Saturday, 11 September 2021

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் 

சிவபெருமான் திருவிளையாடல் கதைகள்  

ஆசிரியர் : ரா. சீனிவாசன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 208


 
திருவிளையாடல் என்ற இந்த புராணம் மொத்தம் 64 படலமாக பிரித்து ஒரு பெரிய கதைகளை சொல்கிறது. 1. இந்திரன் பழி தீர்த்த படலம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் 3. திருநகரம் கண்ட படலம் 5. திருமணப்படலம் உலகம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம். 9. எழுகடல் அழைத்த படலம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் 11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் 13. கடல் சுவற வேல் விட்ட படலம். 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் 15. மேருவைச் செண்டால் அடித்த படலம் 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் 17. மாணிக்கம் விற்ற படலம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் 19. நான் மாடக் கூடல் ஆன படலம் 20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம் 21. கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம் 22. யானை எய்த படலம் 23. விருத்த குமார பாலரான படலம் 24. மாறி யாடின படலம் 25. பழியஞ்சின படலம் 26. மாபாதகம் தீர்த்த படலம் 27. அங்கம் வெட்டின படலம் 28. நாகம் எய்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 30. மெய்க் காட்டிட்ட படலம் 31 உலவாக்கிழி அருளிய படலம் 32. வளையல் விற்ற படலம் 33. அட்டமாசித்தி உபதேசித்த படலம் 34. விடை இலச்சினை இட்ட படலம் 35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம் 36. இரசவாதம் செய்த படலம் 37. சோழனை மடுவில் வீட்டிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம் 41. விறகு விற்ற படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் 43. பலகையிட்ட படலம் 44. இசைவாது வென்ற படலம் 45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம் 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் 49. திருவாலவாயான படலம் 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம் 51. சங்கப் பலகை தந்த படலம் 52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம் 54. கீரனுக்கு உபதேசித்த படலம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 57. வலை வீசின படலம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 59. நரி பரியாக்கிய படலம் 60 பரி நரியாகிய படலம் 61. மண் சுமந்த படலம் 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம் 63. சமணரைக் கழுவேற்றிய படலம் 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்.

இந்த 64 படலங்களும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான கருத்தினை சிவன் காட்சியளித்து நன்னெறியினை சொல்கிற வழியாகக் கதைகள் அமைந்திருக்கின்றது.  மொத்தம் 64 படலத்தினையும் இங்கே பகிர்ந்தால் அது இன்னொரு புராணமாகவே இருக்கும் அதனால் ஒரு சில படங்களை மற்றும் இங்கே பதிவிடுகிறேன்.

இந்திரன், தேவர்களிடம் அவமதிப்பாக நடந்துகொண்டதும், இந்திரனுக்குத் தண்டனை கிடைக்கிறது கூடவே அணிவது யானையும் மண்ணுலகில் சென்று காட்டு யானையாக மாறிவாழவேண்டும்  என்றும் அவ்வாறானா வேளையில் யானை மூன்று கோயில்களை ஏற்படுத்தியிருந்தது அந்த கோயில்கள் பக்தர்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

பாண்டிய மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமான வகையில் ஈசனின் திருவிளையாடலில் பங்கெடுத்துள்ளார்கள் என்று சொல்கிறது கதை. காஞ்சன மாலை - மங்கையர்க்கரசியாக்கத் தடாதகைப் பிராட்டிக்குச் செய்யும் உபாயம்.    பல்வேறு தலங்களில் பல்வேறு பெயர்களுடன் வீற்றிருக்கும் சிவபெருமான் அங்கெங்கும் ஒவ்வொரு திருவிளையாடல் செய்திருக்கிறார். 

மங்கையர்கரசியாகியா பாண்டியர் மகள் அன்னதானம் செய்ய அதற்காக ஏற்பாடுகள் செய்கிறாள் ஆனால் இறைவன் அதற்கு உம்மால் முடியாது என்று சொல்கிறார் அதைக் கேட்காத மங்கையர்க்கரசி என்னால் முடியும் என்கிறாள் அதனைக் கேட்ட சிவபெருமான் சோதிப்பதற்காகக் குண்டோதரனுக்கு அன்னமிடச் சொல்கிறார். தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இல்லாமல் செய்கிறார் இறுதியில் தனது சடையிலிருந்த கங்கை  இறங்கி வந்ததால் இதற்குச் சிவகங்கை எனப் பெயரானதும் ஒரு கதை அதுபோலவே இந்த அன்னத்திடம் படலத்தில் இருக்கிறது.  சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தர ஏழு கடலையும் மதுரைக்குக் கொண்டுவந்து காஞ்சனமாக்கு இனபகடலில் நீந்தச்செய்கிறார். முருகனை உக்கிர குமாரனாக அவதரிக்கவைத்து ஆட்சி செய்யத் தேவையான அணைத்து பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து அந்நாட்டின் ஆட்சியினை நடத்தச் செய்கிறார் சிவபெருமான். 

சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த தமிழ்நாட்டில் மழை இல்லாமல் வறண்டுபோனது இதற்குக் காரணமான தண்டித்து இறுதியில் மழை பொழிந்தது அதுமுதல் மாதம் மும்மாரி பெய்து நாடு வளம் பெற்றது.

வீர பாண்டியனின் பல்வேறு புதல்வர்களில் எவருமே சரியாக வளர்க்கப்படாத நிலையில் இளைய மகன் மட்டுமே தந்தையின் கடமையினை செய்தான் அதனால் அவனை மன்னராக முடி சூட நினைத்தனர். ஆனால் அந்த அரணையில் அறைகளிலிருந்த செல்வங்கள் எல்லாம் இல்லாமல் போனது அந்த நேரத்தில் இறைவன் தானாக வந்து மாணிக்கம் வியாபாரி போல வந்து உதவினார் 

சித்தரை அவமதித்த பாண்டியனுக்குப் பாடம் புகட்டி கல்லானைக்குக் கரும்பு கொடுத்தது மற்றும் விக்கிரமன் ஆட்சியில் வேதியன் என்றவனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது இறைவன் அருளாலே கவுரி என்ற ஒரு மகள் பிறந்தால், அவளுக்குத் திருமணம் முடிந்து சென்ற வீட்டில் அவளுக்கு ஏற்பட்ட அநீதிகளை அகற்றிய  எனவும் இதுபோல பல்வேறு வகையில் சிவனின் திருவிளையாடல் பாண்டிய மன்னர்கள் சார்ந்தே இருந்தது.           
    

தேவதாரு என்னும் வனத்திலிருந்த ரிஷிகளின் பத்தினியர்களுக்கு பாடம் புகட்ட அவர்களைத் தண்டிக்கவும் மேலும் அவர்களுக்கு புத்துயிர் கொடுக்கவேண்டி வளையற்காரனாகி அவர்களின் பாவம் போக்கினார்.

காடு வெட்டிய சோழனோடு பாண்டிய நாட்டின் அரசின் நட்புறவில் வளர இருந்த ஒரு திருமண நிகழ்வினை வஞ்சகத்துடன் தம்பி முந்திக்கொண்டதனால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் வளர்ந்த பெரிய பகையின் பாடம் புகட்டத் தண்ணீர் வற்றியது அப்போது பாண்டியனுக்கு உதவி செய்ய தண்ணீர்ப்பந்தல் அமைத்துக் கொடுத்தார்.

தனது தங்கை மகனைத் தத்தெடுத்த வாணிகன் தேசாந்திரம்  போனபிறகு அவரின் தங்கைக்கு ஏற்பட்ட அநீதிக்கு  அந்த குழந்தையின் தாய் மாமனாக வந்து சாட்சி சொல்லி நீதி கிடைக்க செய்தர்.

பாணபத்திரனுக்கு உதவ விறகு வெட்டியாக வந்து பாடல் பாடி ஏமநாதன் என்ற இசைக்கலைஞனின் மனச்செருக்கினை போக்கி பாணபத்திரர் தான் சிறந்தவர் என்று சொன்னதும் ஒரு விளையாடலே. இதன் பிறகு பாணபத்திரர் அரசவையில் பாடக்கூடாது என்று சொல்லி இறைவனுக்கே பட வேண்டும் என்று அரசன் கட்டளையிடுகிறார் அதன்படி இறைவனுக்கே பாடி காலம் கழிக்கிறார் அப்படி இருக்கும்போது உணவுக்கு என்ன செய்வது எல்லாம் தீர்ந்த போது மலைநாட்டுக்குப் போகச் சொல்லி உதவிசெய்தார் இறைவன்.

