Thursday, 19 August 2021

திணையியல் கோட்பாடு - வாசிப்பனுபவம்

திணையியல் கோட்பாடு 

ஆசிரியர் : பாமயன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49 

பக்கங்கள் 65



ஆசிரியரைப்பற்றி: 

பாமயன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயற்கை வழி வேளாண்மையினை பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளில் தன்னை முற்றுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டவர். பல்வேறு நாளிதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதும், சிறந்த வேளாண் அறிவியலாளர் விருதும் பெற்றவர். தமிழில் அலையாத்தி காடுகள், மரபினை போன்ற  பல புதிய கலைச் சொற்களை அறிமுகப்படுத்தியவர் இவர். இவரின் எழுத்தின் வழியே நமக்கு திண்ணையியலை பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த புத்தகம் இருக்கிறது.

இந்த புத்தகத்தின் வழியாக புறநானூறு மற்றும் தொல்காப்பியம் என நமது பண்டைய காலத்தின் நூல்களின் சிறப்பாக எப்படி நம் முன்னோர்கள் நமது வாழ்வியலினை தொகுத்து வைத்திருந்தனர் என்றும் நமது நிலங்களை எவ்வாறு வகைப்படுதின்னார்கள் என்றும் அந்த நிலத்தினை சார்ந்தவர்களுக்கு எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர் என்றும் மிகத் தெளிவாக மேற்கோள்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

நம் முன்னோர்கள் தங்களது வாழ்விடத்தை இயற்கையின் கூறுகளாகவே வகுத்துள்ளார்கள் இதுபோல வேறு எந்த பண்டைய நாகரிகத்திலும் காணவில்லை. 

நிலம், நீர், தீ மற்றும்  வளி இவை அனைத்தும் கலந்தது தான் உலகம் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது என்பதை மேற்கோள்காட்டி இந்த திணையியல் நூலினை ஆரம்பித்திருக்கிறார்.

திணை என்பது தமிழில் வாழிடம் என்றொரு பொருள்ளது மட்டுமல்லாமல் ஒழுகலாறு என்று மற்றுமொரு பொருளும் இருக்கிறது என்றும் தமிழர்களின் மெய்யியலாக இயற்கையினை எவ்வாறு நோக்குவது? எவ்வாறு அணுகுவது? என்ற அறிவுக்கோட்பாடு உள்ளதாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நூல்களின் வழியாக அறிந்துகொள்ளமுடியும்.

முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என மூன்று வகையான பொருள்களை உள்ளடக்கி இருக்கிறது திணையியல்

முதற்பொருள்: 

உலகம் ஒரு பெரிய திணை மண்டலம், இது இயல்பாகவே அமைந்த ஒன்றாகும், இந்த அமைவு என்பது இவற்றில் "நிலமும் பொழுதும்" முதற்பொருள் ஆகும். உலகின் எகிப்து, சீனா, சிந்துசமவெளி என்று பல்வேறு பண்டைய நாகரிகங்கள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டது. 

பண்டைய தமிழ் மக்கள் தெய்வ வழிபாடுகளைக் கொண்டிருந்தார்கள் எனத் தொல்காப்பியம் சொல்கிறது. ஆனால் அது எந்த ஒரு சமயம் சார்ந்ததாக இருந்ததில்லை எனவும் இவர்கள் நிலம், நீர், ஆகாயம், தீ மற்றும் காற்று என இயற்கையின் ஐம்பூதங்களினை கொஞ்சம் கொஞ்சமாக வழிபட ஆரம்பித்தார்கள். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த பழக்கங்கள் மற்றும் தொன்மங்கள் இவற்றுடன் மயங்கிய சமயம் சார்ந்த மெய்யியல் உருவானது.    

 கருப்பொருள்:

உலகின் பூகோள அடிப்படையில் தமிழ் நிலம் வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ளது இட்டன மண்டலம் கடக கோட்டிற்கும் மகர கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும். எனவே கதிரவன் சுழற்சி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது இதனால் இந்த பகுதியினை திரும்பியல் என்று அழைக்கப்படுகிறது.

நிலத்தில் இன்றியமையாத முறையில் இருக்கும் பொருள் கருப்பொருள்  என்கிறது தொல்காப்பியம். உயிருள்ள பொருள்கள்  மற்றும் உயிரற்ற பொருள்கள் என இரண்டு வகையாக பாகுபடுத்தியிருக்கிறார்கள். இவற்றில் கருப்பொருள்களாக உணரப்படுவது நாம் தொட்டு உணரக்கூடிய எல்லாமே அதாவது உணவு, விலங்குகள், மரங்கள், பயிரினங்கள்புள்ளினங்கள் என நீண்டுகொண்டே செல்கிறது. தொழில்கள், இசைக்கருவிகள் போன்ற அனைத்தும் வாழ்நிலைக் கூறுகளான எல்லாவற்றையும் தொல்காப்பியம் கருப்பொருள் கீழ் கொண்டுவருகிறது.

உரிப்பொருள்:

தொல்காப்பியர் திணைகளை வகைப்படுத்தும்போது நானிலம் ஏழு திணைகளைக் கொண்டுள்ளது என்றும் அவற்றில் குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் பாலை என வகைப்படுத்துகிறார். முதற்பொருளும் கருப்பொருளும் விளக்கும்போது ஒவ்வொரு திணைக்கு இருக்கும் உரிப்பொருள்களை விவரமாக விளக்குகிறார். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிப்பொருள் அதாவது முல்லை நிலத்தவர்களை ஆயர்கள் மற்றும் வேட்டுவர்கள் என்று வகைப்படுகிறது. 

ஆக நிலம், பொழுது, கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என்ற யாவுமே உறவும் ஓட்டும் கொண்டு இயல்பான நிலையில் இயங்கி வருவதாகவும் குறிப்பிடுகிறது.

உயிரும் மெய்யும்: 

காலப்போக்கில் மனிதக்குலம் தான் காணும் பொருள்களை எல்லாம் ஆராயத் தொடங்கினார்கள், அதன் வழியே அந்த பொருள்களின் தன்மையினை அறிந்துகொள்ள முயன்றனர். இங்கிருந்து கேள்வி கேட்பதும் அதற்கான விடையினை தெரிந்து கொள்வதும் என தங்கள் அறிவின் தன்மையினை வளர்த்துக்கொண்டார்கள். 

