ஆற்று மீன்களும் வயல் நண்டுகளும்
விக்ரமன் ஆற்றில், முழங்கால் அளவுக்கு மட்டும் தண்ணீர் சல சலவென்று சங்கீதத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் உள்ள மண் சாலையில் மாட்டு வண்டிகள் நெல்மூட்டைகளுடன் மேற்கு நோக்கி, கிக் கிக்கென்ற சத்தத்துடன் சென்றுகொண்டிருந்தன. அரையில் அழுக்கு வேட்டிகளுடன் வயல்வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வந்த ஆட்கள், ஆற்றில் இறங்கி துணி துவைத்து, குளித்துக் கரையேறி கொண்டிருந்தனர்.
சூரியன் அந்த கிராமத்துக்கு ஓய்வு கொடுத்து மேற்கு நோக்கி பயணமானது. பிள்ளையார் கோவில் அரச மரத்தில் இரைத்தேட போய் திரும்பி வந்த குருவிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு இளைப்பாறத் தொடங்கின. நடவாட்கள் நெல் அறுவடை செய்த வயல்களில் உதிர்ந்து கிடக்கும் நெற்கதிற்களை ஒவ்வொன்றாய் சேகரித்து, கட்டுகளாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒய்யாரமாக ஆற்றின் கரையில் நடந்து கொண்டிருந்தனர்.
வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஊர் ஆடு மாடுகள் அவரவர் வீட்டுத் தொழுவத்துக்கு வரும் வழியில் ஆற்றில் முங்கிக் குளித்துக் கரையேறிக்கொண்டிருந்தன.
பிள்ளையார் கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள சிமெண்ட் தரையில் ஊர் நாட்டாமை சில சிறுவர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.
நாட்டாமை, "பயத்தியக்கார உலகமடா ராமா!", என்று பேச்சினிடையே சொல்லுவார். தொடர்ந்து, "என்ன சொன்னேன்?", என்றும் சிறுவர்களிடம் கேட்பதும் வழக்கமாக இருக்கும். அந்த உரையாடலினுடே பலமுறை அவரே "பயத்தியக்கார உலகமடா ராமா" என்று திரும்பவும் சொல்வதுமாக அந்த மாலை பொழுது கழிந்து கொண்டிருக்கும்.
எப்போதும் கலகலப்பாக சிறுவர்களுடன் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அவர் அந்த காலத்தில் நடந்தே மாயவரம் போய் தியாகராஜ பாகவதர் படம் பார்த்துவந்த கதையும், அவர் இளம் வயதில் செய்த சின்ன சின்ன விளையாட்டுகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வார். அதுபோன்ற அனுபவங்களையும் மற்ற சுவாரஸ்யமான நிகழ்கால அரசியல் பற்றியும் பேசிப் பேசி அவருடைய மாலைப்பொழுதுகள் கழியும்.
இதெல்லாம் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து சிவந்த வானம், போய் வரட்டுமா என்று கேட்கும் தொனியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது. ஊர் இருளத் தொடங்கியது. அந்த ஊரின் இளைஞர்கள் ஆற்றின் மீன் வேட்டையாடுவது வழக்கம். அதுவும் கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் போது மீன்கள் எதிர்த்து நீந்தி செல்லும். அந்த வேளையில் நீந்தும் மீன்களை யுக்தி செய்து பிடிப்பார்கள். அதற்காக பழைய சைக்கிள் டயர்களை இரண்டாக வெட்டி பந்தம் போல கொளுத்தி ஒரு கையில் பிடித்துக்கொள்வார்கள். மற்றொரு கையில் நீண்ட இரும்பு கத்திகளை பிடித்துக்கொள்வார்கள். முழங்காலளவு ஆற்று நீரில் மெல்ல மெல்ல சளக் சளக் என்று மெல்லிய சத்தத்துடன் மீன்களை தேடிப் போவார்கள். சைக்கிள் டயர் எரியும் வெளிச்சத்திற்கு வெளியே வந்த மீன்கள், வேட்டையாளர்களின் கத்திகளுக்கு வெட்டுப்படும். குரவை மீன்களும், கெண்டை மீன்களும், கெளுத்தி மீன்களும், விரால் மீன்களும் சிலநேரம் இறால்களும் கூட அகப்படும்.
சிறுவர்கள் பழைய மூங்கில் கூடை கொண்டு நீந்தும் மீன்களை கூடையில் பிடிப்பதும் வழக்கம். ஆற்றில் தண்ணீர் வந்த ஓரிரு மாதங்களில் புதிய மீன்கள் வளரும். அந்த சமயத்தில் ஆற்றில் குஞ்சுக் கெண்டை மீன்கள் பெருவாரியாக கிடைக்கும். ஆற்றில் இருந்து பிரியும் அனைத்து வாய்க்கால் மதகுகளிலும் காலையிலும் மாலை வேளையிலும் பழைய மூங்கில் கூடையில் வைக்கோல் கூளங்களை நிரப்பி அதனை நீண்ட கயிற்றில் கட்டி தொங்கவிடுவார்கள். ஆற்று வெள்ளம் மதகுகள் வழியாக பீறிட்டுப்பாயும்போது, கெண்டைக்குஞ்சுகள் அந்த வெள்ளத்தை எதிர்த்து துள்ளி விளையாடி கடக்க எண்ணிக்கொண்டு, ஆனந்தத் துள்ளலில் எகிறி அங்கிருக்கும் கூடையில் விழுந்துவிடும். கூடையில் மாட்டிக் கொண்ட மீன்கள் வெள்ளியை உருக்கி சின்ன சின்னதாய் செய்த சிற்பங்கள் போல அழகு அழகாய் மின்னும்.