ஒரு வேளாளனின் மகன்கள் தேவ குருவாகிய பிரகஸ்பதிக்கு பெரும் தொல்லைகள் கொடுத்ததால் கிடைத்த சாபத்தால் பன்றிக் குட்டிகளைப் பிறக்க வேண்டும் என்றார். பிறகு இதிலிருந்து விடுதலை பெறச் சிவபெருமான் தாயாக வந்து பால் கொடுத்தால் மனிதர்களாக மாறுவார்கள் என்றதும் அதுபோல செய்து அவர்களை அரசவையில் அமைச்சர்களாக அமர்த்தச்சொன்னார் என்பது ஒரு விளையாடல்.

பாண்டிய மன்னனின் சந்தேகத்திற்குக் கவிதை பாட வேண்டிய நிலையில் தருமி என்றவனுக்குச் சிவபெருமான் கொடுத்த பாடலில் பிழை இருப்பதாகச் சொன்ன நக்கீரனை நெற்றிக்கண்ணால் தண்டித்ததும் பிறகு நக்கீரனை மன்னித்தார் என்கிறது இந்த படலம்.

மாணிக்கவாசகரைக் காப்பாற்ற, நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் கொடுத்ததும் அல்லாமல் மறுநாளே பரிகளை எல்லாம் நரிகளாக மாற்றியதும் அதற்காக மாணிக்க வாசகரைத் தண்டித்த மன்னனின் நிலையினை கண்டு வகையினை வெள்ளப்பெருக்கெடுக்கச் செய்து கரை உடைந்தது அதற்காகக் கரையினை மூட வீட்டிற்கு ஒரு ஆள் என்ற கூற்றுக்குப் பாட்டி வந்திக்காக மண்சுமந்ததும் அதற்காக பிட்டு கூலியாக வாங்கியது என ஒரு படலம்.

பாண்டிய மன்னன் சமண மதத்தினை பின்பற்றியதும் அதற்காக அவரை சைவ மதத்திற்கு மாற்ற வேண்டி நிகழ்த்திய திருவிளையாடல்கள் சமணர்களை அழித்ததும், பாண்டியனுக்குத் தீராத வலியினை கொடுத்து அதற்காகச் சிவனடியாரான திருஞான சம்பந்தரை வரவழைத்து சில நிகழ்வுகளை நடத்தி யார் சைவத்தை நிலை நாட்டியது என ஒரு திருவிளையாடல்.

என இந்த திருவிளையாடல் புராணத்தின் வழியே நாம் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை எளிய முறையில் எளிய மொழிநடையில் சிறு சிறு கதைகளாக  அறிந்துகொள்ள முடிகிறது.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
11 செப்டெம்பர் 2021 

Thursday, 9 September 2021

சிலப்பதிகாரக் காட்சிகள் - வாசிப்பனுபவம்

சிலப்பதிகாரக் காட்சிகள்

ஆசிரியர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 74   


சிலப்பதிகாரத்தினை, கலைஞரின் வசனத்தில் "பூம்புகார்" என்ற திரைப்படமாகத்   திரையில் பார்த்தது. இப்போது இந்த புத்தகம் வழியே மிகவும் எளிமையான முறையில் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

எளிய நடையில், இருக்கும் மிகவும் தேவையான அளவிற்கு மிகவும் சுருக்கமாகவும், அதே வேளையில்  முழுக்கதையும் புரிந்துகொள்ள முடிகிற அளவிற்குச்  சொல்லப்பட்டிருக்கிறது. 

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. புகார் காண்டம் 

2. மதுரை காண்டம் 

3. வஞ்சிக்காண்டம் 

 

புகார் காண்டம்

காவிரிப்பூம்பட்டினம்:

சோழ தேசத்தின் தலை நகராக விளங்கியது.  இந்த நகரம் 1800 வருடங்களுக்கு முன்னர் மிகவும்  அழகானதாகவும்  மற்றும் புகழ்பெற்ற பெரிய வாணிப நகரமாகத் திகழ்ந்ததற்கான எல்லா வரலாற்றுச் சான்றுகளும் இருக்கிறது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் மாறாகத்தான் இருக்கிறது என்பது ஒரு பக்கம் கவலை கொள்ளவைக்கிறது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு கல்லணை வழியாக ஒரு சாலை இருக்கிறது இந்த சாலை முழுவதும் காவிரியாற்றின் கரையிலே செல்லும் இந்த சாலையில் வெகுவான இடங்களில் இரண்டு பக்கங்களும் காலங்கள் தாண்டி நிற்கும் புளியமரங்களால் சூழ்ந்து இருக்கும்.

இந்த நகரத்திற்கு இரண்டு பெயர்கள் இருந்தன ஒன்று "புகார்" மற்றும் "பூம்புகார்" என்றும் அழைத்தனர் ஆனால் இன்று பூம்புகார் என்று அழைக்கப்படுகிறது.

அந்த நகரம் , மையத்தில் மன்னவனின் மாளிகையாலும் அதனைச் சுற்றி தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைப்பாகர், படைத்தலைவர், வீரர்கள் விடுதிகள் என கம்பீரமாகத் தோற்றமளித்தது. பல்வேறு வணிகர்களும்,  முத்து வணிகமும், பல்வேறு ஆலயங்களும், நாட்டிய கூடமும் நாடக அரங்கும் என அந்த நகரம் பரபரப்பாகவே இருந்தன.  .                        

அக நகர் மற்றும் புற நகரினை இணைக்கும் இடத்தில் அமைத்திருந்த நாளங்காடியும் (நாளங்காடி என்றால் தினம் தினம் கூடும் வணிக சந்தை) இந்த பெரிய சந்தையாக விளங்கியது. 

இந்திர விழா, சித்திரை மாதம் இந்திரனுக்காக எடுக்கப்படும் ஒரு பெரிய விழா, அப்போதெல்லாம் காவிரியாறு கடலில் போய் கலக்கும் காட்சி அவ்வளவு அருமையாக இருந்தது ஆனால் இன்றோ அந்த இட்டதில் கடல் நீர் தான் உள்வாங்குகிறது.

இவ்வளவு அழகான இந்த நகரின் துறைமுகம் வணிகத்திற்கு  பெயர்பெற்றிருந்தது, அரேபிய, கிரீஸ், இத்தாலி முதலிய மேற்கு நாடுகளும்  சீனம், பர்மா முதலிய கிழக்கு நாடுகளும் கப்பலில் வந்து வாணிபம் செய்த பெரிய துறைமுகம் இருந்தது.     ஆனால் இன்று அத்தகைய பெரிய துறைமுகம் இருந்த சுவடே இல்லாமல் செய்துவிட்டனர். நாம் காக்கத் தவறிய ஒரு பெரிய வரலாற்று இடம் என்றால் அதுவும் தமிழகத்தில் என்றால் அது இந்த பூம்புகார் தான். இந்த நகர் ஒரு தாலுக்கா என்ற நிலையினை கூட எந்த ஒரு அரசும் எடுக்காதது வேதனைக்குரியது.

கோவலன் - கண்ணகி. இந்த காவியத்தின் கதை நாயகரும் நாயகியும் இந்த இருவரும் தான். பெரும் வணிகன் மாசத்துவானுக்கு மகனாகப் பிறந்த கோவலன் மற்றும் மாநாயகனுக்கு மகளாகப் பிறந்த கண்ணகி ஆகிய இருவரும் நெருக்கிய குடும்ப உறவினர்கள் எனவே இவர்கள் இளைமை பருவத்தில் ஒன்றாகப் பழகியவர்கள். இவர்கள் தங்கள் திருமண வயதினை அடைந்ததும் இரு குடும்பமும் சேர்ந்து இவர்களுக்குத் திருமணம் முடித்து வைக்கின்றனர். தமிழ் மரபுப்படி அந்த காலகட்டத்தில்,  பண்டைய காலவழக்கப்படி திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. அவ்வாறே இவர்களுக்கும் தனிக்குடித்தனம் அமையப்பெற்றது.  இருவரும் இசையும் நடனமும் தெரிந்தவர்கள் என்பதால் இவர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாகச் சென்றது.