உயிரியல் பன்மயம்:

இந்த கோட்பாட்டின்படி ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினை சார்ந்து வாழ்கின்றது. ஒரு காடு, அதில் இருக்கும் மரங்கள் அந்த மரத்தினை நம்பி இருக்கும் உயிர்கள், மண், விலங்குகள், செடிகள் மற்றும் நுண்ணுயிர்கள் என அந்த சுழற்சி இயல்பாகவே நடந்தேறுகிறது.                  

 மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, காடுகளை அழித்துவிட்டு, அவற்றில் வாழ்ந்த உயிர்களை இழந்துவிட்டு இயற்கையாக வாழ்ந்த நமது வாழ்வியலினை தொலைத்துவிட்டு எங்கே தொலைத்தோம் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம்.

காடு வளர்கிறது அதன் வழியே மண் செழுமையாகிறது பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.

உயிர்ம நேயம்:

மனித நேயத்தினையும் தாண்டிய விரிவான பொருளைக் கொண்டது உயிர்மை நேயம். இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது இங்கே பிறக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்விடமாகவே இந்த உலகம் திகழ வேண்டும் ஆனால் இங்கே சுயநலமிக்க மனிதர்களால் இவை பறிபோகிறது. 

நஞ்சில்லாத உலகம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் மக்கள் சூழலியலினை நாடி வந்துகொண்டிருக்கின்றார்கள் .

"பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளுக்கு இணங்க இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இங்கே இருக்கும் ஒரு சில்லி உயிரினமான அமீபா முதல் பேராற்றால் மிக்க மனிதன் வரை அனைவரும் சமமே என்று ஒருமித்த கருத்தினை வலியுறுத்தி இந்த சமூகம் ஒரு புதிய தடத்தினை தேடிக்கொண்டிருந்தது.     

        

Sunday, 8 August 2021

அலையாத்தி காடுகள் - வாசிப்பனுபவம்

 அலையாத்தி காடுகள் 

ஆசிரியர் : முனைவர் மாசிலாமணி செல்வம் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 75



முதலில் இந்த தொகுப்பினை ஒரு மின் நூலக வெளியிட்ட ஆசிரியர் முனைவர் மாசிலாமணி அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆசிரியர் "முனைவர் மாசிலாமணி செல்வம்" அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசியராக  பணிபுரிந்தார். 

அலையாத்தி காடுகளை நாம் எப்போதும் ஒரு சுற்றுலா தளமாகவே கருதியிருந்தோம் ஆனால் இந்த புத்தகத்தின் வழியே நமக்கு ஒரு பரந்த மற்றும் தேவையான  விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் பெரும்பாலோனோர்களால் வாசிக்க வேண்டிய புத்தகம். பொதுவாகச் சிறுபிள்ளைகளுக்கு முதலிலே வாசிக்க ஊக்கப்படுத்தவேண்டும்.

இந்த புத்தகம், உலக அளவில் இன்றைய அலையாத்தி காடுகளின் நிலையினையும், இந்தியாவிலும் மற்றும் தமிழ்நாட்டிலும் எனப் புள்ளி விவரங்களோடு வெகு அற்புதமாக விவரித்துள்ளார்.

அலையாத்தி காடுகள் எதற்காக என்று நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதுமட்டுமல்லாமல் அலையாத்தி காடுகள் என்றால் என்ன அவை எங்கே இருக்கிறது எந்த வகையான தாவரங்கள் இவற்றில் வளர்கின்றன அதுமட்டுமல்லாமல் அந்த காடுகளினால் எந்த விதமான உயிர்கள் வளர்கின்றன.  

தமிழில் சூழலியல் சார்ந்த புத்தகங்கள் வெகு சில தான் அவற்றிலும் விழிப்புணர்வு கொடுக்கக்கூடிய புத்தகங்கள் குறைவே!. இந்த புத்தகம் நமக்கு எண்ணற்ற தகவல்களைக் கொடுத்துச் செல்கிறது.

அலையாத்தி காடுகள் கடலின் அலைகளை ஆத்துவதால் அவை "அலையாத்தி காடுகள்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த காடுகளை பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த அலையாத்தி காடுகள், கடலுக்கும் நிலப்பகுதிக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையில் வாழும் தாவரங்கள் தான் இந்த அலையாத்தி காடுகள். இந்த காடுகள் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரத்திற்கு (அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு) மிக அருகாமையில் இருக்கும் பிச்சாவாராம் என்ற அலையாத்தி காடுகள் தான் பெரியது இதுமட்டுமல்லாமல்  நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இந்த காடுகள் இருக்கிறது .

இந்த தாவரங்கள் உவர்ப்பு நீரில் வாழ்கின்றன ஆனால் எல்லா தாவரமும் உவர்ப்பு மட்டும் எடுத்துக்கொள்வதில்லை இவற்றில் சில தாவரங்கள் தனது இலையின் வழியாக உப்பினை வெளியிடுகிறது. இது போல சுவையான  தகவல்களைக் கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.       

இந்தியாவில் இருக்கும் 4,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் அலையாத்தி காடுகளில் சுமார் 4,107 வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இருக்கிறதாக ஆய்வுகள் சொல்கின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தராவன காடுகளில் மட்டும் தான்  அரிதாக புலிகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். 

குறிப்பாக அலையாத்தி காடுகளில் வாழும் சில தாவரங்கள் தனது வேர்கள் வழியாகச் சுவாசிக்கின்றன மேலும் அவற்றின் வேர்கள் வெளியில் விழுதுகள் போன்று தோற்றமளிக்கிறது. இந்த காடுகளில் பல்வேறு நுண்ணுயிர்கள், பூச்சிகள், இறால்கள், நண்டுகள், கடல் மண்புழுக்கள், சிப்பிகள், கிளிஞ்சல்கள், ஆழிகள், மெல்லுடலிகள், ஜெல்லி மீன்கள், முதலைகள் என பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் இந்த அலையாத்தி காடுகள், ஆந்திரப்பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், குஜராத்,மகாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்காளம் , கோவா, கேரளா, டாமன் டையூ, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி எனக் கடலோர மாநிலங்களில் பெரும்பாலும் இருக்கிறது.

