Friday, 25 December 2020

ரப்பர் வளையல்கள் - வாசிப்பு அனுபவம்


நூல்        : ரப்பர் வளையல்கள்

                  (சிறுகதை தொகுப்பு)

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்

அமேசான் மின்னூல்.

விலை : ₹99



நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான  "ரப்பர் வளையல்கள்" இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதையினையும் நடப்பு காலகட்டத்தில் இருக்கும் சில சமூக அவலங்களையும், சமுதாய வாழ்வியலையும் சில வரலாற்று கதைகளையும் கொண்டு மிக அழகாகவும் சில கேள்விகளை சமுதாயத்திற்கும் கேட்டு தனது கதையின் ஊடே நமக்கு கொடுத்திருக்கிறார்.

1. ரப்பர்  வளையல்கள்  

சமூகத்தில் “ ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்லுக்கிணங்க இந்த ரப்பர் வலையல்கள் என்னதான் அடித்து கொண்டாலும் சத்தம் வராது என்பதை ஒரு ஏழையின் மீது வங்கியினர் செய்யும் செயல் மூலமாக ஆசிரியர் நமக்கு சொல்லி செல்கிறார். 

2. மாற்றுக் கொலை  

சாதி மற்றும் ஆணவம் இவைகள் இன்றளவும் சமூதாயத்தில் பரந்து விரிந்து கிடக்கும் குப்பை, இவைகளை களையவேண்டும் என்ற சிந்தனையை, இந்த அவள பெண்ணின் கொலை நமக்கு சிந்திக்க தூண்டுகிறது.


 3. செம்மலர்  

எல்லோரும் சமமே என நம்மில் எத்தனை பேர் ஏற்றுகொள்கிறோம், நிறம், வசதி, படிப்பு மற்றும் ஆடம்பரம் என இவை எல்லாம் இருப்பவர்களையே மனிதர்கள் என்று நினைத்தை உண்மையான “மனிதம்” படைத்தவர்களை கண்டுகொள்ளாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியாக ஒரு ஆழ்ந்த கருத்தினை இந்த அழகிய “செம்மலர்” நம் மனதில் மலர வைக்கிறாள்.


4. உணர்வுகள்   

உணர்வுகள் என்ற கதையின் வழியே இளங்காதலர்களுக்கு இடையே ஏற்படுகின்ற எதிர்பார்ப்புகளை அழகாக பட்டியலிட்டுள்ளார். தங்கள் உணர்வுகளை உணர்நதுகொள்ள முடியாத சூழலில் எற்படும் வலியே பிறிவுக்கு அடுத்தளம் எனபதை அழகாக உணரவைக்கிறது இந்த “உணர்வுகள்”.


5. வெண்ணி  

இந்த கதை சோழர்களின் வீரத்தையும் வரலாற்றையும் அழகாக சொல்கிறது. 


6. பணமதிப்பிழப்பு  

இந்த நாள் எத்தனை எத்தனை இழ்ப்புகள் எனபதை நாம் எல்லோரும் அறிந்ததே!. ஆனால் இந்த சூழலையும் ஒரு நேர்மறையாக்கி ஒரு கதை அழகாக சொல்லியிருக்கிறார் நண்பர்.


7. கொடுக்காப்புளி  

இயற்க்பையின் சாபக்கேடு என்னவோ தெரியவில்லை, நண்பர்களின் கூட்டத்தில் ஒருவன் எப்பொழுதும் அடுத்தவர்களால் இழவிற்க்கு உள்ளாவது!! அதுபோலவேதானர இங்கு “ கொடுக்காபுள்ளி” வாழ்கிறான். கதையின் முடிவு அருமை...


8. அலங்கரிக்கப்பட்ட பொய்கள்   

பெரும்பாலும் பொய் சொல்லும் போது ஏதோ ஒரு இடத்தில் மாட்டிகொள்வதும் இயற்ககையே. அப்படியே ஆசிரியரே பொய் சொல்லி மாட்டி கொள்கிறார். அழகான கதை.


9. தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்   

இனணயதளத்தில் முகபுத்தகம் முதல் உள்ள அனைத்து சமூக வலைதளத்தி்ல் உளா வருவம் போலி செயதிகள் பின்னணியில் நடைபெறும் கதையினை அழகாக சொல்லியிருக்கிறார்.

 

10. எச்சில்  

பழிவாங்கும் எண்ணம் என்பது நம்மில் மறைந்து கிடக்கும் ஒரு குப்பை எனபதை உணர்ததும் கதைதான் இந்த கதை. பழிவாங்கும் சமயம் கிடைத்த போது அதை செயல்படுத்திய அர்ப்ப சந்தோஷத்தில் இருக்கும் ஒருவரின் கதை..


11. மேய்ப்பர்  

கடவுள் மீது இருந்த நம்பிக்கை நல்லதையே கொடுத்தது ஆனால் அதற்க்கு விலையாக அப்பாவின் உயிர் தான் கொஞ்சம் அதிகம்.


12. ‘அட்ரஸ்’ பாலாஜி  

தனக்காக சினிமாவில் ஒரு அட்ரஸ் தேடி சென்னைக்கு வரும் ஏராளமானவரில் அட்ரஸ் கிடைப்பதென்னவோ சிலருக்கே. அப்படிதான் இந்த கதையின் நாயகன் “அட்ரஸ் பாலாஜி”யாக மாறியது. எதார்தத சூழ்நிலைகளை அழகான கதையாக்கியருக்கிறார்.


13. லாக்டவுன் சமையல்  

இந்த சம்பவம் பெரும்பாளான இல்லத்தில், அரங்கேறிய நிகழ்வுகளாகதான் இருக்கும் வாசிக்கும் நம் அனைவருக்கும். இங்கே ஏற்படும் சின்ன சின்ன கலாட்டாகளை கதையாக்கியிருக்கறார் நண்பர்.


14. பெருமூச்சு  

உலகையே உலுக்கி எடுத்த கொடிய நோயினால் மக்களுக்கு ஏற்பட்ட மன உலைச்சல்களை மையமாக கொண்டு எழுதபட்டதுதான் இந்த “பெருமூச்சு”. எத்தனையோ அப்பா அம்மாக்கள் அனாதையாகவும், ஆதரவற்றவர்களாகவும் தள்ளபட்ட சூழலில் கொள்ளைநோயால்  உயிர்போன பின் என்ன நிலையென்பதை நான் அனைவரும் உணர்ந்ததே!! அழகாக சொல்லியருக்கிறார் இந்த “அப்பா விடும் பெருமூச்சு” அதன் இந்த கொள்ளை நோயிலிருந்து மீனடு வந்ததும்.


15. இ.யெம்.ஐ  

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டி தனது  வாழ்க்கை தரத்தை கடன் பெற்றாவது உயர்த்திகொள்ள வேண்டிய கட்டாய சூழலில் தவிக்கும் மனிதர்களின் வலியினை வெளிபடுத்தும் கதை. நண்பரின் கதையில் வரும் நாயகனுக்கு திடீரென ஏற்படும் சூழல் அதிலிருந்து சாமர்த்தியமாக வெளி வருவது சரிதான். ஆனால் அவன் இயல்புக்கு திரும்பும் வரை?


16. ஆன்லைன் ரம்மி  

சூதாட்டம் காட்டும் ஆசை மீளமுடியாத ஒன்று. இந்த கதையை படிக்கும் போது எனது சிறு வயது ஞாபகங்கள் வருகிறது. எங்கள் ஊரில் நடைபெரும் திருவிழாவிற்க்கு “சூதாட்டம்” கட்டாயம் இடம்பெறும். எங்கள் தெருவின் கடைசியில் காலியாக இருந்த களம் தான் சூதாட்ட பந்தல் இருக்கும். காலையில் மாப்பிள்ளைபோல போகிறவர்களில் பலர் திரும்பும் சைக்கிள், வாட்ச், மோதிரம் மற்றும் பணம் எல்லாம் இழந்து வருவார்கள் பாவமாக இருக்கும் ஆனால் மறுநாள் காலையில் கடன் வாங்கிகொண்டு விட்டதை மீட்க வருவார்கள். அந்த ஆசை யாரையும் விடுவதில்லை என அழகாக சொல்கிறார் நண்பர்.


17.கிணத்துக்கடவு  

இந்த “கிணத்துகடவு” தமிழகத்தில் உள்ள பெரும்பாளான கிராமங்களின் ஒரு பிரதிநிதியாகவே பார்கக வேண்டும். ஆம் இன்றளவில் பெரிதும் அவலநிலையில் இருக்கும் விவசாயிகளின் கதையைபற்றி கொஞ்சம் பேசுகிறது.  விவசாயிகளின் பிரச்சினையை கொண்டு அவரை கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாய பொருள் விவசாயிடமிருந்து கடைநிலை பயண்பாட்டுக்கு வருவதற்க்குள் எத்தனை விலையேற்றம் எனபதை சொல்லியிருக்கலாம்.


18. பற்றாக்குறை  

உயிரனங்களின் வாழ்வாதாரமாக திகழுமழ “தண்ணீர்” அவ்வுயிரனங்களுக்கு கிடைக்காமல் நுறுவனங்களால் கொள்ளையடிக்க படுவதை முன்னறித்தி இந்த “ பற்றாக்குறை” என்ற கதை பேசுகிறது.


19. தாரா

தாரா, வாழ்ககையில் வழுக்கி விழும் பெண்களில் தாராவும் ஒன்று. பழிவாங்குவது என்ற என்னம் இல்லாத மனிதர்கள் இல்லை எனவே தன் வாழ்வினை சீரழித்தவர்களை பழிவாங்கிவிட்டு தானும் மாய்ந்துவிடுகிறாள்.

மொத்ததில் ஒவ்வொரு கதைகளும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்கால செயல்களை அடிப்படியாக கொண்டு மிக அழகாவும்  தெளிவாகவும் சொல்ல வந்ததை ஆசிரியர்  சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை வாசித்து பாருங்கள் ..

வாழ்த்துகள் சகோ 💐💐💐

தொடரட்டும் தங்கள் எழுத்து பயணம்.....


அன்புடன்,

 

தேவேந்திரன் ராமையன் 

Sunday, 20 December 2020

ஊர்திரும்புதல் -25

ஸ்ரீ மந்தகரை காளியம்மன் கோவில் திருவிழா 


அவனின் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதுதான் காளி என்றோரு அழகிய பெரிய கிராமம்.  அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாய் ஸ்ரீ மந்தகரை காளி அம்மன் அரணாக வீற்றிருக்கும்.




தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் வந்தாலே பக்கத்து ஊர்களுக்கெல்லாம் காளியின் மந்தகரை காளியம்மன் கோவில் காவடித்திருவிழாதான் நினைவுக்கு வரும். வருடம் தவறாமல் காவடித்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.  

அப்படித்தான் அவனும் தனது சிறுவயதில், நண்பர்களுடனும்,  ஊர்ப்  பெரியவர்களுடனும் அந்தத்  திருவிழாவுக்கு போய்வருவதுண்டு. அவன் சிறிய வயதில் திருவிழாவுக்கு  செல்வதுபற்றி  திட்டமிடுவான். யாரிடம் எவ்வளவு காசு வாங்குவது, எந்த நேரத்தில் போவது, என்னென்ன வாங்கி சாப்பிடுவது, என்ன விளையாட்டு பொருள் வாங்கிவருவதென்பதுவரை அதில் எல்லாம் அடங்கும். 