மாதவி:

இந்த நகரம் கலைக்குப் பெயரான நகரமாதலால், நடனமும் நாட்டியமும் அரங்கேறிக்கொண்டே இருக்கும் அப்படிப் பெயர்பெற்றவர் தான் "சித்திரா பதிஇவரின் மகள் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் முதல் முதலாக  நிகழ்ந்தது.  அதற்காக அரசர்கள்பெருவணிகர்கள் என பெரும்பாலான மக்கள் திரள் கூடியிருந்தது. மாதவியின் முதல் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது அதன் வழியே நிறையப் பரிசுகளும் பட்டமும் கிடைத்தது. இந்த மாதவியின் நடனத்தில் மயங்கிய கோவலன் அவள் மீது ஆசைகொண்டு கண்ணகியை விட்டு மாதவியுடன் வாழத் தொடங்கினான். இவர்களின் உல்லாச வாழ்வின் ஒரு நாள் ஏற்பட்ட   கருத்து வேறுபாட்டில் கோபங்கொண்ட கோவலன் கண்ணகியிடம் திரும்பினான். இதற்கிடையில் இருந்த எல்லா செல்வத்தையும் மாதவியிடம் இழந்தான்.

மதுரை காண்டம்: 

மாதவியிடம் இருந்த சோர்ந்து போன முகத்துடன் வந்த தனது கணவனை நோக்கி கண்ணகி சொல்கிறாள், என்னிடம் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை எல்லாவற்றையும் அவளிடம் கொடுத்துவிட்டீர்கள், இப்போது உள்ளது காற்சிலம்பு மட்டுமே அவற்றை எடுத்துச்செல்லுங்கள் தங்கள் மனம் நிறைவாக இருப்பதற்கு என்று சொல்கிறாள். மாதவியிடம் பிணக்கு ஏற்பட்டு மனம் திருந்தி வந்த கோவலன் நான் முற்றிலும் திருந்தி உனக்காகவே என வந்துள்ளேன். அதனால் நீ சொன்ன அந்த சிலம்பினை விற்று நாம் ஒரு புதிய வணிகம் தொடங்குவோம். ஆனால் அந்த புதிய வாழ்க்கை ஆரம்பிக்க  நாம் மதுரைக்குச் செல்வோம் என்கிறான்.                         

மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்க வேண்டி மதுரைக்கு இருவரும் புறப்படுகின்றனர். இந்த பகுதியினை மதுரை காண்டம் என்று சொல்கிறது. 

இதற்கு முன்னர் கண்ணகி ஒரு கனவு காக்கிறாள் அவற்றைத் தனது தோழி தேவந்தியிடம் கூறுகிறாள், இது ஒரு கெட்ட கனவுதான். அவற்றில் இருந்து விடுபட வேண்டி,  காவிரியாறு  கடலில் கலக்கும் இடத்தில் இருக்கும் சோமா குண்டம் சூரிய குண்டம் ஆகிய இரண்டிலும் நீராடி வாருங்கள். அப்போது எலலாமே நல்லதாகவே நடக்கும் என்று சொல்கிறாள் ஆனால் அதற்குள் கோவலன் வரவே கண்ணகி தோழி சொன்னதை மறந்து கணவனுடன் மதுரைக்குப் புறப்படுகிறாள்.  மதுரைக்கு நடையாகப் பயணம் சென்றனர்.  வழியே நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளை அழகாகச் சொல்லிச்செல்கிறது காப்பியம். முதலில் கவுந்தி அடிகளைச் சந்திக்கின்றனர் பிறகு அவரின் துணையுடன் நடக்கின்றனர், மூன்று வழிகளில் நடு வழியினை தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். இடை இடையே வந்து மாயம் செய்யும் தேவதையின் விளையாட்டு பிறகு கெளசிகன் வழியே வரும் தூது என்று ஒருவழியாக மதுரையின் புறஞ்சேரியில் தங்குகின்றனர்.

மதுரையின் அழகினை, மதுரை தென்றல் வாசத்தின் வழியாக வர்ணிக்கிறார். எண்ணற்ற வாசனைகள், பல்வேறு வகையான ஆலய ஓசைகள், வகை வகையான மரங்களால்  சூழ்ந்திருக்கும் வைகை ஆறு, பரபரக்கும் கடை வீதி என நம் கண் முன்னே அழகிய மதுரையினை கொண்டுவருகிறது.

கவுந்தி அடிகள், கோவலனுக்குக் கொடுக்கும் அறிவுரையில் நீ முற்பிறவியில் செய்த பொல்லாத செயலினால் இப்பிறவியில் பழிவாங்கப்படுவாய் அந்த நிகழ்வு முற்பிறவியில் பாதிக்கப்பட்டவனால் நடக்கும் என்று கூறுகிறார். கோவலனும் அதுபோலவே ஒரு கனவினை காண்கிறான்.  ஆயர்குல முதியவளின் வீட்டில் தங்கியிருக்கும்  இவர்கள் மறுநாள் காலையில் கண்ணகியின் ஒரு காற்சிலம்பினை மட்டும் எடுத்துக்கொண்டு கோவலன் மட்டும் தனியாக நகருக்குள் செல்கிறான் விற்பதற்காக.

நகரின் எதிர்கொண்ட அரண்மனை பொற்கொல்லன் லாவகமாக இவனிடம் இருக்கும் சிலம்பு தான் பணிபுரியும்  அரண்மனையின் மகாராணியுடையது என்று சொல்லி மன்னரிடம் தான் செய்த திருட்டில் இருந்து தப்பிக்க தவறான செய்தியினை  சொல்லி  கோவலனின்    உயிரினை பறிக்கிறான்.

இந்த செய்தியினை அறிந்த கண்ணகி, கவலை கொண்டு  புலம்பலுடன் மயங்கி விழுந்துவிடுகிறாள். பிறகு வீறிட்டு எழுந்த கண்ணகி சிவந்த கண்களுடனும், தலைவிரிகோலத்துடனும் தனது மற்றொரு சிலம்புடன்    அரண்மனை நோக்கிப் பொங்கி எழுந்து ஆவேசத்துடன் வீர நடையுடன் செல்கிறாள்.

அரண்மனையினை அடைந்த கண்ணகி, மன்னனிடம் முறையிடுகிறாள், தனது கணவன் கள்வன் அல்ல தவறான தீர்ப்பு வழங்கிய நீரோ கள்வன் என்று உரைத்து தனது கையிலிருந்த மற்றொரு சிலம்பினை உடைத்து அதில் பதித்திருப்பது மாணிக்கக் கற்கள் என்று நிரூபித்து ஆவேசம் கொள்கிறாள்.

தான் தவறிழைத்ததை  அறிந்த பாண்டிய மன்னன் அக்கணமே உயிர்நீத்து தனது செங்கோலினை நிலைநாட்டுகிறான் கணவன் உயிர்நீத்ததை அறிந்த அரசியார்  அவன் கூடவே  கோப்பெருந்தேவியும் உயிர்விடுகிறாள். ஆவேசம் குறையாத கண்ணகி மதுரையினை எரிக்கிறாள், பிறகு அங்கிருந்து வைகை நதியோரம்  நடந்து வஞ்சி மாநகரத்திற்குச் செல்கிறாள்.

வஞ்சிக்காண்டம்:  

கோவலன் கொல்லப்பட்ட பதினான்காம் நாள் அவளை அழைத்து செல்ல கோவலன் வருவான் என்று  சொன்னதை கேட்டுகொண்ட  கண்ணகி, தனது கணவனை சந்திக்க  சேர நாட்டின் மலை பிரதேசத்தில் பிரவேசித்து  ஒரு பகுதியில் நிக்கிறாள். அவள் வருகையினை அறிந்து அங்கே ஒரு விமானம் வருகிறது அதில் அவள் ஏறி கோவலனுடன் விண்ணுலகம் செல்கிறாள்.

