ஏழு சகோதரிகள் - 1
வெங்கட் நாகராஜன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய்
பக்கங்கள்
ஏழு சகோதரிகள் -1, என்ற இந்த பயண கட்டுரையில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நண்பர் வெங்கட் நாகராஜன் அவர்களின் பயண அனுபவங்களை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
நான், நண்பரின் பயணக்கட்டுரைகள் அதிகளவில் வாசித்திருக்கிறேன். இவரின் மொழிநடையும், இடம் மற்றும் அங்குக் கிடைத்த அனுபவங்களைச் சொல்லுகிற விதம் நாமும் அவர்களில் ஒருவராக அந்த இடத்திற்குச் சென்று வந்த ஒரு உணர்வினை கொடுக்கும் விதமாகவே இருக்கும்.
இந்த நூலின் இரண்டு மாநிலங்களுக்குள் பயணப்படப் போகிறோம்.
வாருங்களேன் பயணித்து பார்ப்போம் .
மணிப்பூர்:
இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் ஏழு மாநிலங்களை ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கிறார்கள். அந்த மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை. இவற்றுள் ஒரு மாநிலமான மணிப்பூரைத் தான் நாம் இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
மணிப்பூரின் சுற்றுலா மற்றுமல்லாமல் அந்த இடத்தின் வரலாறும் மிகச் சிறப்பாகச் சொல்லிச்செல்வார். கங்க்லா என்ற நகர் மணிப்பூரின் புராதனமான நகரம். இந்த நகரத்தினை தலைமையிடமாகக் கொண்டு பல ராஜாக்கள் ஆண்டு வந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலுடன் அங்கு இருக்கும் பழங்குடியினரின் அடையாளங்கள் மற்றும் கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம் என அந்நகரத்தினை பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தேவியான தகவல் கள் இருக்கிறது.
ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில், இந்த கோவில் மணிப்பூரில் இருக்கும் கங்க்லா பகுதியில் இருக்கிறது.இந்த கோவில் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வெளி கோபுரம் என அந்த கோவிலின் அழகை நம் கண் முன்னே காட்டுகிறார் நண்பர்.
ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்தரா கோவில், இந்த கோவிலின் வெளி கோபுரம் மூன்று அழகிய கோபுரங்களாகத் தோற்றமளிக்கிறது என்றும், தூண்கள் எல்லாம் சிங்கத்தின் மேல் இருக்கிறது என்றும் இந்த கோவில்களின் வழிபாட்டு நேரம் மற்றும் முறைகள் என பல்வேறு விதமான தகவல்கள் நிறைந்து இருக்கிறது இந்த நூல்.
மணிப்பூரில் பிறந்த விளையாட்டு வீராங்கனை "மேரி கோம்" அவர்கள் பிறந்த இடம் மற்றும் அவர் விளையாடும் மற்றும் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு மைதானம் பற்றிய முக்கிய தகவல்கள் அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஏரியின் நடுவில் மிதக்கும் தீவு, அந்த தீவுகளில் இடம்பெற்றிருக்கும் வீடுகள், அவர்களின் தொழிலான மீன்பிடித்தல் மற்றும் பயணிக்கும் வழிகளில் பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூடச் சொல்லாமல் இருக்கமாட்டார். இந்த சிறிய தகவல்கள் வாசிக்கும் நமக்கு ஒரு ஆர்வத்தினையும் அந்த இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டுவது நிச்சயம்.
தங்குமிடம் பற்றிய தகவல்கள், கிடைக்கும் உணவுகள், போக்குவரத்து விவரங்கள், மக்கள் பேசும் மொழி என ஏராளமான தகவல்கள் அதிலும் குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் கொடுக்கும் அற்புதமான சுவை என நம்மை அந்த சுவையினை ரசிக்க செய்திடுவார்.
பிஷ்ணுபூர் - விஷ்ணு கோவில், மணிப்பூர் தேவாலயம், அருங்காட்சியகம், மகளிர் மட்டும் நடத்தும் அங்காடி என பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள். போரில் வீரமரணம் புரிந்த வீரர்களின் கல்லறை அதாவது 1600 வீரர்களின் கல்லறைகள் மற்றும் அவர்களுக்கான நினைவிடமும் அவற்றின் சிறப்பும் என இந்த பகுதியில் தகவல்கள் அருமையாக இருக்கிறது.
மணிப்பூரின் எல்லையில் இருக்கும் தமிழர்கள், அவர்களின் அடையாளம் மற்றும் பண்டிகைகள், வாழ்க்கை முறை என மொத்த மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
நாகாலாந்து:
இனி நாம் பார்க்கப்போவது நாகாலாந்து, மணிப்பூரில் எல்லையிலிருந்து சாலை வழியாகவே பயணிக்கலாம் என்று சொல்கிறார்.
நாகாலாந்தில் கிடைக்கும் உணவு முறைகள், மக்கள் மற்றும் அவர்களின் நடைமுறைகளையும் சிறப்பாகச் சொல்கிறார். பொதுவாக இங்குத் தேவாலயங்கள் அதிகமாக இருப்பதாகவும் அந்த தேவாலயத்தின் வரலாறும் யாரால் கட்டப்பெற்றது என்கிற செய்திகளும் பயனுள்ளதாக இருக்கிறது.
இங்கு விற்கப்படும் மற்றும் சாப்பிடுவதுமான பல்வேறு மாமிசம், ஊர்வன, பறக்கும் எல்லாவிதமான பறவைகளும், ஆடு மாடு பன்றி என நடக்கும் எல்லாமும் கூடுதலாகக் குரைக்கும் நாயும் விட்டுவைக்கவில்லை என்கிறார். அதுவும் இங்கே புகழ்பெற்ற உணவு நாய் கறி தானாம். புழு பூச்சி கூட விட்டுவைக்க விலை என மென்மையாகச் சொல்கிறார். தவளை, நத்தை மற்றும் வெள்ளெலி என வியாபாரம் மும்மரமாக நடக்கும் அங்காடியின் நிலத்தையும் கொஞ்சம் மனத்தின் கலவரத்துடன் ஆவணப்படுத்தியிடுகிறார்.
இங்கேயும் ஒரு பெரிய கல்லறை இருக்கிறது இங்கேயும் வீர மரணம் புரிந்த போர்வீரர்கள் உறங்குகிறார்கள். அங்கே பொறிக்கப்பட்ட ஒரு வாசகம்
" வீடு சென்றதும் உங்களவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
உங்களுடைய நாளைக்காக
எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம் என்று"
அங்கு வாழ்ந்த பழங்குடியினரின் வரலாறு மற்றும் உணவு முறை, வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருக்கும் அருமையான அருங்காட்சியகம், அங்கே கிடைத்த அனுபவங்கள் மற்றும் படங்கள் எனச் சிறப்பாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
என இரண்டு மாநிலத்திலும் கிடைத்த பல்வேறு அனுபவங்களைத் தொகுத்து வண்ணமயமான படங்களுடன் கதைகளாகச் சொல்லி நமக்கும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய ஒரு ஆர்வத்தினை நம் ஆழ்மனதில் அடித்துச்செல்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
29 செப்டெம்பர் 2021
No comments:
Post a Comment