சித்திரை மாத வெயிலில் நண்பர்களுடன் நடந்தே  காளிக்குப்  போய் அந்த திருவிழாவினை கண்டு களிக்க அவனுக்கு  வருடாவருடம்  எழும்  ஆவல்  தணிந்ததே  இல்லை. 
 
ஸ்ரீ மந்தகரை காளியம்மன், காளி கிராமத்தின்  மெயின் ரோட்டிலேயே  கோவிலில்  வீற்றிருக்கும். திருவிழா சமயத்தில் அந்த ரோடு முழுவதும் தென்னங் கீற்றினால் பெரிய பந்தல் போடப்பட்டிருக்கும். பந்தலின் உட்புறம் வெள்ளை வேட்டிகளால் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த பந்தலின் நுழைவு வாயிலின் இருபுறமும் குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருக்கும். தங்கநிறம் கொண்ட தென்னம்  பாளைகளினாலும், பனை குலைகளினாலும், ஈச்சங் குலைகளினாலும் அழகாக  அலங்கரிக்க பட்டிருக்கும்.  அதனுடன் நடுநடுவே  வண்ண வண்ண காகித பூக்களின்  வரிசை இளங்காற்றில்  அசைந்தாடி பார்ப்பவர்  கண்களை  ஈர்க்கும். தென்னைஓலை  தோரணங்களும் அந்த  பந்தலினையும்  வீதிகளையும்  திருவிழா மனநிலைக்கு உரிய  மங்களத்தை   கொண்டுவரும்.  

பந்தல் முகப்பு வண்ணம் தீட்டிய தென்னங்  கீற்றுகளால் கோபுரம் போல அலங்கரிப்பட்டிருக்கும். அதன் மீது வண்ண வண்ண மின்மினி விளக்குகள் அழகாக பொருத்தி இருக்கும். அந்த மினுக்கும் மின் விளக்குகள்  இரவில் கண்கொள்ளாக்  காட்சியாக இருக்கும்.   

திருவிழா என்றாலே புதிது புதிதாக  கடைகள் வருவது வழக்கமாக தொன்று தொட்டு இருந்து வருவது. அதுபோலத் தான் இந்த ஊர் திருவிழாவிலும் ஒவ்வொருமுறையும் எண்ணற்ற கடைகள் வருவது வழக்கம். காளியம்மன் கோவில் தெருவெங்கிலும் புதிதாய் முளைத்த திருவிழா கடைகள் வண்ண வண்ணமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும். கண்ணாடியினால் நான்குபக்கமும் மூடப்பட்ட தள்ளு வண்டியில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  அருகில் செல்பவர்களை பலகாரங்களின் வாசனை சுண்டி இழுக்கும்.  நினைக்கும் தோறும் நாவில் எச்சில் ஊரும்.  




சாலையின் ஓரத்தில் வண்ணவண்ண பலூன்களுக்குள் காற்றினை ஊதி அழகாய் அதனை பல உருவங்களாக மாற்றி அருகில் செல்லும் குழந்தைகளின் மனதையும் மாற்றி கொண்டிருக்கும் பலூன் வியாபாரிகள் ஒருபுறம்.  

மூங்கிலில் செய்த ஊதுகுழல்களை  வியாபாரிகளிடம்மும்,  அடிக்கும் ரோஸ் வண்ணத்தில் ஜவ்வு மிட்டாயை  ஒரு கம்பத்தில்  சுற்றிவைத்து அதனை  இழுத்து இழுத்து கைக்கடிகாரம், மோதிரம், மீசை மற்றும் வித விதமான அணிகலன்களை செய்துவிற்கும் வியாபாரியிடம் சிறுவர்கள்  ஈ மொய்ப்பது போல் கூட்டமாக நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள்  சிறுவர்களுக்கு  காட்டும்  வேடிக்கைகளும்  ரசிக்கும்படி இருக்கும். அந்த  ஊதுகுழல்களை  வாங்கிய  சிறுவர்கள்  ஆர்வத்தில்  ஊதி எழுப்பும்  ஒலிகள்தான்  அங்கே  திருவிழா  நிகழ்ந்து  கொண்டிருப்பதையே நினைவுபடுத்தும். 


மற்றொரு இடத்தில் விளையாட்டுக்கடைகளும்  இருக்கும். அது  கொஞ்சம்  பெரியவர்களுக்கானது. அங்கே பிஸ்கெட், சோப்பு  டப்பா என்று  பலவிதமான  பொருள்களைப் சீரான இடைவெளியில் பரப்பி வைத்திருப்பார்கள். அந்த  வியாபாரி  கைகளில்  வளையங்கள் இருக்கும். போட்டியில்  பங்கேற்க  விரும்புபவர்  வியாபாரியிடம்  ஒரு  ரூபாய் கொடுக்க  வேண்டும். அதற்கு 3 வளையங்கள்  கிடைக்கும். போட்டியாளர் மூங்கில்  தடுப்புக்கு  பின்  நின்று  அடுக்கடுக்காக  வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களின்  மீது  குறிவைத்து  வளையங்களை ஒன்றின்  பின்  ஒன்றாக  எறியவேண்டும்.  அது எந்த பொருள்மீதாவது சரியாக  சுற்றி விழுந்துவிட்டால், அதுதான்  வெற்றி. எறிந்த  போட்டியாளருக்கு  அந்தப்  பொருள் கொடுக்கப்படும். 

அதை  அடுத்து  வளையல்கள், மணிகள், மற்றும் அழகுசாதன பொருட்கள் என பெண்களுக்கான சிறப்பு கடைகள் அதிக அளவில் இடம் பிடித்திருக்கும். காளியம்மன் கோவில் வீதியின்  கடைசியில் ராட்டினம் மேலும் கீழுமாக  சுழன்று கொண்டிருக்கும்.  அதனுள்ளே ஆரவாரத்துடன் சிறுவர் சிறுமியர்கள் கத்திக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். 

சித்திரை மாதவெய்யிலின் தாக்கத்தைப் போக்க தண்ணீர்ப் பந்தல்களில் , நீர்  மோர் கொடுக்கப்படும். ரோஸ் மில்க், சேமியா பாயசம், நன்னாரி சர்பத் என எந்த பக்கம் திரும்பினாலும் இரண்டு மூன்று கடைகள் இருக்கும். 

அங்கேயே  இரும்புச் சாமான்  கடைகளையும் காணலாம். இரும்புக்கடைகளில் தோசைக்கல் முதல் அரிவாள்மனை வரை எண்ணற்ற இரும்பாலான  வீட்டு உபயோகப்  பொருள்கள் கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் இது போன வருட திருவிழாவில் வாங்கியது, இது மூன்று வருடம் முன்பு வாங்கியது என பேசக்  கேட்கலாம்.

இந்தத்  திருவிழா காளியம்மன் கோவில் வீதியில்  நடப்பதால் அங்கு இருக்கும் மண்பானைகள் செய்யும் நண்பனின் வீட்டுக்காரர்கள் கடையும் இருக்கும். இதில் பெரும்பாலும் சிறியவகை மண்பாண்டங்கள் விற்பனை செய்யப்படும். மண்சட்டிகள் முதல் சூட்டு அடுப்புவரை எல்லாம் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.

அவனுக்கு அதிகளவில் பள்ளி நண்பர்கள் அந்த ஊரில் இருப்பதால், திருவிழா சமயங்களில்  அவனுடைய நேரங்களை வெகுவாக நண்பர்களுடனே செலவழிப்பான். கடை வீதியெங்கும் சுற்றுவதும் பலவகையான தின்பண்டங்கள் வாங்கி சுவைப்பதுமாக அவனது நேரம் இனிமையாகக்  கழியும். ராட்டினம் ஏறி விளையாடியதும், காந்தி தாத்தா கண்ணாடிபோல பிளாஸ்டிக் பேப்பரில் செய்த வண்ண வண்ண கண்ணாடிகள் வாங்கி மாட்டிக்கொள்ளுவதும், அது ஒருமணி நேரத்திற்குள்ளவே கிழிந்து போவதும் என, சில சந்தோஷங்களும் சில சோகங்களும் சேர்ந்து அந்த பொழுதுகள் கழியும். 

அவன் தனது சிறுவயதில் எப்போதும் அவனது பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ  நடந்தே போவான். சற்று வளர்ந்து அவன் அந்த ஊர்ப்  பள்ளியில் சேர்ந்த பிறகு தனியாகவே  அவனுடைய பள்ளி நண்பர்கள்கூட  போய்விடுவான்.


அப்போதெல்லாம் சிறுவர்கள்  வண்ண வண்ணக்  கண்ணாடிகளை அணிந்து, கைகளின் ஊதுகுழலும், வண்ண வண்ண பலூன்களும், பலூன்களினால் செய்த பொம்மைகளுமென கூட்டம்  கூட்டமாகப் போவது அவனுக்கு  குட்டி குட்டியாக கடைகளே நடந்து போவதுபோல ஒரு காட்சி தோன்றும்.      எல்லா திசையிலும் சுற்றி இருக்கும் கிராமங்களின் மக்கள்   இந்த திருவிழாவில் ஆண்களும் பெண்களுமாய்  பெரும்திரளாக வருவதும் போவதுமாக ஒரே மக்கள் கூட்டமாக இருக்கும். 

பெரும்பாலான பக்தர்கள் பால் குடம் எடுப்பதும், காவடி எடுப்பதும் என தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டிருப்பார்கள். 

வண்ணமயமான அந்த திருவிழாவில் சுற்றி இருக்கும் அத்தனை கிராமங்களும் கூடி கொண்டாடுவதும், திருவிழா முடிந்ததும் வீடுகளுக்கு திரும்பும் மக்களை பார்க்கும் போது எறும்புகள் கூட்டம் கூட்டமாக செல்வது போல ஒரு வகையான உணர்வு  தோன்றும்.  

சித்திரை மாதத்தினை மிகவும் விமரிசையாக இந்த கோவில் திருவிழாவுடன் அந்த சுற்று கிராமங்கள் எல்லாம் வரவேற்கும். அந்த நாளில் வந்து இருக்கும் எல்லோரும் காளியம்மன் அருளோடு புது வருடத்தினை ஆரம்பிக்கிறார்கள்.

இன்றளவும் இந்த திருவிழா நடைபெற்றுக்  கொண்டே இருக்கிறது.

  
              


Sunday, 13 December 2020

வேலை நிறுத்தம் ஏன் - நூல் விமர்சனம் ( ஆசிரியர் : மக்கள் எழுத்தாளர் விந்தன்)

நூல்.         :  வேலை நிறுத்தம் ஏன்            

ஆசிரியர்   :  மக்கள் எழுத்தாளர்  விந்தன்



இந்த கட்டுரை தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் தாக்கத்தினால் எழுத்தாளர் விந்தன் எழுதிய கட்டுரை தொகுப்பு தான் இந்த நூல். 

