Thursday, 9 September 2021

சிலப்பதிகாரக் காட்சிகள் - வாசிப்பனுபவம்

சிலப்பதிகாரக் காட்சிகள்

ஆசிரியர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 74   


சிலப்பதிகாரத்தினை, கலைஞரின் வசனத்தில் "பூம்புகார்" என்ற திரைப்படமாகத்   திரையில் பார்த்தது. இப்போது இந்த புத்தகம் வழியே மிகவும் எளிமையான முறையில் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

எளிய நடையில், இருக்கும் மிகவும் தேவையான அளவிற்கு மிகவும் சுருக்கமாகவும், அதே வேளையில்  முழுக்கதையும் புரிந்துகொள்ள முடிகிற அளவிற்குச்  சொல்லப்பட்டிருக்கிறது. 

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. புகார் காண்டம் 

2. மதுரை காண்டம் 

3. வஞ்சிக்காண்டம் 

 

புகார் காண்டம்

காவிரிப்பூம்பட்டினம்:

சோழ தேசத்தின் தலை நகராக விளங்கியது.  இந்த நகரம் 1800 வருடங்களுக்கு முன்னர் மிகவும்  அழகானதாகவும்  மற்றும் புகழ்பெற்ற பெரிய வாணிப நகரமாகத் திகழ்ந்ததற்கான எல்லா வரலாற்றுச் சான்றுகளும் இருக்கிறது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறாகத்தான் இருக்கிறது என்பது ஒரு பக்கம் கவலை கொள்ளவைக்கிறது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு கல்லணை வழியாக ஒரு சாலை இருக்கிறது இந்த சாலை முழுவதும் காவிரியாற்றின் கரையிலே செல்லும் இந்த சாலையில் வெகுவான இடங்களில் இரண்டு பக்கங்களும் காலங்கள் தாண்டி நிற்கும் புளியமரங்களால் சூழ்ந்து இருக்கும்.

இந்த நகரத்திற்கு இரண்டு பெயர்கள் இருந்தன ஒன்று "புகார்" மற்றும் "பூம்புகார்" என்றும் அழைத்தனர் ஆனால் இன்று பூம்புகார் என்று அழைக்கப்படுகிறது.

அந்த நகரம் , மையத்தில் மன்னவனின் மாளிகையாலும் அதனைச் சுற்றி தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைப்பாகர், படைத்தலைவர், வீரர்கள் விடுதிகள் என கம்பீரமாகத் தோற்றமளித்தது. பல்வேறு வணிகர்களும்,  முத்து வணிகமும், பல்வேறு ஆலயங்களும், நாட்டிய கூடமும் நாடக அரங்கும் என அந்த நகரம் பரபரப்பாகவே இருந்தன.  .                        

அக நகர் மற்றும் புற நகரினை இணைக்கும் இடத்தில் அமைத்திருந்த நாளங்காடியும் (நாளங்காடி என்றால் தினம் தினம் கூடும் வணிக சந்தை) இந்த பெரிய சந்தையாக விளங்கியது. 

இந்திர விழா, சித்திரை மாதம் இந்திரனுக்காக எடுக்கப்படும் ஒரு பெரிய விழா, அப்போதெல்லாம் காவிரியாறு கடலில் போய் கலக்கும் காட்சி அவ்வளவு அருமையாக இருந்தது ஆனால் இன்றோ அந்த இட்டதில் கடல் நீர் தான் உள்வாங்குகிறது.

இவ்வளவு அழகான இந்த நகரின் துறைமுகம் வணிகத்திற்கு  பெயர்பெற்றிருந்தது, அரேபிய, கிரீஸ், இத்தாலி முதலிய மேற்கு நாடுகளும்  சீனம், பர்மா முதலிய கிழக்கு நாடுகளும் கப்பலில் வந்து வாணிபம் செய்த பெரிய துறைமுகம் இருந்தது.     ஆனால் இன்று அத்தகைய பெரிய துறைமுகம் இருந்த சுவடே இல்லாமல் செய்துவிட்டனர். நாம் காக்கத் தவறிய ஒரு பெரிய வரலாற்று இடம் என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அது இந்த பூம்புகார் தான். இந்த நகர் ஒரு தாலுக்கா என்ற நிலையினை கூட எந்த ஒரு அரசும் எடுக்காதது வேதனைக்குரியது.