இந்த செய்தி கேட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், தன் அரசன் அநீதி விதித்தான் என்று அறிந்த கோப்பெருந்தேவியிம் உயிர்நீத்தாள். இவர்களில்  கோப்பெருந்தேவி சிறந்தவாளா அலல்து தன கணவன் கள்வன் அல்ல என்று நிரூபித்து மதுரையினை தீயிட்டாளே அவள் சிறந்தவாளா என்று கேள்வியினை தனது அரசியிடம் கேட்கிறான். 

மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லும் அரசி, இவர்கள் இருவருமே பாராட்டத்தக்கவர்களே என்று தனது தரப்பு கருத்தினை சொல்கிறாள்.   பிறகு சேர மன்னன் செங்குட்டுவன், பத்தினி தெய்வமான கண்ணகிக்கு ஒரு சிலை   வைக்கவேண்டும் என்று எண்ணி அதற்காக  பொதிகை மலையில் இருந்து கல் எடுத்துவரலாமா அலல்து இமயமலையில் இருந்து எடுத்துவரலாம் என்று கேட்கிறார். அமைச்சர்கள் அனைவரும்  இமய மலையில் இருந்து எடுத்துவருவதே உகந்தது என்றதும் , மன்னன் இமய மலையில் இருந்து கல் எடுத்துவர செல்கிறான் வழியில் ஏற்படும் போர்களை எல்லாம் வென்று இமயமலையின் கல்லுடன் திரும்பி வருகிறான். பத்தினிக்கு கோவில் இமயமலையில் இருந்து எடுத்துவந்த கல்லில் செய்த சிலையினை வைத்து, கண்ணகியின் தோழியான தேவந்தியிடம் பூஜை செய்ய பணிக்கப்பட்டது.

இந்த காப்பியம், சோழ நாட்டின் புகார் என்ற நகரில் பிறந்து, பாண்டிய நாட்டின்  மதுரையில் கணவனை இழந்து சேரநாட்டின் தலைநகருக்கு அருகாமையில் துறக்கம் அடைந்த பத்தினி தேவியின் வரலாற்றை மிகச்  சிறப்பாக சொல்லுகிறது. 

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

10 செப்டம்பர் 2021 

கி.மு.கி.பி

கி.மு.கி.பி   

ஆசிரியர் : மதன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 131

பக்கங்கள் 160


கி.மு.கி.பி, பல்வேறு காலகட்டங்களின் வரலாற்றினை ஒரு புத்தகத்தில் கொடுப்பது என்பது கொஞ்சம் கடுமையான காரியம் தான். ஆனால் மதன் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். கி.மு. பலநூற்றாண்டு வருடங்களிலிருந்து கி.பி 2000 வரையினால் பல்வேறு சுவாரஸ்யமான வரலாற்றுச் சுவடுகளை இங்கே கொடுத்திருக்கிறார்.

சங்க காலத்திற்கும், சரித்திர காலத்திற்கு முன்னரும், மனித உயிர் தோன்றிய காலத்தினையும் கூடவே வளர்ந்த மனித நாகரீகத்தினையும் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார்.

உலகம் தோன்றியதிலிருந்து, ஒவ்வொரு உயிரினமும் தோன்றியதை ஆரம்பித்துக் கூடவே செடி கொடிகள் பரிணாம வளர்ச்சிகளையும் பற்றிப் பேசுகிறது.

உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்றும், அவர்கள் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா கண்டம் எனவும் அவ்வாறு தோன்றிய மனித இனம் உலகின் எல்லா முலைகளுக்கு நடந்தே சென்றது, அப்படி நடந்து சென்றது ஒரு நாளே அல்ல ஒரு வருடமோ இல்லை பல்லாயிரம் வருடங்களாக நிகழ்த்து கொண்டிருந்தது என்கிறது வரலாற்றுத் தரவுகள்.

அப்படி நடந்த சென்ற மனித இனம், சில இடங்களில் தங்க முன்வந்தது அவ்வாறு தங்கிய நேரத்தில் அங்கே ஒரு குழுவாக இருந்தது. தங்கள் தேவைகளை அங்கே தேடத்தொடங்கினார்கள். இதன் வழியே நாகரிகம் தோன்ற ஆரம்பித்தது என்கிறார். அவ்வாறு வாழ்ந்த ஆதி மனிதர்கள் சராசரியாக வாழ்ந்தது வெறும் முப்பது வயதுதான் என்கிறது.  

உலகின் எல்லா பகுதிக்கும் தரைவழியாகச் செல்வதற்கான பாதைகள் இருந்ததும் அதைக் கண்டறிந்து மக்கள் பயணப்பட்டனர் ஆனால் இதற்கு ஒரு காலத்தில் ஒரு தடை வந்தது அதாவது உலகம் வெப்பமானது அதன் காரணமாகப் பனிக்கட்டிகள் உருகி தண்ணீர் அதிகமானதால் கடலும், ஆறுகளும் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்தது இதன் காரணமாக உலகின் பல பகுதிகள் பிரிந்துபோனது. கண்டங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியானது .

முதலில் தோன்றிய தீயினை பார்த்து வியந்த மனிதன் பிறகு அதனால் கிடைத்த பயன்களிலிருந்த முக்கியத்தினை தெரிந்துகொண்டதனால் தீ செயற்கையாகக் கண்டுபிடித்தான். இதுவும் நாகரீகத்தின் வளர்ச்சியேயாகும்.

நாகரிகங்கள் தோன்றியது அவர்களுக்கென வழிபாடுகள் மற்றும் தெய்வங்கள் தோன்றின அவருக்காக ஆலயங்களை மலையின் உச்சியில் ஆலயம் கட்டினார்கள்.  இவ்வாறாக வளர்ந்த இந்த நாகரீகம் டைக்ரீஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளின் இடையேதான் தோன்றியது என்கிறார்கள். மெசபடோமியாவில், ஊர் என்கிற ஊரைத் தொடர்ந்து பதினெட்டு நகரங்கள் தோன்றின மற்றும் நாகரிகமும் கூடவே வளர்ந்தது. 

பாபிலோனியாவின்ஹமுராபி, மனித இனத்தின் நாகரிகத்தின் சமுதாயம் முன்னேற்றத்திற்காகக் கனவு கண்ட ஒரு தலைவனாக ஹமுராபி உருப்பெற்றான். இவரின் ஆட்சிக்குக் கீழ் மொத்த மெசபொடேமியா பிரதேசமும் வந்தது இவ்வாறாக ஹிராமுபியின் உலகின் பாபிலோனியச் சாம்ராஜ்யமும் உலக வரலாற்றில் ஆச்சரியமான ஒரு காலம் என்கிறது வரலாறு. இவர் தான் முதலில் சட்டங்களை வகுத்திருக்கிறார், மேலும் பழிக்குப் பழி மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகள் என பல்வேறு சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறார்.

"கில்கிமெஷ்" - இது பாபிலோனியர்கள் இயற்றிய உலகின் மிகச் சிறந்த காப்பியம் என்ற முக்கியத்துவம் வாய்ந்தது. கில்கிமெஷ், என்ற ஒரு மன்னரின் உண்மை கதையின்  தழுவி இந்த காப்பியம் உருவாக்கியிருக்கிறார்கள். கில்கெஷும்எங்கிடுவும் என இவர்களின் வரலாறும் அவர்கள் முதலில் ஆரம்பித்த பகைகளும் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்தது என பல்வேறு சுவரஸ்ய்மான தகவல்கள். நள்ளிரவு தேவதையின் கதைகள், பாபிலோனியர்கள் மரணத்தைப் புனிதமாகக் கருதியதும், அவ்வாறு இறந்தவர்களை வீட்டின் உட்புறத்தில் புதைத்தனர் இதனால் அவர்களின் உதவி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

உலகின் பாபிலோனியாவில் நாகரிகம் தோன்றிய காலத்திலே இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகம் தோன்றியுள்ளது என்பதும் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்கிறது. மொஹஞ்சதாரோ நாகரிகம், இங்கே தோண்டிய நாகரிகம்தான் இன்றைய நாகரிகத்தின் முன்னோடி என்கின்றனர். இவர்கள் மிகவும் சுத்தமாகவும் நாகரிகமாக வாழ்ந்தனர். இவர்கள் குளிப்பதற்க்க்காக குளங்கள் கட்டியிருந்தனர் மற்றும் தானியங்களைச் சேமிக்க உயரத்தில் களஞ்சியம் கட்டினார்கள் என்றும் குறிப்பிடுகிறது. கரும்பு மற்றும்  பருத்தி ஆகிய இவையிரண்டையும் கண்டுபிடித்து விவசாயம் செய்தார்கள்.

