Sunday 22 August 2021

ரத்தன் டாடா - வாசிப்பனுபவம்

ரத்தன் டாடா 

வாழ்க்கை வரலாறு 

ஆசிரியர் : என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 100

பக்கங்கள்  201 


இந்த புத்தகம் தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை மிகத் தெளிவாகவும், அருமையான மொழிநடையுடனும் மிக நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்.சொக்கன் அவர்கள்.

ரத்தன் டாடா அவர்களின் ஆரம்ப நாள் முதல், அவர் வாழ்க்கையினை ஒவ்வொரு அடி எப்படி எடுத்து வைத்தார் என்று சொல்லும் இந்த புத்தகத்தின் சில சுவையான தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

150 வருடங்களுக்கு மேலாகச் சாதனை படைத்தது கொண்டிருக்கும் டாடா குழுமம். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலும் காலூன்றி இருக்கும் இந்த குழுமத்தின் ஆணிவேராக இருந்தவர் ஜே ஆர் டி என எல்லோராலும் அழைக்கப்படும் ஜாம்செட்ஜி. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து  1868 ஆம் ஆண்டு 21,000 ரூபாயுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்தார்.     இந்த புள்ளியில் ஆரம்பித்து அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தினை மெல்ல மெல்லப் பரவி தனது பெயரினை நிலை நாட்டினார்.

ஆரம்பத்தில் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்து வியாபாரம் செய்தவர், இதிலிருந்து நமக்குத் தேவையான பொருள்களை நம் தேசத்திலே தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பித்து செகண்ட் ஹாண்ட்டில் வந்த ஒரு எண்ணெய் ஆலையினை வாங்கி அதை நெசவாலையாக மாற்றி தனது உற்பத்தி பயணத்தினை ஆரம்பித்தார்.

ரத்தன் டாடா, தனது சிறுவயது முதல் பெரிய செல்வச் செழிப்பாகவே வாழ்ந்து வந்தவர், ஆனால் அவருக்கு அந்த ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு சாதாரண வாழ்க்கையினை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு அவருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு அமெரிக்காவிற்குப் படிக்கப் போகவேண்டும் அப்படிப் போனபோது அங்கே ஓய்வு நேரங்களில் கிடைத்த வேலைகளைச் செய்து தனக்குத் தேவையான சம்பாத்தியத்தினை திரட்டிக்கொண்டு தன் மனதின் ஆசைப்பட்ட வாழ்க்கையினை வாழ ஆரம்பித்தார். படிப்பை முடித்து அங்கேயே வேலை பார்க்கத் தொடங்கியவர் பிறகு பாட்டியின் உடல்நலத்தில் ஏற்பட்ட தொய்வால் இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர் பிறகு இங்கேயே புதிய வாழ்வு தொடங்க ஆரம்பித்தார்.

டாடா குழுமத்தில், குடும்பத்தில் இருக்கும்  யாருக்கும் சுலபமாக வேலை கொடுத்துவிடமாட்டார்கள். ஜே ஆர் டி அவர்களால் முதலில் ரத்தன் அவர் படித்த படிப்பு தகுந்தாற்போல ஒரு சிறிய வேலை கடைநிலை ஊழியராகக் கொடுத்து குழுமத்தில் அவரை சேர்த்துக்கொண்டார். இங்கிருந்து ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பிறகு நட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு துறையில் பொறுப்பாக கொடுக்கப்பட்டது.

ஒரு கடைநிலை தொழிலாளியாக ஆரம்பித்து முன்னேறி வரும் ஒரு தனி மனிதனை எத்தனையோ இடையூறுகள். தனக்கு வந்த அத்தனை இடையூறுகளையும் நிதானமாக எதிர்கொண்டு தனது குறிக்கோளான வெற்றியினை மட்டும் நோக்கி பயணத்தினை நடத்தியவர். இவரின் வளர்ச்சியும் இவரிடம் இருக்கும் போராட்ட குணமும் எல்லோரையும் ஒன்று திரட்டி நடத்தும் திறமையினையும் தொடர்ந்து கவனித்து வந்த ஜே ஆர் டி தனது அடுத்த வாரிசாக டாடா குழுமத்தின் தலைவராக இவரை நியமித்தார்.

முழுவதும் இந்தியாவிலே உருவான ஒரு வாகனம் தயாரிக்கவேண்டும் என்று ஒரு திடமான முடிவினை எடுத்தார். இதன் மூலம் "டாடா இண்டிகா வெளிவந்து மிகவும் பெரியளவில் வெற்றியும் பெற்றது அதுபோலவே குறைந்த விலையில் ஒரு வாகனம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசையின் வழியாக "டாடா நானோ வாகனம் வந்தது. 

தனக்கு முன் எப்படி இருந்ததோ அதைவிட மிகச் சிறப்பாக இந்த குழுமத்தினை நடத்திக்கொண்டிருக்கிறார் ரத்தன் டாடா.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

22 ஆகஸ்ட் 2021

           

    



No comments:

Post a Comment