Wednesday, 22 September 2021

கருக்கு

 கருக்கு

ஆசிரியர் : பாமா 

காலச்சுவடு பதிப்பகம்  

விலை  ரூபாய் 140

பக்கங்கள் 118



வாழ்வில்  அனுபவித்த வலிகளை,  நம்மிடம், தனது இயல்பான பேச்சு வழக்கிலேயே அருமையான வரிகளாக தொடுத்து கொடுத்திருக்கிறார்.

கருக்கு வாசித்து முடிப்பதற்குள் மனதில் எத்தனையோ விதமான இனம் தெரியாத வலிகள். தேக்கி வைத்த நீர் எவ்வாறு மடை திறந்தவுடன் வேகமெடுத்து ஓடுமோ அதுபோலவே தனது மனதில் தேங்கிக் கிடந்த குமுறல்களைச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர் பாமா.


மிகவும் முக்கியமான ஒரு படி மதிப்பு உயருகிறது ஏனெனில் கருக்கு சொல்லும் விதமே தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இயல்பான பேச்சின் பிரதிபலிப்பே மொத்த பக்கத்திலும் பார்க்கமுடிகிறது.

ஒரு தலித் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்து நன்றாகப் படித்து ஒரு வேலைக்கும் போனபிறகு அந்த வேலையினை விட்டுவிட்டு கன்னியாஸ்திரீ ஆகி நாம்போல ஏழை மக்களுக்குப் பணி செய்யவேண்டும் என்ற கனவுகள் ஒரு பகல் கனவாகிப் போனதால் எல்லாத்தையும் விட்டு தோப்பிலிருந்து எடுத்து வந்து நட்ட தனிமரம் போல ஆனால் ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த வழிகளும் வலிகளும் எனக் கருக்கு நமக்குக் கொஞ்சம் சுருக்கு என்று சமுதாயத்தின் அவலத்தினை அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

ராணுவத்தில் அப்பா வேலைசெய்கிறார் ஆனால் அவர் குடும்பம் வறுமையில் வாழ்கிறது அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நிலைக்கு போது யார் மீது குறைபட்டுக்கொள்வது!!

ஒவ்வொருவரும் நாம் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த ஊர்களைச் சொல்லும் போது மனதில் வரும் ஒரு விதமான ஊற்றுபோன்ற வர்ணனைகள் சொல்லவே வேண்டாம் இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை அந்த ஊருக்குள் ஒரு உலா அழைத்துச் சென்றேவிட்டது. கம்மாக்கரையில் கரைபுரண்டோடிய தண்ணீர் அதிலே துள்ளி குதித்தோடும் மீன்கள், காடுகளில் சுள்ளி பொறுக்கி வந்து விற்கிற அனுபவம். கிராமத்தில் வெள்ளந்தியாக வேலை செய்யும் விலைமதிப்பில்லா ஆட்கள் அவர்களைச் சுரண்டும் நிலக்கிழார்கள். வெளியுலகம் தெரியாத மனிதர்களின் மாசற்ற பிரதேசம்.   

சிறுவயதில் ஏன் கடவுளை வணங்குகிறோம் என்று தெரியாத வேளையில் கூட விடிய விடிய விதவிதமான ஜெபங்கள் செய்த அனுபவங்கள் ஆனால் வாழ்வில் ஒரு முதிர் நிலைக்கு வந்த பிறகு அப்போது செய்தது எல்லாம் ஒரு விதமான அடிமைத்தனம் என்ற ஆணித்தரமான பார்வை உண்மையினை உரக்கச் சொல்கிறது.

சாதி என்ற ஒரு கொடிய நோய் பின்தொடரும் இடங்கள் ஒன்றா இரண்டா இல்லை அது பின்தொடராத இடமே இல்லையென்றே சொல்லவேண்டும்.

பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து, கிராமம், கடைத் தெரு, சுடுகாடு, போக்குவரத்து, உழைப்பு, உணவு, மனநிறைவுக்காகப் போகும் தேவாலயங்கள் என எல்லா இடத்திலும் கூடவே கொடுமை செய்யும் ஒரு மிகப் பெரிய தீய சக்தியாக வருவது மனதை வருடத்தான் செய்கிறது.

கிராமத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறைகள் அவற்றிலும் கொடுமைக்குள்ளாவது ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு வலியே. 

தனது மதத்தில் அங்கீகாரம் இல்லையென்றுதான் வேறொரு மதத்தினை நாடிச்செல்கின்றனர் ஆனால் அங்கேயும் இதே  சாதிய பாகுபாடு இருக்கிறதென்றால் வேறெங்குதான் போவார்கள் இவர்கள்.  

கல்லூரி காலத்தில் பெற்ற பல்வேறு அனுபவங்களைச் சொல்லும் விதம் நம்மையெல்லாம் கொஞ்சம் சிந்திக்கவே செய்கிறது. ஒரே உடையுடன் ஒரு வாரக் காலம் கடத்தியது பிறகு படிப்பில் காட்டிய விவேகத்தில் விலகியவர்களும் வந்து உறவாடியது தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது இப்படியும் இந்த சமுதாயம் இருக்கிறது என்ற ஒரு பெரிய கேள்விக்குப் பதில் இல்லாமலே இருக்கிறது.