இன்றளவும் இந்தியாவில் தோன்றிய சிந்துசமவெளி நாகரீகத்தின் மக்கள் பயன்படுத்திய மொழி என்ன என்ற தரவுகள் கிடைத்தாலும், தமிழ் என்பதற்கு அதிக அளவு வாயாயிருந்தாலும் உலகம் ஏன் மறைக்கிறது என்று தெரியவில்லை.

நைல் நதியின் கரையில் தோன்றிய எகிப்து நாகரிகம் உலகின் மிக முக்கியமான நாகரிகம் எனப்படுகிறது. எகிப்தியர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்டதாகவும் குறிப்பிடுகிறது. ஒரு பெண், செயற்கை தாடியுடன்  ஆண் வேடமிட்டுக் கொண்டு ஆட்சி நடத்தியதுஆமன் ஹோடப் என்கிற எகிப்து மன்னன், சூரியன் தான் முக்கியம் என்று சொன்னதும் மட்டுமல்லாமல் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் பல்வேறு தெய்வங்களை அழித்ததும் என பல்வேறு காரணங்களால் மதபோதகர்கள் எவ்வாறு ஆட்சியினை தங்கள் வசம் வைத்துக்கொள்ளத் திட்டம் தீட்டினார்கள் என்பதும் முக்கியமான தகவல்கள். மேலும் கல்லறைகளில் வைத்திருந்த பல்வேறு விதமான பொருள்களையெல்லாம் குறிப்பிடுகிறது. எகிப்தியர்கள் மம்மி செய்வதில் கைதேர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் பல்வேறு மருத்துவ குறிப்புகளை எழுதிவைத்திருந்தார்கள் எனவும் குறிப்பிடுகிறது.

ஏதென்ஸ். கிரேக்க நாடுகளில் ஒரு சிறிய நாடன் ஏதென்ஸ் உலகின் முதலில் மக்களாட்சி போன்ற ஒரு ஆதியினையும் மக்களுக்குச் சுதந்திரமும் கொடுத்தாகவும், பல்வேறு விதமான நாகரிகங்கள் மற்றும் அறிஞர்கள் தத்துவங்கள் பிறந்த மண் எனக் குறிப்பிடுகிறது. ஏதென்ஸுக்கும்   ஸ்பார்ட்டாவுக்கும் இடையேயான போர் இன்றளவும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது என்கிறார்கள். பாரசீகம் ஒவ்வொருமுறையும் கிரகத்தின் மீது போர்தொடுத்தது அதன் காரணமாக ஒட்டுமொத்த கிரேக்கமும் பாரசீகத்தின் பிடியிலிருந்தது ஆனால் பிற்காலத்தில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் மட்டும் எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெறவைத்தது.

சாக்ரட்டீஸ் என்ற மகா தத்துவமேதையின் கடைசி நாட்களின் வரலாறு மிகவும் குறிப்பிடத்தக்கது, கிடைத்த எல்லா வழியினையும் தவிர்த்து நேர்மையானவன் என்று வாதாடி இறுதியில் தண்டனைக்கு உட்பட்டு விஷம் அருந்தி மரணித்தார். பிறகு பிளாட்டோஅரிஸ்டாட்டில் என அவரின் சீடர்கள் எல்லோருடைய வரலாறும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 


அலெக்சாண்டர் அவர்களின் ஆட்சியையும், வெற்றியையும் அவரின் குருவான அரிஸ்டாட்டிலும் என வரலாறு மிகவும் முக்கிய தகவல்களைக் குறிப்பிடுகிறது. இந்தியாவிலிருந்து திரும்பிப் போகும் வழியில் அவர் மரணமடைந்தார் என்பதும், இந்தியாவில் சந்திரகுப்தரின் ஆட்சியையும், சாணக்கியன் தான் செய்த தவற்றுக்காகத் தண்டனை வழங்கிய நந்தர் வம்சத்தினை  எவ்வாறு பழிவாங்குவது என்ற யோசிக்கும் வேளையில் வழியே கிடைத்த ஒரு சிறுவனை வாங்கிவருகிறார் அவர் தான் சந்திரகுப்தர்இவரைக் கொண்டு நந்தர் வம்சத்தினையே அழித்துவிடுகிறார் பிறகு இவரின் ஆட்சி கோலோச்சியது. பிறகு இவரின் மகன் அதன் பிறகு இவரின் பேரன் அசோகர் என வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிச் செல்கிறது இந்த புத்தகம்.

அசோகரின் ஆரம்ப காலா ஆட்சியில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் முழுமையாக வரவில்லை இருந்தாலும் அவர் அரசனான பிறகு செய்த கலிங்கா போரில் செத்து மடிந்த வீரர்களைப் பார்த்து மனம் உடைந்து இனிமேல் இது போலதொரு பயங்கரமான காரியம் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டார் அது மட்டுமல்லாமல் இந்த போருக்கு பிறகு ஒரு புதிய  தொடக்கமாக புத்த மதத்தினை பின்பற்ற ஆரம்பித்தார் என்கிறது வரலாற்றுச் சான்றுகள்.

இப்படியா ஒரு பல்லாயிரம் வருடங்களின் நடந்த பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்துகொண்ட மன நிறைவுடன் பகிர்கிறேன். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

09 செப்டம்பர் 2021 

Saturday, 4 September 2021

குருகுலப் போராட்டம்

குருகுலப்  போராட்டம்  

சமூகநீதியின் தொடக்க வரலாறு

ஆசியர் : நாரா. நாச்சியப்பன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள்  80



சமூகநீதியின் ஆரம்பப் புள்ளியே இந்த  குருகுலப்  போராட்டம்  தான் என்றும் மற்றும் இந்த போராட்டம் ஆரம்பித்த காரணம் முதல் ஒவ்வொரு படியினையும் மிகத் தெளிவாகவும், சிறப்பான முறையிலும்  தொகுக்கப்பட்டுள்ளது இந்த புத்தகம். 

ஆதிக்கச் சாதியின் அதிகாரம் எப்படி அடுத்துள்ளவர்களின் மீது அடக்கி ஒடுக்குமுறையினை வைத்திருந்தது, அந்த ஒடுக்கு முறைக்கு அவர்கள் சொல்லும் அவர்களின் நம்பிக்கை அதனால் பிறருக்கு ஏற்படும் ஒடுக்குமுறையினை பற்றி கவலை கொள்ளாமல் மேலும் மேலும் அதன் வீரியம் கூடிக்கொண்டே சென்றது.

தமிழ் மண்ணின் சமூக நீதி என்றாலே நமது நினைவுக்கு வருவது முதல் மூன்று பெயர்தான் அவற்றில் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி. இத்தகைய மூன்று கண்களில் வெளிப்பட்ட சுடரின் வெளிச்சமே நாம் இன்று வாழ வழி செய்தது.

நீண்ட நெடுநாள்களாக சக மனிதர்களை முன்னேற விடாமல்,  சாதியினால் இருக்கும் அநீதியும், மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்று சொல்லி அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து வகையான பிறப்புரிமைகளையும்  பறித்துக்கொண்டு அதள பாதாளத்தில் தள்ளி வைத்து விட்டு  வேடிக்கை பார்த்த ஒரு சிறிய கூட்டம், செய்த தந்திரங்கள் என ஏராளனமாவை.

இந்த இருளிலிருந்த மக்களை வெளிச்சத்திற்கு அழைத்து வந்ததற்கு  ஒரு பெரிய பங்கினை வகித்தவர் "தந்தை பெரியார்". அவரின் ஆரம்ப முனைப்புதான் இன்றளவும் நாம் அனுபவிக்கும் எண்ணற்ற சுதந்திரம் என்று சொன்னால் அதுமிகையாகாது.