இந்த அலையாத்தி காடுகளினால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது.    குறிப்பாகக் கடல் அரிப்பைத் தடுக்கிறது, மீன் வளம் பெருகுகிறது, மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள் என பல்வேறு விதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது.

இதுபோல பல்வேறு நன்மைகள் கொடுக்கும் இந்த அலையாத்தி காடுகளை நமது சுயநலங்களினால் இவற்றை நாம் அழித்துக்கொண்டு வருகிறோம் என்ற செய்தி நமது மனதைக் கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது.

இன்னும் ஏராளமான விவரங்களைக் கொண்டுள்ள ஒரு அற்புதமான புத்தகம் இந்த புத்தகம்.

இயற்கையினை பாதுகாப்போம்.         

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
08 ஆகஸ்ட் 2021 

Monday, 2 August 2021

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - வாசிப்பனுபவம்

விந்தைக்  கலைஞனின் உருவச் சித்திரம்

(நாவல்)

ஆசிரியர் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 131



ஆசிரியர் சி. மோகன் அவர்களின் இந்த "விந்தைக்  கலைஞனின் உருவச் சித்திரம்" நாவல், ஒரு ஒப்பற்ற ஓவியக் கலைஞனின் வாழ்க்கையினை நம் கண்முன்னே கொண்டுவருகிறது. காலத்தினால் அழியமுடியாத ஒரு ஓவியமாய் தன் கைகளிலிருந்து வெளிவந்த கோடுகள் பல்வேறு பரிணாமத்தில் பல கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்க எதையும் தன் வாயால் சொல்லத்தெரியாமல் மறைந்து போன ஓவியர் ராமன் அவர்களைப் பற்றிய அழகான நாவல்.

ஒரு ஏழைக்  குடும்பத்தில் முன்றாவது மகனாகப்  பிறந்து,  பெரியளவில் படிக்கமுடியாமல், இளம்வயதுமுதல்  திக்கி திக்கி பேசும் பழக்கமும் கூச்ச சுபாபமும் கொண்ட ஒரு இளைஞன் தன் சக சகோதரர்களால் கூட நட்பினை கொடுக்க முடியதை ஒரு அவலமான நிலையில் ஒரு மாபெரும் கலைஞன் மறைந்து கொண்டிருக்கிறான்.

பெற்றோர்களை எந்த உதவியும் செய்ய முடியவில்லை, படிப்பும் வரவில்லை, நண்பர்கள் எனவும் யாருமில்லை பார்ப்பவர்களெல்லாம் கிண்டலும் கேலியும் செய்தனர் இப்படிப் பட்ட நிலைக்கு ஆளான ஒரு இளைஞன் வேற என்ன செய்வது என்றறியாது.   அவனுக்குக் கிடைத்த ஒரே நிம்மதியான இடம் கோவிலும் அருகே இருந்த ஒரு பாலமும் தான். கோவிலின் பட்டர்,அவரும் இவனைப் போலவே ஆதரவற்றவர் அதனால் அவருக்கு இவன் மீது ஒரு பாசம், அந்த பாசத்தினால் அவனுக்கு அவர் சில உதவிகளைச் செய்துவந்தார். ஆரம்பத்தில் இவன் இங்குதான் வரைய ஆரம்பித்தான் அதற்கு தன்னால் முடிந்த உதவியினை செய்தார். வழக்கம் போல அங்கு வரும் ஒரு பக்தராக  வந்த ஓவிய கல்லூரியின்  ஆசிரியரின் பார்வை இவன்மீது விழ, இவனின் அபார திறமையினை பார்த்து வியந்து அவனை தங்கள் கல்லூரியிலே சேர்த்துக்கொண்டார்.

வாழ்வில்  வழியேதும் இல்லாமல் இருந்த அவன் கூச்சத்துடனும் அப்பாவுடனும் செல்கிறான். இங்கிருந்த அந்த சிறுவனின் வாழ்வின் பயனாக இருக்கும் கலை வெகு நுட்பமாக வெளிவரத்தொடங்கியது.

பிறந்தது முதல் வாழ்ந்த ஒவ்வொருநாளும் எடுத்துவைத்த ஒவ்வொரு படியும் கடினமானதாகவே இருந்தால் எத்தனை காலம் தான் வாழமுடியும் என்ற நிலையில் எத்தனை படிதான் ஒருமனிதனால் ஏறமுடியும்?  அப்படித் தட்டுத் தடுமாறி உயரவந்த ஒரு ஒப்பற்ற கலைஞன் தான் இந்த நாவலின் நாயகன் ராமன்.

ஓவிய கல்லூரியிலிருந்த நாட்கள் எப்படியோ நகர்ந்துவிட்டது, மேலும் முதல்வரின் உதவியால் தேசிய ஊக்கத்தொகையும் பெற்று மீண்டும் கொஞ்சம் வருடம் தொடர்ந்து கல்லூரியில் இருந்துவிட்டு பிறகு இவர்களுக்கென முதல்வர் ஆரம்பித்த இடம் தான் சோழமண்டலம் ஓவிய குடியிருப்பு. வெளிவந்த பிறகுத் தன் திறமையால் கிடைத்த வருமானத்தில் சேர்ந்த நட்புகள் மற்றும் குடிப்பழக்கம் மற்றும் அசைவ உணவு கூடவே உயிருக்கு உயிரான நண்பனான தேவி என்ற ஆண் நாய். இப்படியே போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வு திடீரென இருள் சூழ்ந்து கொண்டுவிட்டது. தன்னை சூழ்ந்துள்ள அந்த இருளிருந்து விலக முடியாமல் இறுதியில் இருளுக்குள் இருளாக தன்னை இணைத்து கொண்ட ஒரு மாபெரும் வித்தை கலைஞனின் வாழ்வின் முடிவினை கேட்டும் போது கண்கள் கலங்காமல் இருக்கவில்லை. நமக்கே அப்படியென்றால் கூடவே இருந்த தேவி கொஞ்சம் நாள் அந்த இடத்திலே வாழ்ந்து மறித்து போனது என்றால் அதற்க்கு கூட இங்கே தன் தோழனை விட்டு வாழ பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.         

