Saturday 4 September 2021

குருகுலப் போராட்டம்

குருகுலப்  போராட்டம்  

சமூகநீதியின் தொடக்க வரலாறு

ஆசியர் : நாரா. நாச்சியப்பன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள்  80



சமூகநீதியின் ஆரம்பப் புள்ளியே இந்த  குருகுலப்  போராட்டம்  தான் என்றும் மற்றும் இந்த போராட்டம் ஆரம்பித்த காரணம் முதல் ஒவ்வொரு படியினையும் மிகத் தெளிவாகவும், சிறப்பான முறையிலும்  தொகுக்கப்பட்டுள்ளது இந்த புத்தகம். 

ஆதிக்கச் சாதியின் அதிகாரம் எப்படி அடுத்துள்ளவர்களின் மீது அடக்கி ஒடுக்குமுறையினை வைத்திருந்தது, அந்த ஒடுக்கு முறைக்கு அவர்கள் சொல்லும் அவர்களின் நம்பிக்கை அதனால் பிறருக்கு ஏற்படும் ஒடுக்குமுறையினை பற்றி கவலை கொள்ளாமல் மேலும் மேலும் அதன் வீரியம் கூடிக்கொண்டே சென்றது.

தமிழ் மண்ணின் சமூக நீதி என்றாலே நமது நினைவுக்கு வருவது முதல் மூன்று பெயர்தான் அவற்றில் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி. இத்தகைய மூன்று கண்களில் வெளிப்பட்ட சுடரின் வெளிச்சமே நாம் இன்று வாழ வழி செய்தது.

நீண்ட நெடுநாள்களாக சக மனிதர்களை முன்னேற விடாமல்,  சாதியினால் இருக்கும் அநீதியும், மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்று சொல்லி அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து வகையான பிறப்புரிமைகளையும்  பறித்துக்கொண்டு அதள பாதாளத்தில் தள்ளி வைத்து விட்டு  வேடிக்கை பார்த்த ஒரு சிறிய கூட்டம், செய்த தந்திரங்கள் என ஏராளனமாவை.

இந்த இருளிலிருந்த மக்களை வெளிச்சத்திற்கு அழைத்து வந்ததற்கு  ஒரு பெரிய பங்கினை வகித்தவர் "தந்தை பெரியார்". அவரின் ஆரம்ப முனைப்புதான் இன்றளவும் நாம் அனுபவிக்கும் எண்ணற்ற சுதந்திரம் என்று சொன்னால் அதுமிகையாகாது.

மற்றவர்களுக்குப் படிப்பதற்கு சமூகத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காமல் அவர்கள் தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு,  இழைக்கப்பட்ட அநீதிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை மீட்டெடுக்கவேண்டி   ஆரம்பமானதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூக நீதியின் அடிப்படை கோரிக்கையாகத் துளிர்விட்டது.

புத்தகத்தின் ஆரம்பத்தில் மேற்கோள்காட்டியிருக்கும் பாரதியின் விடுதலை பாட்டு, மீண்டும் மீண்டும் வாசித்தால் நமக்குள்ளே இருக்கும் விடுதலை உணர்வு பீரிட்டு எழுகிறது. எத்தனை விடுதலை, யார் யாருக்கு விடுதலை என மிக ஆழ்ந்த சிந்தனை.

வ.வே.சு. ஐயர் அவர்களின்  ஆரம்பத்திலிருந்த வெளிப்படையான பார்வை பற்றியும் அவர்களை சுற்றியுள்ள பல்வேறு மக்களினை பற்றியும் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறது. இவரின் கல்வி மற்றும் இலக்கிய திறமைகளையும், அவர் கொண்டிருந்த பல்நோக்கு சிந்தனையும் இவர் மீது அதீத நம்பிக்கையினை எல்லோருக்கும் ஏற்பட ஒரு உந்துதலாக இருந்தது, அப்படி ஏற்பட்ட அந்த நம்பிக்கையின் பெயரிலே இவருக்குக் குருகுலம் ஆரம்பிக்க எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

என்னதான் செய்தலும் அவரவர் குணம் அது தானாகவே வெளிப்படும் என்பதுபோல அவரின் குணம் ஒரு சமயத்தில் வெளிப்பட்டது. எதற்காகக் குருகுலம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையினை நம்பியவர்கள் எல்லாம் இழந்து போனது என்றே தான் சொல்லவேண்டும்.

குருகுலம் ஒரு லட்சிய பள்ளிக்கூடம் என்றும் அதனைத் திறம்பட நடத்தத் தகுதியானவர் வ.வே.சு தான் என்று எல்லோரும் நம்பிக்கையுடன்  ஆரம்பித்தார்கள் ஆனால் அங்கே நடத்தப்பட்ட சாதியின் பாகுபாடுகள், இரட்டை பந்தி, இரட்டை தண்ணீர் பானை, சமைப்பது மட்டும் பிராமணர்கள் மற்ற எல்லாவேலைகளையும் மற்ற சாதியினரச்செய்ய சொல்வது என ஒரு பெரிய அநீதி நடந்து கொண்டிருந்தது.

இந்த அநீதி தான் மிகப் பெரிய குருகுலப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த சாதிய பாகுபாட்டிற்கு அப்போதைய காங்கிரஸிலிருந்த எல்லா பிராமணவர்கலும் மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சில வேற்று சாதியினை சேர்ந்த காரியவாதிகளும் ஆதரவாகவே பேசினார்கள். இந்த பிரச்சினையில் காந்தியும் கூட இதற்கு ஆதரவாகவே தான் பேசினார் மற்றும் அறிக்கை விட்டார் என்று சொல்லப்படுகிறது.

தருமம் நியாயம் என்பதெல்லாம் அவர்கள் சாதியுயர்வைப் பாதிக்காத வரையில் தான் செல்லுபடியாகும், ஆனால் இவர்களின் சாதியின் அடிப்படியில் கைவைத்தால் தருமம் நியாயம் சாதி துவேஷமாக மாறிப்போய்விடும். இவற்றை நன்றாகப் புரிந்துகொண்ட தந்தை பெரியார், ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற வேண்டும் அதற்காக அரசு வேலை வாய்ப்புக்களில் வகுப்புவாரிப் வாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படை கொள்கையினை வைத்து போராட்ட தொடங்கினார், இந்த போராட்டம் தான் சமூக நீதியின் போராட்டமாக இருக்கிறது.

இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் சாதிகள் ஒழிவதற்குப் பதிலாக வளர்ச்சிதானே அடையும் என்று ஆதிக்க வர்க்கம் கூக்குரல் இட்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. பெரியாரின் குறிக்கோள்கள் எல்லாமே அவ்வாறு ஒவ்வொரு சாதிக்காரனும் வளர்ச்சியடையவேண்டும் என்றே எண்ணினார்.

இந்த உரிமையினை தான் ஒட்டுமொத்த இந்தியர்களும் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.


நன்றியுடன்,

தேவேந்திரன் ராமையன் 

04 செப்ட்ம்பர் 2021         

No comments:

Post a Comment