மற்றவர்களுக்குப் படிப்பதற்கு சமூகத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்காமல் அவர்கள் தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு,  இழைக்கப்பட்ட அநீதிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை மீட்டெடுக்கவேண்டி   ஆரம்பமானதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சமூக நீதியின் அடிப்படை கோரிக்கையாகத் துளிர்விட்டது.

புத்தகத்தின் ஆரம்பத்தில் மேற்கோள்காட்டியிருக்கும் பாரதியின் விடுதலை பாட்டு, மீண்டும் மீண்டும் வாசித்தால் நமக்குள்ளே இருக்கும் விடுதலை உணர்வு பீரிட்டு எழுகிறது. எத்தனை விடுதலை, யார் யாருக்கு விடுதலை என மிக ஆழ்ந்த சிந்தனை.

வ.வே.சு. ஐயர் அவர்களின்  ஆரம்பத்திலிருந்த வெளிப்படையான பார்வை பற்றியும் அவர்களை சுற்றியுள்ள பல்வேறு மக்களினை பற்றியும் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறது. இவரின் கல்வி மற்றும் இலக்கிய திறமைகளையும், அவர் கொண்டிருந்த பல்நோக்கு சிந்தனையும் இவர் மீது அதீத நம்பிக்கையினை எல்லோருக்கும் ஏற்பட ஒரு உந்துதலாக இருந்தது, அப்படி ஏற்பட்ட அந்த நம்பிக்கையின் பெயரிலே இவருக்குக் குருகுலம் ஆரம்பிக்க எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

என்னதான் செய்தலும் அவரவர் குணம் அது தானாகவே வெளிப்படும் என்பதுபோல அவரின் குணம் ஒரு சமயத்தில் வெளிப்பட்டது. எதற்காகக் குருகுலம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையினை நம்பியவர்கள் எல்லாம் இழந்து போனது என்றே தான் சொல்லவேண்டும்.

குருகுலம் ஒரு லட்சிய பள்ளிக்கூடம் என்றும் அதனைத் திறம்பட நடத்தத் தகுதியானவர் வ.வே.சு தான் என்று எல்லோரும் நம்பிக்கையுடன்  ஆரம்பித்தார்கள் ஆனால் அங்கே நடத்தப்பட்ட சாதியின் பாகுபாடுகள், இரட்டை பந்தி, இரட்டை தண்ணீர் பானை, சமைப்பது மட்டும் பிராமணர்கள் மற்ற எல்லாவேலைகளையும் மற்ற சாதியினரச்செய்ய சொல்வது என ஒரு பெரிய அநீதி நடந்து கொண்டிருந்தது.

இந்த அநீதி தான் மிகப் பெரிய குருகுலப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த சாதிய பாகுபாட்டிற்கு அப்போதைய காங்கிரஸிலிருந்த எல்லா பிராமணவர்கலும் மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சில வேற்று சாதியினை சேர்ந்த காரியவாதிகளும் ஆதரவாகவே பேசினார்கள். இந்த பிரச்சினையில் காந்தியும் கூட இதற்கு ஆதரவாகவே தான் பேசினார் மற்றும் அறிக்கை விட்டார் என்று சொல்லப்படுகிறது.

தருமம் நியாயம் என்பதெல்லாம் அவர்கள் சாதியுயர்வைப் பாதிக்காத வரையில் தான் செல்லுபடியாகும், ஆனால் இவர்களின் சாதியின் அடிப்படியில் கைவைத்தால் தருமம் நியாயம் சாதி துவேஷமாக மாறிப்போய்விடும். இவற்றை நன்றாகப் புரிந்துகொண்ட தந்தை பெரியார், ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற வேண்டும் அதற்காக அரசு வேலை வாய்ப்புக்களில் வகுப்புவாரிப் வாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படை கொள்கையினை வைத்து போராட்ட தொடங்கினார், இந்த போராட்டம் தான் சமூக நீதியின் போராட்டமாக இருக்கிறது.

இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் சாதிகள் ஒழிவதற்குப் பதிலாக வளர்ச்சிதானே அடையும் என்று ஆதிக்க வர்க்கம் கூக்குரல் இட்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. பெரியாரின் குறிக்கோள்கள் எல்லாமே அவ்வாறு ஒவ்வொரு சாதிக்காரனும் வளர்ச்சியடையவேண்டும் என்றே எண்ணினார்.

இந்த உரிமையினை தான் ஒட்டுமொத்த இந்தியர்களும் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.


நன்றியுடன்,

தேவேந்திரன் ராமையன் 

04 செப்ட்ம்பர் 2021         

Friday, 3 September 2021

ரோஹிங்கியா முஸ்லிம்கள் - வாசிப்பனுபவம்

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

ஆசிரியர் : மருதன் 

கிண்டில் பதிப்பு 

விலை - 10  ரூபாய் ஐம்பது காசுகள் 

பக்கங்கள் 73


உலகில் வாழும் எல்லா உயிர்களும் இந்த மண்ணில் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குச் சொந்தமான ஒரு இடம் இருக்கிறது அது போலவே மனிதர்களாகிய நமக்கும் ஒரு மண்ணின் அடையாளம் இருக்கிறது.

இந்த புத்தகம் அதுபோல அடையாளம் இல்லாமல் அழிக்கப்படும் ஒரு இனத்தின் நிலைப்பாடுகளையும் அவர்களுக்கு ஏற்படும் அல்லல்களையும் அவருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும் பற்றிப் பேசுகிறது.

ஓவர் இனம் அழிக்கப்படுகிறது. மதம் மற்றும்  மொழிக்கு அப்பாற்பட்டு மனிதம் என்ற ஒரே ஒரு நிலையினை மையமாக வைத்து எல்லா உயிர்களும் சமமானதே என்று நடத்தவேண்டும்.

பர்மாவின் வரலாற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திலிருந்தே இந்த இனம் பர்மாவில் வசித்து வருகிறது.  காலம் கடந்து போகும் போது மனிதமும் மரணித்துப் போகிறது என்றே தான் சொல்லத் தோன்றுகிறது. 

சமூகம் என்பது ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்தது இல்லை ஆனால் அது ஒரு மனித குழுவினால் கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பர்மாவில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட இனக்குழுவில் பௌத்தர்கள் இந்த ஒரு இன குழுவினரை மட்டும் அழித்துக்கட்ட நினைக்கிறது. இது ஆரம்பமான நாட்களில் ஒவ்வொருவருக்கும் இவர்களைப் பற்றிய காழ்ப்புணர்ச்சிகள் புகுத்தப்படுகிறது அதன் வளர்ச்சியாகவே இவர்களுக்கும் ஏற்படும் வேற்றுமைகள் நாளடைவில் விரிசலாகி வன்முறையில் முடிகிறது.

ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே இவர்களின் மீதான வெறுப்பினை மக்களிடையே புகுத்தினர்.

ஒரு நாட்டில் ஒருவன் பிறந்து வளர்ந்த பிறகு திடீரென ஒரு நாள் அந்த  மண்ணிலிருந்து அவனை துரத்தியடித்தால் அவன் எங்கே போவான், உலகின் எல்லா நாடுகளிலும் புகலிடம் தேடிப் போகமுடியுமா?. பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது ஒருவிதம் ஆனால் நீ இந்த மண்ணில் வாழ முடியாது வெளியேறு என்றால் அவன் எங்கே செல்வான்.

அப்படியாக அங்கிருந்து அண்டை நாடுகளுக்குப் புகலிடமாக ஏராளமான நபர்கள் சென்றனர்.    இந்த வகையில் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் எண்ணற்றவை. இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி போவதற்கு கள்ளத்தனமாகக் கப்பல்களில் பயணிக்கிறார்கள். அப்படி பயணிக்கும் போது அவர்களுக்கு  ஏற்படும் பசி பட்டினி, பாலியல் கொடுமைகள், அடித்துக் கொள்வது, சில படகுகள் விபத்துக்குள்ளாவது என பல்வேறு விதமான கடினமான சூழல்களைச் சந்தித்து வேறொரு நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாடுகள் அவர்களுக்கு அனுமதி தர மறுக்கிறது.