எழுத்தாளர் 'விந்தன்' அவர்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் என்றுதான் தமிழ் உலகம் அறியும். அவர் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலும் தீவிரமாகச் சிந்திக்கிறார் என்பதற்கு இச் சிறுநூல் ஒரு சான்று.

இந்த கட்டுரையில் ஆசிரியரால் கேட்கபடும் கேள்விகளுக்கு அன்று முதல்  இன்றுவரை விடை தெரியாத  புதிராகவே இருக்கிறது. இத்தகைய சூழல் இன்றளவும் இருக்கிறது என்றால் இந்த பிரச்சனைகள் இருந்துகொண்டே தான் இருக்கும் எனபதில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?


“அன்றைய வாழ்க்கைச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆடம்பரங்களும் வசதி வாய்ப்புகளும் கூடியுள்ள இன்றைய நிலையிலும் கீழ்த் தட்டு மக்கள் நிலை மாறாமலேயே - வறுமைக்கோடு என்பதற்குக் கீழேயே பலகோடி மக்கள் பாரதப் புண்ணிய பூமியில் வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்”


ஆசிரியர் ஒரு தனி மனிதனை பற்றி கூறும்போது, சமுதாயத்தில் எவரும் தவிர்க்க முடியாதவர்கள்; தனித்தியங்க, தனித்து நிற்க, தனித்து ஒதுங்க எவராலும் இயலாது.  ஒட்டு மொத்த சமுதாயமே மனித குல அமைப்பு. இதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.  மனிதகுலம் முழுமைக்கும் ஒரு நல்வழியைத் தேடி ஆய்ந்து முடிவாக அறிவித்தவர், மனித குலத்தின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர் காரல் மார்க்ஸ்.  சிறு சிறு குழுக்களின், சிறு சிறு நாடுகளின் வளர்ச்சியிலும், தனிமனிதனின் உழைப்பிலும் வளர்ச்சியிலும் முழுமையான சிந்தனை செய்து முடிவுகண்டு முதலில் உரைத்தவர் அறிஞர் கார்ல் மார்க்ஸ்!

விடை காண முடியாத வினாக்களே மிகுதி! இதுவே வாழ்வு இதுவே உலகம்...

நோய் தோன்றத் தொடங்கினால் தொடக்கத்திலேயே கண்டறிந்து தீர்க்க முயல வேண்டும். மனிதர்க்கு உரியதே சமூகத்திற்கும் பொருந்தும். தொழிற் கூடங்களுக்கும் பொருந்தும்; ஆட்சிச் செயலரங்குக்கும் பொருந்தும்.  நீயா, நானா என்பதும், உயர்வு தாழ்வு என்பதும், அமைப்புகளின் வேர்களைப் பறிக்கின்ற தீயவுணர்வுகளாகும்.  நாம் அனைவரும் சமமானவர்கள். பாரத சமுதாயம் எனப் பாரதி பாடியதைப் பாடுவதோடு நிற்காமல், பாராட்டுவதோடு நிற்காமல், சிந்தித்துச் செயலில் கைக்கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத் துறையிலும் இந்தியா தங்களுக்குச் சமமாகத் தலை தூக்குவதைப் பிரிட்டிஷார் எப்பொழுதுமே விரும்புவது இல்லை யென்பது எல்லோரும் அறிந்த விஷயம்.  ஆனால், ஜப்பான் குள்ளர்கள் இந்தியாவின் வாயிலில் காலடி எடுத்து வைத்தபோது, பிரிட்டிஷார் தங்கள் சுயநலக் கொள்கையை ஓரளவாவது மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.

பாடுபடும் ஏழை எலும்புந் தோலுமாகி மடியவும், பாடுபடாத பணக்காரன் பருத்திப் பொதியைப் போன்று வளரவும், பிரிட்டிஷாரின் சுயநலக் கொள்கை இடம் கொடுத்தது.  இந்திய முதலாளி வர்க்கமும், வர்த்தக வர்க்கமும் பிரிட்டிஷாரின் கணக்கற்ற காகித நோட்டுகளைக் கைநிறைய பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ராணுவத் தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தன.  ஏழை ஜனங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று அவர்கள் ஏகாதிபத்தியத்தின் சதிக்குத் துணையாக நின்றனர். 

இந்தக் காலத்தில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் புண்ணியவான்கள், அவர் களுடைய வாழ்க்கைத் தேவையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க வேண்டும். 

இன்னும், போதாக் குறைக்குக் கள்ள மார்க் கெட்டில் ஒன்றுக்கு இரண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்கவேண்டிய அவசியமும் தொழிலாளிகளுக்கு ஏற்படாமற் போகவில்லை. விலைவாசிகள் விஷம்போல் ஏறியிருக்கும் இந்தக் காலத்தில் மேற்கூறிய சம்பள விகிதங்கள், பஞ்சப்படிகள் எல்லாம் எந்த மூலைக்கு?

துரதிர்ஷ்ட வசமாக இந்த நாட்டில் இன்று பிரபலமடைந்திருக்கும் பொதுஜனத் தலைவர்களில் பெரும்பாலோர், ஏழைத் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை நிலையை அறியாதவர்கள்; அறிய முடியாதவர்கள்!  ஏனெனில், மேற்கூறிய தலைவர்களின் வாழ்க்கைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.  பசித்தவனுடைய வேதனையைப் பசித்தவன்தான் அறியமுடியும்; பசியாதவன் அறிய முடியாது.  அதே மாதிரி பசியாதவனுடைய சுகத்தைப் பசியாதவன்தான் உணர முடியும்; பசித்தவன் உணர முடியாது.

அதிகார வர்க்கம், "அமைதியை நிலை நாட்டுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டு, தன் மிருகத்தனமான அடக்கு முறைகளைப் பிரயோகித்தது.  எத்தனையோ அவசரச் சட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்துகொண்டே யிருந்தன.

உணவுப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கல்ல; உடைப் பஞ்சத்தை ஒழிப்பதற்கல்ல; கள்ள மார்க்கெட்டைத் தொலைப்பதற்கல்ல; லஞ்சப் பேயை விரட்டுவதற்கல்ல;  தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காகத்தான்!

தங்களுடைய வேலை நிறுத்தத்துக்குப் பங்கம் நேர்ந்து விடுகிறதென்று அஞ்சித் தொழிலாளிகள் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அமைதி குலைகிறது.  முதலாளிகள் போலீசாரின் உதவியை நாடுகிறார்கள்.  சர்க்கார் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய போலீஸ் உதவி அளிக்கிறது.  தொழிலாளிகள் ஆத்திரமடைகின்றனர். அதன் பலன் படுகொலையில் வந்து முடிகிறது! - சமீபத்தில் நடந்த சம்பவம் பற்றி 75 வருடங்களுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாய் சொல்லியிருப்பதில்  வியப்பதற்கு ஒன்றுமில்லை.  

இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டால் உழைக்காமல் உண்ணும் முதலாளிகள் எந்த வேஷந் தரித்தாலும் பொதுமக்களிடையே இடம் பெற முடியாது.

நல்லொதொரு சமுதாய சிந்தனை உள்ள ஒரு கட்டுரை தொகுப்பினை வாசித்த அனுபவமும் அதனால் ஏற்பட்ட தாக்கமும் குறைய வெகு நாட்கள் ஆகும் என்றே நினவுகிறான்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாசிக்கலாம் ....

                    

நன்றி 

ராம. தேவேந்திரன் 

Wednesday, 21 October 2020

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை - ராஜம் கிருஷ்ணன்

 பெண்ணியம் சார்ந்ந நூல்கள்

நூல்.              : இந்திய சமுதாய வரலாற்றில்  பெண்மை

ஆசிரியர்   :  ராஜம் கிருஷ்ணன்




ராஜம் கிருஷ்ணன் மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.

   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.

இத்தனை படைப்புகளை கொடுத்த அம்மையார் இப்போது நம்மோடு இல்லை என்ற வருத்ததுடன் அவர்களின் உணர்ச்சி பூர்வமாண எழுத்துக்கள் இன்றளவும் உயிரோடு உளாவுகின்றன.

இனி இந்த “இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை” என்ற நூலினைபற்றி பார்பபோம்.

இந்த நூல் பதினோறு அத்தியாயங்களில் 'இந்திய சமுதாயத்தில் பெண்மை' வளர்ந்துள்ள/அல்லது வீழ்ந்துள்ள விதத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்-முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ள நூல்

ஆதியில் பெண் ‘தாய்’ என்று அறியப்பெற்றாள். ‘ஜனி’ உயிரைப் பிறப்பிப்பவள் என்ற மாண்புடையவளானாள். இவள் பிறப்பித்த உயிர்கள் ‘ஜனம்’ என்று அறியப்படலாயினர். ‘ஜனம்’ என்ற குழுவின் தலைவியாக தாய் விளங்கினாள். இவள் பேராற்றல் மிகுந்தவள். இவள் தலைமையில் மக்கள் வேட்டைக்குச் சென்றனர். குழுவில் இவளே மக்களைப் பெறும் ஆற்றலைப் பெற்றிருந்த காரணத்தினால், ஆண் தலைமைத் தகுதிக்கு உரியவனாக வரவில்லை. குழுக்கள் பெண்களால் தாய்த்தலைவிகளாலேயே அறியப்பட்டனர். தாய்-மக்கள் இந்த உறவுகளைத் தவிர வேறு உறவுகள் இந்தக் குழுக் காலத்தில் தோன்றியிருக்கவில்லை எனலாம். இந்தக் குழுக்களே, தாயாண்மைச் சமுதாயமாக வளர்ச்சி கண்டன.

காந்தாரி ஏன் கண்களைக் கட்டிக் கொண்டாள்? தனக்கு வாய்த்த குருடனான கணவனைக் காணவேண்டாம் என்றா? அல்லது, கணவனால் பார்க்கமுடியாதவற்றைத் தானும் பார்க்கவேண்டாம் என்ற பதிவிரதநெறி காக்கவா? என்ற ஆசிரியரின் கேள்வியில் பெண்களின் நிலை என்ன. 

பெண்ணின் தாய்மை, ஓர் ஆணுக்கு அவள் உரியவளாகாத நிலையில், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதன்று என்ற நீதி அறிவுறுத்தப்படுகிறது. பெண்ணின் கருப்பை இயக்கம்-தாய்மைக்கூறு, அவருடைய உரிமையில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் முதல் அடி இது. தான் தன் உடலின் ஒரு பகுதியாக வயிற்றில் வைத்து உருவாக்கிய சேயை, மார்போடு அனைத்துப் பாலூட்டிச் சீராட்டும் உரிமை, பச்சை இரணமாகப் பிரித்து எறியப்படும் இந்தக் கொடுமை, இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குந்தியே முதல் அடி பெற்ற ஆதித்தாய்.

தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு ஆண்-பெண் உழைப்பு பிரிவினை அடித்தளம் அமைத்தது. ஆடவர் வெளியே சென்று வேட்டையாடினர்; விலங்குகளை உயிருடன் பிடித்துப் பழக்கினர். கொட்டிலில் கொண்டு வந்து கட்டினர். காடுகளை அழித்து நிலம் சீராக்கி, விளை நிலமாக்கியும், நீர் பாய்ச்சியும் தானிய உற்பத்தியிலும் ஈடுபட்டனர். பெண் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி நெருப்பைக் காத்தாள். கன்று காலிகளைப் பேணினாள். நீர் கொண்டு வந்து உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றாள். கன்னிப் பெண்டிர் பால்கறந்து தயிர் மோர் தயாரித்தனர். குழுவினருக்கான தோல், கம்பளி ஆடைகளைத் தயாரித்தனர். இந்தத் துவக்கம், பின்னர் பருத்தி பட்டு நெசவு வேலையே பெண்களுக்குரியதாக ஆயிற்று எனலாம். அடுப்பும், பாண்டங்களும் இவள் கைகளினால் உருவாயின. இல்லத்தில் இருந்தபடி செய்யும் பணிகளனைத்தும் இவள் செய்தாள். தந்தையாண் சமுதாயம், பெண்ணைத் தாய் மக்களிடம் இருந்து பிரித்து, தங்களிடையே ஊன்றச் செய்வதையே திருமண சடங்காக உறுதிப்படுத்தியது. பலவந்தமாகப்பற்றிக் கொண்டுவராமல், அன்போடு அணி கலன்களும், பரிசில்களும் வழங்கி, மகளுக்குப் பிரியா விடை கொடுத்துத் தாய்வீட்டு மக்கள் அனுப்ப, மணமகன் தன் இல்லம் கூட்டி வந்தான்.

தந்தையாதிக்கம், துவக்க காலங்களில் பெண்ணைச் சுதந்தரம் உடையவளாகவே வைத்திருக்கிறது. என்றாலும், பெண் மனையறம் பேணி மக்களைப் பெற்றுச் சமுதாய உற்பத்திக்கு இன்றியாமையாதவளாக இருந்ததால், விருந்தினருக்கும் வேண்டப்பட்டவருக்கும் இவள் சந்ததிக்காக வழங்கப்பட்டாள். தாய்மை நோக்கம், மனித வாழ்க்கையில் சாதனங்களும் பயன்படு பொருட்களும் கூடிய பிறகு, இழிந்து போய், போகம் என்று கூறு தலை தூக்கியது. இந்த நிலையை மகாபாரத இதிகாசத்தில் வரும் பல வரலாறுகள் விளக்குகின்றன.

இந்திய சமுதாயக் கலாசார வரலாறு, எத்தனையோ முரண்பாடுகளைச் சீரணம் செய்திருக்கிறது. ஆனால் பரசுராமன் செய்த தாய்க்கொலை இந்திய மண்ணில், இன்றளவும் சீரணம் செய்யப்பட்டிருக்கவில்லை. புராணங்கள் வாயிலாகவும், நாடோடிக்கதைகள், இலக்கியங்கள் வாயிலாகவும், தொன்னாடெங்கும் குடி கொண்டுள்ள கிராம தேவதைகளின் வாயிலாகவும் நிலை நிறுத்தப்பட்ட பரசுராமர்-ஜமதக்கினி-ரேணுகா வரலாறு, இந்தியப் பெண் தொடர்பான சமூக வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக நிலை பெறுகிறது.  கர்நூல் மாவட்டத்து ஊர்களின் மாதங்கி வழிபாட்டில் பிரதிபலிக்கிறது. ‘மாதம்ம’ வழிபாடு என்றும் இது வழங்கப் பெறுகிறது. தாழ்ந்த குலப் பெண்களின் பிரதிநிதியான ஒரு பெண், ‘மாதங்கி’யாக வரிக்கப் பெறுகிறாள். இவள் ‘சாமி’ வந்து ஆடுகிறாள். ஏனைய நாட்களில், இந்தத் தாழ்ந்த குலத்தினர் உயர் குலத்தோர் அருகில் வந்து நின்றாலே சுட்டெரிக்கப் படும் கொடுமைக்குள்ளாவார்கள். ஆனால், இந்த வழிபாட்டு நாட்களில், பிராம்மணர் முதலிய உயர்குலத்தார், அன்று ‘மாதம்ம’ ஆவி வந்த பெண்ணின் வாயிலிருந்து துப்பப்படும் எச்சிலுக்காக வரிசை நிற்கிறார்கள்; அவர்கள் பாடும் பழி வசைப்பாடல்களை ஆசிகளாக ஏற்கிறார்கள். உயர்குல ஆண்கள் தம் முப்புரி நூலைக் கழற்றிக் கொடுக்கிறார்கள்; பெண்கள் தம் சேலை-ரவிக்கைகளை அவிழ்த்துக் கொடுக்கிறார்கள்.

திராவிட மக்களின் வெற்றித் தெய்வமாகக் ‘கொற்றவை’ என்னும் தாய்த் தெய்வம் கொண்டாடப் பெற்றிருக்கிறாள். 

தமிழ்நாட்டுக் கூத்துக்களிலும், நாடகங்களிலும் துரெளபதையைத் துகிலுரியும் வரலாறு மேடையேற்றப்படுவது வழக்கமாக இருந்தது. அமரகவி பாரதி இதையே அவள் ஆங்காரியாகக் கூந்தலை அவிழ்த்துவிட்டு, பாவித்துச்சாதனன் செந்நீரும் பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தமும் கலந்து குழலில் பூசிக்குளிப்பேன் என்று சூளுரைக்கும் காட்சியை முதன்மைப்படுத்தி, பாஞ்சாலி சபதம் என்ற ஒப்பற்ற காவியமாக்கினார். இந்தத் துரௌபதை, பஞ்சகன்னியரில் ஒருத்தியாகவும், இந்ததியக் கிராம தேவதையாகவும் வழிபடப் பெறுகிறாள். பாண்டவர் துணையில்லாத, தாய்த் தேவதையாக இவள் பாமரமக்கள் வழிபடும் தெய்வமாக விளங்குகிறாள். இவள் வழிபாட்டில், மக்கள் யாரோ செய்த கொடுமைக்குத் தாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்வதுபோல் உடலை வருத்திக்கொள்ளும் நேர்ச்சைகளை மேற்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டில் முக்கியமானது தீமிதித்தல். அநியாய ஆணாதிக்கத் தருமங்களை எதிர்த்துக் குரலெழுப்பிய சக்தி-எழுச்சித் தெய்வமாக இன்னமும் பாமர மக்களின் துரௌபதையம்மன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இராமாயண இதிகாசம், இந்த நாகரிக மேம்பாட்டை அடிப்படையாக்கி, சீதையை நாயகியாக்கிப் புதிய மானிட தருமங்களை நிலைநிறுத்துகின்றது. இந்தத் தருமம், நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆணாதிக்க நீதியாகி பெண்ணின் அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றது. அக்காலத்தில், ஷத்திரியரும், பிராம்மணரும் மாமிசம் புசிக்காதவர்களல்ல; மதுவருந்தாதவர்களல்ல. ஏன்? வரலாற்றுத் துவக்கக் காலத்தில், அகத்திய முனிவர். ‘வாதாபி’ என்ற அரக்கனைப் புசித்துச் சீரணம் செய்த வரலாறும் நரமாமிசம் விலக்கல்ல என்பதையே காட்டுகிறது. சமணசமயம் தலைதூக்கிய காலத்தில்தான் துறவும், புலாலுண்ணாமையும் இந்திய சமுதாயத்தில் இசைந்தன எனலாம்.

சீதை, இராவணனின் எல்லைக்குள் அசோக வனத்தில் சிறை இருக்கும் நாட்களில், இராமன் வருவான், தன்னை மீட்டுச் செல்வான் என்று உயிரை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். இத்தகைய நாயகியை இராமன் சந்தேகப்பட்டானே? அப்போதைய சீதையின் மனோ நிலையாது? அது சோக சிகரமில்லையா? அக்கினியில் புகுந்து தன் தூய்மையை நிரூபித்த பின்னரும், குடிமக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று, பூரண கருப்பிணியான மனைவியைக் கானகத்துக்கு அனுப்பித் தன் அரச குல நியாயத்தை நிலை நாட்டிக் கொள்கிறானே, அது சோகத்தின் நெடு முடியல்லவோ? இராம கதை உண்மையில் வரலாற்று நிகழ்ச்சியா, கற்பனையா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், நடைபெற்ற சில கூறுகள் இதற்கு ஆதாரங்களாக உதவியிருக்கலாம். இந்த மூல இராமாயணக் கதையைப் பின்பற்றி, பல மொழிகளில், பல பிரதேசங்களில் காலந்தோறும் இராம கதைகள் புனையப் பெற்றிருக்கின்றன.

இப்படிச் சபிக்கப்பட்ட ஒரு குலம் இந்திய மரபில், ஆணாதிக்க சமுதாயத்தில் நியாயப்படுத்தப்பட்டு மீள முடியாத தளைகளுக்குட்படுத்தப்பட்டது. ஆணாதிக்கத்துடன் போர் தொடுத்த தாய்ச் சமுதாயத்தினர், தாசிகளாக்கப்பட்டனர். பண்டைய தமிழ்ச் சமுதாயம் கண்டிருந்த விறலியர், பாணர் மரபினர் இப்படி ஒரு நாகரிகத்துக்குள் நெறிப்படுத்தப்பட்டனர்.

