Friday, 27 August 2021

வேடிக்கை பார்ப்பவன் - தன் வரலாறு - கவிஞர் நா. முத்துக்குமார் - வாசிப்பனுபவம்

வேடிக்கை பார்ப்பவன் - தன் வரலாறு 

 கவிஞர் நா. முத்துக்குமார்    

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 147

பக்கங்கள் 285


கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் தன் வரலாறு பற்றிய புத்தகம் தான் இந்த "வேடிக்கை பார்ப்பவன்". ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த தொகுப்பு பிறகு புத்தகமாக வெளிவந்தது.

பொதுவாக எல்லோரும் சுயசரிதைகளில் வாழ்வின் பின்னாட்களில் தான் எழுதுவார்கள் ஆனால் நமது கவிஞர் தனது இளம் வயதிலேயே இந்த வரலாற்றினை எழுதி வைத்துச் சென்றுவிட்டார்.


"காலத்தை வென்று காவியம் படைக்க வந்தவனைக்  
காலன் வென்று காவியத்தை முடித்து வைத்துவிட்டான்"

இந்த புத்தகம் ஒரு மனிதனின் 40 வயதுக்கு முன்னரே தனது  வாழ்க்கையினை  தானே திரும்பிப் பார்த்து தனது வாசகனுக்கும் ரசிகனுக்கும் தான் வேடிக்கை பார்ப்பது போலவே மிக அழகாகவும், உணர்ச்சிகளின் பெருக்காகவும், உறவின் வலிமையுடனும் , நட்பின் உதவிகளும், தந்தையின் தவிப்பும் தானே தந்தையான பிறகு தனக்கேற்பட்ட தவிப்பும் என ஒரு காவியத்தினை தனது மந்திர எழுத்துகளால் வரைந்து வைத்து விட்டுச் சென்றுவிட்டார்.

கவிஞரின் எழுத்துக்கள் போலவே கவிஞரும் நமது உள்ளங்களில் "ஆனந்த யாழினை" மீட்டிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காற்றில் கலந்து வரும் கவிஞரின் வரிகள் எதனையோ உள்ளங்களின் வலியினை போக்கும் வலி நிவாரணியாக இருக்கிறது அந்த காற்றில் தானே நம் கவிஞரின் ஆன்மா கலந்து கிடக்கிறது.

நமது சமகாலத்திலிருந்த ஒரு அற்புத கவிஞனைக் காலன் கடத்தி சென்று விட்டான் நம்மையெல்லாம் காரிருளில் கட்டி போட்டுவிட்டு காலத்துடன் சேர்ந்து காலன் வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான் அதற்காகத்தான் இதற்கு "வேடிக்கை பார்ப்பவன் என்று தலைப்பிட்டானோ நம் கவிஞன்.

காஞ்சிபுரத்தில் உதித்த இன்னொரு சூரியன் இவர். ஒரு தமிழாசிரியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது சிறுவயதிலே தன தாயை இழந்தார்.  தந்தை ஆசிரியர் என்பதால் அதிகளவு புத்தகம் வாசிக்கும் பழக்கும் கொண்டிருந்தார் அதன் விளைவே இந்த கவிஞனின் உதயம் என்று தான் சொல்லவேண்டும். 

இந்த புத்தகம், முழுவதும் இவனாகவே வாழ்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் மிக அழகாகச் செதுக்கிவைத்து இருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்த இளைஞன் எவ்வாறு இந்த பரிணாமத்திற்கு வந்தார் என்றால் அது ஒரு சாதாரண காரியமாக இருக்காது ஆம். அப்படியாகத் தன்னை சுற்றி நடந்த ஒவ்வொரு சம்பவத்தினையும் அழகான உரைநடையில் சொல்லிச்சென்றிக்கிறார்.

தனது மகனுடன் நடந்த உரையாடல்கள், மகனிடம் விளையாடிய விளையாட்டுகள், விளையாட்டிற்காகச் சொன்ன பொய்கள் என ஒரு தலைமுறை கதையும் அதே நேரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனது மகனுடன் நேர்ந்த கதைக்குப் பலமாக தனக்கும் தன் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்தையும் ஒப்பிட்டு உணர்ச்சிகளை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

"முன்னுரையில் ஆசிரியர் கூறியிருப்பது 

காற்றில் படபடக்கும் காகிதத்தின் வரிகளைப் போல
மடப்பள்ளியிலிருந்து அரை நிமிடம் பெருமாளுக்குத் திறந்து காட்டும் பிரசாதத்தினைப்  போலக் 
கடந்து செல்லும் ரயிலுக்கு கையாட்டும் சிறுவனைப்போல 

இந்த கட்டுரைகள் என் வாழ்வின் ஒரு சிறு பகுதியினை மட்டுமே சொல்லுகிறது என்கிறார் "       


புத்தகத்தில் மொத்தம் முப்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன, இவற்றில் எதை விட்டு எதைப் பற்றி இங்கே எழுதுவது ஏனெனில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தவிர்க்க இயலாத கதையினை சொல்கிறது.

