Friday 3 September 2021

சாதி தேசத்தின் சாம்பல் பறவை - வாசிப்பனுபவம்

 சாதி தேசத்தின் சாம்பல் பறவை

ஆசிரியர் : எவிடன்ஸ் கதிர் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 175

பக்கங்கள் 272



சமூக நீதி என்றதும் நமது மனதிற்கு வருவதெல்லாம் அது என்னவோ பழைய கதைகள் அதெல்லாம் இப்போது இல்லையென்றும் நாம் வாழும் தேசத்தில் இப்போது சமூக நீதி எல்லோருக்கும் சமமாகக் கிடக்கிறது என்றும் நமக்குள் ஒரு மாய பிம்பம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, ஆமாம் அது வெறும் மாயபிம்பம்தான். இந்த தேசத்தில் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு மூலையிலும் சமூக நீதி கிடைக்காமல் எத்தனையோ அவலங்கள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது.

நான் சமீபத்தில் கிண்டிலில் வாங்கிய புத்தகம் தான் இந்த " சாதி தேசத்தின் சாம்பல் பறவை" - தலைப்பைப் பார்த்த போது ஏதோ ஒரு விதமாகத் தோன்றுகிறதே என்று முகவுரையினை வாசித்துப்பார்த்தேன். நாம் வாழும் இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் சமூக அநீதிகளைப் பேசும் ஒரு புத்தகமாக இருந்தது.

ஆம், இன்றளவும் வெகுவான கிராமங்களில் "சாதி  என்ற தீ" சுடர் விட்டு இருந்துகொண்டுதான் இருக்கிறது, இதில் என்ன இரு உண்மை என்றால் அங்கே நடந்தேறும் நிகழ்வுகளில் பெரும்பாலும் அனைவருடைய சம்மதமில்லாமல் தான் நடக்கிறது ஏனெனில் வலிமை உள்ளவன் தனது பலத்தினை காட்டுவதற்காக தன் சார்ந்த மக்களை அடக்கி அவன் எடுக்கும் முடிவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான் பாவம் இந்த பாழாய்ப்போன மக்கள் தான் உடன் செல்வது ஒரு கொடூரத்திற்கு என்றாலும் பின்வரமுடியாமல் கையில் ஒருவன் பூட்டிய விலங்குடனே நடந்துசெல்கிறான்.

இந்த புத்தகம் ஆனந்த விகடனில் தொடர்ந்து வந்த 29 கட்டுரைகளின் தொகுப்பாகவும், இதனை எழுதியவர் "எவிடன்ஸ் கதிர்" என்பவர் ஆவார்.

யார் இந்த     "எவிடன்ஸ் கதிர்", இவர் வீராணம் ஏரிக்கு அருகில் இருக்கும் லால்பேட்டை என்ற ஊரில் பிறந்தார், இயற் பெயர் வின்சண்ட்ராஜ். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஒரு சமூக அமைப்பான "எவிட்னஸ்" என்ற தன்னார்வல தொண்டு நிறுவனத்தினை நடத்திவருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் பற்றிய தனது கருத்தினை பேசியிருக்கிறார் மேலும் ஐ.நா. சபையிலும் பேசியிருக்கிறார்.

தான் சந்தித்த பல்வேறு களநிலவரங்களையும்கள ஆய்வுகளையும் அவ்வாறு தனது பணியினை மேற்கொள்ளும்போது ஏற்பட்ட பல்வேறு தரப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அனுபவங்களையும் அந்த அனுபவங்களில் ஏற்பட்ட வலிகளையும் இன்றும் கிடைக்காத "சமூக நீதியினை" பற்றியும் மிகத் தெளிவாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இந்த கட்டுரைகள் கண்முன்னே கொண்டுவருகிறது