உலக நாடுகளில்  பெரும்பாலான நாடுகள் இத்தகைய வன்முறையினை கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் அவற்றுக்கெல்லாம் செவிகொடுக்காமல் அவர்களின் அதிகாரம் மேலோங்கிக் கொண்டேதான் இருக்கிறது.

இந்த இனத்திற்கு இழைக்கும் இந்த வன்மங்கள் ஒரு வகையில் ஒரு இனக் குழுவிற்கு முடிவுகட்ட வேண்டி அடியோடு அழிக்க எடுக்கும் நடவடிக்கையெல்லாம் ஒரு வகையில் அந்த இனத்திற்கு இழைக்கப்படும் சமூக அநீதி என்றே சொல்லவேண்டும்.

மொழி, மதம், இனம் என எல்லாவற்றுக்கு அப்பாற்பட்டு மனிதம் என்ற ஒரே ஒன்றின் அடிப்படியில் இவர்களும் சக மனிதர்கள் தானே? ஏன் இவர்கள் மட்டும் தனக்கென ஒரு நாட்டின் குடியுரிமை இல்லாமல் அலையவேண்டும் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.


தேவேந்திரன் ராமையன் 

03 செப்டெம்பர் 2021

 

                          

சாதி தேசத்தின் சாம்பல் பறவை - வாசிப்பனுபவம்

 சாதி தேசத்தின் சாம்பல் பறவை

ஆசிரியர் : எவிடன்ஸ் கதிர் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 175

பக்கங்கள் 272



சமூக நீதி என்றதும் நமது மனதிற்கு வருவதெல்லாம் அது என்னவோ பழைய கதைகள் அதெல்லாம் இப்போது இல்லையென்றும் நாம் வாழும் தேசத்தில் இப்போது சமூக நீதி எல்லோருக்கும் சமமாகக் கிடக்கிறது என்றும் நமக்குள் ஒரு மாய பிம்பம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, ஆமாம் அது வெறும் மாயபிம்பம்தான். இந்த தேசத்தில் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு மூலையிலும் சமூக நீதி கிடைக்காமல் எத்தனையோ அவலங்கள் நடந்தேறிக்கொண்டே தான் இருக்கிறது.

நான் சமீபத்தில் கிண்டிலில் வாங்கிய புத்தகம் தான் இந்த " சாதி தேசத்தின் சாம்பல் பறவை" - தலைப்பைப் பார்த்த போது ஏதோ ஒரு விதமாகத் தோன்றுகிறதே என்று முகவுரையினை வாசித்துப்பார்த்தேன். நாம் வாழும் இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கும் சமூக அநீதிகளைப் பேசும் ஒரு புத்தகமாக இருந்தது.

ஆம், இன்றளவும் வெகுவான கிராமங்களில் "சாதி  என்ற தீ" சுடர் விட்டு இருந்துகொண்டுதான் இருக்கிறது, இதில் என்ன இரு உண்மை என்றால் அங்கே நடந்தேறும் நிகழ்வுகளில் பெரும்பாலும் அனைவருடைய சம்மதமில்லாமல் தான் நடக்கிறது ஏனெனில் வலிமை உள்ளவன் தனது பலத்தினை காட்டுவதற்காக தன் சார்ந்த மக்களை அடக்கி அவன் எடுக்கும் முடிவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான் பாவம் இந்த பாழாய்ப்போன மக்கள் தான் உடன் செல்வது ஒரு கொடூரத்திற்கு என்றாலும் பின்வரமுடியாமல் கையில் ஒருவன் பூட்டிய விலங்குடனே நடந்துசெல்கிறான்.

இந்த புத்தகம் ஆனந்த விகடனில் தொடர்ந்து வந்த 29 கட்டுரைகளின் தொகுப்பாகவும், இதனை எழுதியவர் "எவிடன்ஸ் கதிர்" என்பவர் ஆவார்.

யார் இந்த     "எவிடன்ஸ் கதிர்", இவர் வீராணம் ஏரிக்கு அருகில் இருக்கும் லால்பேட்டை என்ற ஊரில் பிறந்தார், இயற் பெயர் வின்சண்ட்ராஜ். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஒரு சமூக அமைப்பான "எவிட்னஸ்" என்ற தன்னார்வல தொண்டு நிறுவனத்தினை நடத்திவருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் பற்றிய தனது கருத்தினை பேசியிருக்கிறார் மேலும் ஐ.நா. சபையிலும் பேசியிருக்கிறார்.

தான் சந்தித்த பல்வேறு களநிலவரங்களையும்கள ஆய்வுகளையும் அவ்வாறு தனது பணியினை மேற்கொள்ளும்போது ஏற்பட்ட பல்வேறு தரப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அனுபவங்களையும் அந்த அனுபவங்களில் ஏற்பட்ட வலிகளையும் இன்றும் கிடைக்காத "சமூக நீதியினை" பற்றியும் மிகத் தெளிவாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இந்த கட்டுரைகள் கண்முன்னே கொண்டுவருகிறது

ஆணவக்கொலைகள் 

பிணத்தை வைத்து நடந்தேறிய கலவரம் 

கோவிலில் அனுமதிக்காமல் இருக்கும் அநீதி 

காவலர்களால் ஏற்படும் அநீதி 

சட்டம் செய்ய மறுத்த நீதி 

ஆட்சியாளர்கள் அலட்சியம் 

பணமும் ஆதிக்கச் சாதியும் சேர்ந்து நடத்தும் அநீதி 

பெண்களுக்கு இழைக்கும் அநீதி 

பள்ளிக்கூடங்களில் நடக்கும் சாதிய வன்மங்கள் 

போலியாக நடக்கும் என்கவுண்டர்கள்

இழிதொழிலில் இருப்பவர்கள் குடிக்கு அடிமையாவது  

இட ஒதுக்கீட்டால் ஏற்படும் 

இளைஞர்களிடையே தழைத்தோங்கும் சாதியத்தின் பெருமைகள் 


எவிடன்ஸ் கதிரின், இந்த கட்டுரைகள் ஒவ்வொன்றும் வாசிக்கும் போது மனதில் ஒருவிதமான வலி கூடுகிறது.

காரணம் இந்த மண் அனைவருக்கும் சமமானதுதானே, மனிதன் என்று மார் தட்டி திரியும் ஒவ்வொருவரும் மூச்சு போனபிறகு பிணம் என்று தானே அழைக்கப்படுகிறது.    இந்த மகா உண்மையினை தெரிந்துகொண்டும் மனிதன் ஆணவத்தின் பிடியில் ஆடும் ஆட்டங்கள் தான் எத்தனை.

சாதி  என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் ஒடுக்குவதில்லை. சாதி என்ற ஆதிக்கத்தின் ஆதி முதல் அடி வரை இருக்கும் ஒவ்வொரு சாதியும் அதன் கீழுள்ள  ஒவ்வொரு படியும் தனக்குக் கீழுள்ளவன் மீது உட்கார்ந்துகொண்டு தான் தான் பெரியவன் என்ற அகங்காரத்தின் வழியே அவனை முன்னிறுத்திக் கொள்ளவேண்டி சமூகத்தில் அநீதிகளை நடத்துகிறான்.

 இந்த புத்தகம் நமது சக மனிதர்களுக்கு சக மனிதர்களால் நிகழும் ஒவ்வொரு கொடுமையினையும் பற்றிப் பேசுகிறது.

தன் மகள் வேறு சாதியினை சார்ந்த பையனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதற்காகப் பாசமாக வளர்த்த மகளையே கொலை செய்வதும் அதுபோலவே தங்கள் மகளை அழைத்துக்கொண்டு அவளின் கணவனைக் கொள்வதும் இதற்குப் பெயர் கௌரவக் கொலை என்றும் மார்தட்டிக் கொள்ளும் மதிகெட்ட மனிதர்கள்கூட தான் நாமும் வாழ்கிறோம்.

உயிர்நீத்துப் போனபோது கூட அந்த பிணத்திற்கும் சாதி என்ற சாயம் பூசி ஆவேசமாக ஆட்டம்போடும் சாதிகளின் சந்துக்குள் தானே நாமும் வசிக்கிறோம்.