சிலர் வாழ்நாள் முழுவதும் சாதனை செய்தும் உயரமுடியாது ஆனால் சிலர் தனக்குக் கொடுத்த குறைந்த நாள் அவகாசத்தில் வந்த காரியத்தினை முடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். இவற்றில் ராமன் இரண்டாவது ரகம். 

இந்த மண்ணில் பிறந்து தனக்கென ஒரு வாழ்க்கையினை வாழ ஆரம்பிக்க வேண்டிய வயதிலே  தனது வாழ்வினை முடித்துக்கொண்டு போவது கொடுமையான சம்பவமே. அப்படி தனது வாழ்வின் இறுதி கணக்கினை முடித்துக் கொண்டவர் தான் இந்த கதையின் விந்தை கலைஞன் ராமன்.   

ஒரு கலைஞனின் வாழ்வு இப்படி இருளுக்குள் மூடி மறைந்து உள்ளதை இந்த நாவல் வழியே வெளியுலகிற்கும் பிற்காலத்திற்கும் அறியக் கொடுத்த ஆசிரியர் சி. மோகன் அவர்களுக்கும் அவரின் இந்த வாழ்வின் ரகசியத்தினை அவருக்குத் தெரிவித்த ஓவியர் மற்றும் ராமனின் நண்பனான "டக்ளஸ்"   அவர்களுக்கும் இந்த கலையுலகம் கடமைப்பட்டிருக்கிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

02 ஆகஸ்ட் 2021 

Saturday, 31 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 6 - வாசிப்பனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 5

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 49


ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு அருமையான ஜப்பானிய நவீனச் சிறுகதையினை பற்றியது தான் இந்த தொகுப்பு "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 6".

ஹாருகி முராகமி

உலகமெங்கும் பல லட்சக்கணக்கான வாசகர்களைத் தன்வசம் கொண்ட ஒரு சமகால ஜப்பானிய எழுத்தாளர். இவரின் முதல் நாவல் 1979 ல் வெளிவந்தது அது உலகமெங்கிலும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது அதன் பிறகு முராகமி  முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். அந்த வரிசையில் 2014 ல் வெளிவந்த "ஷெஹ்ரஜாத்என்ற கதையினை பற்றித் தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.

"ஷெஹ்ரஜாத்"

ஹாபரா, நான்கு மாதங்களுக்கு முன்பு டோக்கியோவிற்கு வடக்கே இருக்கும் ஒரு நகரத்திலிருந்து இந்த புதிய வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டான். அவனால் வெளியில் செல்லமுடியாத நிலையில் அவன் தனிமையில் இருக்கவேண்டியதாக இருந்தது அதற்காக அவனுக்கு ஒரு துணையாளராக ஒரு பெண் செவிலியர் நியமிக்கப்பட்டாள்.

அவளுக்கு அவன் பெயர் தெரியாது ஆனால் அவன் அவளுக்கு   "ஷெஹ்ரஜாத்"  வைத்துக்கொண்டான். அவள் வாரத்தில் சில நாட்கள் அவளுக்கு நியமிக்கப்பட்ட நேரத்தில் அவள் வருவாள். அவள் வரும்போது ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருள்கள், CD, புத்தகங்கள் மற்றும் அவனுக்குத் தேவையான பொருள்கள் என எல்லாவற்றையும் வாங்கி வருவாள். வீட்டிற்கு வந்த பிறகு வாங்கி வந்த பொருள்களைக் குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமாக அடிக்கி வைத்துவிட்டு பழையதும் காலாவதியானதுமான பொருள்களை அப்புறப்படுத்துவதும் என அவளின் பணிகளைச் சிறப்பாகச் செய்வாள்.

அவனுக்குத் தேவையான எல்லா சேவைகளையும் செய்வாள் பிறகு அவனால் வெளியில் செல்ல முடியாததால் அவன் ஒரு கூண்டுக் கிளிபோலவே இருக்கிறான். அவளுக்கு அவன் மீது இருக்கும் ஒரு வித ஈடுபாடு அவளை அவனுடன் கலவியில் ஈடுபடவைக்கிறது. இந்த நிகழ்வு ஒவ்வொருமுறையும் அவள் அவன் வீட்டிற்கு வரும் போது இல்லாமல் இருக்காது அது அவள் அவனுக்குச் செய்யும் ஒரு சேவையாகவே கருதினால். அவள் கலவிக்குப் பிறகு அவனுக்குக் கதை சொல்லுவாள்.

அவள் சொல்லும் கதையானது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்படியாக அவள் சொல்லும் கதைகளையும் அவள் வந்து போனதையும் அவன் அவனது நாட்குறிப்பில் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்கிறான். அவள் சொல்லும் கதைகள் உண்மையானதா அல்லது புனையப்பட்டது அல்லது இரண்டும் கலந்ததா என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதும் வருவதுண்டு ஆனால் அவன் அவளிடம் கேட்கவில்லை.  மாறாக அவன் அந்த கதையில் அவன் லயித்திருந்தான் அது அவனுக்குப் பெரிய ஆசுவாசமாக இருந்தது அதனால் அவள் வரும்போதெல்லாம் அவர்களின் கலவிக்குப் பிறகு அவன் அவளிடம் கதை சொல்லச் சொல்லிக் கேட்பான்.

