம்னு தோணுச்சு. நேத்து ஆந்திராவுல இருந்து சிக்கன் பிரியாணி வந்த மாதிரி, இன்னைக்கு ஜெய்ப்பூர்ல இருந்து சூடான சுவையான கச்சோரியும், ஜிலேபியும் நமக்காக வந்திருக்கு. நம்ம கூட பயணிச்சுட்டு இருக்க ஜெய்ப்பூர பூர்வீகமா கொண்ட தோழியோடு விருந்து இது. ஊரு ஊருக்கு ஏதாவது ஒண்ணு கெடச்சு போய்டுதே. அப்படி எத்தன பேர்தான் போறீங்க? யாரெல்லாம் போறீங்கனு கேக்குறிங்களா, சொல்றேன், அதுக்கு முன்ன கச்சோரியும் ஜிலேபியும் சாப்டுவோம். நல்லதோர் ஆரம்பம் இனிப்போட தொடங்குவோம்.


சரியா 05:40 நம்ம நிறுத்ததுல இறங்குறப்ப. மூணு நாள் பயணத்துக்கு அப்பறம் நம்ம இலக்க அடைஞ்சாச்சு. நீங்கா நினைவுகளோட அங்கமா இந்தக் காட்சிய ஒரு தாமி எடுத்துப்போம்.


மனம் மயக்கும் இயற்கை வண்ண ஓவியங்கள். பல வகையான கற்கள ஒரச்சுதான் இந்த ஓவியங்கள்லாம் வரஞ்சிருக்காங்க. எந்த எந்த நிறம் எப்படி உருவாக்கபட்டதுங்கற குறிப்பும் இதுல இருக்கு. இராஜ்தானி கட்டிடக்கலையப் போல, ஓவியங்களும் ரொம்பவே வித்தியாசமானது. சின்னச் சின்ன வடிவங்கள் கொண்டது. அதுலயும் ஒட்டு மொத்த ராமாயணத்தையும் காட்ற மாதிரி ஒரு ஓவியம், பாலைவன தோற்றத்த காட்ற மாதிரி ஒரு ஓவியம், இப்படி அங்க இருக்க ஒவ்வொரு ஓவியமும் விவரிக்க முடியாத அழகு. எதுக்காக இல்லைனாலும் இந்தக் கண்கவரும் ஓவியங்களப் பார்க்குறதுக்காச்சும் நீங்க கண்டிப்பா இந்த இடத்துக்குப் போய்ட்டு வரணும்.


எத்தனை எத்தனையோ ஆண்டுகளா பல வம்ச மன்னர்கள வாழ வச்ச இடம். பல சாம்ராஜ்யங்களுக்கு அடித்தளம் வகுத்த கட்டிடங்கள். எத்தனையோ இளவரசிகளும் இளவரசர்களும் ஓடி விளையாடின இடம். பல போர் வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்த இடம். பல மக்களோட நம்பிக்கையா விளங்கிய இடம். இப்ப புறாக்களோட வாழ்விடமா, அதுங்களோட எச்சங்கள தாங்குற இடமா, ஆயிரத்து நானூறு ஆண்டுகளோட நினைவுகள சுமந்துட்டு  வெறும் கட்டிடங்களா நம்ம முன்னாடி நிற்குது. இந்த இடம் கைவிடப்பட்டாலும் மறக்கப்படல. ரதோர் மன்னர்கள் பலரோட நினைவிடங்கள் இங்கதான் இருக்கு.

தூரம் தூரமா அங்கொன்னும் இங்கொன்னுமா வீடுகள். கண்ணுக்கு எட்டுன வர காஞ்சு போன பூமி. அதுல கோரப் புற்கள் மாதிரி சில புற்கள். அந்த புற்களத் தின்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்க அடர்ந்த முடி வெச்சிருக்க ஆடுகள், பெரிய திமில் கொண்ட மாடுகள், அதுங்கள வாழ்வாதாரமா கொண்டு வாழ்ந்துட்டு இருக்க மக்கள். தலைய விட பெரிய முண்டாசு கட்டிட்டு எங்கள வெறிச்சு பார்த்துட்டு உட்காந்திருக்க முதியவர். இவ்வளவுதான் அந்த இடம்.


அது கூடாரம் இல்ல, சொகுசு அறை. நட்சத்திர விடுதில இருக்க மாதிரி எல்லா வசதிகளும் அந்தக் கூடாரத்துல நமக்கு உண்டு. அது உண்மைல கூடாரமே இல்ல, ஜிப் கதவு வச்ச துணி வீடு. சன்னல்லாம் கூட இருக்கு.   ​ஒரு பெரிய மெத்தை, மின்விசிறி, இருக்கைகள், விளக்குகள், பிளக்பாய்ண்ட் அப்றம் இந்த அறையோட இணைக்கப்பட்ட குளியலறை. தண்ணி கிடைக்காத இந்தப் பாலைவனத்துலயும் குழாயத் திறந்தோனே நமக்குத் தண்ணி வருது. இதே இடத்துல ஒரு கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் மக்கள் தண்ணிக்காக அல்லல் பட்டுட்டு இருக்கலாம். நமக்கு எவ்ளோ ஆடம்பர வசதிகள் பார்த்திங்களா.


சகோதரி அபர்ணா நம்மை ராஜஸ்தான், குஜராத் மற்றும் மும்பை என பத்துநாட்கள் சுற்றி சுற்றி பயணபடுத்தியது மிகவும் அருமையானதொரு சுற்றுலாதான்.


ஒவ்வொரு முறையும் சென்ற இடங்களையெல்லாம் பற்றி விவரிக்கும் போது எனக்குள் எழுந்த ஒரு கேள்விக்கு சரியான பதில் இறுதியில் கிடைத்தது.


அருமையான பயணநூல் 


வாசித்த மகிழ்ச்சியடன் 

நன்றி 

ராம தேவேந்திரன் 

No comments:

Post a Comment