Sunday 8 August 2021

அலையாத்தி காடுகள் - வாசிப்பனுபவம்

 அலையாத்தி காடுகள் 

ஆசிரியர் : முனைவர் மாசிலாமணி செல்வம் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 75



முதலில் இந்த தொகுப்பினை ஒரு மின் நூலக வெளியிட்ட ஆசிரியர் முனைவர் மாசிலாமணி அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆசிரியர் "முனைவர் மாசிலாமணி செல்வம்" அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசியராக  பணிபுரிந்தார். 

அலையாத்தி காடுகளை நாம் எப்போதும் ஒரு சுற்றுலா தளமாகவே கருதியிருந்தோம் ஆனால் இந்த புத்தகத்தின் வழியே நமக்கு ஒரு பரந்த மற்றும் தேவையான  விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் பெரும்பாலோனோர்களால் வாசிக்க வேண்டிய புத்தகம். பொதுவாகச் சிறுபிள்ளைகளுக்கு முதலிலே வாசிக்க ஊக்கப்படுத்தவேண்டும்.

இந்த புத்தகம், உலக அளவில் இன்றைய அலையாத்தி காடுகளின் நிலையினையும், இந்தியாவிலும் மற்றும் தமிழ்நாட்டிலும் எனப் புள்ளி விவரங்களோடு வெகு அற்புதமாக விவரித்துள்ளார்.

அலையாத்தி காடுகள் எதற்காக என்று நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதுமட்டுமல்லாமல் அலையாத்தி காடுகள் என்றால் என்ன அவை எங்கே இருக்கிறது எந்த வகையான தாவரங்கள் இவற்றில் வளர்கின்றன அதுமட்டுமல்லாமல் அந்த காடுகளினால் எந்த விதமான உயிர்கள் வளர்கின்றன.  

தமிழில் சூழலியல் சார்ந்த புத்தகங்கள் வெகு சில தான் அவற்றிலும் விழிப்புணர்வு கொடுக்கக்கூடிய புத்தகங்கள் குறைவே!. இந்த புத்தகம் நமக்கு எண்ணற்ற தகவல்களைக் கொடுத்துச் செல்கிறது.

அலையாத்தி காடுகள் கடலின் அலைகளை ஆத்துவதால் அவை "அலையாத்தி காடுகள்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த காடுகளை பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த அலையாத்தி காடுகள், கடலுக்கும் நிலப்பகுதிக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையில் வாழும் தாவரங்கள் தான் இந்த அலையாத்தி காடுகள். இந்த காடுகள் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரத்திற்கு (அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு) மிக அருகாமையில் இருக்கும் பிச்சாவாராம் என்ற அலையாத்தி காடுகள் தான் பெரியது இதுமட்டுமல்லாமல்  நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இந்த காடுகள் இருக்கிறது .

இந்த தாவரங்கள் உவர்ப்பு நீரில் வாழ்கின்றன ஆனால் எல்லா தாவரமும் உவர்ப்பு மட்டும் எடுத்துக்கொள்வதில்லை இவற்றில் சில தாவரங்கள் தனது இலையின் வழியாக உப்பினை வெளியிடுகிறது. இது போல சுவையான  தகவல்களைக் கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.       

இந்தியாவில் இருக்கும் 4,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் அலையாத்தி காடுகளில் சுமார் 4,107 வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இருக்கிறதாக ஆய்வுகள் சொல்கின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தராவன காடுகளில் மட்டும் தான்  அரிதாக புலிகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். 

குறிப்பாக அலையாத்தி காடுகளில் வாழும் சில தாவரங்கள் தனது வேர்கள் வழியாகச் சுவாசிக்கின்றன மேலும் அவற்றின் வேர்கள் வெளியில் விழுதுகள் போன்று தோற்றமளிக்கிறது. இந்த காடுகளில் பல்வேறு நுண்ணுயிர்கள், பூச்சிகள், இறால்கள், நண்டுகள், கடல் மண்புழுக்கள், சிப்பிகள், கிளிஞ்சல்கள், ஆழிகள், மெல்லுடலிகள், ஜெல்லி மீன்கள், முதலைகள் என பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் இந்த அலையாத்தி காடுகள், ஆந்திரப்பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், குஜராத்,மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் , கோவா, கேரளா, டாமன் டையூ, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி எனக் கடலோர மாநிலங்களில் பெரும்பாலும் இருக்கிறது.

இந்த அலையாத்தி காடுகளினால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது.    குறிப்பாகக் கடல் அரிப்பைத் தடுக்கிறது, மீன் வளம் பெருகுகிறது, மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள் என பல்வேறு விதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது.

இதுபோல பல்வேறு நன்மைகள் கொடுக்கும் இந்த அலையாத்தி காடுகளை நமது சுயநலங்களினால் இவற்றை நாம் அழித்துக்கொண்டு வருகிறோம் என்ற செய்தி நமது மனதைக் கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது.

இன்னும் ஏராளமான விவரங்களைக் கொண்டுள்ள ஒரு அற்புதமான புத்தகம் இந்த புத்தகம்.

இயற்கையினை பாதுகாப்போம்.         

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
08 ஆகஸ்ட் 2021 

No comments:

Post a Comment