கன்னியாஸ்திரீ ஆகி சேவை செய்யலாம் என்று அங்கே போனாலும் அதற்குள்ளேயும் சாதியும் சதியும் சேர்ந்து வந்து ஆட்டம் போடுகிறது பாவம் என்ன செய்வது தனித்து வருவதைவிட வேரென்ன செய்யமுடியும் இந்த சமூகத்தில்.  இந்த மடத்தில் சேரும் போது இருந்த திடம் வெளியில் வரும்போது இல்லை என்று சொல்லும்போது எத்தனை சோகங்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

வாழ்வில் விசாலமான வழியென்று வீரநடை போட்டுச் சென்ற பிறகுதான் தெரிகிறது வந்த வழி நமது வழியில்லை என்று. தவறான இடத்தில் இருந்து வெளியே வருவது எளிதான செயலல்ல, அப்படியும் தீர்மானமாக வெளியேறியதும் வந்து அனுபவிக்கும் துயரங்கள் ஏன் என்றே தெரியாத ஒரு விதமான சாபம் என்று கூடச் சொல்லலாம்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 செப்டெம்பர் 2021               

Saturday, 18 September 2021

தமிழர் திருமணம் - வாசிப்பனுபவம்

தமிழர் திருமணம்

ஆசிரியர் : ஞா. தேவநேயப் பாவாணர் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 120


ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக  திருமணம் இருக்கிறது. அன்று தொற்று, இன்றுவரை ஏன் இன்னும் வரும் சங்கதிகள் என நம் தமிழர்களின் வாழ்வில் பெறப்படும் ஒரு பெரிய மாற்றமும் சடங்கும் எனச் சொன்னால் அது திருமணம் தான்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த இரண்டு மனங்கள் இணையும் ஒரு விழாதான் திருமணம். இந்த புத்தகம் நம் பாரம்பரியத்தின் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது, காலப்போக்கில் அது எவ்வாறெல்லாம் மாற்றத்திற்கு உள்ளானது என்பதை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.

பண்டையத் தமிழ்த்  திருமணம்    கொண்டிருந்த சடங்கு, தமிழ் முறையில் செய்த திருமணம், காலப்போக்கில் பிராமணர்கள் வந்த போது முதலில் அரச குடும்பத்தில் இவர்கள் திருமணம் சடங்கினை செய்தனர் பிறகு பெரு நிலக்கிழார்கள் பிறகு சாதாரண குடிமக்கள் என இவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழ் முறை மாறி வடக்கு மொழியுடன் இவர்களின் திருமண சடங்குகள் நிறைவேறின.

கொடை மணம், காதல் மணம் மற்றும் கவர்வு மணம் என்ற  மூன்று வகையான திருமணம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் குலமுறையின் வழியே அகமனம் அதாவது ஒரே குலத்தில் பெண்கொடுத்து பெண் எடுப்பது  மற்றும் புறமணம் என்பது வேறு குலத்திலிருந்து பெண் எடுப்பது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு மனையும்பல்மனையம் மற்றும் பல்கணவம் மூன்று வகையாக மணமக்கள் வாழ்வியல் முறைகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

கன்னி மணம் (முதல் திருமணம்), கட்டுப்பட்டவள் மணம் (இரண்டாவது மணம்) மற்றும் கைம்பெண் மணம் என மூன்றுவகையான திருமணம்.   

திருமண வயது பொதுவாகப் பெண்ணிற்கு 12 ம் ஆணுக்கு மணமகனுக்கு 16ம் எனக் குறிப்புகள் கூறுகிறது என்கிறார்.  மணப்பேச்சு என்பது பெண் பார்க்கச் செல்வதும் பிறகு பொருத்தம் பார்த்த பிறகு திருமண உறுதி (நிச்சயதார்த்தம்)  செய்துகொள்வதும் எனத் திருமண நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன. திருமண ஆசிரியரின் எல்லா சடங்குகளைச் செய்து தாலி எடுத்து மணமகன் கையில் கொடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டச்சொல்வர். பிறகு பெரும்பாலான பின் நிகழ்வுகள் நடைபெறும்.

இடைக்காலத்தில் இவ்வாறாக இருந்துவந்த பெரும்பாலான சடங்குகள் மாற்றங்களுக்கு இடையில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாகப் பழமை இழந்து புதிய வழக்கங்கள் புகுந்துவிட்டன. முதலில் வடமொழியினை கொண்டு செய்ய ஆரம்பித்த ஆரியக்காரணத்தால் தமிழுக்கு ஏற்பட்ட பல்வேறு தாழ்வுகளைக் குறிப்பிடுகிறார்.

பிறகு சீர்திருத்தத் திருமணம் பற்றி பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்களைக் குறிப்பிடுகிறார். சித்தூர் மார்க்க சகாய ஆச்சர்யார், மறைமலையடிகள், திரு.வி. கலியாணசுந்தரர் மற்றும் ஈ.வே. இராமசாமிப் பெரியார் என இவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தத் திருமண சடங்குகள் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ளவேண்டிய பல்வேறு குறிப்புகள் மற்றும் பார்க்கவேண்டிய பன்னிரண்டு பொருத்தம் என மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

குலவெறி கொல்லாமை, பரிசம் வாங்காமை,நாளும் வேளையும் பாராமைபிறப்பியம் பாராமை, மணம் பற்றிய செய்திகளைத் திட்டமாய் முடிவுசெய்தல், தாய்மொழி கரணம் செய்வித்தல், வீண் சடங்குகளை விலக்கல், செல்வ நிலைக்கேற்ப செலவு செய்தல், மணநாளன்றோ மணமக்கள் கூட்டுதல், மணமக்களின் நல்வாழ்வை விரும்பல் என பல்வேறு சிறப்பான குறிப்புகளை மணமக்களின் பெற்றோர்களின் கவனத்திற்குக் கொடுத்திருக்கிறார்.

மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்கவேண்டியவை மற்றும் சமூகம் அல்லது அரசியலாளர் போன்றோர் கவனிக்கக்கூடிய குறிப்புகள் என பல்வேறு விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னிணைப்பாக பல்வேறு திருமண அழைப்பிதழ் மாதிரிகள், வாழ்த்து மடல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சி நிரல் என நம் தாய் மொழியில் மிகவும் சிறப்பாகக்  கொடுத்திருக்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

18 செப்டெம்பர் 2021

வா தமிழா ! பொருளாதாரம் பயில்வோம்

 வா தமிழா ! பொருளாதாரம் பயில்வோம்

ஆசிரியர்: பா.ச. பாலசிங் சந்திரசேகர்

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 52


இந்த புத்தகம் எளிமையான முறையில் பொருளாதாரத்தினை கற்றுத்தருகிறது. அடிப்படை பொருளாதாரம் பற்றியும்,   பொருளாதாரம் எவ்வாறு மக்களின் வாழ்நிலையினை சேர்த்து மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். 

ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டியது ஏனெனில் நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையுடன் ஒன்றற கலந்து தான் பொருளாதாரம். நாம் வாழத் தேவையான ஆதாரமே பொருள் தான் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த புத்தகம் எளிமையாக இருக்கிறது.

ஆசிரியர், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் கேட்கும் கேள்விகள், அரசியல் களத்தில் பேசப்படும் வார்த்தைகள் என ஒவ்வொரு பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு மிக நேர்த்தியாக இந்த புத்தகம் விவரிக்கிறது.

அடிப்படையில் பொருளாதாரம் நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவைகள் 

1. பாரம்பரியப் பொருளாதாரம் 

பாரம்பரிய பொருளாதாரம் என்பது நாம் பண்டைய காலத்தில் வாழ்ந்த மற்றும் பழகிவந்த ஒரு பொருளாதார முறையே இந்த முறை. இங்கே பெரும்பாலும் தன்னிறைவு பொருளாதாரம் இருந்துவந்தது ஆனால் காலப்போக்கில் இந்த முறை மேன்மேலும் மாறிவருகிறது. இந்த முறையில் பெரும்பாலும் கூட்டு குடும்பாகவே வாழ்ந்து வந்தனர். இயற்கை விவசாயம், மீன்பிடிப்பது போன்ற வகையான வாழ்க்கையினை இவர்கள் பின்பற்றினார்கள். இதனால் இவர்கள் எப்போதும் தங்களுக்குத் தேவையான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வார்கள்.  இன்றைய சூழ்நிலையில் இந்த வகையான பொருளாதாரம் முற்றிலும் வழக்கொழிந்து போய்விட்டது என்றே சொல்லலாலாம்.              

2. கட்டளைப்  பொருளாதாரம் 

இந்த பொருளாதாரம், அரசாங்கம் எடுக்கும் முடிவை பொறுத்தே இருக்கும். வெவ்வேறு நேரங்களில் மாற்று அரசியல் பேசுபவர்கள் இந்த பொருளாதாரத்தினை பற்றிப் பேசுவார்கள்.  உதாரணத்திற்குச் சொல்லலாம் என்றால் நம் நாட்டில் பயன்பாட்டிலிருக்கும் ஐந்தாண்டு திட்டம். அரசாங்கம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட எல்லா கொள்கைகளை உருவாக்கும் அதன்படி பல்வேறு புதிய முடிவுகள் எடுக்க நேரிடும். இந்த முறையில் அரசாங்கம் எடுக்கும் முடிவு தான் இறுதி. இந்த முடிவுகள் சில நேரத்தில் மக்களின் நிறை குறைகளைப் பார்ப்பது கிடையாது, தேவைக்கு போதுமான உற்பத்தி இருக்காது ஏனெனில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டி இருப்பதால்  இவற்றில் பெரும் தடைகள் இருக்கும் .     

3. சந்தைப் பொருளாதாரம் 

பொருளின் விலையினை சந்தையே நிர்ணயிக்கிறது. இந்த முறை பொருளாதாரம் பொருளின் உற்பத்தி மற்றும் அதற்கான தேவையினை பொறுத்துத் தான் விலை நிர்ணயமாகும் அதாவது உற்பத்தி கூடுதலாக இருந்து அதன் தேவை இல்லாமல் இருந்தால் விலை குறைவாகத்தான் இருக்கும் அதே வேளையில் உற்பத்தி குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருந்தால் விலை அதிகமாக இருக்கும். இந்த முறையில் விலை ஏறும்போது அதிக உற்பத்தியாளர்கள் உள்ளே வருவார்கள் உற்பத்தி அதிகரிக்கும் பொருளாதாரமும் மேம்படும் இறுதியில் இங்கே அரசாங்கமும், வலிமை மிகுந்த முதலாளிகளும் மட்டுமே பங்குபெறுவார்கள்.  சில பொருள்கள் விலை குறைவாகவும், தரமாகவும் வரும் அதே சமயத்தில் முதலாளிகளின் லாப நோக்கம் கூடவே பயணிக்கும். போகப் போக விலையேற்றம் ஏற்படும்.  

4. கலப்புப் பொருளாதாரம்  

இந்த பொருளாதார முறை மேற்சொன்ன மூன்று முறையிலும் இருக்கும் சில நல்ல காரணிகளை மட்டும் எடுத்து எல்லாம் கலந்த ஒரு பொருளாதார முறையினை பின்பற்றுவது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்த முறைகளே பின்பற்றப்படுகின்றன.  இங்கேயும் முதலிகள் காக்கப்படுவது உறுதியாக்கப்படும். 

மேலும் இந்த புத்தகம், நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாய உற்பத்தியின் லாபங்களை எவ்வாறு வணிக நிறுவனங்கள் சுரண்டு செல்கிறது என்பதையும், விவசாயிகள் தங்கள் பொருளின் முழு பயனையும் பெற்றுக்கொள்வது வேறொருவரே.

தமிழ் மண்ணின் பணிகள் பெரும்பாலும் தமிழர்களுக்கே கொடுக்கப்படவேண்டும் என்றும் அதனால் எவ்வாறு நமது மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதைப் பற்றியும் அதில் குறிப்பாகத் தனியார் வேலைவாய்ப்பு, அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு எனப் பிரித்து அந்தந்த வேலைவாய்ப்பில் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச வாய்பினையாவது வழங்கினால் தான் நமது தன்னிறைவு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இயங்கும்.