இப்படி விலைமகளிருக்கான வாழ்வின் தோற்றுவாய், அன்றைய புராணங்களில் இருந்து இன்றைய பாலியல் வன்முறை அநீதிகள் வரையிலும் ஒரேவிதமாக நியாயப் படுத்தப்பட்டிருக்கிறது. இவள் நித்ய சுமங்கலி. இவள் இருப்பிடமே மங்களமானது. இறைவனுக்கு ஆடிப்பாடி, மங்கள ஆரத்தி எடுத்து ஊழியம் செய்வது போல், இவளை ஆதரிக்கும் பெருங்குடி மக்களுக்கும் இவள் இதே ஊழியங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், ‘கல்லாகிய தெய்வம் இவளுக்குப் பொன்னும் பொருளும் தருமா? அப்படி இவளை ஆதரிப்பவர்கள் இவளுக்குத் தெய்வம் போன்றவர். அவர்கள் இல்லங்களில் இவள் எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் ‘நித்ய சுமங்கலி’யாக இருந்து வாழ்த்து வசனங்களைச் சொல்வாள். தன் உடல் பொதுச் சொத்து என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அவர்கள் அந்த ஆண்கள் தங்கள் பொருள் ஆடம்பர அதிகாரங்களை அவள் மீது செலுத்தத் தலை வணங்கி உடன் படுவாள். இதுவே தாசியின் தருமமாக இருந்தது. அமரகவி பாரதியின் காலத்தில் வாழ்ந்த எட்டயபுரம் அரண்மனைத் தேவதாசி, வள்ளிக் கண்ணம்மாளின் மகள் கூறினாள்- முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு, பாரதி சொன்னார்களென்று, என் அம்மா ஈசுவரனுக்கு வரித்துக் கட்டிக் கொண்ட பொட்டுத் தாலியை அவிழ்ந்து விட்டுக் கல்யாணம் செய்து கொண்டார்... 'ஆனால் கடைசியில் சந்ததி வறுமையினால் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சங்கடப்பட்டார். நூறு வருசம் இதைப் பார்க்கவா வாழுகிறேன்-ஈசுவரனுக்குக் கட்டிக் கொண்ட தாலியை எடுத்துவிட்டு மனிதனுக்கு மனைவியானது பாவமோ’ என்று சங்கடப்பட்டார். இறைவனுக்கு நாயகி நான். கடவுளைத் தொட்டுப் பூசை செய்யும் நீயும் என்னைப்போல் ஒருவன். நீயே கடவுளாக முடியுமா?’ என்று எந்த ஒரு தேவதாசிப் பெண்ணும் இரவில் அதே மலர்மாலையுடன் மஞ்சத்துக்கு வரும் பூசாரிப் பிராம்மணனையும் ஒதுக்கியதாக வரலாறே இல்லை. அவன்தான் முதல் உரிமைக்காரன். உயர்வருணம் குருசுவாமி ‘ஓ, இவன் உறவு கடவுள் உறவே போன்றது; கடவுளின் பிரதிநிதி’ என்று தேவதாசியானவள் உருவேற்றப் பட்டிருக்கிறாள். இந்தத் தேசியத் தலைவர்கள் எதிர்த்தார்கள். திலகர் தம் மகளுக்குச் சட்டத்துக்கு உட்பட்ட இளம் வயதில் திருமணம் செய்தார். ‘தேவதாசி ஒழிப்பு’ வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அந்நாள் சட்டசபையில் பல தேசியவாதிகள் - குறிப்பாகச் சத்தியமூர்த்தி, சீனிவாச சாஸ்திரி - ஆகியோர் கூச்சல் போட்டதாக, மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் தம் ‘தாசிகள் மோச வலை’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இது உண்மையே. இந்த ஆசிரியை, தன் நாவலின் வாயிலாக, ஆங்காங்கு பொட்டறுப்புச் சங்கங்களை ஏற்படுத்திப் பிரசாரம் செய்ததாகத் தகவல் தெரிகிறது. எதிர்ப்பு இல்லாமலிருக்குமா? எட்டயபுரத்து வள்ளிக்கண்ணம்மாள், 1930களில் முத்துலட்சுமி அம்மையும், மூவலூர் அம்மையும் செயல்படு முன்பே, பாரதியார் அறிவுரையின்படி பொட்டறுத்துத் திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் மரபுப் பிடிகள் பதித்த குற்ற உணர்வுகள் கடைசி வரையிலும் அப்பெருமாட்டியை விடவில்லை.

தாயநாயகச் சமுதாயமாக தமிழ்ச் சங்ககால சமுதாயத்தைக் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்குதற்குரிய நெறிகளாக, ஒரு பக்கக் கற்பு நெறியும், கைம்மை நெறியுமே, தீவிரமாக்கப்பட்ட நிலையைக் காணமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் பல பெண்பாற்புலவர்கள் காணப்படுகிறார்கள். அள்ளூர் நன்முல்லையார்; இளவையினார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, பாரிமகளிர், பூங்கண் உத்திரையார், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு, பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினியார், மாறோக் கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார்... என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இப்பட்டியலில் காணப்படும் பெண்கள் அனைவரும் உயர் குடியைச் சேர்ந்தவரல்லர்- வேட்டுவர் குலம், குயவர் குலம் ஆகிய குடிகளில் பிறந்த பெண்களும் புலமை பெற்றிருக்கின்றனர் என்ற செய்தி நம்மைக் கவர்வதாக இருக்கிறது. ஆவியர் குடித் தலைவன் பேகன் என்பவன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து, ஒரு பரத்தையுடன் வாழ்ந்ததும் (புறம் 143-147) சிலப்பதிகாரம் உருவாகச் செய்திகளாக உதவியிருக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். கட்டியவளுக்கு அநீதி செய்வது கணவனின் உரிமை; ஆனால் கணவனுக்கு அநீதி என்று வரும்போது, அவள் இயற்கையின் சீற்றத்தையே எழுப்பி விடுமளவுக்குப் பொங்கெழுச்சி கொள்கிறாள். இந்தக் கற்பு வழிபாட்டுக்குரியது. கற்பு நெறி என்பது, நூற்றாண்டுகள் மனித சமுதாயத்தின் உயிரோட்டமான இழைகளை ஊடுருவி மகளிரின் மனித உரிமைகளைப் பிணிப்பது தெரியாமல் பிணிக்கச் செய்த வரலாறுகள் இவை.

பெண், மாண்ட கணவனுடன் சிதையில் எரிக்கப்பட்டாள்; முண்டிதம் செய்யப்பட்டுக் கட்டாயத் துறவில் ஒடுக்கப் பட்டாள். இல்லையேல் அவள் பொது மகளாகச் சீரழிக்கப் பட்டாள். இந்த இரண்டாம் நிலையில் அவளுக்கு அறிவுக் கண் சிறிது திறக்கப்பட்டதால் ஓர் ஆசுவாசம் கிடைத்தது. தன் துயரங்களை வெளியிட்டுக் கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்பட்டன. ஆனால் முதல் நிலைக் குடும்பக் கூடும்-இரண்டாம் நிலை பொது மகள் அறிவு பெறும் வாய்ப்பும் ஒரு நாளும் இசைந்து விடாதபடி சமூகம் விழிப்புடன் இருந்தது.

பெண்கல்வி நாட்டு விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது என்று அறிவுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். இவரைக் குருவாக ஏற்று, இந்தியாவுக்கு வந்து தொண்டாற்ற விழைந்த மார்கரெட் நோபிள் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு, சகோதரி நிவேதிதா என்று பெயரைச் சூட்டி, இந்தியப் பெண்களின் கல்வித் தொண்டுக்கு உரித்தாக்கினார். ‘இந்நாட்டில் எல்லா உயிர்களிடத்தும் மேலாம் ஆன்மிகம் இயங்குகிறது என்ற கருத்து நிலவிய போதும்’ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எத்துணை வேற்றுமை? ஆண்கள் பெண்களை வெறும் இயந்திரங்களாக, உழைக்கும் உயிர்களாக மாற்றியிருக்கின்றனர்.

எத்தனை சுதந்திரம் இன்று கிடைத்திருந்தாலும் அது எல்லோருக்கமானதாக கருத முடியாத சூழலில் தான் நாம் இன்றளவும் இருக்கிறோம் என்பது மனதில் ஒரு சிறிய வருடலாகவே தான் உள்ளது. 

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதையும் இன்றைய நாளில் அனுபவங்களில்—பெண் அதிகாரியின் கீழ் பணி புரியும் பெண்கள் தங்கள் அதிகாரி தங்களுக்கு வீட்டுக்கு சீக்கிரம் போக அனுமதி தராதபோது வசைபாடும் விதத்தையும் நகைச் சுவையோடு எடுத்துக் கூறியுள்ளது யதார்த்தமாக உள்ளது.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் படிக்க வேண்டிய நூல்.

நன்றி

ரா. தேவேந்திரன்

பெண் ஏன் அடிமையானாள் ? - தந்தை பெரியார்

பெண்ணியம் சார்ந்ந நூல்கள்

நூல்.              : பெண் ஏன் அடிமையானாள் ?

ஆசிரியர்   :  தந்தை பெரியார்



1942 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் சிந்தனைகள் தான் இன்று நாம் அனுபவிக்கும் ஏகபோக சுதந்திரங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 78 வருடங்களுக்கு முன்னரே எழுதிய எழுத்துக்களை படிக்கும் போது அவரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு ஒரு மனித இனம் சிக்கிக்கொண்டிருக்கும் கொடுமைகளையும் அடிமைத்தனத்தையும் உதறி தள்ளி ஒரு புதியதோர் உலகம் காண வேண்டும் என்ற கனவுகளின் விடியலே இன்றைய நிலை .... 

இந்த நூலின் கருத்துக்கள் உலகில் உள்ள எல்லா பெண்களும் எவ்வாறு அடிமைக்கு உட்பட்டிக்கிறார்கள் என்ற உண்மையினை தனது மனதில் ஏற்பட்டதின் விளைவே இந்த நூல்.  இந்த கருத்துக்கள் ஐரோப்பியர்கள், ரஸ்சியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் எந்தெந்த விதத்தில் பெண் அடிமைப்படுகிறாள் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விவரித்துள்ளார்.     


1.கற்பு 

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்றது சரியல்ல அது இருபாலருக்கும் அதாவது  ஆண் - பெண் என்ற இரு சாராரில் பெண்களுக்கு மாத்திரமே அது (கற்பு) வலியுறுத்தப்பட்டிருக்கிறதென்றும், இவ்வலியுறுத்தலே பெண்ணை அடிமையாக்குவதற்குப் பெரிதும் காரணமாய் வந்திருக்கிறதென்றும், ஆண் - பெண் இருவரும் சரிசமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்கிற நிலைமை ஏற்படவேண்டுமானால், மேற்கண்ட  கற்பு என்பதன் அடிப்படையான லட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு அது விஷயத்தில் ஆண், பெண் இருவருக்கும் ஒன்று போன்ற நீதி ஏற்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.


2. வள்ளுவரும்-கற்பும்.

நீதி நூல்கள் என்பவைகள் எப்படிப்பட்ட பெரியோர்களால் எழுதப்பட்டவைகள் என்றாலும் அவை அக்கால நிலையையும், எழுதப்பட்ட கூட்டத்தின் சவுகரியங்களையும் அனுசரித்து எழுதப்பட்டதென்றும், மற்றும் ஒரு நீதியானது எக்காலத்தும் எல்லாத் தேசத்திற்கும், எல்லாக் கூட்டத்தாருக்கும் சவுகரியமாகவும், பொதுவாயும் இருக்கும்படியாக எழுத முடியாதென்றும், ஆதலால் எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும், எல்லோருக்கும் சவுகரியமாயிருக்குமென்றும் கருதி, கண்மூடித்தனமாய், பின்பற்றக் கூடாது  என்றும் வலியுறுத்துகிறார்.


3. காதல்.

காதலைப்பற்றிப் பேசுகிறவர்கள், “காதெலன்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல” என்றும், “அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு. காதல் வேறு” என்றும், “அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்” என்றும், அதுவும் “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” 

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனதிஷ்டத்தை - திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்களென்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.

4. கல்யாண விடுதலை.

கல்யாணம் என்பது ஆண்-பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்கேற்பட்ட ஒரு ஒப்பந்த விழாவே ஒழிய, அதில் எவ்விதத் தெய்வீகத் தன்மை என்பதும் இருக்க நியாயமில்லை என்பதையும், அப்படிப்பட்ட கல்யாணம் சான்பதும் இருபாலார்களுடைய வாழ்க்கைச் சவுகரியத்திற்கு ஒத்து வரவில்லையானால், ரத்து செய்துவிடத்தக்கதே என்பதையும் விளக்க எழுதப்பட்டதாகும்.


