Monday, 2 August 2021

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - வாசிப்பனுபவம்

விந்தைக்  கலைஞனின் உருவச் சித்திரம்

(நாவல்)

ஆசிரியர் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 131



ஆசிரியர் சி. மோகன் அவர்களின் இந்த "விந்தைக்  கலைஞனின் உருவச் சித்திரம்" நாவல், ஒரு ஒப்பற்ற ஓவியக் கலைஞனின் வாழ்க்கையினை நம் கண்முன்னே கொண்டுவருகிறது. காலத்தினால் அழியமுடியாத ஒரு ஓவியமாய் தன் கைகளிலிருந்து வெளிவந்த கோடுகள் பல்வேறு பரிணாமத்தில் பல கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்க எதையும் தன் வாயால் சொல்லத்தெரியாமல் மறைந்து போன ஓவியர் ராமன் அவர்களைப் பற்றிய அழகான நாவல்.

ஒரு ஏழைக்  குடும்பத்தில் முன்றாவது மகனாகப்  பிறந்து,  பெரியளவில் படிக்கமுடியாமல், இளம்வயதுமுதல்  திக்கி திக்கி பேசும் பழக்கமும் கூச்ச சுபாபமும் கொண்ட ஒரு இளைஞன் தன் சக சகோதரர்களால் கூட நட்பினை கொடுக்க முடியதை ஒரு அவலமான நிலையில் ஒரு மாபெரும் கலைஞன் மறைந்து கொண்டிருக்கிறான்.

பெற்றோர்களை எந்த உதவியும் செய்ய முடியவில்லை, படிப்பும் வரவில்லை, நண்பர்கள் எனவும் யாருமில்லை பார்ப்பவர்களெல்லாம் கிண்டலும் கேலியும் செய்தனர் இப்படிப் பட்ட நிலைக்கு ஆளான ஒரு இளைஞன் வேற என்ன செய்வது என்றறியாது.   அவனுக்குக் கிடைத்த ஒரே நிம்மதியான இடம் கோவிலும் அருகே இருந்த ஒரு பாலமும் தான். கோவிலின் பட்டர்,அவரும் இவனைப் போலவே ஆதரவற்றவர் அதனால் அவருக்கு இவன் மீது ஒரு பாசம், அந்த பாசத்தினால் அவனுக்கு அவர் சில உதவிகளைச் செய்துவந்தார். ஆரம்பத்தில் இவன் இங்குதான் வரைய ஆரம்பித்தான் அதற்கு தன்னால் முடிந்த உதவியினை செய்தார். வழக்கம் போல அங்கு வரும் ஒரு பக்தராக  வந்த ஓவிய கல்லூரியின்  ஆசிரியரின் பார்வை இவன்மீது விழ, இவனின் அபார திறமையினை பார்த்து வியந்து அவனை தங்கள் கல்லூரியிலே சேர்த்துக்கொண்டார்.

வாழ்வில்  வழியேதும் இல்லாமல் இருந்த அவன் கூச்சத்துடனும் அப்பாவுடனும் செல்கிறான். இங்கிருந்த அந்த சிறுவனின் வாழ்வின் பயனாக இருக்கும் கலை வெகு நுட்பமாக வெளிவரத்தொடங்கியது.

பிறந்தது முதல் வாழ்ந்த ஒவ்வொருநாளும் எடுத்துவைத்த ஒவ்வொரு படியும் கடினமானதாகவே இருந்தால் எத்தனை காலம் தான் வாழமுடியும் என்ற நிலையில் எத்தனை படிதான் ஒருமனிதனால் ஏறமுடியும்?  அப்படித் தட்டுத் தடுமாறி உயரவந்த ஒரு ஒப்பற்ற கலைஞன் தான் இந்த நாவலின் நாயகன் ராமன்.

ஓவிய கல்லூரியிலிருந்த நாட்கள் எப்படியோ நகர்ந்துவிட்டது, மேலும் முதல்வரின் உதவியால் தேசிய ஊக்கத்தொகையும் பெற்று மீண்டும் கொஞ்சம் வருடம் தொடர்ந்து கல்லூரியில் இருந்துவிட்டு பிறகு இவர்களுக்கென முதல்வர் ஆரம்பித்த இடம் தான் சோழமண்டலம் ஓவிய குடியிருப்பு. வெளிவந்த பிறகுத் தன் திறமையால் கிடைத்த வருமானத்தில் சேர்ந்த நட்புகள் மற்றும் குடிப்பழக்கம் மற்றும் அசைவ உணவு கூடவே உயிருக்கு உயிரான நண்பனான தேவி என்ற ஆண் நாய். இப்படியே போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வு திடீரென இருள் சூழ்ந்து கொண்டுவிட்டது. தன்னை சூழ்ந்துள்ள அந்த இருளிருந்து விலக முடியாமல் இறுதியில் இருளுக்குள் இருளாக தன்னை இணைத்து கொண்ட ஒரு மாபெரும் வித்தை கலைஞனின் வாழ்வின் முடிவினை கேட்டும் போது கண்கள் கலங்காமல் இருக்கவில்லை. நமக்கே அப்படியென்றால் கூடவே இருந்த தேவி கொஞ்சம் நாள் அந்த இடத்திலே வாழ்ந்து மறித்து போனது என்றால் அதற்க்கு கூட இங்கே தன் தோழனை விட்டு வாழ பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.         

சிலர் வாழ்நாள் முழுவதும் சாதனை செய்தும் உயரமுடியாது ஆனால் சிலர் தனக்குக் கொடுத்த குறைந்த நாள் அவகாசத்தில் வந்த காரியத்தினை முடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இவற்றில் ராமன் இரண்டாவது ரகம். 

இந்த மண்ணில் பிறந்து தனக்கென ஒரு வாழ்க்கையினை வாழ ஆரம்பிக்க வேண்டிய வயதிலே  தனது வாழ்வினை முடித்துக்கொண்டு போவது கொடுமையான சம்பவமே. அப்படி தனது வாழ்வின் இறுதி கணக்கினை முடித்துக் கொண்டவர் தான் இந்த கதையின் விந்தை கலைஞன் ராமன்.   

ஒரு கலைஞனின் வாழ்வு இப்படி இருளுக்குள் மூடி மறைந்து உள்ளதை இந்த நாவல் வழியே வெளியுலகிற்கும் பிற்காலத்திற்கும் அறியக் கொடுத்த ஆசிரியர் சி. மோகன் அவர்களுக்கும் அவரின் இந்த வாழ்வின் ரகசியத்தினை அவருக்குத் தெரிவித்த ஓவியர் மற்றும் ராமனின் நண்பனான "டக்ளஸ்"   அவர்களுக்கும் இந்த கலையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

02 ஆகஸ்ட் 2021 

No comments:

Post a Comment