மேலும் பொருளாதாரத்தில் எவ்வாறு மற்ற மொழிகள் ஆதிக்கத்தினால் சில  இடையூறு வருகிறது என்கிறார். என் மொழி என் உரிமை என்று முழங்கினால் நமது மொழியின் சார்ந்த பொருளாதாரம் செல்வனே செயல்படும் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது நம் மீது திணிக்கப்படும் ஒரு மொழியின் ஊடாக நமது வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது சில இடங்களில் சொல்லும் கருத்துக்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

எல்லோரும் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும்  அடிப்படையான பொருளாதாரம் பற்றிய மிக எளிமையான புத்தகம்.

ஆசிரியருக்கு நன்றி.

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

18 செப்டெம்பர் 2021       

Friday, 17 September 2021

பாரதியின் கட்டுரைகள் - தத்துவங்கள் - வாசிப்பனுபவம்

பாரதியின் கட்டுரைகள் - தத்துவங்கள் 

ஆசிரியர் : பாரதியார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 41


பாரதியாரின்  சில கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம், கடவுள் என்ற பெயரில் நடக்கும் சில அநீதிகளையும், பெண்களுக்கு இழைக்கப்படும் சில கட்டுப்பாடுகளையும் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடாக வந்த சில கட்டுரைகள்.

இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டது. தெய்வ நம்பிக்கை முதல் யாரைத்தொழுவது வேண்டும் என்றும், நம் மக்களிடையே பழகிப்போன பல்வேறு மூட நம்பிக்கையைப் பற்றிய சிந்தனைகளும், அறிவியல் பூர்வமான கருத்துக்களும், மேலைநாட்டுப் படிப்பான ஆங்கிலம் படித்தும் ஏன் பெரும்பாலோனோர்கள் பழைய பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்றும் பாரதியின் மொழியும், கேள்விகளும் அபாரமானது

கும்பிடுவோர்கள் நித்திய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான் மேலும் பிறரை அடிமை நிலையில் வைக்கவேண்டும் என்று நினைக்கிறன என்கிறார். மேலும் கோவிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் சரி தெய்வத்தைக் கும்பிட்டாலும் அல்லது கும்பிடவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள் தானாகவே கிடைக்கும் என்கிறார்.

நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது, ஒரு தனியிடத்தில் இருந்து செய்யப்படும் தியானம் உயர்ந்த சிந்தனைகளையும், அமைதியையும், மனோபலமும், துணிவும் மற்றும் உறுதியும் கொடுக்கக் கூடியது என்கிறார். தெய்வபக்தியுடையவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தினை மனதில் வைத்துக்கொண்டு இந்த தியானத்தினை மேற்கொள்ளலாம் என்கிறார்.

நம் மக்களிடையே இருக்கும் ஏராளமான மூட நம்பிக்கையினை பற்றிக் கூறும்போது, மக்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் நேரம் காலம் பார்ப்பது அதனால் ஏற்படும் இழப்பு, அதாவது நேரத்திற்கு இருக்கும் விலையினையும் அதற்கான மதிப்பையும் பார்ப்பது இல்லை என்கிறார்.

இன்னும் சில கட்டுரைகள், சிதம்பரம் நடராஜரைப் பற்றியும், நவராத்திரி கொண்டாடும் முறைகளைப்பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த புத்தகம், பாரதியாரின் தத்துவங்கள் எனக் குறிப்பிடலாம், இறை நம்பிக்கையும், அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட நன்மைகளும், பிறருக்கு ஏற்பட்ட இன்னல்கள் மற்றும் அடிமைத்தனம், மூட நம்பிக்கை என பல்வேறு விதமான கோணத்தில் குறிப்பிடுகிறார்.      


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 செப்டெம்பர் 2021

இந்திய நாத்திகமும் மார்க்க்சியத் தத்துவமும் - வாசிப்பனுபவம்

 இந்திய நாத்திகமும் மார்க்க்சீயத் தத்துவமும் 

ஆசிரியர் : நா. வானமாமலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 60


இந்த நூல் ஆத்திகத்தினையும் அதற்கு ஈடாக எவ்வாறு நாத்திகமும் மார்க்க சீயமும் தனது கருத்துக்களைப் பரப்புகிறது என்பது பற்றிய ஒரு  ஆய்வு நூலாகும். ஆசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூலில் ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியத் தத்துவ சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையை? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் முதல் கட்டுரையில் இந்தியாவில் பல்வேறுபட்ட மதகுருமார்கள் "இந்தியத் தத்துவம் ஆன்மீகமானது" அதன் உள்ளார்ந்த ஆன்மீக வலிமைதான், காலத்தை வென்று வரலாற்றில் தோன்றிய பல்வேறு ஆபத்துகளை எல்லாம் கடந்து இந்தியா இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்கிறார்கள். ராதாகிருஷ்ணன் அவர்கள் "இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் வாழ்க்கையின் மகத்தான உண்மையான கடவுளை அறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் அந்த கூற்றை ஆய்வு செய்த ஆசிரியர் இவரின் கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே என்றும் சித்தனை உலகத்தில் மிகவும் சிறப்பான தருக்க வாதத்தில் "கடவுள் இன்மை"க் கொள்கையை இந்தியாய் தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன என்கிறார்.

ஆத்திகர்களின் நோக்கமும் அதற்க்காக அவர்கள் கொண்டிருந்த  அறிவு எல்லாம் நாத்திகர்களின் கொள்கைகளைப் புரட்டுவதிலே குவிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இவர்கள் "கம்யூனிசத்தினையும்" ஒரு மதம் என்று மக்களிடம் சொல்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர் சொல்லுகிற சொற்களை தங்கள் கொள்கையிற்குச் சாதகமாகப் பொருள் மாற்றிக் கூறுவதும் இவர்களின் ஒரு விதமான புரட்டே என்கிறார்.

கடவுள் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றிய காலத்திலே நாத்திகமும் அதாவது கடவுள் மறுப்பு பற்றிய எண்ணமும் மக்களிடையே தோன்றியிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.    கண்ணாலே காணாததை நம்பாதே என்ற ஒரு புதிய குரலும் அப்போதே தோன்றியதுதான் இது அக்காலத்து நாத்திகம் என்கிறது.