5.  மறுமணம் தவறல்ல

கல்யாணம் என்பது முன் குறிப்பிட்டதுபோல ஆண் - பெண் இருவர் வாழ்க்கை சவுகரியத்திற்கும், சந்தோசத்திற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்றும், அது அப்படி இல்லாமல் போகுமாயின், ஒரு தடவை கல்யாணம் செய்துகொண்டோமே, இரண்டு பேரும் உயிருடன் இருக்கிறோமே; இனி எப்படி இதில் யாராவது ஒருவர் மறுமணம் செய்துகொள்வது என்று மயங்காமலும், இந்நிலையில் முன் மணம் செய்துகொண்ட பெண்ணின் கதியோ, அல்லது ஆணின் கதியோ என்ன ஆவது என்பதாய்க் கருதி ஒருவருக்கு அசவுகரியம் ஏற்படுமே என்பதற்காக ஒருவர் கஷ்டப்படுவது என்பதைக் கண்டிக்கவும், மறுமண முறையை இருவரும் கைக்கொண்டால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது என்பதை வலியுறுத்தவும், இன்னின்ன சந்தர்ப்பங்களில் மறுமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் விளக்கவும் எழுதப்பட்டதாகும்.

6. விபச்சாரம்

விபச்சாரம் என்னும் குற்றம் சுமத்தப்படுவதானது பெண்ணுக்கே உரியதாயிருக்கின்றதே தவிர, அது உலக வழக்கில் ஆணுக்குச் சம்பந்தப்படுவதில்லை என்றும் கேள்விகளின் விளைவாக எழுதபட்டது.

7. விதவைகள் நிலைமை

இளம் வயதிலேயே திருமணம் முடித்து விதவையான எத்தனையோ பெண்கள் விதவைத் தன்மையால் அனுபவிக்கும் கொடுமையை எடுத்துக்காட்டவும், அவர்களுக்கு மறுமணம் செய்யவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் எழுதப்பட்டதாகும்.

8. சொத்துரிமை.

பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்படவேண்டுமானால், அவர்கள் ஆண்களுடைய அடிமைகள் அல்லவென்றும், ஆண்களைப்போலவே வாழ்க்கையில் சகல துறைகளிலும் சம அந்தஸ்துடையவர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களானால், உலகச் செல்வங்களுக்கும், போக போக்கியாங்களும் ஆண்களைப் போலவே பெண்களும் உடைமையாளராக வேண்டும் என்பதை வலியுறுத்தவும், பெற்றோர்களுடைய சொத்துகளுக்குப் பெண்களும் ஆண்களைப் போலவே பங்குபெற உரிமையுடையவர்கள் ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தவும் எழுதப்பட்டதாகும்.


9. கர்ப்பத்தடை

பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்றும் பெரியார் கூறுகிறார். பெண்கள் சுயேச்சையாக இல்லாமல் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு சொத்தும், வருவாயும், தொழிலும் இல்லாததால் தங்கள் குழைந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை நாடியே இருக்கவேண்டுகிறதென்றும் ஆதலால் பெண்கள் கருத்தடை அவசியம் என்று பெரியார் எழுதுகிறார்.   

10. பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும்

பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்றும், எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக்கொண்டு தங்களுக்குத் தாங்களே பாடுபடவேண்டும் என்பதை வலியுறுத்தவே எழுதப்பட்டவையாகும்.

நன்றி


Friday, 9 October 2020

உயிரோவியம் - வாசிப்பு அனுபவம்

                                     உயிரோவியம்   - சிறுகதை தொகுப்பு 

 ஆசிரியர் : மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி 




சமீபத்தில் கிண்டிலில்,  ஆசிரியர் மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி அவர்களின்  ஒரு சிறுகதை தொகுப்பான உயிரோவியம் வாசிக்க வாய்ப்புக்கிடைத்தது. 

எழுத்தாளர் எமது  மயிலாடுதுறை  மண்ணின்  மைந்தர். அவர்  எழுதிய மற்றைய நூல்கள்: உயிரோவியம், சுட்ட தோண்டிகள், அழமட்டுமா விழிகள். இந்த உயிரோவியம் சிறுகதை தொகுப்பில் ' அ முதல் ஃ வரை' கொண்ட  'அனுபந்தம்' தொடங்கி, 'அஃகம் சுருக்காதே', என பதிமூன்று சிறுகதைகளை பெரிதும்  பாசதத்துடன் கூடிய உணர்ச்சியின் மற்றும் சமுதாய முற்போக்குடைய   போக்கிலே எழுதியிருக்கிறார்.

பொதுவாக ஒரு ஆசிரியர் எப்போதும் அவர்களின் மண்ணின் வாசனையுடனே ஒரு கதையினை எழுத முற்படுவார்கள் என்பது உண்மையே. நமது தொகுப்பின் ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. ஒவ்வொரு கதையிலும் மயிலாடுதுறையையும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களையும் கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும், சமூக ஆர்வலர் என்பவர்  சமூகத்தை மாற்ற வந்தவர் அல்ல! 

சமூகத்திற்காக தன்னை மாற்றிக் கொள்பவரே!


1.​அனுபந்தம் 

இரு வேறுபட்ட பிரிவினர்களுக்கு இடையே ஏற்படும் காதல் திருமணம் குறித்த இந்த கதையில் இரு வீட்டாரும் எடுக்கும் முடிவு ஒரு நல்ல முடிவாக சொல்லியிருக்கிறார். நாமளும்,அவாளும் முதல்ல மனுஷாடா!அப்புறம்தான்ட மத்ததெல்லாம்.  

அப்பா தனது பெண்ணுக்கு சொல்லும் அழகிய அறிவுரை " வந்தார்.உனக்கு அவாத்துல செட்டாகுமா?  நீயோ சைவம், நம்ம பழக்க வழக்கம் வேற,பூஜைகள்,பண்டிகைகள் இதெல்லாம் வேற, எப்படிமா? எனக்கு அதுதான் யேசனை,வேற ஒன்றும் இல்லை. அது ஒன்றும் பிரச்சினை இல்லைப்பா, நாங்கள் தனியா  ஜாகை போய்டுவோம். அப்புறம்  நீங்க எல்லோரும் வரலாம், அப்படியே நம்மாத்து வழக்கப்படி வழக்கப்படி எல்லாம் செய்வேன்!  எனக் கூறி கொண்டே போனாள். 

ராமனுக்கோ கோபம் வந்தது,அது மட்டும் முடியாது!  என்ன பேச்சு பேசற?  குடும்பத்தை பிரித்து,தனி ஜாகை வைத்து நீ மட்டும் சந்தோஷமாக இருக்கனும்னு நினைக்கறது தப்பில்லையோ! காதல்னா அது உறவுகளை  பிரிந்து நீங்க இரண்டு பேர் மட்டும் சேர்வது இல்லை ,இருவரும் இணைவதால் அது உறவுகளை வளர்த்தெடுக்கனும்!

2.​ஆறாத சினம்

இந்த கதை கோமல் கிராமத்தில் வசிக்கு ஒரு குடும்பத்தினை சார்ந்த விசுவாசமான கதைதான் இது. சின்னய்யாவின் அப்பா இந்த வீட்டு கார் ஓட்டுனராக பணிபுரிந்து விபத்தில் காயத்திரியின் அப்பா அம்மாவும்  கூடவே  மரணமடைந்த பின் யாருமில்லை இவனுக்கு, ஆகையால் வீட்டிலேயே தங்கி வேலைக்கொடுத்து பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர். திடீரென காயத்ரி தற்கொலை செய்துகொண்டதால் மனம் உடைந்த சின்னய்யா காரணம் தேடி அலைந்தான். இதற்க்கு காரணம்  சென்னையில் இருந்து திருவிழாவுக்கு வந்த ஒருவனால் தான்  நம்ம வீட்டு பெண் தற்கொலை செய்தாள் என்று தெரிந்து அவனை தேடி பழிதீர்த்து கொள்கிறான். 

 3.​இயல்பு 

இரண்டு நண்பர்கள் ஒரே இடத்தில வேலை பார்ப்பவர்கள் தங்கள் வீடும் முன்னும் பின்னும் இருந்தது. வழக்கம் போல இரு வீட்டு பெண்களுக்கு இடையே ஏற்படும் சின்ன சின்ன இயல்பான சண்டை சச்சரவால் மனதில் ஏற்படும் சின்ன குறைகளோடு ஓடும் இந்த வாழ்வில் எதார்த்தமான நிகழ்வுகளால் தங்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் நினைத்து தங்களுக்குள்ளே ஒருவிதமாக வெட்கி தலை குனிந்து மீண்டும் இவர்களின் உறவே பலமானது.  - இந்த கதையில் ஆசிரியர் இறுதியில் சொல்லும் ஒரு இயல்பான விஷயம்

"மறுநாள் காலை,மாடியில் கோமதி துணி உணர்த்திக் கொண்டிருந்தாள். அனுசுயாவும் துணிகளை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒருவருக்கொருவர் பார்த்தனர், பேசத்தோணவில்லை, நவீனாவின் நேற்றைய பள்ளி சீருடையை உணர்த்துவதைப் பார்த்தாள் கோமதி, ஏதோ நெஞ்சம் கொஞ்சம் இளகி நெருடியது. ​அப்பொழுது ஏதேச்சையாக மேலே பார்த்தாள் அனுசுயா! அங்கே அவள் வீட்டு தெண்ணை மரம் கிளைக்கு நடுவில் காக்கை கூடும், அருகே காகம் உட்கார்ந்து முட்டை ஓட்டினை வைத்து சாப்பிட, அது தவறி கீழே அனு வீட்டில் விழுந்ததை அனுவும், கோமதியும் ஓரே நேரத்தில் பார்க்க, இவர்கள் கோபமும் கீழே விழுந்த முட்டை ஓட்டைப் போல் சிதற, இருவரும் ஒரேசமயத்தில் புன்னகைத்தனர், வெட்கத்துடன்.

4.​ஈகை 

இந்த கதை ஒரு மேஸ்த்ரி கோபால் 20 ஆண்டுகளாக கணபதிராமிடம் வேலை செய்கிறார். ஒரு நேரத்தில் கோபால் தனியாக வேலை செய்ய திட்டமிட்டார் ஆனால் இதற்க்கு கணபதி முதலில் வேண்டாமென்றும் பிறகு சரியென்று சொல்லி இந்த ஒருவேலை மட்டும் முடித்து கொடு என்றார். ஆனால் கோபால் முழு நேரமும் தனது வேலையில் அதிகம் ஈடுபாடு எடுத்துக்கொண்டார்.  

ஆனால்  இறுதியில் கோபால் இப்படி வாங்க! அம்மா நீங்களும் இப்படி வாங்க! இந்தாங்க ! இதை வாங்கிக்கோங்க! என்றார். ஆம் அது ரவி கட்டிய புது வீட்டின் சாவி என்ன சார் ?என்றார் கோபால் நடுங்கலாக. நீ போறேன்னு சொன்னவுடன் உன் வீட்டை நீயே கட்டி குடி போக சொல்லலாம்னு இருந்தேன் நீ வேற வேலை ஒத்துகிட்டதாலே ரவியை விட்டு செய்யச் சொன்னேன். அவனும் மிக நேர்த்தியாக வடிவமைத்து கட்டி முடித்துள்ளான். அதைதான் உனக்கு கொடுக்கிறேன். இது உன் 20 வருட விசுவாசத்திற்கான பரிசு என்றார்.இருவரும் நெகிழ்ந்து போனார்கள்.