ஆணவக்கொலைகள் 

பிணத்தை வைத்து நடந்தேறிய கலவரம் 

கோவிலில் அனுமதிக்காமல் இருக்கும் அநீதி 

காவலர்களால் ஏற்படும் அநீதி 

சட்டம் செய்ய மறுத்த நீதி 

ஆட்சியாளர்கள் அலட்சியம் 

பணமும் ஆதிக்கச் சாதியும் சேர்ந்து நடத்தும் அநீதி 

பெண்களுக்கு இழைக்கும் அநீதி 

பள்ளிக்கூடங்களில் நடக்கும் சாதிய வன்மங்கள் 

போலியாக நடக்கும் என்கவுண்டர்கள்

இழிதொழிலில் இருப்பவர்கள் குடிக்கு அடிமையாவது  

இட ஒதுக்கீட்டால் ஏற்படும் 

இளைஞர்களிடையே தழைத்தோங்கும் சாதியத்தின் பெருமைகள் 


எவிடன்ஸ் கதிரின், இந்த கட்டுரைகள் ஒவ்வொன்றும் வாசிக்கும் போது மனதில் ஒருவிதமான வலி கூடுகிறது.

காரணம் இந்த மண் அனைவருக்கும் சமமானதுதானே, மனிதன் என்று மார் தட்டி திரியும் ஒவ்வொருவரும் மூச்சு போனபிறகு பிணம் என்று தானே அழைக்கப்படுகிறது.    இந்த மகா உண்மையினை தெரிந்துகொண்டும் மனிதன் ஆணவத்தின் பிடியில் ஆடும் ஆட்டங்கள் தான் எத்தனை.

சாதி  என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் ஒடுக்குவதில்லை. சாதி என்ற ஆதிக்கத்தின் ஆதி முதல் அடி வரை இருக்கும் ஒவ்வொரு சாதியும் அதன் கீழுள்ள  ஒவ்வொரு படியும் தனக்குக் கீழுள்ளவன் மீது உட்கார்ந்துகொண்டு தான் தான் பெரியவன் என்ற அகங்காரத்தின் வழியே அவனை முன்னிறுத்திக் கொள்ளவேண்டி சமூகத்தில் அநீதிகளை நடத்துகிறான்.

 இந்த புத்தகம் நமது சக மனிதர்களுக்கு சக மனிதர்களால் நிகழும் ஒவ்வொரு கொடுமையினையும் பற்றிப் பேசுகிறது.

தன் மகள் வேறு சாதியினை சார்ந்த பையனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காகப் பாசமாக வளர்த்த மகளையே கொலை செய்வதும் அதுபோலவே தங்கள் மகளை அழைத்துக்கொண்டு அவளின் கணவனைக் கொள்வதும் இதற்குப் பெயர் கௌரவக் கொலை என்றும் மார்தட்டிக் கொள்ளும் மதிகெட்ட மனிதர்கள்கூட தான் நாமும் வாழ்கிறோம்.

உயிர்நீத்துப் போனபோது கூட அந்த பிணத்திற்கும் சாதி என்ற சாயம் பூசி ஆவேசமாக ஆட்டம்போடும் சாதிகளின் சந்துக்குள் தானே நாமும் வசிக்கிறோம்.

இறைவன் இருக்கும் ஆலயத்தில் அனைவரும் வழிபடலாம் என்ற அடிப்படை உரிமை கூட இல்லாத இறைநம்பிக்கையில் தானே நாம் வாழ்கிறோம். சாமிக்குக் கூட சாதியின் பெயரிலே தான் நாம் வழிபடுகிறோம். ஒரே கடவுள் ஆனால் அது இருக்கும் இடத்தில் இருக்கும் சாதியின் பெயருக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் தான் இன்றைய தெய்வங்களும்    வழியில்லாமல் வாழ்கின்றன.

நிலம் கூட இங்கே சாதியின் பெயரில் இருக்கும் ஆதிக்கத்தால் தானே கையகப்படுத்தப்படுகிறது அதுபோலவே எண்ணற்ற மக்கள் தங்கள் நிலங்களை இழந்து நீதிமன்றம் வாசலில் கிடைக்காத நீதிக்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

நீதியரசர்களாகக் கூட பணியிலிருந்தாலும் அவர்கள் சார்ந்த சாதியின் அடையாளத்தில் தானே அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அடிமையாக இருந்த மக்களிலிருந்து ஒருவன் பெரிய பதவிக்கு வந்தாலும் அவருக்கு என்னவோ சாதியின் வண்ணம் தீட்டி சக மனிதர்கள் பார்ப்பது அவலத்திலும் அவலமானது.