இயற்கை வாதிகள் தங்கள் கூற்றுகளை, "பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளாலே நிகழ்கின்றன" என்றும் எவ்வாறு களிமண் சட்டியாக மாறுகிறது அதுபோலவேதான் ஒவ்வொரு உயிர் மற்றும் பொருள்களின் தன்மைகளை அதன் உள்ளிருக்கும் தன்மையே பொறுத்துத்தான் மாற்றம் கொள்கிறது என்று கூறுகின்றனர் என்கிறார்.

பண்டைய இந்திய நாத்திகம், கிரேக்க நாத்திகம்  மற்றும் தற்கால ஐரோப்பா நாத்திகம் என இவர்களின் நாத்திகத்தில்   கொண்டிருந்த  பல்வேறு  தத்துவ குறைபாடுகளை மார்க்சீயம்தான் களைந்து போட்டு  அதனை ஒரு முழுமையாக்கியிருக்கிறது என்கிறார்.    மனிதர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து அவற்றைத் தானாகவே உற்பத்தி செய்யத் தொடங்கினர் அப்போது ஏற்பட்ட சில வளர்ச்சி மாற்றத்தில் சிலர் கடின வேளைகளில் செய்யாமல் தங்களை மதகுருவாகப் பாவித்து கீழ்த்தட்டு மேல்தட்டு என்ற பாகுபாட்டினை உண்டாக்கினார்கள். அதற்கு தங்களுக்குத் தேவைப்பட்ட ஒரு பலமாகவும் வழியாகவும் சிறந்த வலிமைமிக்க  சாதனமாகக் கடவுள் கொள்கையினை பின்பற்றினார்கள் அதுமட்டுமல்லாமல் சில வர்ண காரர்கள் வேலை செய்யக்கூடாது என்றும் அதற்காகச் சான்றுகளையும் உருவாக்கினார்கள் என்று குறிப்பிடுகிறார். பெரியார் ஏற்படுத்திய நாத்திகம் சிந்தனைகள் கடவுள் மறுப்பைப் பற்றி இல்லாமல் அதாவது மார்க்சியத்தினை போல அல்லாமல் வெறும் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே பின்பற்றினார் அதுவே அவரின் கொள்கையின் மிகப் பெரிய குறைபாடாகத் தெரிகிறது என்று குறிப்பிடுகிறார்.        


நல்லதொரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்ட சிறப்பான புத்தகம். வாசித்து தெரிந்துகொள்ள வேண்டிய அதிக விவரங்கள் கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 செப்டெம்பர் 2021  


 

Wednesday, 15 September 2021

முத்துப்பட்டன் கதை - வாசிப்பனுபவம்

முத்துப்பட்டன் கதை 

ஆசிரியர்: நா. வானமாமலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 56


முகத்துப்பட்டன் கதை நாட்டார் கதைகளில் ஒரு கதையாக வாசித்தது. இந்த புத்தகம் முழுவதும் இந்த ஒரு கதையினை பற்றியே பேசுகிறது. ஆசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆராய்ச்சி நூலான இந்த நூல் இந்த கதையின் எல்லா கோணத்தையும் பரிசீலித்துத் தொகுத்துள்ளார்.

சாதி என்ற ஒன்று அன்று தொட்டு இன்று வரை நம்மில் புரையோடிக்கிடக்கும் ஒரு நோய்தான். இதற்காகப் பலியானவர்கள் ஏராளம் இன்னும் பலியாகப்போகிறவர்கள் ஏராளம் என்றே சொல்லத்தோன்றுகிறது. நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ளமுடிகிறது.

அப்படிப்பட்ட சாதியின் வன்மையால் வந்ததுதான் இந்த "முகத்துப்பட்டன் கதை".  ஒரு பிராமண குடும்பத்தில் ஏழு சகோதரர்கள் பிறக்கின்றனர். இவர்களில் இளையவன் தான் முகத்துப்பட்டன். தனது வாலிப வயதில் மூத்தோர்களிடம் இருந்து பிரிந்து வெளியில் வருகின்றான் அவ்வாறு வரும் அவன், ராமராஜன் என்ற சிற்றரசனிடம் பணிக்குச் சேர்கிறான். 

பிறகு வெகுநாட்கள் கழித்து அவனது சகோதரர்கள் தேடிவருகிறார்கள் அப்போது அவன் ராஜாவிடம் பணியில் இருப்பது தெரிந்து கொண்டு அவனிடம் வேண்டுகின்றனர். எங்கள் கூடவே வந்துவிடு உனக்குப் பெண்பார்த்து வைத்திருக்கிறோம் கல்யாணம் செய்துவைக்க என்று கூறி அழைக்கின்றனர்.

ராஜாவிடம் அனுமதி பெற்று அவனை அழைத்துச் செல்கின்றனர் கூடவே பொன்னும் பொருளும் வெகுமதியாக அரசனிடம் இருந்து கிடைத்ததையும் எடுத்துச் செல்கின்றனர்.

வழியில் இளைப்பாறுவதற்காக ஒரு இடத்தில் அமர்கின்றனர், பிறகு அங்கிருந்து புறப்பட்டனர் அந்த சமயம் பட்டனுக்குத் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்க இறங்கினான், அப்போது அவன் காதுகளில் ஒரு இனிமையான கீதம் கேட்டது அதில் லயித்துப்போனவன் அவர்களை நோக்கி என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கேட்கிறான். 

ஆனால் அக்காவும் தங்கையும் நமது திருமணம் நடக்காது ஏனெனில் நீங்கள் வேறுசாதி நாங்களோ சக்கிலியன் சாதி என்றனர். அதே வேகத்தில் அவர்கள் குடிசையில்லை நோக்கி ஓடிவிட்டனர். பின்தொடர்ந்த பட்டதன் களைப்பில் கேழே விழுந்துவிட்டான்.