கோவலன் - கண்ணகி. இந்த காவியத்தின் கதை நாயகரும் நாயகியும் இந்த இருவரும் தான். பெரும் வணிகன் மாசத்துவானுக்கு மகனாகப் பிறந்த கோவலன் மற்றும் மாநாயகனுக்கு மகளாகப் பிறந்த கண்ணகி ஆகிய இருவரும் நெருக்கிய குடும்ப உறவினர்கள் எனவே இவர்கள் இளைமை பருவத்தில் ஒன்றாகப் பழகியவர்கள். இவர்கள் தங்கள் திருமண வயதினை அடைந்ததும் இரு குடும்பமும் சேர்ந்து இவர்களுக்குத் திருமணம் முடித்து வைக்கின்றனர். தமிழ் மரபுப்படி அந்த காலகட்டத்தில்,  பண்டைய காலவழக்கப்படி திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அவ்வாறே இவர்களுக்கும் தனிக்குடித்தனம் அமையப்பெற்றது.  இருவரும் இசையும் நடனமும் தெரிந்தவர்கள் என்பதால் இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாகச் சென்றது.

மாதவி:

இந்த நகரம் கலைக்குப் பெயரான நகரமாதலால், நடனமும் நாட்டியமும் அரங்கேறிக்கொண்டே இருக்கும் அப்படிப் பெயர்பெற்றவர் தான் "சித்திரா பதிஇவரின் மகள் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் முதல் முதலாக  நிகழ்ந்தது.  அதற்காக அரசர்கள்பெருவணிகர்கள் என பெரும்பாலான மக்கள் திரள் கூடியிருந்தது. மாதவியின் முதல் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது அதன் வழியே நிறையப் பரிசுகளும் பட்டமும் கிடைத்தது. இந்த மாதவியின் நடனத்தில் மயங்கிய கோவலன் அவள் மீது ஆசைகொண்டு கண்ணகியை விட்டு மாதவியுடன் வாழத் தொடங்கினான். இவர்களின் உல்லாச வாழ்வின் ஒரு நாள் ஏற்பட்ட   கருத்து வேறுபாட்டில் கோபங்கொண்ட கோவலன் கண்ணகியிடம் திரும்பினான். இதற்கிடையில் இருந்த எல்லா செல்வத்தையும் மாதவியிடம் இழந்தான்.

மதுரை காண்டம்: 

மாதவியிடம் இருந்த சோர்ந்து போன முகத்துடன் வந்த தனது கணவனை நோக்கி கண்ணகி சொல்கிறாள், என்னிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்துவிட்டீர்கள், இப்போது உள்ளது காற்சிலம்பு மட்டுமே அவற்றை எடுத்துச்செல்லுங்கள் தங்கள் மனம் நிறைவாக இருப்பதற்கு என்று சொல்கிறாள். மாதவியிடம் பிணக்கு ஏற்பட்டு மனம் திருந்தி வந்த கோவலன் நான் முற்றிலும் திருந்தி உனக்காகவே என வந்துள்ளேன். அதனால் நீ சொன்ன அந்த சிலம்பினை விற்று நாம் ஒரு புதிய வணிகம் தொடங்குவோம். ஆனால் அந்த புதிய வாழ்க்கை ஆரம்பிக்க  நாம் மதுரைக்குச் செல்வோம் என்கிறான்.                         

மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்க வேண்டி மதுரைக்கு இருவரும் புறப்படுகின்றனர். இந்த பகுதியினை மதுரை காண்டம் என்று சொல்கிறது. 