இந்த கெண்டைகுஞ்சுகளை எடுத்து தலையையும் வாலையும் கிள்ளி எறிந்துவிட்டு, அடுப்புச்சாம்பலில் பிரட்டி, உரசிக் கழுவி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிய வெங்காயம் போட்டு, அம்மியில் அரைத்த மசாலாக்கள் சேர்த்து மண் சட்டியில் வைக்கும் மீன்குழம்பு தேனை விட சுவையாக இருக்கும்.
அந்த நாட்களில் பெரும்பாலான வீடுகளில் இரவு ஆற்று மீன் குழம்புதான். அதுவும் அந்த ரோட்டில் நடந்து போனால், குழம்பின் வாசத்தை பிடிக்காத ஆட்கள் இருக்கவே முடியாது. விறகு அடுப்பில், மண் சட்டியில் கொதிக்கும் ஆற்று மீன் குழம்பின் மணத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
நடவு செய்த வயல்களில் (ரசாயன உரம் வருவதற்கு முன்னர்) வளரும் குரவை மீன்களும், வயல் நண்டுகளும் உணவில் சேரும்போது அது இயற்கை மருத்துவம். ஆனால் இதெல்லாம் இல்லாமல் போய்விட்டது இன்று.
வயல் நண்டு அளவில் சிறியதாய் இருக்கும். சுவையானது மட்டுமல்ல, மருத்துவ குணம்களும் கொண்டது. அதனால் வயல்களில் வேலை செய்யும் ஆட்கள் அந்த நண்டுகளை பிடித்து சமைத்து சாப்பிடுவது இயல்பானது.
நண்டுகள், ஆண்–பெண் என்ற பாகுபாடின்றி மலட்டுத் தன்மையை போக்கும் குணம் கொண்டது. நண்டுகளை மிளகுடன் ரசம் வைத்துக் கொடுக்கும்போது, நெஞ்சுச்சளி, ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும்.
நண்டுகள் பக்கவாட்டில் நகரும். அதன் பார்வை முன்பக்கத்தில் இருக்கும். அதன் கொடுக்குகள் வலிமையானவை. நண்டுகளை பிடிக்க அவைகளின் பார்வையில் படும்படி விரல்களை விட்டால், அவைகளின் கொடுக்குகள் விரல்களை காயப்படுத்திவிடும். அதனால் அவைகளை பிடிக்கும்போது லாவகமாக பின் பக்கத்தில் இருந்து பிடிக்கவேண்டும். அவனும் சில நேரங்களில் வயல் நண்டுகளைப் பிடித்து, சமைத்துச் சாப்பிட்டிருக்கிறான்.
இன்றளவு பெரும்பாலும் வயல்களில் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதால், இந்த வகை உயிரனங்கள் அழிந்து வருகின்றன. மேலும் இப்போதெல்லாம் அவ்வளவாக வயல் நண்டுகளை உணவாக எடுத்துக்கொள்கிறார்களா என்று ஒரு பக்கம் கேள்வி எழுகிறது.
ஊர் திரும்புதல் - 1
ஊர் திரும்புதல் - 7
ஊர் திரும்புதல் - 8
ஊர் திரும்புதல் - 9
ஊர் திரும்புதல் - 10
ஊர் திரும்புதல் - 11
ஊர் திரும்புதல் - 12
ஊர் திரும்புதல் - 7
ஊர் திரும்புதல் - 8
ஊர் திரும்புதல் - 9
ஊர் திரும்புதல் - 10
ஊர் திரும்புதல் - 11
ஊர் திரும்புதல் - 12
ஊர் திரும்புதல் - 13
ஊர் திரும்புதல் - 14
ஊர் திரும்புதல் - 15
ஊர் திரும்புதல் - 16
ஊர் திரும்புதல் -17
ஊர் திரும்புதல் - 18
ஊர்திரும்புதல் - 19
ஊர்திரும்புதல் - 20
ஊர் திரும்புதல் - 21
ஊர் திரும்புதல் - 14
ஊர் திரும்புதல் - 15
ஊர் திரும்புதல் - 16
ஊர் திரும்புதல் -17
ஊர் திரும்புதல் - 18
ஊர்திரும்புதல் - 19
ஊர்திரும்புதல் - 20
ஊர் திரும்புதல் - 21
No comments:
Post a Comment