தகவலறிந்த பெண்களில் தகப்பன் வாளுடன் வருகிறான் அவனை நான் வெட்டி செய்கிறேன் என்று ஆனால் அவன் வந்ததும் மயங்கிக் கிடைக்கும் பட்டனை எழுப்பிவிடுகிறான், இவன் தான் தேடிவந்தவன் என்று தெரியாமல் அவன் வந்த காரணத்தைச் சொல்கிறான். அதற்குப் பட்டன் நான் தான் அந்த பிராமணன் ஆனால் நீங்கள் என்னைக் கொள்ளவேண்டாம் உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் தூவும் ஊரறிய என்று சொல்கிறான்.

நடக்காது என்று சொல்லும் வாலப்பகடை, இது நடக்கவேண்டும் என்றால் நீ சாதி துறந்து பூனுலினை அறுத்து எங்களைப் போல உடையணிந்து இருக்கவேண்டும் என்று சொல்கிறான் அதற்குச் சம்மதம் சொல்லி அண்ணன்களிடம் சொல்வதற்குச் செல்கிறான் ஆனால் அவர்கள் சம்மதிக்காமல் அவனை கல்லறையில் வைத்துப் பூட்டிவிடுகின்றனர் ஆனால் அங்கிருந்து தப்பிவிடுகிறான். பிறகு கல்யாணமும் நடக்கிறது.

அன்றொரு நாள் இரவு அவர்களின் கிடைகளை வன்னியர்கள் வந்து அபகரித்துச் செல்கின்றனர் என்றதும் உடனே விரைந்து சென்று கிடைகளை மீட்டெடுக்கிறான் பிறகு உடலினை கழுவச் சுனையில் வந்து குனிந்து நீரெடுக்கிறான் அப்போது பின்னனிருந்து சப்பாணி அவனைக் குத்திக் கொள்கிறான். அவன் கூடவே சென்ற நாய்கள் விரைந்து வீடு வந்து தகவலைத் தெரிவிக்கின்றது. கணவன் கொலையுண்டதைக் கேட்ட மனைவிகள் அரசனிடம் முறையிட்டு உடன்கட்டை ஏறுகின்றனர். 

அப்படியாக நடந்த இந்த கொடூரத்தின் வழியே இவர்கள் மூவரும் அவர்களின் இரண்டு நாய்களும் தெய்வமாக "சொரிமுத்து அய்யனார்" என்று இன்றளவும் வழிபடுகின்றனர்.  

ஆசிரியர் நா.வானமாமலை அவர்கள் இந்த கதையினை பற்றிய தனது ஆய்வில் கதையின் காலம் எந்த காலத்தினை சார்ந்தது என்றும் அதற்காக அவர் கொடுக்கும் காரணங்கள் என அற்புதமாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதாவது கி. பி. 400 ஆண்டுகளுக்கு பிறகும் 300 ஆண்டுகளுக்கும் முன்னரும் என்று சொல்கிறார். 

கதையின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து இது உண்மையில் நடந்ததா அல்லது கற்பனையா என பல்வேறு சான்றுகளுடன் சொல்லியிருக்கிறார். பொதிகை மலையில் இருக்கும் பட்டவராயின் கோவில் அங்கே வீற்றிருக்கும் முகத்துப்பட்டன் மற்றும் அவனது மனைவிகள் கூடவே அவர்களின் நாய்கள் என அந்த சிற்பம் தத்ரூபமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் எனவும் அவர்களின் நிலைகளை எவ்வாறு கதையில் சொல்லியிருக்கிறார்கள் எனவும் எவரையும் இழிவுபடுத்திக் குறிப்பிடாமல் கதை நகர்ந்திருப்பதாவதும் குறிப்பிடுகிறார். முத்துப்பட்டன் படித்தவனும், சாதியினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளைக் கண்டு சரிசெய்ய நினைத்தவன் என்றும் சொல்கிறது என்கிறார்.

அச்சுப்பிரதிக்கும் இன்றையளவில் பாடப்படும் வில்லுப்பாட்டுக்கும் சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் காலத்திற்கேற்றாப்போல மாற்றியிருக்கலாம் என்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகம், ஆசிரியரின் ஒரு விசாலமான பார்வையினை "முகத்துப்பட்டன் கதையின்" மேல் வைத்து ஆராய்ச்சி செய்ததின் விளைவாக நமக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கச் செய்துள்ளது. 


ஆசிரியருக்கு நன்றி.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

15 செப்டெம்பர் 2021 

 

   

Tuesday, 14 September 2021

நாட்டார் கதைகள்

 நாட்டார் கதைகள்

ஆசிரியர் : அ. கா.  பெருமாள் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 49


இந்த தொகுப்பில் 15 நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு சமூகத்தின் பண்பாட்டினையும், மூதாதையர்களையும், வணங்கும் தெய்வத்தையும் பற்றிய பழைய கால கதைகள்.

இந்த புத்தகம் என் வாழ்க்கையின் சுமார் 35 வருடங்களுக்கு முன்னாள் என்னை கொண்டுசென்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். எனது சிறுவயது காலத்தில் தினந்தோறும் இரவு வேளைகளில் பக்கத்துக்கு வீட்டுத் தாத்தாவின் கதைகளைக் கேட்காத நாட்கள் இல்லையென்றே சொல்லலாம் அதுவும் தொல்லை தரும் தொலைக்காட்சி இல்லாத காலம் அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களே உறவு என்று வாழ்ந்த வசந்தகாலம். 

தாத்தா சொல்லும் ஒவ்வொரு கதையும் பல்வேறு பழைய காலத்துக் கதைகளைக் கொண்டிருக்கும். எங்கள் கிராமத்தின் விவசாய நிலத்தின் காவல்  தெய்வமாக வீற்றிருக்கும் முனீஸ்வரன் கோவில் பற்றிய கதைகள் அவர் விவரிக்கும் அந்த கதை பக்குவத்தினை நான் இந்த புத்தகத்தில் இருந்து மீட்டெடுத்தேன் என்றே சொல்லவேண்டும். 

