Tuesday 24 August 2021

இரும்பு கை மாயாவி - லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு - வாசிப்பனுபவம்

இரும்பு கை மாயாவி - லட்சுமி மிட்டல் 

வாழ்க்கை வரலாறு  

ஆசிரியர் : என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 100

பக்கங்கள் 194



இந்த புத்தகம் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை மிகத் தெளிவாகச் சொல்கிறது. அவர் பிறந்தது முதல் அவர் சூடிய வெற்றிமாலைகள் என ஒரு பிரமிக்க வைக்கும் வாழ்வின் வளர்ச்சியினை நம்மால் உணரமுடிகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இவர்கள் ராஜஸ்தானில் வந்து குடியேறினார்கள் இதற்கு முன்பு பழைய இந்தியாவின் ஒரு பகுதியான தற்போதைய பாகிஸ்தானில் இருக்கிறது. கராச்சியில் லட்சுமி மிட்டலின் தாத்தா மற்றும் அப்பா மோகன்லால் மிட்டல் தரகு வேலை பார்த்து வந்தார்கள்  இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ராஜஸ்தானில் வந்ததற்குப் பிறகு தான் லட்சுமி மிட்டல் பிறந்தார்.

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சாரு மாவட்டத்தில் இருக்கும் சடல்பூர் என்ற கிராமத்தில் லட்சுமி நாராயண் மிட்டல் பிறந்தார். சடல்பூரில் இவர்கள் வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரம் ஈட்டமுடியாததால்  இடம்பெயர நேரிட்டது.       

பிழைப்பிற்காக இவர்கள் கிராமத்தினை விட்டு பெருநகரமான கல்கத்தாவிற்கு  வந்து சேர்ந்தனர். இங்கு இவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் கிடையாது அதுமட்டுமல்ல மேலும் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமலே இங்கு வந்து சேர்ந்தார்கள்.  

முதலில் 1951 ல் மோகன்லால் மிட்டல் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வாங்கிய இரும்பு ஆலை "பிரிட்டிஷ் இந்தியா ரோலிங் மில்" -இந்த ஆலையினை வாங்கினார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் இரும்பு தொழிலில் தனியார் முதலீடு செய்வது ஒன்றோ அல்லது இரண்டோ என்று தான் சொல்லவேண்டும் ஆனால் அந்த நிலைமையில் இவர்கள் துணிவாக எடுத்த முடிவுதான் இவர்களை உலகமே பேசும் அளவிற்கு இரும்பின் சாம்ராஜ்யத்தினை கட்டிக் காக்கவைத்தது என்றே சொல்லலாம்.

இந்த காலகட்டத்தில் அப்பாவிற்குத் துணையாகத் தனது படிப்பு முடிந்தவுடன் லட்சுமி மிட்டல் ஆலைக்குச் சென்று விடுவார். தினமும் இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் அதன் பேரில் தனது சிறு வயதிலே இவர் உழைக்க ஆரம்பித்தார். உழைப்பும் படிப்பும் சேர்ந்தே அவர் வளர்ந்து வந்தார்.

இதற்கிடையில் இவரின் சகோதரி திருமணம் முடிந்தது அவள் இந்தோனேசியாவிற்குக் குடிபெயர்ந்து விட்டார். இந்தியாவில் தனியார் முதலீடு செய்ய நெருக்கடி வந்ததால் தங்களது தொழிலினை வெளிநாடுகளில் தொடங்க திட்டமிட்டார் மோகன்லால் மிட்டல்இதற்காக இந்தோனேசியாவில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தனர்.

லட்சுமி மிட்டல் தனது திருத்தத்திற்குப் பிறகு இந்தோனேசியாவிற்கு வந்து இந்த புதிய ஆலையினை ஆரம்பித்தார். இதுதான் லட்சுமி மிட்டல் தனது முழு தொழில் திறமையினை சோதித்துப் பார்க்க நேர்ந்த இடம். தனக்கு இது புதியதாகவே இருந்தது. இந்த ஆரம்பம் தான் இவரை உலகமெல்லாம் அடியெடுத்து வைக்கத் தூண்டியது.