5.​உண்மை 

இந்த கதையில் ரேவதியின் திருமணம் குறித்து பேசப்படும் எதார்த்த உண்மைகள் தான். ரேவதி, குப்புசாமி மற்றும் ராதாவின் ஒரே செல்ல மகள், இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற, தற்காலிகமாக  தனியார்  பள்ளியில் வேலை. இவளின் எதிர்பார்ப்பு ஒருவிதமாகவும் புதுவிதமாகவும் இருக்கிறது. நீ நினைச்சது!  அனைவரும் கிளம்பினார்கள். மாப்பிள்ளை பார்க்க அவர்கள் வீட்டிற்கு. ஒரு மணி நேரம் பயணம். ஆண் பார்க்கும் படலம்…..

6.​ஊழல் ஒழிப்பு 

இந்த கதை நம்ம சமுதாயத்தில் புரையோடி இருக்கும் ஊழல் பற்றிய அழகான கதை. வயோதிக ஆதரவற்ற ஒரு பெண்மணி நாகம்மாள்  தனக்கு கிடைக்கும் அரசு முதியோர் உதவி பணம் கேட்டு விண்ணப்பிக்கிறாள். அதற்கான அதிகாரி இந்த பணம் கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு 3000 பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் ஒண்ணுமே இல்லாமல் நிர்கதியாய் நிற்கும் அந்த முதிய பெண்மணி மயங்கி விழுகிறாள்.  இறுதியில் அதிகாரியின் அண்ணனுக்கு ஏற்படும் உடல்நல குறைவிற்கு அந்த முதிய பெண்மணி நாகம்மாளின் கல்லீரல் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

மறு நாள் அலுவலகம் வந்தார். அதிகாரி, அனைத்து கோப்புகளயும் உடனடியாக பார்த்து ஓகே செய்தார்.  அவன் முன்னே நாகம்மாளின் மனு ஆவணங்கள் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. அதில் இருந்த அந்த அம்மாவின் போட்டோவை எடுத்து தன் மேஜைக்கு மேலே கண்ணாடிக்கு கீழே வைத்தார். அழுகையால் தன் மனதில் உள்ள கறையைக் கழுவிய அதிகாரி.

7.​எச்சம்

இந்த கதை ஒரு காதலர்களின் கதை. ஆமாம்  விஜியும், சுந்தரும் இருவரும் காதலர்கலாக இருந்து மணமானவர்கள். எதிர்பாராத விபத்தில் சுந்தர் தவறிவிட்ட சூழ்நிலையில் விஜி. பறவையின் எச்சம் பட்டுப்போன மரத்தின் வேரின் இடுக்கில் விழுந்தாலும்,பட்ட மரம் அதனை வளர்த்தெடுக்க மறுப்பதில்லை.ஆணிவேர்க்கும் அதனால் எந்த பாதிப்பும் வருவதும் இல்லை. நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாய் இந்த விதையை போட்டுவிட்டு பறவை பறந்திடுச்சு!அதை வளர்க்க வேண்டியது என் பொறுப்பு. அவரின் வாழ்க்கையில் மிச்சாமாய் ஆணிவேராகிய அப்பாவை காப்பதும் என் பொறுப்பு என்று தீர்க்கமாக கூறும் விஜியின் கருத்தாக ஆசிரியர் சொல்லியிருப்பது மிக அருமையானது.

8.​ஏ(மா)ற்றம் 

சத்யன், சென்னையிலேர்ந்து வந்த மிகப்பெரிய தொழிலதிபரும்,சிவ பக்தருமான பசுபதீ ஐயாவை அருகிலிருக்கும் எல்லா சிவஸ்தலங்களுக்கு அழைத்து சென்று அதன் வரலாறு எல்லாம் சொல்லி மிக அழகாக செய்தான். அவனின் செயலினை கண்ட பசுபதி அவனை தன்னுடனே அழைத்து சென்று சென்னையில் தனது ஆன்மிக வேலைகளெல்லாம் பார்த்துக்கொள்ள சொன்னார்.

நன்றாக போய்க்கொண்டிருந்த அவனது வேலையில் ஒரு சமயத்தில் அவனுக்கு அகங்காரம் கூடி தன்னை இந்த பசுபதி ஐயாவிடம் அறிமுக படுத்திய தனது ஊரின் குருக்கள் சென்னைக்கு வந்ததை கூட அவன் கண்டுகொள்ளவில்லை. சத்யா,உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணோமோ, அவருக்கே இப்படி பன்னலாமா? என்று சொல்லிவிட்டு குருக்கள் சென்றுவிட்டார். 

பசுபதி ஐயா,வீட்டிற்கு வந்தா்,  சற்று சிடுசிடுவென இருந்தார்,ஆடிட்டரிடம், பேசினார்,அவர் பேசியதிலிருந்து ஒரு யூனீட்டில் பெரும் நட்டம் என்பது புரிந்தது. அதனால் இவன் கிட்டவே போகவில்லை. மறுநாள், அவராகவே இவனை கூப்பிட்டு உங்க கோவில் குருக்கள் வந்தாரே அவருக்கு என்ன செஞ்சிங்க சத்யா! என்றார், இல்லை, அது , வந்து , நான் வந்து பார்த்துவிட்டு செய்யறேன்னு சொன்னேன். அதான்!  எனக்கு அந்த கோவில்தான்டா, எல்லாம் கொடுத்தது. நீ அந்த கோவிலுக்கு செய்ய மறுத்ததாலதான் இன்றைக்கு எனக்கு இவ்ளோ பெரிய நஷ்டம். என கடிந்து கொண்டார்,உடனே பணம் எடுத்துகிட்டு போய் அந்த வேலையை முடிச்சிட்டு வா, என கட்டளையிட்டார்.

சத்யன் தனக்கு ஒரு பெரிய வேலை கிடைத்தவுடன் வந்த பாதையினை மறந்தான் அதனால் என்ன நடக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.  

9.​ஐயனார் 

இந்த கதையில்,  ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளதால் வடபாதியாகவும்,தென் பகுதி தென்பாதி எனவும் பிரிந்துள்ளது, இரு கிராமத்திற்கும் இடையே உள்ள ஐயனார் கோவில் தான்  பகைக்கு காரணம், இந்த இரண்டு கிராமங்களுக்கு எப்படி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற பின்னணியில் செல்லும் ஒரு கதைதான் இந்த கதை.

10.​ஒற்றை நாணயம் 

கிராமத்தில் சிறுவயதில் தந்தையை இழந்த நாரயணன் தனது படிப்பை நிறுத்திவிட்டு அம்மா இருமலுடன் ஆஸ்துமா நோயாளி கவனித்து  பார்த்துக்கொண்டு மற்றும் இரு தங்கைகளை நல்ல முறையில் படிக்க வைத்து குறையின்றி திருமணம் செய்து வைத்தான். ஆனால் தான் திருமணம் செய்யாமலே இருந்தான் பின்னர் காலத்தின் கட்டாயத்தின் பேரில் உறவின் முறையான கற்பகத்தை கரம் பிடித்தார். அதுவரையிலும் அவரே உணவு சமைத்தார் ஆனால் கற்பகம் வந்த பிறகு அவருக்கு அதிலிருந்து ஓய்வு.  காலத்தின் நிலை அவர் கற்பகத்தையும் புற்று நோய்க்கு பறி கொடுத்துவிட்டார். தனது குழைந்தைகள் வெளிநாடுகளில் செட்டில் ஆனதால் இறுதியில் மீண்டும் தனிமையில் தள்ளப்பட்டார்.   

11.​ஓரகத்தி

இந்த கதை வீட்டிற்கு வரும் இரண்டாவது மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே ஏற்படும் சின்ன சின்ன வருத்தங்களும் கொண்டதாகும். இதில்  மூத்த மருமகள் எப்படி தன்னோட ஓரகத்தியை ஒரு அம்மா போல இருந்து வழிநடத்துகிறாள் என மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

நம்ம பெண்கள் வாழ்க்கை,பயிர் நாத்து மாதிரி,பிறப்பது பிறப்பது  ஓரிடம், வாழறது ஓரிடம், வளர்த்தவங்க, கூட வளர்ந்தவங்க என அனைத்தையும்  விட்டுவிட்டு வேறிடத்தில்,புதிய மணிதர்களுடன்,புதிய வாழ்க்கை  வாழனும்,அதற்கு பொறுமையும், விட்டுகொடுத்தலும் மிக அவசியம்.அதனால்தான் அந்த குணங்களை நமக்கு நிறைய கிடைக்கப் பெற்றோம், அதை பயன்படுத்தி குடும்பம் தழைக்க வைக்க நம்மால் மட்டுமே முடியும். நீங்க எனக்கு ஓரகத்தி இல்லை என் அம்மா என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் இளைய மருமகள்.

 12.​ஒளஷதாலாயம்

புதிய நீதிபதியாக   திரு. ராமன், தனது மாவட்டத்தில் பதவியேற்று இன்று முதல்  அமர்கிறார். தனது முதல்நாளே அவருக்கு மிகவும் நெருடலான ஒரு தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது. அது அவருடைய பள்ளிக்கூட நண்பரின் தீர்ப்பு. அவரின் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்ததை அவர் தீர்ப்பை மிக அழகாக சொல்கிறார்.  இவ்வளவு வருடங்களாக குற்ற உணர்ச்சியில் இருந்த எனக்கும்  இப்போது மனதுக்கு ஆறுதலாக மருந்து இட்டது போலவும்,அவன் செய்தகொலைக்குப் பதில் தூக்கு தண்டனை சரியான தீர்பாகாது,சிகிச்சையே அவசியம்.அவனைச் சுற்றிலும் எப்போதும்  ஆட்களும்,அவன் திறமைக்கு வடிகாலாக ஓவியமும் இருந்தால்,அவன் மனம் தவறை நாடாது.