ஆசிரியர் அ. கா. பெருமாள், தமிழகத்தின் முதன்மையான நாட்டார் வழக்கியல் ஆய்வாளர், வரலாற்றுப் பேரறிஞர் மற்றும் இலக்கிய ஆய்வறிஞர் என்ற பெருமைகளுக்குச் சொந்தமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  ஒவ்வொரு மூலையிலும் சிதரி கிடைக்கும் நாட்டுப்புற வழக்காறுகளை மீதுள்ள  ஆர்வத்தின் மூலம் அவற்றைச் சேகரித்து ஆராய்ந்து அதனை நூலக வெளியிட்டுள்ளார்.

அப்படியாக இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும், மிகவும் சிறப்பான கதைகள் தான். பெரும்பாலான கதைகளில் அரசருக்கோ அல்லது ஒரு தம்பதிக்கோ குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறது அதற்காக அவர்கள் வேண்டுதல்கள் செய்கிறார்கள். இறைவன் இவர்கள் மீது அனுதாபம் கொண்டு குழந்தை வரம் கொடுக்கிறார் ஆனால் உங்களுக்குக் குழந்தை பேறு இந்த ஜென்மத்தில் இல்லை ஆனாலும் தருகிறான் ஆனால் அந்த குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதில் மரணித்து விடும் என்ற நிபந்தனையுடன் தான் கதைகள் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்த குழைந்துக்கு ஏற்படும் இறப்பினை மையமாகக் கொண்டு அவர்களைத் தெய்வமாக வழிபட ஆரம்பிக்கின்றனர்.

அனந்தாயி கதையில் குழந்தை பேறு இல்லாமல் வேண்டுதலின் பேரில் ஒரு பெண் பிறக்கிறாள் அவளுக்கு "கிருஷ்ணதம்மைஎனப் பெயரிடுகிறார்கள் ஆனால் இந்த குழந்தைக்குச் சர்ப்ப தோஷம் இருக்கிறது என்கிறார்கள் அதற்காகக் கூடவே ஒரு கீரிப்பிள்ளை வளர்க்கிறார்கள். கீரிப்பிள்ளை அந்த குழந்தையினை பாதுகாத்துவருகிறது, ஒருநாள் பாம்பு குழந்தையினை கடிக்க வருகிறது கீரி பாம்பினை கொன்றுவிட்டு குழந்தையினை பாதுகாத்துவிடுகிறது பிறகு, அப்போது அனந்தாயி வீட்டின் பின்பக்கம் உள்ள  காட்டுக்குக்  கீரை பறிக்கச் சென்றாள், வாயில் ரத்தத்துடன் அவளைப் பார்க்கச் சென்ற கீரியினை பார்த்த அனந்தாயி மகளைக் கொன்றுவிட்டது என்று எண்ணி கீரியினை கொன்றுவிடுகிறாள். பிறகுதான் தெரியாமல்  தான் பாவம் செத்துவிட்டேன் என்று அதற்குத் தண்டனையாக யாத்திரை செல்லவேண்டும் என்றால் ஆனால் அதற்குக் கணவன் அரிகிருஷ்ணன் தானே போய்வருகிறேன் என்று யாத்திரை போகிறான் அங்கே அவனைக் கருநாகம் கொன்றுவிடுகிறது. பிறகு அவளின் உறவினர் செய்த வஞ்சகத்தால் அவள் எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வேறு ஊருக்குப் பிழைப்பிற்காகச் சென்றாள். போகும் வழியில், தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய மணியக்காரனின் மகள் திருமணம் நடக்கிறது  மனதில் ஏற்பட்ட கவலையின் காரணமாக வேதனையறிந்த கடவுளிடம் எங்களை எடுத்துக்கொள் என்று வேண்டுகிறாள் மழை பொழிகிறது சுனை நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக அந்த ஊரை நோக்கிச் சென்று மணியக்காரன் வீட்டில் புகுந்து அவனின் மகள் மற்றும் மருமகனை இழுத்துச் சென்றது அப்போது அனந்தாயி சடலமாக வந்ததாதல் அங்கு அவளுக்கு "வெள்ளமாரி அம்மன்" என்று வைத்து தெய்வமாக வழிபடுகின்றனர்.

ஆத்திரமுடையார் என்ற கதையில் வரும் தலைவரின் பெயர் தான் இது. நீண்ட நாட்களுக்கு பிறகு திருமணமானவர் ஒரு நாள் அவர் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது தன்னை கவனிக்காமல் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்  என்பதற்காகக் கொன்றுவிடுகிறான். மனைவியைக் கொன்ற பாவத்திற்காக எல்லாத்தையும் விட்டுவிட்டு வேறொரு ஊருக்குச் சென்றான்.  பிறகு அந்த ஊரில் ஒரு பண்டாரம் வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றான் அப்போது பண்டாரத்தின் மகளைப் பார்த்து அவளுக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறது என்று சொல்லிவிட்டு மறுநாள் அவனே மாப்பிள்ளையாக வந்தது கோபப்பட்ட கிழவி ஏசுகிறாள். கல்யாணமும் முடிகிறது அந்த நேரத்தில் அந்த ஊருக்குத் திருடர்கள் வருகின்றனர் அவர்களை எல்லாரையும் வென்று ஊரையும் மக்களையும் காப்பாற்றியதற்காக அந்த ஊரே அவரை கொண்டாட ஆரம்பித்தது. நீண்ட நாள் வாழ்ந்து மறைத்த அவரை தெய்வமாக வழிப்பட்டனர்.       

உச்சினி கோவிலின் பூசாரியாக இருந்தவருக்கு ஏழு பெண் குழந்தைகள் அவர்கள் திருமண வயது தாண்டியும் கல்யாணமா செய்யப் பொருளாதாரம் இல்லை இறைவனிடம் வேண்டினான், இறைவன் கனவில் வந்து தங்கம் இருக்கிற இடத்தை சொல்லி எடுத்துக்கொள் என்கிறார். அந்த தங்கத்தை விற்கச் சென்ற போது வெள்ளையர்களின் சோதனையில் அவரை சந்தேகப்பட்டு அவரை கோவிலுக்கே அழைத்துச் சென்றனர். காளி அவர்களை விரட்டி அடித்தது. பிறகு பூசாரி காளி கோவிலினை புதுப்பித்து பூசை செய்தார் கூடவே பெண்களுக்குத் திருமணமும் செய்துவைத்தார்.

