Tuesday 31 August 2021

தலித்துகளும் நிலமும் பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு - வாசிப்பனுபவம்

தலித்துகளும் நிலமும்

 பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு 

ஆசிரியர் : ரவிக்குமார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள்  62 


இந்த புத்தகம், கிட்ட தட்ட மூன்று நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடக்கும் ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வலியினையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் பற்றிப் பேசுகிறது.

இன்றளவும் பெரும்பாலான கிராமங்களில் சாதியின் அடிப்படையில் தான் நிலம் வாங்கவோ அல்லது விற்கவோ முடியும் என்றால் நாம் அதை நம்பிதான் ஆகவேண்டும் ஏனெனில் கிராமங்களிலிருந்து சாதிகள் அகலவில்லை அதுமட்டுமல்லாமல் ஒரு சாதிக்காரர் மற்றொரு சாதிக்காரருக்கு நிலமோ அல்லது மனையோ விற்பது என்றால் அது என்னமோ பெரிய குற்றச் செயல்கள் போலவே தான் கருதுகின்றனர்.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.  ரவிக்குமார் அவர்கள், இந்த தொகுப்பினை பல்வேறு காலகட்டங்களில் நடந்தேறிய நிகழ்வுகளையும், அரசாங்கம் எடுத்த பல்வேறு அமைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் அவற்றை எவ்வாறு நிலக்கிழார்கள் மாற்றிக்கொண்டார்கள் என்பதையும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

மிராசு முறைகள் இருந்ததும் அவற்றால் மற்ற சாதியினர்கள் அடிமைகளாகவும், அவர்களுடைய நிலங்கள் கைப்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை இழக்கச்  செய்ததும் மட்டுமல்லாமல் அவர்களின் உரிமைகளைப் பறித்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தினார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இதுபோல தரிசு நிலங்களை எடுத்து பல்வேறுபட்ட ஒடுக்கப்பட்ட சாதியினர்களுக்குக் கொடுத்தார்கள் எனவும் அவைகளை மிராசுகள் பிடுங்கிக் கொண்டதும், தரிசு நிலங்களைத் தரிசாகவே வைத்துக்கொண்டு தன்வசம் வைத்துக்கொண்டதும் அதற்காக நடந்தேறிய பல்வேறு போராட்டங்கள்.

திரமென் ஹரீன், அவர்களின்  தரிசு நிலங்கள் பற்றிய அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளையும் பரிசீலனையும் மற்றும் மிராசுதார்கள் வைத்திருந்த தரிசு நிலங்களின் மீதான உரிமையினை மறுபரிசீலனை செய்து நிலம் இல்லாதவர்களுக்குக் கொடுக்க ஆவணம் செய்தார். இதன் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த பல்வேறு சலுகைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசு தாழ்த்த பட்டோருக்கு என ஒதுக்கிய நிலங்கள் எல்லாம் புஞ்சை நிலம் மற்றும் மாவட்டம்வாரியாக எவ்வளவு ஒதுக்கினார்கள் என்றும் அந்த நிலங்கள் எல்லாம் எப்படிப் பிற சாதியினரால் பறிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அப்போது வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் இன்றைய நிலைமையும், மாறி மாறி வரும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எனத் தெளிவான விவரங்களை உள்ளடக்கியிருக்கிறது.  

நீதிபதி கே. சந்துரு, அவர்கள் வழங்கிய ஒரு தீர்ப்பில் "தலித் மக்களுக்கு அரசாங்கத்தால் ஒப்படையைச் செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தினை அதன் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது என்ற நிபந்தனையினை" மேற்கோள்காட்டி மற்றும் இந்த பஞ்சமி நிலங்கள் அவ்வின மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே தான் கொடுக்கப்பட்டது அதனால் இந்த நிலத்தினை மற்ற மக்களுக்கு விற்கக் கூடாது என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். பிறகு அந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்தனர் இந்த மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி  "பிரபா  ஸ்ரீதேவன் " மேற்சொன்ன தீர்ப்பையே இறுதியானது என்றும் பஞ்சமி நிலங்களை 10 ஆண்டுகள் அல்ல  விற்கவே கூடாது என்று  தீர்ப்புக் கூறியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் மற்றொரு பஞ்சமி நில வழக்கில், நீதிபதி டி. ஹரிபரந்தாமன் அவர்களும் மேற்கூறிய நீதிபதி சந்துரு மற்றும் நீதிபதி பிரபா தேவன் கொடுத்த தீர்ப்பினையே இந்த வழக்கிற்கும் வழங்கியுள்ளார், இதன் படி பஞ்சமி நிலத்தினை விலைக்கு விற்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனத் தலித் மக்கள் தங்கள் உடைமையிலிருந்த பஞ்சமி நிலம் மற்றவர்களால் பறிக்கப்படுவதை எதிர்த்து நடத்திய பஞ்சமி நில போராட்டங்கள் ஏராளமானவை.

சமூகத்தில் இன்றளவும் இந்த நிலை தீர்ந்தாக தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

தனிமனித உரிமைகளை மற்றொருவர் ஆக்கிரமித்துக் கொள்வதற்கான அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து கலையப்படவேண்டும்.

சுதந்திரம் கிடைப்பது என்னவோ அப்போதுதான்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

31 ஆகஸ்ட் 2021   

   

No comments:

Post a Comment