தமிழர் திருமணம்
ஆசிரியர் : ஞா. தேவநேயப் பாவாணர்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 120
ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக திருமணம் இருக்கிறது. அன்று தொற்று, இன்றுவரை ஏன் இன்னும் வரும் சங்கதிகள் என நம் தமிழர்களின் வாழ்வில் பெறப்படும் ஒரு பெரிய மாற்றமும் சடங்கும் எனச் சொன்னால் அது திருமணம் தான்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த இரண்டு மனங்கள் இணையும் ஒரு விழாதான் திருமணம். இந்த புத்தகம் நம் பாரம்பரியத்தின் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது, காலப்போக்கில் அது எவ்வாறெல்லாம் மாற்றத்திற்கு உள்ளானது என்பதை மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.
பண்டையத் தமிழ்த் திருமணம் கொண்டிருந்த சடங்கு, தமிழ் முறையில் செய்த திருமணம், காலப்போக்கில் பிராமணர்கள் வந்த போது முதலில் அரச குடும்பத்தில் இவர்கள் திருமணம் சடங்கினை செய்தனர் பிறகு பெரு நிலக்கிழார்கள் பிறகு சாதாரண குடிமக்கள் என இவர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. தமிழ் முறை மாறி வடக்கு மொழியுடன் இவர்களின் திருமண சடங்குகள் நிறைவேறின.
கொடை மணம், காதல் மணம் மற்றும் கவர்வு மணம் என்ற மூன்று வகையான திருமணம் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் குலமுறையின் வழியே அகமனம் அதாவது ஒரே குலத்தில் பெண்கொடுத்து பெண் எடுப்பது மற்றும் புறமணம் என்பது வேறு குலத்திலிருந்து பெண் எடுப்பது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு மனையும், பல்மனையம் மற்றும் பல்கணவம் மூன்று வகையாக மணமக்கள் வாழ்வியல் முறைகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
கன்னி மணம் (முதல் திருமணம்), கட்டுப்பட்டவள் மணம் (இரண்டாவது மணம்) மற்றும் கைம்பெண் மணம் என மூன்றுவகையான திருமணம்.
திருமண வயது பொதுவாகப் பெண்ணிற்கு 12 ம் ஆணுக்கு மணமகனுக்கு 16ம் எனக் குறிப்புகள் கூறுகிறது என்கிறார். மணப்பேச்சு என்பது பெண் பார்க்கச் செல்வதும் பிறகு பொருத்தம் பார்த்த பிறகு திருமண உறுதி (நிச்சயதார்த்தம்) செய்துகொள்வதும் எனத் திருமண நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன. திருமண ஆசிரியரின் எல்லா சடங்குகளைச் செய்து தாலி எடுத்து மணமகன் கையில் கொடுத்து பெண்ணின் கழுத்தில் கட்டச்சொல்வர். பிறகு பெரும்பாலான பின் நிகழ்வுகள் நடைபெறும்.
இடைக்காலத்தில் இவ்வாறாக இருந்துவந்த பெரும்பாலான சடங்குகள் மாற்றங்களுக்கு இடையில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாகப் பழமை இழந்து புதிய வழக்கங்கள் புகுந்துவிட்டன. முதலில் வடமொழியினை கொண்டு செய்ய ஆரம்பித்த ஆரியக்காரணத்தால் தமிழுக்கு ஏற்பட்ட பல்வேறு தாழ்வுகளைக் குறிப்பிடுகிறார்.
பிறகு சீர்திருத்தத் திருமணம் பற்றி பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்களைக் குறிப்பிடுகிறார். சித்தூர் மார்க்க சகாய ஆச்சர்யார், மறைமலையடிகள், திரு.வி. கலியாணசுந்தரர் மற்றும் ஈ.வே. இராமசாமிப் பெரியார் என இவர்கள் கொண்டுவந்த சீர்திருத்தத் திருமண சடங்குகள் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ளவேண்டிய பல்வேறு குறிப்புகள் மற்றும் பார்க்கவேண்டிய பன்னிரண்டு பொருத்தம் என மிகவும் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
குலவெறி கொல்லாமை, பரிசம் வாங்காமை,நாளும் வேளையும் பாராமை, பிறப்பியம் பாராமை, மணம் பற்றிய செய்திகளைத் திட்டமாய் முடிவுசெய்தல், தாய்மொழி கரணம் செய்வித்தல், வீண் சடங்குகளை விலக்கல், செல்வ நிலைக்கேற்ப செலவு செய்தல், மணநாளன்றோ மணமக்கள் கூட்டுதல், மணமக்களின் நல்வாழ்வை விரும்பல் என பல்வேறு சிறப்பான குறிப்புகளை மணமக்களின் பெற்றோர்களின் கவனத்திற்குக் கொடுத்திருக்கிறார்.
மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்கவேண்டியவை மற்றும் சமூகம் அல்லது அரசியலாளர் போன்றோர் கவனிக்கக்கூடிய குறிப்புகள் என பல்வேறு விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னிணைப்பாக பல்வேறு திருமண அழைப்பிதழ் மாதிரிகள், வாழ்த்து மடல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சி நிரல் என நம் தாய் மொழியில் மிகவும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
18 செப்டெம்பர் 2021
No comments:
Post a Comment