இதற்கு முன்னர் கண்ணகி ஒரு கனவு காக்கிறாள் அவற்றைத் தனது தோழி தேவந்தியிடம் கூறுகிறாள், இது ஒரு கெட்ட கனவுதான். அவற்றில் இருந்து விடுபட வேண்டி,  காவிரியாறு  கடலில் கலக்கும் இடத்தில் இருக்கும் சோமா குண்டம் சூரிய குண்டம் ஆகிய இரண்டிலும் நீராடி வாருங்கள். அப்போது எலலாமே நல்லதாகவே நடக்கும் என்று சொல்கிறாள் ஆனால் அதற்குள் கோவலன் வரவே கண்ணகி தோழி சொன்னதை மறந்து கணவனுடன் மதுரைக்குப் புறப்படுகிறாள்.  மதுரைக்கு நடையாகப் பயணம் சென்றனர்.  வழியே நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளை அழகாகச் சொல்லிச்செல்கிறது காப்பியம். முதலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கின்றனர் பிறகு அவரின் துணையுடன் நடக்கின்றனர், மூன்று வழிகளில் நடு வழியினை தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். இடை இடையே வந்து மாயம் செய்யும் தேவதையின் விளையாட்டு பிறகு கெளசிகன் வழியே வரும் தூது என்று ஒருவழியாக மதுரையின் புறஞ்சேரியில் தங்குகின்றனர்.

மதுரையின் அழகினை, மதுரை தென்றல் வாசத்தின் வழியாக வர்ணிக்கிறார். எண்ணற்ற வாசனைகள், பல்வேறு வகையான ஆலய ஓசைகள், வகை வகையான மரங்களால்  சூழ்ந்திருக்கும் வைகை ஆறு, பரபரக்கும் கடை வீதி என நம் கண் முன்னே அழகிய மதுரையினை கொண்டுவருகிறது.

கவுந்தி அடிகள், கோவலனுக்குக் கொடுக்கும் அறிவுரையில் நீ முற்பிறவியில் செய்த பொல்லாத செயலினால் இப்பிறவியில் பழிவாங்கப்படுவாய் அந்த நிகழ்வு முற்பிறவியில் பாதிக்கப்பட்டவனால் நடக்கும் என்று கூறுகிறார். கோவலனும் அதுபோலவே ஒரு கனவினை காண்கிறான்.  ஆயர்குல முதியவளின் வீட்டில் தங்கியிருக்கும்  இவர்கள் மறுநாள் காலையில் கண்ணகியின் ஒரு காற்சிலம்பினை மட்டும் எடுத்துக்கொண்டு கோவலன் மட்டும் தனியாக நகருக்குள் செல்கிறான் விற்பதற்காக.

நகரின் எதிர்கொண்ட அரண்மனை பொற்கொல்லன் லாவகமாக இவனிடம் இருக்கும் சிலம்பு தான் பணிபுரியும்  அரண்மனையின் மகாராணியுடையது என்று சொல்லி மன்னரிடம் தான் செய்த திருட்டில் இருந்து தப்பிக்க தவறான செய்தியினை  சொல்லி  கோவலனின்    உயிரினை பறிக்கிறான்.

இந்த செய்தியினை அறிந்த கண்ணகி, கவலை கொண்டு  புலம்பலுடன் மயங்கி விழுந்துவிடுகிறாள். பிறகு வீறிட்டு எழுந்த கண்ணகி சிவந்த கண்களுடனும், தலைவிரிகோலத்துடனும் தனது மற்றொரு சிலம்புடன்    அரண்மனை நோக்கிப் பொங்கி எழுந்து ஆவேசத்துடன் வீர நடையுடன் செல்கிறாள்.