13.​அஃகம் சுருக்காதே

இந்த கதை மிக முக்கியமானது எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் அளவு முக்கியம் என்பதை மிக நேர்த்தியாக சொல்கிறார். நியாய விலைக்கடை. பெயருக்கேற்ற நியாயம், அளவில் இல்லை. என்பதே இவர்களின் முக்கிய விவாதமாக  இருந்தது அந்த மாஞ்சோலை கிராமம்,ரேசன் கடை,ஊழியர்கள், சரவணன் எழுத்தர் ஆகவும்,அரி எனும் அரிச்சந்திரன் உதவியாளராக பணி புரிகின்றனர் இவர்கள்தான். அது அந்த கடையில் இருக்கும் .ஒரு துப்புரவு பணியாளர் தன்  மகள் படித்துக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.அஃகம் சுருக்கேல்! அதாவது தானியங்களை சுருக்காதே!  எந்த பொருளாயினும்,எந்த துறையானாலும்  அதற்குண்டான அளவும் முக்கியம், என  படித்தது ஞாபகம் வந்தது. அரிச்சந்திரனின் மனைவி இறந்து போது, போதும்டா,  இந்த நீளம்,ஆழம். அந்த அரிச்சந்திரன் செய்கிற வேலைக்கு அவன் மனைவிக்கு இதுவே அதிகம்,இவனுக்காக மெனக்கடாதே, அவன் செய்யற வேலையிலே, அரிசி கேட்டா இன்றைக்கு மண்ணெண்ணை தருகிறோம் என்பான். சரக்கே இல்லை என்பான்,  பயறுகளில்,அரிசிகளில் கலப்படம்,செய்வான்,அரிசி,சீனி,மற்ற அனைத்து பொருட்களிலும் அளவை குறைத்துதான் எடை போடுவான்.பேர் மட்டும் அரிச்சந்திரனாம்! என வசை பாடினான்.  மற்றொருவன் சின்ன குழி போதுமென சொல்ல அதுக்கு மற்றொருவன் மறுத்து இது எல்லா துறைக்கும் பொருந்தும்டா என் பொண்னு  சொல்லிச்சுடா,  நம்ம தொழில் பிணத்திற்கு குழி எடுக்கிறது, அதோட அளவும் முக்கியம்தானே,  நாய், நரி தோண்டாம  இருக்கனும், அதுதான் நாம வாங்குகிற காசுக்கு மரியாதை. எனக்கூறிக்கொண்டே வேலைசெய்தான். இது ஒரு கனவில் மயானம் வரை வந்து உண்மையை உணர்த்திய மனைவி் தெய்வமாக காட்சியளித்தாள்.  அவனை நேர்மை ஆட்கொண்டது.



Sunday, 27 September 2020

கர்துங்லா சென்னையில் இருந்து லடாக்

நூல்          : கர்துங்லா சென்னையில் இருந்து லடாக்

ஆசிரியர்   : இரா.கோகிலா பாபு

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


இந்த மின்னூலின் வழியே சகோதரி இரா.கோகிலா பாபு சென்னையில் இருந்து லடாக் வரை ஒரு சாலைப் பயணம் நம்மை அழைத்து செலகிறார் வாருங்கள் நாமும் தொடருவோம்....


சாலை வழியாக இவ்வளவு தூரம் சொந்தக் காரில் பயணிப்பதுதான் முதன்மை நோக்கம், என்பதால் சுற்றுலாவை போல் ஆங்காங்கே நிறுத்தி ஊர்சுற்றி பார்த்து விட்டு செல்லும்படி திட்டமிடவில்லை. தங்குமிடத்தையும் முன்கூட்டியே பதிவு செய்யவில்லை. சென்னையிலிருந்து பஞ்சாப். அங்கே வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு, அங்கிருந்து லே லடாக்கில் உலகின் உயரமான வாகனம் பயணிக்கும் இடங்களில் ஒன்றான கர்துங்லா பாஸ். இந்த இரண்டு இடங்கள் மட்டுமே கண்டிப்பாக பார்க்க வேண்டியவை என்றும் மற்றவை வழியில் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம். கூகுள் மேப் பஞ்சாப் செல்வதற்கு நாக்பூர் வழியாக செல்வது சுலபம் என்றது. ஆனால் ஏற்கனவே லே சென்றுவந்த ரமேஷ் முரளி அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மும்பை வழியாக செல்வது நல்லது என முடிவு செய்தோம். 350 கிலோமீட்டர்கள் அதிகம் இருந்தாலும் சாலை நன்றாகவும் தங்குவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் அதிகம் இருக்கும் என்பதாலும் இந்த வழியை தேர்வு செய்தோம்.


அகமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஒரு மணி நேர டி டூரில் இருந்தது. மாலை 3 மணி அளவில் ஆசிரமத்தை அடைந்தோம் நுழைவு கட்டணம் ஏதுமில்லை. முதலில் நம்மை வரவேற்பது வினோபாவும் மீராவும் தங்கியிருந்த எளிமையான குடில். அருகிலேயே காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் தங்கியிருந்த ஹிருதயகஞ்ச் எனும் இல்லம் இருக்கிறது. வாசலில் வலதுபுறத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டையுடன் கூடிய வரவேற்பரை இருக்கிறது. இங்கேதான் பொதுவாக தன்னைச் சந்திக்க வருவர்களிடம் பேசுவார் காந்தி. உள்ளே நுழைந்ததும் வலதுபக்கம் கஸ்தூர்பாவின் அறையும் இடது பக்கம் காந்தியடிகளின் அறையும் இருக்கிறது. நடுவில் வெளிச்சம் வரும்படி திறந்தவெளி முற்றம் உள்ளது. காந்தி, மோகனிலிருந்து மகாத்மாவாக மாறிய சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. காந்தியின் அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பொருட்கள் அவர் பயன்படுத்திய பொருட்களைப் போலவே (ரெப்ளிகா) செய்து வைக்கப்பட்டுள்ளன.


காட்டில் திரியும் மான்கள், பெருங்காது எருமைகள், ஒட்டகம், மயில் மற்றும் பறவைகள் என கவிதையாக விடிந்தது அந்தக்காலை. எவ்வளவு தூரம் ஓட்டினாலும் நல்ல கழிவறைகளுடன் கூடிய உணவகமோ அல்லது பெட்ரோல் பங்க்கோ வருவதற்கு வாய்ப்பே இல்லை போல் தோன்றியது.


ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அடைந்தோம். நாம் சிறுவயதில் இருந்து அதிகம் கேட்ட தேசபக்தி சம்பவம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க முடியும். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்லும் குறுகிய வழி, பீரங்கியை நிறுத்தி வைத்து சுட்ட இடம், தப்பிப்பதற்காக மக்கள் குதித்து மாண்ட கிணறு அனைத்தையும் பார்வையிட்டோம். மாண்டவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஒன்று உள்ளது. சுவற்றில் 36 இடங்களில் குண்டு துளைத்த பகுதி அடையாளப் படுத்தப்பட்டு வேலியிட்டு பாதுகாக்கப் படுகிறது.


இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பேருந்து கேட்டினை கடந்து சென்றபின்னர் நிகழ்ச்சியை துவக்குகிறார்கள். முதலில் தேசபக்தி பாடல்கள் ஒலிபரப்பாகிறது. பிறகு அந்த தேசபக்தி பாடல்கள் பிண்ணனியில் ஒலிக்க நிகழ்ச்சியை காணவந்த பெண்கள் சிலரை அழைத்து தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வரிசையாக செல்ல வைத்தார்கள். பிறகு அவர்களே உற்சாக நடனம் ஆடினார்கள். இந்தப் பக்கம் 5000 பேருக்கு மேல் அமர்ந்திருக்கும் இந்திய அரங்கில் இப்படி கொண்டாட்டம் அரங்கேறிக் கொண்டிருக்க அந்தப் பக்கம் பாகிஸ்தான் அரங்கத்தில் மிகச் சில பேர் வந்து அமர்கிறார்கள். பெரிய அளவிலான மூவர்ணக் கொடி ஒன்றினை மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்து அடுத்தவர் கைக்கு மாற்றி அரங்கு முழுவதும் ஒரு சுற்று சுற்றி வர வைத்தனர். நிகழ்ச்சி முழுவதையும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் ஆபிசர் ஒருவர் ஒழுங்குடன் நடத்திச் சென்றார். ஹிந்தி மட்டும்தான் பெயரளவிற்கு கூட ஆங்கிலத்தில் எந்த அறிவிப்பும் இல்லை.  பணம் மற்றும் மொபைலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி முடியும்வரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களை போற்றும் விதமாகவும் வெற்றியை நினைவு கூறும் விதமாகவும் அந்த நினைவிடம் அமைந்திருந்தது. கார்கில் போரில் பங்கேற்ற சிறிய ரக போர் விமானங்கள், ஆயுதங்கள், சிதைந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகளின் பாகங்கள், எந்தெந்த மலைச் சிகரங்களை எப்படி மீட்டோம் என்று விளக்கும் படியான மினியேச்சர்கள், வீர மரணம் எய்திய வீரர்களின் பெயர்களை தாங்கிய நினைவு கற்கள், அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட சுவர்கள் பார்கலாம் வாருங்கள்.


அதீத தலைவலி, மூக்கில் நீர்வடிதல், காது அடைத்தல், வாந்தி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஆல்ட்டிடியூட் பிரச்சனையின் பொதுவான அறிகுறிகள். ஆல்டிடியூட் பிரச்சனைக்காக டையாமாக்ஸ் எனும் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு அதிகம் தண்ணீர் குடிப்பதும், பதட்டமின்றி அமைதியாக இருப்பதும், ஒரே நாளில் அதிக உயரத்தை ஏறி உடலை துன்புறுத்தாமல் பாதி உயரம் ஏறி ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு மறுநாள் மிச்ச உயரத்தை ஏறுவதும் சிறந்த தீர்வாகும். இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் பக்க விளைவாக உடலில் பொட்டாஷியம் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே வாழைப்பழம் ஆரஞ்சு முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 18000 அடி உயரம் என்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்பதால் 30 நிமிடத்திற்கு மேல் அங்கே இருப்பது நல்லதல்ல. அங்கிருந்து தொடர்ந்து பயணித்து நர்பா வேலியை அடையலாம் அல்லது திரும்ப லே நகருக்கு வந்துவிடலாம்.  


உலகின்  அதிக உயரத்தில் உள்ள வாகனங்கள் செல்லக்கூடிய பாதை என இந்த இடம், உச்சியை அடைந்ததும் நீங்கள் 18 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறீர்கள் என்று எழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொன்டனர்கள்


பன்னிரண்டாம் நாள் காலை அங்கிருந்து கிளம்பி இரவு தங்காமல் தொடர்ந்து தோராயமாக 2000 கி.மீ. பயணித்து பதிமூன்றாம் நாள் காலை சென்னை வந்து சேர்ந்தோம். மொத்த பயண தூரம் கிட்டத்தட்ட 8000 கி.மீட்டர்கள். பதின்ம வயதுக் குழந்தைகளுடன் குடும்ப சகிதமாக, மண் சரிவினால் ஏற்பட்ட தடைகளை மீறி இப்படி ஒரு சாகசப் பயணம் சாத்தியமானதில் மிக்க மகிழ்ச்சி. எப்போதும் போன்ற ஒரு பயணமாக இல்லாமல் என்றென்றும் மகிழ்வுடன் நினைவுகூரத் தக்க நிறைவான சாகசமாக அமைந்துவிட்டது இப்பயணம்.


மிக்க மகிழ்ச்சி, இப்படியொரு சாலைபயணத்தினை முன்னெடுத்து செயத்து மற்றும் வெற்றிகரமாக முடித்துவந்த சகோதரி இரா. கோகிலா பாபு எனது வாழ்த்துக்கள் 💐💐


அருமையான பயணநூல் 


வாசித்த மகிழ்ச்சியடன் 

நன்றி 

ராம தேவேந்திரன்