அப்படியாக அவள் சொல்லிய கதைதான் அவனுக்கு மிகவும் பிரமிக்க வைத்தது. அவள் தனது படிப்பின் போது அவள் கூட படித்த ஒருவன் மீது அவள் கொண்டிருந்த ஒருவகையான ஈர்ப்பின் காரணமாக அவள் அவன் வீட்டிற்கு யாருமில்லாத நேரத்தில் புகுவதைக் கடைப்பிடித்து  வந்தால். அப்படியாக அவள் மூன்று முறை சென்றிருந்தாள், ஒவ்வொரு முறையும் அவளுக்குக் கிடைத்த கிளர்ச்சியின் வெளிப்பாடும், அந்த வயதில் அவன் மீது அவளுக்கு இருந்த எல்லையில்லா ஈர்ப்பும் அவளை அவனைத் தொடர வைத்தது. ஒவ்வொரு முறையும் அவள் அவனுடைய எதாவது ஒரு பொருளைத் திருடிவருவாள் அதற்கு ஈடாக அவளின் ஒரு பொருளை மறைத்து வடித்துவிட்டு வருவாள். அப்படியா மூன்று முறை வெற்றிகரமாகச் சென்றுவந்திருந்தாள் மூன்றாவது முறை அவனுடைய உடுத்திய சட்டையினை எடுத்துவந்துவிட்டாள். மீண்டும் அடுத்த முறை போகப்போகப் போனபோது அவளால் செல்ல முடியாமல் அந்த வீட்டில் புதிதாக ஒரு பூட்டு தொங்கியது. ஒருவேளை அந்த பூட்டு அவளின் இந்த கோமாளித்தனத்திற்கு ஒரு பூட்டாக மாறியது. 

இதுபோல அவள் இந்த கதையினை ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொண்டே இருப்பாள். இறுதியில் அவள் அடுத்த முறை சொல்கிறேன் என்று மீதம் வைத்திருந்த ஒரு கதையோடு அவள் வெளியேறுகிறாள். அவனுக்கு அவள் திரும்ப வருவாளா இந்த தொடர்பு நீடிக்குமா அல்லது துண்டித்துப்போகுமா என்ற கவலையுடன் தன் எண்ணங்களை நிதானித்து ஒரு நிலையில் நிறுத்தினான். பிறகு அவள் சொன்ன அந்த "லாம்பரேக்கள் எவ்வாறு பாறையின் அடியில் தாங்கிக்கொண்டு தனக்கு மேலே சிறிய மீன்கள் வருகிறதா என்று நோட்டமிடுகிறதோ அதைப் போலவே அவன் தன்னை நினைத்துக் காத்திருக்கிறான்.

இது ஒரு அருமையான கதை. இருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியின் சுகத்தினையும் அவள் அவன் மீது கொண்டுள்ள பற்றும் அவனுக்காக அவள் செய்யும் அந்த சேவைகளையும் மிகவும் அருமையாகச் சொல்லிச்செல்கிறார் முராகமி.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 
31 ஜூலை 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 5 - வாசிப்பனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 5

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50 

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  வெவ்வேறுவிதமான பின்னணி மற்றும் சூழல்களைச் சார்ந்த மூன்று நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 5".

டொனால்டு பார்தெல்மே (1931-1989):

அமெரிக்காவின் பின்-நவீனத்துவப் புனைவுலகின் முக்கிய பங்கு வகித்தவர். இவர் சிறுகதைகள், நாவல், பத்திரிக்கையாளர் எனத் தனது தடத்தினை பதித்தவர். இந்த தொகுப்பில் இவரின் இரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தை: 

இந்த கதை பெற்றோர்களுக்கு ஒரு பாடமாகவும் எப்படி குழந்தைகளை அணுக வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். தங்கள் குழந்தை செய்த முதல் தவற்றுக்காகத் தண்டனை கொடுக்கப்படுகிறது. 

குழந்தை, புத்தகத்தின் பக்கங்களைக் கிழிக்கிறது, அதற்காகத் தண்டனையாக நான்கு மணிநேரம் தனியறையில் தங்கவேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. ஆனால் இந்த தவறு மேன்மேலும் கூடிக்கொண்டே தான் போகிறது. குழந்தையினை திருத்துவதற்காகத் தண்டனை கொடுக்கிறோம் ஆனால் அந்த குழந்தை அந்த தண்டனையே எடுத்துக்கொண்டு தான் தனிமையில் இருப்பதற்காகவே மீண்டும் மீண்டும் அந்த தவற்றினை செய்யத் தொடங்குகிறது. 

குழந்தைகளுக்குக் கண்டிப்பு தேவைதான் ஆனால் அதுவே ராணுவ கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஒரு கட்டத்தில் தனது மகளின் போக்கினை உணர்ந்த அந்த தந்தை, தன் மகள் செய்வது ஒன்றும் பெரிய தவறில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவளோடு சேர்ந்து அவரும் சில பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குகிறார். அவளின் ஆனந்தமான வாழ்வுக்குள் அப்பாவும் நுழைகிறார்.


பள்ளிக்கூடம்:

இந்த கதை, பள்ளிக்கூடத்தில் சில்மிஷம் செய்யும் சுட்டி பசங்களைப் பற்றிய சுவாரஸ்யமான கதை. குழந்தைகளுக்குக் கல்வி மட்டும் சொல்லிக்கொடுப்பதல்ல பள்ளிக்கூடம். வாழ்க்கையையும் சொல்லிக்கொடுக்கும் இடம் தான் அது. அதற்காக மாணவ மாணவியர்கள் செய்யும் தவற்றுக்கு மரம் நடச் சொல்கின்றார்கள்.

ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுப்பது மற்றும் எவ்வாறு பெற்றோர்கள் மரணமடைந்து விடுவதும் அது சில விதமான துரதிர்ஷ்டம் தான். நம்மை விட்டுப் போனவர்களின் நிலையினை கேட்பதும் அதற்கு அவர்கள் இல்லாமல் போனது அவர்கள் இறந்து போயிருக்கலாம் வாழ்க்கையின் ஒரே அர்த்தம் இறப்பு தான் என்கிறார்கள் ஆனால் இறப்பு மட்டுமே அர்த்தம் கிடையாது. வாழ்வுக்கு வாழ்வு தான் அர்த்தம் தருகிறது என்கிறார். இயற்கை உயிரினங்கள் மடிந்து போனதும் இயற்கையால் நிகழும் பல்வேறு நிகழ்வுகளும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஜான் அப்டைக் (1932-2009): 

இயல்பான அன்றாட வாழ்வின் நிலைகளையும் அனுபவங்களையும் மிக நுட்பமாகக் கதைசொல்வதில் மிகவும் கை தேர்ந்தவர் இவர் . அமெரிக்க இலக்கியத்தில் கவிஞர், ஓவியர், சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் மற்றும் பத்திரிக்கை என பல்வேறு தளத்திலும் தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தினார்.