அரண்மனையினை அடைந்த கண்ணகி, மன்னனிடம் முறையிடுகிறாள், தனது கணவன் கள்வன் அல்ல தவறான தீர்ப்பு வழங்கிய நீரோ கள்வன் என்று உரைத்து தனது கையிலிருந்த மற்றொரு சிலம்பினை உடைத்து அதில் பதித்திருப்பது மாணிக்கக் கற்கள் என்று நிரூபித்து ஆவேசம் கொள்கிறாள்.

தான் தவறிழைத்ததை  அறிந்த பாண்டிய மன்னன் அக்கணமே உயிர்நீத்து தனது செங்கோலினை நிலைநாட்டுகிறான் கணவன் உயிர்நீத்ததை அறிந்த அரசியார்  அவன் கூடவே  கோப்பெருந்தேவியும் உயிர்விடுகிறாள். ஆவேசம் குறையாத கண்ணகி மதுரையினை எரிக்கிறாள், பிறகு அங்கிருந்து வைகை நதியோரம்  நடந்து வஞ்சி மாநகரத்திற்குச் செல்கிறாள்.

வஞ்சிக்காண்டம்:  

கோவலன் கொல்லப்பட்ட பதினான்காம் நாள் அவளை அழைத்து செல்ல கோவலன் வருவான் என்று  சொன்னதை கேட்டுகொண்ட  கண்ணகி, தனது கணவனை சந்திக்க  சேர நாட்டின் மலை பிரதேசத்தில் பிரவேசித்து  ஒரு பகுதியில் நிக்கிறாள். அவள் வருகையினை அறிந்து அங்கே ஒரு விமானம் வருகிறது அதில் அவள் ஏறி கோவலனுடன் விண்ணுலகம் செல்கிறாள்.

இந்த செய்தி கேட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், தன் அரசன் அநீதி விதித்தான் என்று அறிந்த கோப்பெருந்தேவியிம் உயிர்நீத்தாள். இவர்களில்  கோப்பெருந்தேவி சிறந்தவாளா அலல்து தன கணவன் கள்வன் அல்ல என்று நிரூபித்து மதுரையினை தீயிட்டாளே அவள் சிறந்தவாளா என்று கேள்வியினை தனது அரசியிடம் கேட்கிறான். 

மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லும் அரசி, இவர்கள் இருவருமே பாராட்டத்தக்கவர்களே என்று தனது தரப்பு கருத்தினை சொல்கிறாள்.   பிறகு சேர மன்னன் செங்குட்டுவன், பத்தினி தெய்வமான கண்ணகிக்கு ஒரு சிலை   வைக்கவேண்டும் என்று எண்ணி அதற்காக  பொதிகை மலையில் இருந்து கல் எடுத்துவரலாமா அலல்து இமயமலையில் இருந்து எடுத்துவரலாம் என்று கேட்கிறார். அமைச்சர்கள் அனைவரும்  இமய மலையில் இருந்து எடுத்துவருவதே உகந்தது என்றதும் , மன்னன் இமய மலையில் இருந்து கல் எடுத்துவர செல்கிறான் வழியில் ஏற்படும் போர்களை எல்லாம் வென்று இமயமலையின் கல்லுடன் திரும்பி வருகிறான். பத்தினிக்கு கோவில் இமயமலையில் இருந்து எடுத்துவந்த கல்லில் செய்த சிலையினை வைத்து, கண்ணகியின் தோழியான தேவந்தியிடம் பூஜை செய்ய பணிக்கப்பட்டது.

இந்த காப்பியம், சோழ நாட்டின் புகார் என்ற நகரில் பிறந்து, பாண்டிய நாட்டின்  மதுரையில் கணவனை இழந்து சேரநாட்டின் தலைநகருக்கு அருகாமையில் துறக்கம் அடைந்த பத்தினி தேவியின் வரலாற்றை மிகச்  சிறப்பாக சொல்லுகிறது. 

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

10 செப்டம்பர் 2021 

1 comment:

  1. தெரிந்த கதை புதிய கோணம் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete