Wednesday, 22 September 2021

கருக்கு

 கருக்கு

ஆசிரியர் : பாமா 

காலச்சுவடு பதிப்பகம்  

விலை  ரூபாய் 140

பக்கங்கள் 118



வாழ்வில்  அனுபவித்த வலிகளை,  நம்மிடம், தனது இயல்பான பேச்சு வழக்கிலேயே அருமையான வரிகளாக தொடுத்து கொடுத்திருக்கிறார்.

கருக்கு வாசித்து முடிப்பதற்குள் மனதில் எத்தனையோ விதமான இனம் தெரியாத வலிகள். தேக்கி வைத்த நீர் எவ்வாறு மடை திறந்தவுடன் வேகமெடுத்து ஓடுமோ அதுபோலவே தனது மனதில் தேங்கிக் கிடந்த குமுறல்களைச் சொல்லிச்செல்கிறார் ஆசிரியர் பாமா.


மிகவும் முக்கியமான ஒரு படி மதிப்பு உயருகிறது ஏனெனில் கருக்கு சொல்லும் விதமே தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இயல்பான பேச்சின் பிரதிபலிப்பே மொத்த பக்கத்திலும் பார்க்கமுடிகிறது.

ஒரு தலித் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்து நன்றாகப் படித்து ஒரு வேலைக்கும் போனபிறகு அந்த வேலையினை விட்டுவிட்டு கன்னியாஸ்திரீ ஆகி நாம்போல ஏழை மக்களுக்குப் பணி செய்யவேண்டும் என்ற கனவுகள் ஒரு பகல் கனவாகிப் போனதால் எல்லாத்தையும் விட்டு தோப்பிலிருந்து எடுத்து வந்து நட்ட தனிமரம் போல ஆனால் ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த வழிகளும் வலிகளும் எனக் கருக்கு நமக்குக் கொஞ்சம் சுருக்கு என்று சமுதாயத்தின் அவலத்தினை அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

ராணுவத்தில் அப்பா வேலைசெய்கிறார் ஆனால் அவர் குடும்பம் வறுமையில் வாழ்கிறது அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நிலைக்கு போது யார் மீது குறைபட்டுக்கொள்வது!!

ஒவ்வொருவரும் நாம் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த ஊர்களைச் சொல்லும் போது மனதில் வரும் ஒரு விதமான ஊற்றுபோன்ற வர்ணனைகள் சொல்லவே வேண்டாம் இவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை அந்த ஊருக்குள் ஒரு உலா அழைத்துச் சென்றேவிட்டது. கம்மாக்கரையில் கரைபுரண்டோடிய தண்ணீர் அதிலே துள்ளி குதித்தோடும் மீன்கள், காடுகளில் சுள்ளி பொறுக்கி வந்து விற்கிற அனுபவம். கிராமத்தில் வெள்ளந்தியாக வேலை செய்யும் விலைமதிப்பில்லா ஆட்கள் அவர்களைச் சுரண்டும் நிலக்கிழார்கள். வெளியுலகம் தெரியாத மனிதர்களின் மாசற்ற பிரதேசம்.   

சிறுவயதில் ஏன் கடவுளை வணங்குகிறோம் என்று தெரியாத வேளையில் கூட விடிய விடிய விதவிதமான ஜெபங்கள் செய்த அனுபவங்கள் ஆனால் வாழ்வில் ஒரு முதிர் நிலைக்கு வந்த பிறகு அப்போது செய்தது எல்லாம் ஒரு விதமான அடிமைத்தனம் என்ற ஆணித்தரமான பார்வை உண்மையினை உரக்கச் சொல்கிறது.

சாதி என்ற ஒரு கொடிய நோய் பின்தொடரும் இடங்கள் ஒன்றா இரண்டா இல்லை அது பின்தொடராத இடமே இல்லையென்றே சொல்லவேண்டும்.

பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து, கிராமம், கடைத் தெரு, சுடுகாடு, போக்குவரத்து, உழைப்பு, உணவு, மனநிறைவுக்காகப் போகும் தேவாலயங்கள் என எல்லா இடத்திலும் கூடவே கொடுமை செய்யும் ஒரு மிகப் பெரிய தீய சக்தியாக வருவது மனதை வருடத்தான் செய்கிறது.

கிராமத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறைகள் அவற்றிலும் கொடுமைக்குள்ளாவது ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு வலியே. 

தனது மதத்தில் அங்கீகாரம் இல்லையென்றுதான் வேறொரு மதத்தினை நாடிச்செல்கின்றனர் ஆனால் அங்கேயும் இதே  சாதிய பாகுபாடு இருக்கிறதென்றால் வேறெங்குதான் போவார்கள் இவர்கள்.  

கல்லூரி காலத்தில் பெற்ற பல்வேறு அனுபவங்களைச் சொல்லும் விதம் நம்மையெல்லாம் கொஞ்சம் சிந்திக்கவே செய்கிறது. ஒரே உடையுடன் ஒரு வாரக் காலம் கடத்தியது பிறகு படிப்பில் காட்டிய விவேகத்தில் விலகியவர்களும் வந்து உறவாடியது தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது இப்படியும் இந்த சமுதாயம் இருக்கிறது என்ற ஒரு பெரிய கேள்விக்குப் பதில் இல்லாமலே இருக்கிறது.

கன்னியாஸ்திரீ ஆகி சேவை செய்யலாம் என்று அங்கே போனாலும் அதற்குள்ளேயும் சாதியும் சதியும் சேர்ந்து வந்து ஆட்டம் போடுகிறது பாவம் என்ன செய்வது தனித்து வருவதைவிட வேரென்ன செய்யமுடியும் இந்த சமூகத்தில்.  இந்த மடத்தில் சேரும் போது இருந்த திடம் வெளியில் வரும்போது இல்லை என்று சொல்லும்போது எத்தனை சோகங்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

வாழ்வில் விசாலமான வழியென்று வீரநடை போட்டுச் சென்ற பிறகுதான் தெரிகிறது வந்த வழி நமது வழியில்லை என்று. தவறான இடத்தில் இருந்து வெளியே வருவது எளிதான செயலல்ல, அப்படியும் தீர்மானமாக வெளியேறியதும் வந்து அனுபவிக்கும் துயரங்கள் ஏன் என்றே தெரியாத ஒரு விதமான சாபம் என்று கூடச் சொல்லலாம்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 செப்டெம்பர் 2021               

No comments:

Post a Comment