உயர் காவல் பதவிக்கு வந்தாலும் கூட அவரின் சாதியினை வைத்துக் கொண்டு அவரின் பணியினை சுதந்திரமாகச் செய்ய முடியாமல் முட்டுக்கட்டை போடுகிற மக்களின் கூட்டத்தின் நடுவே தான் நாமும் சுற்றித் திரிகிறோம். இதில் கொடுமை என்னவென்றால் நாட்டில் நடக்கும் அநீதிக்குக் குரல் கொடுக்கவேண்டும் என்ற எண்ணற்ற கனவுகளுடன் அந்த பதவிக்கு வருபவர்கள் இறுதியில் பாதியிலே தற்(கொலை)  யில் தங்கள் கடமையினை முடித்துக்கொள்கின்றனர்.   

சிறைகளில் கைதிகளாக அடைபட்டுக் கிடக்கும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்காகவே தண்டனை அனுபவிக்கிறார்கள் என்ற உண்மையினை தெரிந்து கொண்டால் நாம் என்ன செய்யமுடியும். பெரும்பாலான மக்கள் தங்கள் செய்யாத குற்றத்தினை உண்மையில் குற்றம் செய்தவர்களின் பணபலமும் சாதியின் பலமும் சுதந்திரமாக நடமாட்ட விட்டுவிட்டு உண்மையாகப் பாதித்தவர்களையே குற்றவாளி என்ற முத்திரை குத்தி சிறையில் அடைத்து விடுகிறது.

ஈஸ்வரன் மற்றும் பரமசிவன் என்ற இரண்டு தலித் இளைஞர்களைக் கொலை செய்தார்களால் காரணம் இவர்கள் கோவிலில் நடத்திய சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக. என்ன சொல்வது சாதியின் கொடூரமல்லவா இது.

ஆலயத்திற்கு    வருவதே கடவுள் இருக்கிறான் என்று அங்கே சென்றால் வாழ்வில் அமைதி கிடைக்கும் என்று தான் ஆனால் அங்கே எத்தனை விதமான அடக்குமுறைகள். கோவிலின் கருவறைக்குள் செல்ல அனுமதி ஒரு சாதிக்குமட்டும், ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதி கொஞ்சம் சாதியினருக்கு, முன்னின்று தரிசிக்கச் சிலருக்கு இவற்றுக்கு எல்லாவற்றிலும் மேலாக அனுமதியே இல்லாமல் இருக்கும் வெகுவான மக்கள்.

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் மற்றும் பள்ளிக் கூடங்களிலும் நடக்கும் சாதியின் வன்கொடுமைகள் நாம் இன்றளவும் வேடிக்கை  பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

சுற்றுலா மேற்படுத்திக்கிறோம் என்று பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமான அவர்கள் பிழைக்க வழியாக இருந்த நிலங்களை பெரும்பாலும் பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துவிட்டு அங்கே நிம்மதியாக வாழ்ந்துவந்த மக்களை அன்றாடம் வாழவே அல்லல் பட வேண்டிய சூழலில் தள்ளியது ஒரு அநீதியாகவே பார்க்க வேண்டும்.

இதுபோல எண்ணற்ற கேள்விகளுக்கு விடையாக இந்த புத்தகம் இருக்கிறது.  ஒவ்வொரு கட்டுரையினையும் வாசிக்கும் போது மனது வலிக்காமல் இருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

"எவிடன்ஸ் கதிர்" போன்ற தன்னலமில்லாமல் சக மனிதனின் உரிமையினை பெற்றுக்கொடுக்க மேற்கொண்ட எண்ணற்ற காரியங்கள் அவ்வளவாக எளிதாக செய்ய முடியாது. இவர் சந்தித்த எண்ணற்ற மிரட்டல்கள், அடிகள், கொலைமுயற்ச்சிகள் என எல்லாவற்றையும் சந்தித்து தான் எடுத்துக்கொண்ட இத்தகைய மனிதாபிமான காரியத்தில் கடந்து சென்றுகொண்டிருப்பது நன்றிக்குரியதே.

அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 

03 செப்டெம்பர் 2021

No comments:

Post a Comment