Friday 17 September 2021

பாரதியின் கட்டுரைகள் - தத்துவங்கள் - வாசிப்பனுபவம்

பாரதியின் கட்டுரைகள் - தத்துவங்கள் 

ஆசிரியர் : பாரதியார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 41


பாரதியாரின்  சில கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம், கடவுள் என்ற பெயரில் நடக்கும் சில அநீதிகளையும், பெண்களுக்கு இழைக்கப்படும் சில கட்டுப்பாடுகளையும் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடாக வந்த சில கட்டுரைகள்.

இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டது. தெய்வ நம்பிக்கை முதல் யாரைத்தொழுவது வேண்டும் என்றும், நம் மக்களிடையே பழகிப்போன பல்வேறு மூட நம்பிக்கையைப் பற்றிய சிந்தனைகளும், அறிவியல் பூர்வமான கருத்துக்களும், மேலைநாட்டுப் படிப்பான ஆங்கிலம் படித்தும் ஏன் பெரும்பாலோனோர்கள் பழைய பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்றும் பாரதியின் மொழியும், கேள்விகளும் அபாரமானது

கும்பிடுவோர்கள் நித்திய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான் மேலும் பிறரை அடிமை நிலையில் வைக்கவேண்டும் என்று நினைக்கிறன என்கிறார். மேலும் கோவிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் சரி தெய்வத்தைக் கும்பிட்டாலும் அல்லது கும்பிடவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள் தானாகவே கிடைக்கும் என்கிறார்.

நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது, ஒரு தனியிடத்தில் இருந்து செய்யப்படும் தியானம் உயர்ந்த சிந்தனைகளையும், அமைதியையும், மனோபலமும், துணிவும் மற்றும் உறுதியும் கொடுக்கக் கூடியது என்கிறார். தெய்வபக்தியுடையவர்கள் தங்களது இஷ்ட தெய்வத்தினை மனதில் வைத்துக்கொண்டு இந்த தியானத்தினை மேற்கொள்ளலாம் என்கிறார்.

நம் மக்களிடையே இருக்கும் ஏராளமான மூட நம்பிக்கையினை பற்றிக் கூறும்போது, மக்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் நேரம் காலம் பார்ப்பது அதனால் ஏற்படும் இழப்பு, அதாவது நேரத்திற்கு இருக்கும் விலையினையும் அதற்கான மதிப்பையும் பார்ப்பது இல்லை என்கிறார்.

இன்னும் சில கட்டுரைகள், சிதம்பரம் நடராஜரைப் பற்றியும், நவராத்திரி கொண்டாடும் முறைகளைப்பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த புத்தகம், பாரதியாரின் தத்துவங்கள் எனக் குறிப்பிடலாம், இறை நம்பிக்கையும், அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட நன்மைகளும், பிறருக்கு ஏற்பட்ட இன்னல்கள் மற்றும் அடிமைத்தனம், மூட நம்பிக்கை என பல்வேறு விதமான கோணத்தில் குறிப்பிடுகிறார்.      


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 செப்டெம்பர் 2021

No comments:

Post a Comment