Wednesday 1 September 2021

மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள் - வாசிப்பனுபவம்

 மகர்கள்  மற்றும் மாங்கர்களின் துயரங்கள்   

ஆசிரியர் : முக்தா சால்வே 

(முதல் பெண் தலித் எழுத்தாளர்)  

தமிழில் - திவ்யா பிரபு 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 11



இந்த புத்தகம், ஒரு இளம் தலித் பெண் தனது 14 வயதில் எழுதிய ஒரு கட்டுரையினை 1855 ஆம் ஆண்டில் தியானோதயா என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். 

சாவித்திரி பாய் மற்றும் ஜோதிபா பூலே ஆகியோரின் மாணவியான "முக்தா சால்வேதான் அந்த இளம் பெண்.

இந்த நூலினை தமிழில் "ஓங்கில் கூட்டம்" அமைப்பின் சார்பாக திவ்யா பிரபு அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

ஒரு சிறுமியின் மனதில் ஏற்பட்ட ஏக்கங்களையும் வலியினையும் தன் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளார் முக்தா சால்வே.

"நாங்கள் எல்லோரும் மிருகத்தைவிடக் கீழானவர்களா" என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் இந்த கட்டுரையில் அடிமைப்படுத்தப் பட்ட ஒட்டுமொத்த மனிதர்களின் வலியினை பிரதிபலிக்கும் விதமாக எண்ணற்ற கேள்விகளால் தன் மனதில் எழுந்த வலிகளைக் கொட்டி தீர்த்துவிட்டார்.

உலகினில் இருக்கும் எல்லா உயிரினங்களைப் படைத்த இறைவன் தான் எங்களையும் எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆதிக்க சாதியினரையும் படைத்திருக்கிறான் அந்த இறைவன் தான் எனக்கு இந்த கேள்விகளைக் கேட்ட சக்தியும் கொடுத்திருக்கிறான் என்கிறார்.

பிராமணர்கள் மட்டும் தான் வேதம் வாசிக்க வேண்டுமாம் அதுமட்டுமல்லாமல் எங்களுக்கென எந்த வகையான மதம் இருக்கிறது, அப்படியானால் நாங்களெல்லாம் மதம் இல்லாத மனிதர்களா என்ற கேள்வியும் எழுகிறது.

கடவுளிடம் கேட்கும் கேள்வி இது. எங்கள் மதம் தான் என்ன? அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்? 

ஏழை மாங்கர்கள் மற்றும் மகர்களான எங்களிடமிருந்த நிலங்களை  இந்த பிராமணர்கள் அதிகாரத்தினை கொண்டு ஆக்கிரமித்து அவற்றில்  பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்குக் காவுகொடுப்பதற்கு எங்களுக்குச் சிவப்பு ஈயம் கலந்த எண்ணெய் குடிக்க வைத்து கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் புதைத்து விடுகின்றனர், இது தொடர்ந்து போனால் எங்கள் தலைமுறையே அழிந்து போகாதா?

பாஜிராவ் பேஷ்வாவின் ஆட்சியில் எங்களைக் கழுதைகளை விட மோசமாக நடத்தினார்கள் ஆனால் இங்கே ஒரு ஊனமுற்ற கழுதையை அடித்தால் கூட அதற்குப் பணிந்து பேச அவற்றின் எஜமான வருவான் ஆனால் இந்த மாங்கர்களும் மார்களும் யாருமற்று நிர்க்கதியாக இருக்கிறோம்.

இதுபோல எண்ணற்ற கேள்விகளையும் மனக்குமுறல்களையும் அடுக்கிக்கொண்டே சென்ற சால்வா ஒரு சமயத்தில் இதற்கு மேல் நான் எழுதினேன் என்றால் என் கண்ணீரை என்னால் தடுக்க முடியாது என்று நிறுத்துகிறார். மேலும் இந்த கொடுமைகளிலிருந்த எங்களை மீட்கவே ஆங்கிலேய ஆட்சி வந்தது என்றும் இவர்களின் வருகைக்குப் பிறகு முன்பெல்லாம் இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது என்று முடிக்கிறார்.

ஒரு மாணவ பருவத்தில் இருக்கும் சிறுமியின் மனத்தில் எழுந்த இந்த கேள்விகள் கொழுந்து விட்டு எரியும் தணலை விடத் தார்மீக சுவாலை போன்றதாகவே தெரிகிறது.

அடிமைப்பட்ட மக்களின் வலிகள் தீர எந்த வித வலி நிவாரணியும் இல்லையென்பதுதான் நாம் உணரமுடிகிறது.

தொய்வில்லாமல் அந்த சிறுமியின் மிகத் தெளிவாக மொழிபெயர்த்த திவ்யா பிரபுவிற்கு நன்றிகள்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
01 செப்டம்பர் 2021                  
    

No comments:

Post a Comment