"இஸ்பாத்" - இதுதான் இவர்களின் நிறுவனத்தின் பெயர்.  இந்தோனேசியாவில் ஆரம்பித்த ஆலையின் பெயர் "இண்டோ இஸ்பாத்". இந்த ஆலையின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பெறுவதில் ஏற்பட்ட இடையூறுகளில் ஒரு சில இவரின் சாதகமான முடிவாகவே திகழ்ந்தது. பழைய இரும்புகளை வாங்கி அதை உருக்கித் தான் இரும்பு செய்யவேண்டிய சூழல் இருந்தது அப்போது பழைய இரும்பின் விலையினை இடைத் தரகர் நிர்ணயித்துக் கூடிக்கொண்டே இருந்தான். இதன் விளைவாக இவர் தேட ஆரம்பித்த மூலப்பொருள்தான் ஒரு புதிய முயற்சிக்கு வழி கொடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் - ல் இருக்கும் "டிரினிடா டொபகோ" என்ற தீவில் இருக்கும் ஒரு ஆலையிலிருந்து தான் இவர்கள் புதிய மூலப்பொருள் கிடக்கிறது ஆனால் அப்போது இந்த ஆலை நசுங்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அதை பத்து வருடக் குத்தகைக்கு எடுத்து நடத்த ஓர் வாய்ப்பு கிடைத்தது அதை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டார் லட்சுமி மிட்டல். அதுமட்டுமல்லாமல் பத்து வருடம் முடிந்த பிறகு இவர்கள் நடத்தும் முறையினை பார்த்து விட்டு இவர்களுக்கே கொடுக்கலாம் என்ற முடிவும் எடுக்கலாம் என்ற ஒரு வாய்ப்புடன் ஆரம்பித்தார். நஷ்டத்திலிருந்த இந்த ஆலை லாபமாக மாறியது அதுமட்டுமல்லாமல் ஐந்து வருட முடிவிலே இந்த ஆலையினை லட்சுமி மிட்டல் முழு விலைக்கு வாங்கிவிட்டார்.

இந்த காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினையில் இவர் வெளிநாடுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவில் இருக்கும் முதலீடுகள் எல்லாம் மற்றவர்களுக்கு என்று முடிவானது. 

பின்னர் மெக்சிகோ அரசிற்குச் சொந்தமான "சிகார்ட்ஸா" , அடுத்து கனடாவில் "சிட்பெக்",  கஜகஸ்தானில் இருக்கும் காரகண்டாவில் இருக்கும் ஆலை பிறகு ஜெர்மனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்கள் என இவரின் குழுமம் பெருத்துக்கொண்டே போனது. 

ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் பெரிய ஆலையான இன்லேண்ட் ஸ்டீல் நிறுவனத்தையும் வாங்கினார். தொடர்ந்து கூடிக்கொண்டே போன குழுவின் வளர்ச்சி உலகளவில் இரண்டாவதாக இவரின் இரும்பு உற்பத்தி வந்தது ஆனால் லட்சுமி மிட்டல் மனதுக்குள் ஒரு புதிய அல்லது ஏற்கனவே இருந்த ஒரு கனவுதான் உலகளவில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்ற இன்னும் ஒரே ஒரு நிறுவனம் தான் இருக்கிறது அதையும் வாங்கிவிட்டால் என்ன என்ற எண்ணம் மனதில் கிளம்பி அதற்கான பெரும் முயற்சிகள் எடுத்து பிறகு அது சில காரணிகளால் தடை பட்டுப்போனது ஆனால் பிறகு அதுவும் அவரின் வசம் வந்து விட்டது.

தொடர்ந்த சென்ற வெற்றிப் பாதையில் இடையே சிறு சிறு சறுக்கல்களும் வந்தது, சில நேரத்தில் எல்லா முடிவுகளும் வெற்றியினை நோக்கிச் செல்வதல்ல அதைப்போல இரண்டு நிறுவனத்தை வாங்கியதால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.

2005 ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார் அது பெரிய சாதனை தான். இவற்றுக்கு எல்லாம் அவரின் கடின உழைப்புதான் காரணம் என்றால் அது தவறேதுமில்லை. சதா எந்நேரமும் உழைப்பின் வளர்ச்சியினை சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

இவர் ஒரு நொடித்துப் போன ஆலையினை வாங்குவதற்கு முன்பு செய்யும் முக்கியமான வேளைகளில் ஒன்று தந்து குழுவினை அனுப்பி எல்லாவற்றையும் கணக்கு எடுத்துக்கொண்டு அவற்றுக்கு மீண்டெழ வழி இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியினை நடத்தி ஒரு முழு செய்யக் கூடிய விதத்தில் அறிக்கை எடுத்துக்கொள்வார் பிறகு அதற்குத் தேவையான எல்லாவகையான காரியத்திலும் ஈடுபட்டு அதே வகையில் அவற்றினை செயல்படுத்துவர் அதுதான் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.   

உலகளவில் இன்று ஒரு பெரிய இரும்பு சாம்ராஜ்யத்தினை நடத்தி வரும் இந்த லட்சுமி மிட்டல் நமக்கெல்லாம் ஒரு பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

25 ஆகஸ்ட் 2021 

No comments:

Post a Comment