Sunday 27 September 2020

கர்துங்லா சென்னையில் இருந்து லடாக்

நூல்          : கர்துங்லா சென்னையில் இருந்து லடாக்

ஆசிரியர்   : இரா.கோகிலா பாபு

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


இந்த மின்னூலின் வழியே சகோதரி இரா.கோகிலா பாபு சென்னையில் இருந்து லடாக் வரை ஒரு சாலைப் பயணம் நம்மை அழைத்து செலகிறார் வாருங்கள் நாமும் தொடருவோம்....


சாலை வழியாக இவ்வளவு தூரம் சொந்தக் காரில் பயணிப்பதுதான் முதன்மை நோக்கம், என்பதால் சுற்றுலாவை போல் ஆங்காங்கே நிறுத்தி ஊர்சுற்றி பார்த்து விட்டு செல்லும்படி திட்டமிடவில்லை. தங்குமிடத்தையும் முன்கூட்டியே பதிவு செய்யவில்லை. சென்னையிலிருந்து பஞ்சாப். அங்கே வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு, அங்கிருந்து லே லடாக்கில் உலகின் உயரமான வாகனம் பயணிக்கும் இடங்களில் ஒன்றான கர்துங்லா பாஸ். இந்த இரண்டு இடங்கள் மட்டுமே கண்டிப்பாக பார்க்க வேண்டியவை என்றும் மற்றவை வழியில் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம். கூகுள் மேப் பஞ்சாப் செல்வதற்கு நாக்பூர் வழியாக செல்வது சுலபம் என்றது. ஆனால் ஏற்கனவே லே சென்றுவந்த ரமேஷ் முரளி அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மும்பை வழியாக செல்வது நல்லது என முடிவு செய்தோம். 350 கிலோமீட்டர்கள் அதிகம் இருந்தாலும் சாலை நன்றாகவும் தங்குவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் அதிகம் இருக்கும் என்பதாலும் இந்த வழியை தேர்வு செய்தோம்.


அகமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஒரு மணி நேர டி டூரில் இருந்தது. மாலை 3 மணி அளவில் ஆசிரமத்தை அடைந்தோம் நுழைவு கட்டணம் ஏதுமில்லை. முதலில் நம்மை வரவேற்பது வினோபாவும் மீராவும் தங்கியிருந்த எளிமையான குடில். அருகிலேயே காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் தங்கியிருந்த ஹிருதயகஞ்ச் எனும் இல்லம் இருக்கிறது. வாசலில் வலதுபுறத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டையுடன் கூடிய வரவேற்பரை இருக்கிறது. இங்கேதான் பொதுவாக தன்னைச் சந்திக்க வருவர்களிடம் பேசுவார் காந்தி. உள்ளே நுழைந்ததும் வலதுபக்கம் கஸ்தூர்பாவின் அறையும் இடது பக்கம் காந்தியடிகளின் அறையும் இருக்கிறது. நடுவில் வெளிச்சம் வரும்படி திறந்தவெளி முற்றம் உள்ளது. காந்தி, மோகனிலிருந்து மகாத்மாவாக மாறிய சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. காந்தியின் அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பொருட்கள் அவர் பயன்படுத்திய பொருட்களைப் போலவே (ரெப்ளிகா) செய்து வைக்கப்பட்டுள்ளன.


காட்டில் திரியும் மான்கள், பெருங்காது எருமைகள், ஒட்டகம், மயில் மற்றும் பறவைகள் என கவிதையாக விடிந்தது அந்தக்காலை. எவ்வளவு தூரம் ஓட்டினாலும் நல்ல கழிவறைகளுடன் கூடிய உணவகமோ அல்லது பெட்ரோல் பங்க்கோ வருவதற்கு வாய்ப்பே இல்லை போல் தோன்றியது.


ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அடைந்தோம். நாம் சிறுவயதில் இருந்து அதிகம் கேட்ட தேசபக்தி சம்பவம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க முடியும். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்லும் குறுகிய வழி, பீரங்கியை நிறுத்தி வைத்து சுட்ட இடம், தப்பிப்பதற்காக மக்கள் குதித்து மாண்ட கிணறு அனைத்தையும் பார்வையிட்டோம். மாண்டவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஒன்று உள்ளது. சுவற்றில் 36 இடங்களில் குண்டு துளைத்த பகுதி அடையாளப் படுத்தப்பட்டு வேலியிட்டு பாதுகாக்கப் படுகிறது.


இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பேருந்து கேட்டினை கடந்து சென்றபின்னர் நிகழ்ச்சியை துவக்குகிறார்கள். முதலில் தேசபக்தி பாடல்கள் ஒலிபரப்பாகிறது. பிறகு அந்த தேசபக்தி பாடல்கள் பிண்ணனியில் ஒலிக்க நிகழ்ச்சியை காணவந்த பெண்கள் சிலரை அழைத்து தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வரிசையாக செல்ல வைத்தார்கள். பிறகு அவர்களே உற்சாக நடனம் ஆடினார்கள். இந்தப் பக்கம் 5000 பேருக்கு மேல் அமர்ந்திருக்கும் இந்திய அரங்கில் இப்படி கொண்டாட்டம் அரங்கேறிக் கொண்டிருக்க அந்தப் பக்கம் பாகிஸ்தான் அரங்கத்தில் மிகச் சில பேர் வந்து அமர்கிறார்கள். பெரிய அளவிலான மூவர்ணக் கொடி ஒன்றினை மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்து அடுத்தவர் கைக்கு மாற்றி அரங்கு முழுவதும் ஒரு சுற்று சுற்றி வர வைத்தனர். நிகழ்ச்சி முழுவதையும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் ஆபிசர் ஒருவர் ஒழுங்குடன் நடத்திச் சென்றார். ஹிந்தி மட்டும்தான் பெயரளவிற்கு கூட ஆங்கிலத்தில் எந்த அறிவிப்பும் இல்லை.  பணம் மற்றும் மொபைலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி முடியும்வரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களை போற்றும் விதமாகவும் வெற்றியை நினைவு கூறும் விதமாகவும் அந்த நினைவிடம் அமைந்திருந்தது. கார்கில் போரில் பங்கேற்ற சிறிய ரக போர் விமானங்கள், ஆயுதங்கள், சிதைந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகளின் பாகங்கள், எந்தெந்த மலைச் சிகரங்களை எப்படி மீட்டோம் என்று விளக்கும் படியான மினியேச்சர்கள், வீர மரணம் எய்திய வீரர்களின் பெயர்களை தாங்கிய நினைவு கற்கள், அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட சுவர்கள் பார்கலாம் வாருங்கள்.


அதீத தலைவலி, மூக்கில் நீர்வடிதல், காது அடைத்தல், வாந்தி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஆல்ட்டிடியூட் பிரச்சனையின் பொதுவான அறிகுறிகள். ஆல்டிடியூட் பிரச்சனைக்காக டையாமாக்ஸ் எனும் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு அதிகம் தண்ணீர் குடிப்பதும், பதட்டமின்றி அமைதியாக இருப்பதும், ஒரே நாளில் அதிக உயரத்தை ஏறி உடலை துன்புறுத்தாமல் பாதி உயரம் ஏறி ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு மறுநாள் மிச்ச உயரத்தை ஏறுவதும் சிறந்த தீர்வாகும். இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் பக்க விளைவாக உடலில் பொட்டாஷியம் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே வாழைப்பழம் ஆரஞ்சு முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 18000 அடி உயரம் என்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்பதால் 30 நிமிடத்திற்கு மேல் அங்கே இருப்பது நல்லதல்ல. அங்கிருந்து தொடர்ந்து பயணித்து நர்பா வேலியை அடையலாம் அல்லது திரும்ப லே நகருக்கு வந்துவிடலாம்.  


உலகின்  அதிக உயரத்தில் உள்ள வாகனங்கள் செல்லக்கூடிய பாதை என இந்த இடம், உச்சியை அடைந்ததும் நீங்கள் 18 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறீர்கள் என்று எழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொன்டனர்கள்


பன்னிரண்டாம் நாள் காலை அங்கிருந்து கிளம்பி இரவு தங்காமல் தொடர்ந்து தோராயமாக 2000 கி.மீ. பயணித்து பதிமூன்றாம் நாள் காலை சென்னை வந்து சேர்ந்தோம். மொத்த பயண தூரம் கிட்டத்தட்ட 8000 கி.மீட்டர்கள். பதின்ம வயதுக் குழந்தைகளுடன் குடும்ப சகிதமாக, மண் சரிவினால் ஏற்பட்ட தடைகளை மீறி இப்படி ஒரு சாகசப் பயணம் சாத்தியமானதில் மிக்க மகிழ்ச்சி. எப்போதும் போன்ற ஒரு பயணமாக இல்லாமல் என்றென்றும் மகிழ்வுடன் நினைவுகூரத் தக்க நிறைவான சாகசமாக அமைந்துவிட்டது இப்பயணம்.


மிக்க மகிழ்ச்சி, இப்படியொரு சாலைபயணத்தினை முன்னெடுத்து செயத்து மற்றும் வெற்றிகரமாக முடித்துவந்த சகோதரி இரா. கோகிலா பாபு எனது வாழ்த்துக்கள் 💐💐


அருமையான பயணநூல் 


வாசித்த மகிழ்ச்சியடன் 

நன்றி 

ராம தேவேந்திரன் 

No comments:

Post a Comment