Tuesday 31 August 2021

கசட தபற - இதழ் 1

கசட தபற - இதழ் 1  

முதல் வெளியீடு - அக்டோபர் 1970

ஆசிரியர் : நா. கிருஷ்ணமூர்த்தி 

கிண்டில் பதிப்பு - விமலாதித்த மாமல்லன் 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50


முதலில் இதுபோன்ற பழைய பொக்கிஷங்களை இந்த தலைமுறையினரும் வாசிக்கும் வகையில் மின்னூலாகக் கொண்டுவந்த ஆசிரியர் விமலாதித்த மல்லன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.    

இந்த புத்தகத்தின் நோக்கமே, வளர்ந்து வர நினைக்கும் எண்ணற்ற இளம் எழுத்தாளர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. அதுபோலவே வாணிக நோக்கில் இல்லாமல் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று தனது இலக்கியப் படைப்புகளுடன் எத்தனையோ பதிப்பகங்களின் படிகளில் ஏறி இறங்கி இது நம்மால் முடியாது என்று சலித்துக் கொண்டு வேறேதாவது வழியினை நோக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்த எத்தனையோ பெயர்களின் முகவரியினை மாற்றியமைத்த ஒரு தளமாகவே இந்த கசடதபற இருந்திருக்கிறது என்றால் அது சரியே!!.

புதிய எழுத்தாளர்களின்   சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும்  கொண்டு ஒரு கதம்ப மாலையாக இந்த இதழினை நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.


கசடதபற வின் முதல் இதழின் முதல் பக்கத்திலேயே தனது பார்வையில் தமிழ் எங்கே என்ற  தனது ஆதங்கத்தினை தெரியப்படுத்த வேண்டி "ஞானக்கூத்தன்" அவர்களின் கவிதையான "தமிழை எங்கே நிறுத்தலாம்" என்று ஆரம்பித்திருக்கிறார்.

ந. சுந்தரம் அவர்களின் சிறுகதையான, இப்படியே விட்டுவிடக்கூடாது. - ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இந்த குடும்பத்தின் மூத்த சகோதரரின் வயசுக்கு மற்ற இருவரின் வயசுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது இந்த தலைமுறை இடைவெளியினை மையமாகக் கொண்ட கதை.

சா.கந்தசாமி அவர்களின் , தக்கையின் மேல் நான்கு கண். - இந்த சிறுகதை தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியினை சொல்லுகிறது அதே சமயத்தில் தன் மகள் இந்த பேரனைப் பெற்றுக்கொடுத்துவிட்டு மரணித்துப் போகிறாள். பிறகு அந்த குழியினை தாத்தாவும் பாட்டியும் வளர்க்கின்றனர். பேரனும் தாத்தாவும் மீன் பிடிக்கக் குளத்திற்குத் தூண்டிலுடன் செல்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே  அங்கே நடக்கும் சில நிகழ்வுகள் மற்றும் தன்னை ஏமாற்றிய ஒரு வாளை மீனைப் பிடிக்கமுடியாத கோவத்தை தன் மனைவியிடமும் பேரனிடமும் காட்டுகிறார் அந்த தாத்தா.

ஆர். சுவாமிநாதனின் " ஒரு கம்யூனிஸ்ட்டின் வார்த்தை" என்று கட்டுரையும் மேலும் சில கவிதைகளும் மற்றும் நா. முத்துசாமி அவர்களின் "நாக்கு உரித்த கிளிகள்"  என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் சக எழுத்தாளர்களைப் பற்றிய ஆவேசமான விமர்சனமும் கூடவே ஆதங்கமும் வெளிப்படுத்தியுள்ளார். 

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

31 ஆகஸ்ட் 2021        

No comments:

Post a Comment