1983 ஆம் ஆண்டு "ஓ ஹென்ரி விருது" பரிசினை வென்ற "நகரம்" என்ற சிறு கதையினை பற்றித்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

நகரம்:  வியாபார சார்பாக வேறு  ஒரு நகரத்திற்குப் பயணிக்க வேண்டிய சூழலில், விமானத்தில் பயணிக்கிறார். அந்த பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை மிக நேர்த்தியாகவும் வியப்புடனும் சொல்லிச்செல்கிறார். 

மூன்று இருக்கைகள் இருக்கும் 747 விமானத்தில் நடு இருக்கையில் அமர்ந்து இருக்க நேரிட்டது மேலும் இரண்டு பக்கங்களும் தடிமனான இளைஞர்கள் அமர்ந்து இருப்பதால் ஏற்பட்ட நெரிசலும் வேதனையும் அந்த பயணம் முழுவதும் நீண்டுகொண்டே இருந்தது. இது மிகவும் அசௌரியமாகத்தான் இருந்தது. விமானத்திலிருந்து விடுதிக்குச் சென்ற அவருக்கு மேலும் வெறுப்பான அனுபவங்கள்தான் கிடைத்தது. 

அந்த விடுதியின் நிலைமையினை மிக அருமையாக வர்ணிக்கிறார். பிறகு அவர் சந்திக்க வேண்டிய சந்திப்புகள் எனத் திட்டமிட்டிருந்தார்.

அறையினுள் சென்ற கார்சனுக்கு, அறையின் சூழல் மேலும் அவருக்கு வெறுப்பூட்டியது. கூடவே வந்த அழையா விருந்தாளியான வலி அவரை பெரிதும் துன்பப்படுத்தியது.    

அலுவல் வேலையாக நகரத்திற்கு  வந்த கார்சனுக்கு, வரும் வழியில் ஏற்பட்ட வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் வருகிறது அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த நகரில் வந்து இறக்கிய முதல் அவர் திரும்பும் வரையில் பெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுகளையும் மிகவும் ரசித்துச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

இடையே, அவரின் பழைய மனைவி தொலைப்பேசி பண்ணி நெருடலாகப் பேசியதும், மெக்சிகோவில் இருக்கும் மகன் இவருடைய பணத்தில் பேசியதும், மகள் பேசாமலே இருந்தது என ஒவ்வொரு நிகழ்வினையும் கொஞ்சம் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை என மிகச் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார்.

எல்லாம் முடிந்து திரும்பும் வரை அந்த நகரத்தில் கார்சனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிக நுட்பமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் இந்த கதையின் வழியே.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

31 ஜூலை 2021 

Friday, 30 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 4 - வாசிப்பு அனுபவம்

நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 4

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50 

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு வெவ்வேறுவிதமான சூழல்களைச் சார்ந்த நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 4".

இதாலோ கால்வினோ (1923-1985):

இத்தாலியின் மகத்தான கலைஞன், இருபதாம் நூற்றாண்டில் இவரின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்  என இவருடைய எழுத்துக்கள் கற்பனையும் அற்புதமும் கலந்து இழையோடும் நவீன இலக்கியமாகத் திகழ்ந்தது. அந்த வரிசையில் இவரின் "ஆதாம், ஒரு பிற்பகல்"  பற்றிய பதிவுதான் இங்கே பார்க்கப்போகிறோம்.

"ஆதாம், ஒரு பிற்பகல்" - இந்த கதையில் வரும்  மிக அழகான உரையாடல்களை மிகவும்  நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். புதிய தோட்டக்காரனின் மகன் நீண்ட கூந்தலுடன் அந்த தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறான். அந்த வீட்டு வேலைக்கு வந்திருக்கும் பெண் மரியா-நுண்ஸியாதா, இவள் வீட்டின் அடுப்படியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

தோட்டத்துக்குப் புதிதாக வந்த பையனை முதலில் பெண் என்று நினைத்துவிட்டு பிறகுப் பையன் என்று தீர்மானித்துக்கொண்டு அவனை அழைக்கிறாள் அவள்.

இப்படியாக ஆரம்பமாகும் இவர்களின் சந்திப்பு, அவன் அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறான், நான் உனக்கு ஒரு அற்புதமான பரிசு தருகிறேன் வா என்று அவள் கை பிடித்து தோட்டத்துக்குள் அழைத்துச் செல்கிறான். அங்குச் சென்றவுடன் இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகச் செய்து கொள்கின்றனர். அவன் பெயர் "லீபெர்சோ" என்று தெரிந்துகொள்கிறாள். அவள் அவனின் பெயரைக் கேட்டவுடன் சிரிக்கிறாள். இவர்களின் உரையாடல்கள் மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது.

அவன், அவளுக்கு முதலில் தேரையினை கொடுக்கிறான் அவள் பயப்படுகிறாள், பிறகு பல வண்ண சில்வண்டுகளைக் கொடுக்கிறான் அவற்றையும் அவள் வேண்டாமென்கபல்லிகளைக் கொடுக்கிறான் அதுவும் அவளை வெறுப்பாகிறது இடை இடையே வீட்டிற்குப் போகவேண்டும் பாத்திரம் தேய்க்க வேண்டும் வேளையிருக்கிறது என்கிறாள் ஆனால் அவன் உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவளை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் இப்போது தவளை ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் தவளையினை தருகிறான் அதுவும் அவளைக் கவரவில்லை பிறகு பாம்பு என அவன் கொடுக்கும் எதுவம் அவளுக்குப் பிடித்தாக இல்லை இறுதியில் அவளின் வீடு எஜமானி கூப்பிட்டவுடன் அவள் தோட்டத்தை விட்டு வீட்டுக்குள் விரைகிறாள். வந்து தனது வேலையினை தொடர்கிறாள். இறுதியில் அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவன் கொடுத்த எல்லாவற்றையும் அவளின் சமையல் அறையில் வைத்துவிட்டுச் சென்றான். அவளுக்கு எல்லாமே இப்போது இருக்கிறது.