கட்டிலாவதானம் கதையில், காட்டிலிருந்த ஒரு மரத்தில் மலையிசைக்கியம்மை   வாசம் இருந்தாள். அந்த மரத்தினை வெட்டி கட்டில் செய்தனர். கோவைக்கொண்ட அவள் அந்த கட்டிலில் உறங்குபவர்களை எல்லாம் கொன்று தீர்த்துவிட்டாள். விவரம் தெரிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து கட்டிலைச் சுடுகாட்டில் வைத்து எரித்தனர் ஆனால் அதில் ஒரு கால் மட்டும் தெறித்து வந்த வெளியில் மாட்டிக்கொண்டது, மறுநாள் அந்த வழியே வந்தால் நாடாத்தி அந்த கட்டையினை விறகு என்று எடுத்து வந்து வீட்டில் அடுப்பெரித்தாள் அவளையும் கொன்றது. இறுதியில் இசக்கியம்மாளுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர்.

சிதம்பர நாடார் கதையில் வரும், நாடாச்சிக்கு குழந்தைப் பேறு இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. எல்லா தலங்களுக்குச் சென்று பலன் இல்லாமல் திரும்பி வரும் வழியில் ஒரு குறத்தியினை பார்க்கிறாள் அவள் குறி சொல்கிறாள், உன் குலதெய்வம் கோவில் சிதிலமடைந்து இருக்கிறது அதனைச் சீர் செய்தால் பேறு உண்டு என்றாள். அப்படியே ஒரு ஆண் குழந்தை பெறுவாய் அவனுக்குச் சிதம்பரம் என்று பெயர் வை, ஆனால் அவன் 28 வயதில் ரூ பிராமண பெண்ணால் இறப்பான் என்றும் சொன்னாள். அதுபோலவே குறிப்பிட்ட காலத்தில் அந்த பிராமண பெண் பாம்புக்கடித்து இறந்துவிடுகிறாள், மயானத்தில் எரிகிற வேளையில் அங்கே வரும் சிதம்பரம் செய்தி கேட்டு அவளைப் பிழைக்க வைக்கிறான் அவள் அவன் கூடவே வருகிறாள். மனம் செய்துகொள்கின்றனர், கற்பகமாகிறாள் பிறகு பிறந்த வீட்டிற்குச் செல்கின்றாள் அங்கே பிராமண உறவினர்கள் சிதம்பர நாடாரைக் கொன்றுவிடுகின்றனர் செய்தியை அறிந்த மனைவியும் நாக்கினை பிடுங்கிக்கொண்டு இறந்துவிடுகிறாள். ஆவியாக பழிவாங்கினார்கள் பிறகு கோவில் எடுத்து வழிபட்டனர்.

தடிவீரசாமி கதை, இந்த கதையில் வரம்பெற்ற வந்த மகனுக்குக் கண்டம் இருக்கிறது. அதுபோலவே ஊர் பெரியவரின்மகளைக் காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட கொலை. கொலையுண்ட மந்திரமூர்த்தி ஆவியாக வந்து பழிவாங்கினான் பிறகு அவனுக்கு கோவில் எடுத்து வழிபட்டனர்.

தோட்டுக்காரி அம்மன், இந்த கதையில் தோட்டுக்காரி என்ற பெண்ணை சிறைபிடித்த காரணத்தினால் ஏற்பட்ட சண்டையில் இழந்தது ஒரு வம்சம். தோட்டுக்காரி தன்னைச் சார்ந்தவர்கள் உள்ளவரும் இறந்துவிட்டார்கள் என்று இறைவனை வேண்டி நெருப்புக்குழி வேண்டினாள் அதில் பாய்ந்து உயிர்நீத்தாள் அப்போது அங்கு வந்த குமரப்பனும் கூடவே விழுந்தாள். தோட்டுக்காரி தெய்வமானாள்.

இதுபோலவே இடம்பெற்ற அதிக கதைகளில் பெண்ணுக்காகவும், சாதிக்காகவும் அழிந்த வம்சங்கள் ஏராளம் அவ்வாறு ஏற்பட்ட கொலைகள் அழிவுகள் என இறுதியில் எல்லாருக்கும் ஒரு விதத்தில் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.

முகத்துப்பட்டன் கதையில், ஒரு பிராமணன் சக்கிலியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் ஏற்பட்ட கொலை அதற்காக உடன்கட்டை ஏறின மனைவிகள் இன்று "சொரிமுத்து அய்யனார்" என அருள்பாலிக்கிறார்.

வன்னியடி மறவன் கதையிலும் மனைவிக்குக் குழந்தை இல்லாமல் வெளியேறுகிறாள் அவளுக்கு வேறொருவரிடம் வாழ்ந்து  குழந்தைகள்  பிறக்கிறது. அந்த குழந்தைகள் வளர்ந்து பிறகு திருமண வேண்டி வரும் நேரத்தில் சாதியின் பெயரில் இவர்கள் கள்ளர் வேலை செய்யவேண்டி நிர்ப்பந்தம் வருகிறது அப்போது அவர்களைக் கொலைசெய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர்.

வெங்கல ராசன் கதையிலும் இரண்டு பெண்களால் ஏற்பட்ட காரணத்தால் வம்சம் அழிந்து போகிறது அதற்குக் காரணமாக இருந்தவர்களை இவர்கள் பழிவாங்குகின்றனர். இதை அறிந்துகொண்ட மன்னர் கோவில் கட்டி வழிபட்டார்.


அன்புடன்.

தேவேந்திரன் ராமையன் 

14 செப்டெம்பர் 2021