தனது பள்ளி காலம் தொடங்கி, படிப்பில் இல்லாத ஈடுபாடு எனச் சொல்லி, ஒவ்வொரு கட்டமாகக் கல்வியில் வளர்ந்த வளர்ச்சியும், சிறுவயதில் எழுதிய கவிதைகள் என, அவற்றினை புத்தகமாக வெளியிட ஏறி இறங்கிய எண்ணற்ற பதிப்பகம் எல்லாம் கைவிரித்து விடக் கடைசியில் தன் அப்பாவின் முயற்சியின் கிடைத்த பண உதவியால் "தூசு" என்ற கவிதைத் தொகுப்பு வெளியிட்டனர்.

பிறகு கல்லூரியில் சேர்ந்து "பச்சையப்பன் கல்லூரியின் நாவலர்" என்ற பெருமைக்குரியவராக மாறிய தருணம் அந்த தருணத்திற்காக எழுதிய கவிதை. இதன் தாக்கமாக அணைத்து கல்லூரிகளிலும் நடக்கும் எல்லா வித போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றிபெற்ற தருணங்கள்.

திரைத்துறையில் தடம் பதிக்கப் பட்ட பல்வேறு தடைகள் அவற்றிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்த வாழ்க்கையின் சுவாரசியம். அண்ணன் அறிவுமதியின் அரவணைப்பும் அதன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு கவிஞர்களின் நேரடி தொடர்பும், முக்கியமாக பாலுமகேந்திராவின் அறிமுகம் அவரின் வழியாக பாரதிராஜா அவர்களின் தொடர்பும் அப்படியே இவனின் கவிதைத் தொகுப்பான "பட்டாம் பூச்சி விற்பவன்" என்ற தொகுப்பினை தனது சொந்த செலவில் வெளியிட்டுக் கொடுத்ததும் மட்டுமில்லாமல் அதே வேளையில் இருநூறு பிரதிகளுக்கு முன்பதிவு செய்து அதை வாங்கி எல்லோருக்கும் தன கையெழுத்திட்டுக் கொடுத்தார் என்ற மிக அருமையான ஒரு நிகழ்வு.

பட்டுக்கோட்டை பிரபராகரிடம் பணிபுரிந்த தருணங்கள்,  தொலைக்காட்சி தொடரில் பணிபுரிந்த அனுபவங்கள், திருவல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கை அங்கே கிடைத்த அனுபவங்களும் பசியும், பாட்டி வீட்டிற்கே சென்றது என தனக்குக் கிடைத்த ஒவ்வொரு தருணத்தினையும் தவறாமல் ஆவணம் செய்திருக்கிறார்.

ஒரு நாளில் தான் தனது சிறுவயது குழந்தை போலவே மாறிப்போன நிகழ்வும் அதற்காக ஏற்பட்ட அணைத்து விதமான உணர்வுகளும் அதற்காகப் படைப்பாளி சி. மோகன் அவர்களிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல், அந்த நேரத்தில் லிங்குசாமி பாடல் மெட்டுக்காக வெளிநாட்டிற்குப் போகவேண்டும் என்று சொன்னதும் அதற்காகச் சங்கடப்பட்டதும் ஆனால் எல்லாம் தூங்கி எழுந்த மறுநாள் மாயமாகப் போனதும் உற்சாக பட்ட தருணம் என எண்ணற்ற தருணங்களைத் தவறாமல் 

பச்சையப்பன் கல்லூரியில் எம் ஏ படித்து முடித்து விட்டு பிறகு அங்கேயே எம் பில் படிப்பினை தொடர ஆரம்பித்தார் அதற்கு உதவித்தொகை  கிடைத்து பிறகு சென்னை பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்ததும் அப்போது எம் ஏ வகுப்பிற்குப் பாடம் நடத்தியதும், ஒரு நாள் தந்து தந்தை வந்து தன் மகன் நடத்திய வகுப்பினை ரகசியமாக சன்னலோரமாக இருந்து வேடிக்கை பார்த்தது என அருமையான தருணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இறுதியாகத் திரைப்படத்திற்கு முதல் முதலில் பாடல் எழுத இயக்குநர் அண்ணன் சீமானின் வீரநடை என்ற திரைத்துறையில்  கொடுத்த வாய்ப்பு அங்கிருந்து வீரநடை போட தொடங்கியது நம் கவிஞனின் திரைப் பாடல் வரிகள் பல்வேறுபட்ட மனிதர்களின் வலிகளையும் உணர்வுகளையும் பதிய வைத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிக் கொடுத்திருக்கும் ஒவ்வொரு வரிகளும் மிகச் சிறப்பானது. முப்பது விதமான கருத்துக்களை கச்சிதமாகத் தொகுத்துள்ளார்.        

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
27 ஆகஸ்ட் 2021 

No comments:

Post a Comment