இந்த கதை ஆதாம் ஏவாள் இவர்களின் தொட்டது பிரவேசமாகத் தான் தோன்றுகிறது அந்த நிகழ்வுகளைப் புனைவாகக் கொண்ட ஒரு அழகிய இளஞ்ஜோடிகளின் அற்புதமான உரையாடல்கள்.

யுகியோ மிஷிமா (1925-1970):

நவீன ஜப்பானிய இலக்கியத்தின் மேதை, கலாச்சார ஆளுமையாளர், அரசியல், கலை, இலக்கியம் என வாழ்வில் பல்வேறு கட்டங்களில் தன்னை உட்படுத்திக்கொண்டவர் இவர். இவர் தனது உயிரினை அவரே மாய்த்துக்கொண்டார். அதுவும் அவரின் சினிமாவில் வரும் ஒரு காட்சியினை போலவே அவரின் உயிரினை மாய்த்துக்கொண்டார்.

இவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான "மூன்று மில்லியன் யென்". என்ற சிறுகதையினை பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.   

"மூன்று மில்லியன் யென்" -  1960 ல் வெளிவந்த இந்த கதை ஜப்பானில் போருக்குப் பிந்தைய, அமெரிக்கமயமாக்கப்பட்ட நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவ பண மதிப்புகளுக்கான சீரழிவைக் கருத்தில் கொண்டு வெளிவந்தது தான். 

போருக்கு பிந்தைய ஜப்பானில் வாழ்நிலைக்குத் தேவையான பொருளாதாரம் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதனால் புதிதாகத் திருமணமான "கென்ஷோ" மற்றும் அவனின் மனைவி "கியோகோ" இவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலத்திற்க்காக  இன்றிரவு ஒரு முதியவளைச் சந்திப்பதற்காகச் செல்கின்றனர்.

அந்த சந்திப்பு புதிதாக இருக்கும் "நியூ வோர்ல்டுவணிக வளாகத்திற்கு வருகிறார்கள். இங்கு இரவு ஒன்பது மணிக்குத்தான் அவளுடைய சந்திப்பு அதுவரையில் அந்த வளாகத்தில் இருக்கும் அனைத்து மாடுகளுக்கும் செல்கின்றனர். அங்கே இருக்கும் எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்கத்தான் ஆசை ஆனால் அவர்களின் திட்டம் இங்கே தடை விதிக்கிறது.

புதிதாகத் திருமணமான இவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறப்பதே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் என்றும் அதற்கு முன்னாள் சரிவர எல்லாவற்றையும் தங்களின் திட்டமிட்ட படி  நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை.  இதற்காக இவர்களின் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் நன்றாக இருவரும் சேர்ந்து தீர்மானித்து பிறகுதான் அவற்றைச் செய்கின்றனர்  ஏனெனில் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அதனால் தான் இந்த முடிவு.

நியூ  வேர்ல்ட் வணிக வளாகத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு  அனுபவத்தையும் மிகவும் அழகாகவும் கொஞ்சம் நகைச்சுவையுடனும் சீராகக் கொண்டுசெல்கிறார். ஒரு விளையாட்டில் "மூன்று மில்லியன் யென்கிராக்கர் பரிசாகக் கிடைக்கிறது. அதனைச் சுவைத்துக்கொண்டே அந்த வளாகத்தினை சுற்றி வருகிறார்கள்.

புதிய தம்பதிகளுக்கு இடையே இருக்கும் நெருக்கமும் உல்லாசமும் ஆங்காங்கே மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த நாள் முடிந்த நிலையில் அவர்களுக்காகக் காத்திருந்த முதியவளிடம் வந்தார்கள். 

இந்த இளம் தம்பதிகள் தங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வின் அங்கமாக இருக்கும் ரகசியத்தினை செல்வ சீமாட்டிகளுக்கு விற்றுவிடுகின்றனர். மிகவும் வளமான எதிர்காலத்தை வாங்க அவர்கள் தங்களுக்குச் சிறந்ததை விற்றுவிட்டனர், மேலும் மிஷிமா போருக்குப் பிந்தைய ஜப்பானைப் பற்றியும் சொல்ல முடியும் என்று தெளிவாக நம்பினார்.      


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 ஜூலை 2021


நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 3 - வாசிப்பு அனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 3

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 40

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறுவிதமான சூழல்களைச் சார்ந்த நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 3".

விளாதிமிர் நபகோவ்(1899-1977):

இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர். ஆரம்பக்காலத்தில்  தனது படைப்புகளை ரஷ்ய மொழியில் எழுதியவர் பின்னாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிறகு முழு நேர எழுத்தாளராக மாறினார். இறுதியில் சுவிட்சர்லாந்துக்குக் குடிபெயர்ந்து அங்கேயே இறந்து போனார்.

இவரின் வெகுவான படைப்புகளில், மிகச் சிறந்த படைப்பாக  "சந்தேகங்களும் குறியீடுகளும்"   என்ற சிறுகதையாகச் சொல்கிறார்.  

சந்தேகங்களும் குறியீடுகளும்: இந்த கதை, வயதான பெற்றோர்கள் தங்களது மகன் நான்காண்டுக்காலமாகத் தொடர்ந்து குணப்படுத்த முடியாத நோயில் இருக்கும் மகனுக்கு, இந்த பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்ற சந்தேகத்துடன் பரிசீலிக்கின்றனர் . அவர்கள் தங்கள் மகனின் பிறந்த நாளினை கொண்டாட அவனிருக்கும் இடத்திற்குச் செல்கின்றார்கள் ஆனால் அவர்களின் பயணத்தில்  வழியெங்கிலும் எதிர்பார்க்காத பல்வேறு தடைகள். ஒருவழியாக போய்ச்சேர்கின்றனர் ஆனால் அவனைப் பார்ப்பது இப்போது அவனுக்கு நன்றாக இருக்காது என்று செவிலியர் சொல்கிறாள். மனமுடைந்தவர்கள் வாங்கி சென்ற பரிசுப் பொருள்களை அங்கே வைத்துவிட்டு வராமல் பிறகு கொண்டு போகலாம் என்று திரும்புகின்றார்கள்.  மகனுக்கு இருக்கும் இந்த வினோதமான நோயானது, கண்ணுக்குப் புலப்படாத அசுர சக்தி தான் தன் மகனை வாதப்படுத்துகிறது என்று தீர்க்கமாக நினைத்தாள் அம்மா. 

தங்கள் மகனின் நிலைமையினை கண்ட இந்த வயோதிக பெற்றோர்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் பாசம் மற்றும் உணர்ச்சியின் உச்சக்கட்டம். இறுதியில் அவர் ஒரு முடிவெடுக்கிறார் இனிமேல் மகனை அங்கே விடவேண்டாம் நமது வீட்டுக்கே கொண்டுவந்துவிடுவோம்    என்று கலந்து பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் மீண்டும் ஒலிக்கும் தவறான தொலைப்பேசி அழைப்பு இவர்களின் நிலையினை கொஞ்சம் இடையூறு கொடுத்தது. தன் மகனை நாளைக்கு வீட்டிற்கே அழைத்துவரப் போகிறோம் என்ற நிறைவில் அவனுக்கு வாங்கி வந்த பரிசுப்பொருள்களை ஆவலுடன் உற்று நோக்குகிறார் அவற்றின் வண்ணங்களை ரசித்துக்கொண்டிருக்கிறார் அந்த நாடு ராத்திரியில்.

ஜார்ஜ் லூயி போர்ஹே (1899-1986): அர்ஜெண்டினாவில் பிறந்த இவர் தனது 56ஆவது வயதில் கண் பார்வையினை முற்றிலும் இழந்தவர் தொடர்ந்து கொடுத்த இலக்கியப் படைப்புகள் ஏராளம். இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை உலகில் சிகரம் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். இறுதியில் தனது 87 ஆவது வயதில் ஜெனிவாவில் இறந்தார். 

பாபிலோனில் லாட்டரி:    இந்த கதை பாபிலோனில் லாட்டரி எவ்வாறு உருவானது மற்றும் அதன் பின்னணி என்ன,யாரெல்லாம் இவற்றால் ஏமாற்றப்படுகிறார்கள், எப்படி தண்டனை வழங்கப்படுகிறது என ஒரு வரலாறே சொல்கிறது. மத ரீதியாகவும், மக்களின் வாழ்நிலை ரீதியாகவும் எளியோர் வலியோர் எனப் பாகுபாடுகள் நிறைந்த சமுதாயத்தில் எவ்வாறு அடிமைகள் இருக்கிறார்கள் என்றும், லாட்டரி நடத்தும் முறை அவற்றில் எவ்வாறு அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் கொண்ட நம்பர்களை உருவாக்குவது என பல்வேறு நிலைகளை விளக்கமாகச் சொல்லிச் செல்கிறது இந்த கதை. லாட்டரி நடத்தும் கம்பெனி மிகவும் வலிமையானது என்றாலும் மக்கள் படும் அல்லல் மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் பாபிலோன் அதிர்ஷ்டத்தின் எல்லையில்லா விளையாட்டு என்று சொல்வதே சிறந்தது என்கிறார்கள். இந்த கதையின் வழியே லொட்டரியில் இருக்கும் எல்லாவிதமான பிரச்சினைகளும் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

டெடுயூஸ் பரோவ்ஸ்கி (1922-1951): பொலிஷ் நாட்டில் பிறந்த இவர், மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். சிறுகதைகள் , பத்திரிக்கைகள் என பல்வேறு விதத்தில் தனது படைப்புகளை மிகவும் ஆக்கபூர்வமாக  வெளிக்காட்டினார். அரசியல் காரணத்தால் வெகுகாலம் தலைமறைவாக வாழ்ந்த இவர் கடைசியில் கைது செய்து வதை முகாமில் இரண்டாண்டுகள் இருக்க நேரிட்டது. இவரின் எழுத்துக்களில் பெரும்பான்மை மிகவும் அரசியல் மையமாக வைத்து இருக்கிறது.

"இரவு உணவு" -  இந்த சிறுகதை வதை முகாமில் நடக்கும் ஒரு இரவின் கொடுமைகளை முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. இவரின் எழுத்து கதை சொல்லும் அழகு வசீகரமாகவே இருக்கிறது. இரவு உணவிற்காகக் காத்திருக்கும் வதை முகாமில் இருக்கும் எல்லோரும் எவ்வாறு தங்கள் மனநிலை இருந்தது, அந்த இரவு எப்படி உலகத்தில் இருக்கிறது என்பதை அங்கே பகல் போய் இரவு தொடங்க ஆரம்பமாகிற இயற்கை அழகினை வெகு அற்புதமாக வர்ணிக்கிறார். அவ்வாறு இருக்கும் இயற்கையின் ரம்மியத்தில் திடீரென வரும் புயல்வேகத்தில் ஆவேசமாக வீசும் காற்று என்று சொல்லிக்கொண்டே பிறகு அந்த அமைதியாக இருந்த அந்த வதை முகாமில் திடீரென வரும் ஒரு புயல்.

அமைதியின் ஆழ்ந்த நேரத்தில் எல்லோரும் இரவு உணவிற்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் இருபது ரஷ்ய வீரர்கள் கைகளை முட்கம்பிகளால் பின்புறமாகக் கட்டப்பட்டு அழைத்து வருகின்றார்கள்.

பிறகு எல்லோருக்கும் இன்று இரவு உணவு இல்லையெனச் சத்தமாக அறிவிக்கிறார்கள். பசியுடன் நிற்கும் அந்த வீரர்களைப் புதிதாக வந்த ராணுவ வீரர்கள் பின்புறமாகத் துப்பாக்கி ஏந்தி அவர்களை கமாண்டர் அறிவித்தவுடன் சுட்டுக் கொள்கின்றனர், பிறகு பிரேதங்களை ஓரத்தில் குவித்துவிட்டுச் செல்கின்றனர்.

என மிக உருக்கமாக வெளிப்படும் வதை முகாமின் வதைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் போது மனதில் ஒருவிதமான அதிர்வு உணர்வுகள் எழுகிறது.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 ஜூலை 2021