இறைவன் இருக்கும் ஆலயத்தில் அனைவரும் வழிபடலாம் என்ற அடிப்படை உரிமை கூட இல்லாத இறைநம்பிக்கையில் தானே நாம் வாழ்கிறோம். சாமிக்குக் கூட சாதியின் பெயரிலே தான் நாம் வழிபடுகிறோம். ஒரே கடவுள் ஆனால் அது இருக்கும் இடத்தில் இருக்கும் சாதியின் பெயருக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையில் தான் இன்றைய தெய்வங்களும்    வழியில்லாமல் வாழ்கின்றன.

நிலம் கூட இங்கே சாதியின் பெயரில் இருக்கும் ஆதிக்கத்தால் தானே கையகப்படுத்தப்படுகிறது அதுபோலவே எண்ணற்ற மக்கள் தங்கள் நிலங்களை இழந்து நீதிமன்றம் வாசலில் கிடைக்காத நீதிக்காகக் காத்துக்கிடக்கின்றனர்.

நீதியரசர்களாகக் கூட பணியிலிருந்தாலும் அவர்கள் சார்ந்த சாதியின் அடையாளத்தில் தானே அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அடிமையாக இருந்த மக்களிலிருந்து ஒருவன் பெரிய பதவிக்கு வந்தாலும் அவருக்கு என்னவோ சாதியின் வண்ணம் தீட்டி சக மனிதர்கள் பார்ப்பது அவலத்திலும் அவலமானது.

உயர் காவல் பதவிக்கு வந்தாலும் கூட அவரின் சாதியினை வைத்துக் கொண்டு அவரின் பணியினை சுதந்திரமாகச் செய்ய முடியாமல் முட்டுக்கட்டை போடுகிற மக்களின் கூட்டத்தின் நடுவே தான் நாமும் சுற்றித் திரிகிறோம். இதில் கொடுமை என்னவென்றால் நாட்டில் நடக்கும் அநீதிக்குக் குரல் கொடுக்கவேண்டும் என்ற எண்ணற்ற கனவுகளுடன் அந்த பதவிக்கு வருபவர்கள் இறுதியில் பாதியிலே தற்(கொலை)  யில் தங்கள் கடமையினை முடித்துக்கொள்கின்றனர்.   

சிறைகளில் கைதிகளாக அடைபட்டுக் கிடக்கும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்காகவே தண்டனை அனுபவிக்கிறார்கள் என்ற உண்மையினை தெரிந்து கொண்டால் நாம் என்ன செய்யமுடியும். பெரும்பாலான மக்கள் தங்கள் செய்யாத குற்றத்தினை உண்மையில் குற்றம் செய்தவர்களின் பணபலமும் சாதியின் பலமும் சுதந்திரமாக நடமாட்ட விட்டுவிட்டு உண்மையாகப் பாதித்தவர்களையே குற்றவாளி என்ற முத்திரை குத்தி சிறையில் அடைத்து விடுகிறது.

ஈஸ்வரன் மற்றும் பரமசிவன் என்ற இரண்டு தலித் இளைஞர்களைக் கொலை செய்தார்களால் காரணம் இவர்கள் கோவிலில் நடத்திய சமபந்தியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக. என்ன சொல்வது சாதியின் கொடூரமல்லவா இது.

ஆலயத்திற்கு    வருவதே கடவுள் இருக்கிறான் என்று அங்கே சென்றால் வாழ்வில் அமைதி கிடைக்கும் என்று தான் ஆனால் அங்கே எத்தனை விதமான அடக்குமுறைகள். கோவிலின் கருவறைக்குள் செல்ல அனுமதி ஒரு சாதிக்குமட்டும், ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதி கொஞ்சம் சாதியினருக்கு, முன்னின்று தரிசிக்கச் சிலருக்கு இவற்றுக்கு எல்லாவற்றிலும் மேலாக அனுமதியே இல்லாமல் இருக்கும் வெகுவான மக்கள்.

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் மற்றும் பள்ளிக் கூடங்களிலும் நடக்கும் சாதியின் வன்கொடுமைகள் நாம் இன்றளவும் வேடிக்கை  பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

சுற்றுலா மேற்படுத்திக்கிறோம் என்று பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமான அவர்கள் பிழைக்க வழியாக இருந்த நிலங்களை பெரும்பாலும் பெரும் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துவிட்டு அங்கே நிம்மதியாக வாழ்ந்துவந்த மக்களை அன்றாடம் வாழவே அல்லல் பட வேண்டிய சூழலில் தள்ளியது ஒரு அநீதியாகவே பார்க்க வேண்டும்.

இதுபோல எண்ணற்ற கேள்விகளுக்கு விடையாக இந்த புத்தகம் இருக்கிறது.  ஒவ்வொரு கட்டுரையினையும் வாசிக்கும் போது மனது வலிக்காமல் இருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

"எவிடன்ஸ் கதிர்" போன்ற தன்னலமில்லாமல் சக மனிதனின் உரிமையினை பெற்றுக்கொடுக்க மேற்கொண்ட எண்ணற்ற காரியங்கள் அவ்வளவாக எளிதாக செய்ய முடியாது. இவர் சந்தித்த எண்ணற்ற மிரட்டல்கள், அடிகள், கொலைமுயற்ச்சிகள் என எல்லாவற்றையும் சந்தித்து தான் எடுத்துக்கொண்ட இத்தகைய மனிதாபிமான காரியத்தில் கடந்து சென்றுகொண்டிருப்பது நன்றிக்குரியதே.

அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 

03 செப்டெம்பர் 2021

Wednesday, 1 September 2021

மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள் - வாசிப்பனுபவம்

 மகர்கள்  மற்றும் மாங்கர்களின் துயரங்கள்   

ஆசிரியர் : முக்தா சால்வே 

(முதல் பெண் தலித் எழுத்தாளர்)  

தமிழில் - திவ்யா பிரபு 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 11



இந்த புத்தகம், ஒரு இளம் தலித் பெண் தனது 14 வயதில் எழுதிய ஒரு கட்டுரையினை 1855 ஆம் ஆண்டில் தியானோதயா என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். 

சாவித்திரி பாய் மற்றும் ஜோதிபா பூலே ஆகியோரின் மாணவியான "முக்தா சால்வேதான் அந்த இளம் பெண்.

இந்த நூலினை தமிழில் "ஓங்கில் கூட்டம்" அமைப்பின் சார்பாக திவ்யா பிரபு அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

ஒரு சிறுமியின் மனதில் ஏற்பட்ட ஏக்கங்களையும் வலியினையும் தன் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளார் முக்தா சால்வே.

"நாங்கள் எல்லோரும் மிருகத்தைவிடக் கீழானவர்களா" என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் இந்த கட்டுரையில் அடிமைப்படுத்தப் பட்ட ஒட்டுமொத்த மனிதர்களின் வலியினை பிரதிபலிக்கும் விதமாக எண்ணற்ற கேள்விகளால் தன் மனதில் எழுந்த வலிகளைக் கொட்டி தீர்த்துவிட்டார்.

உலகினில் இருக்கும் எல்லா உயிரினங்களைப் படைத்த இறைவன் தான் எங்களையும் எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆதிக்க சாதியினரையும் படைத்திருக்கிறான் அந்த இறைவன் தான் எனக்கு இந்த கேள்விகளைக் கேட்ட சக்தியும் கொடுத்திருக்கிறான் என்கிறார்.

பிராமணர்கள் மட்டும் தான் வேதம் வாசிக்க வேண்டுமாம் அதுமட்டுமல்லாமல் எங்களுக்கென எந்த வகையான மதம் இருக்கிறது, அப்படியானால் நாங்களெல்லாம் மதம் இல்லாத மனிதர்களா என்ற கேள்வியும் எழுகிறது.

கடவுளிடம் கேட்கும் கேள்வி இது. எங்கள் மதம் தான் என்ன? அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்? 

ஏழை மாங்கர்கள் மற்றும் மகர்களான எங்களிடமிருந்த நிலங்களை  இந்த பிராமணர்கள் அதிகாரத்தினை கொண்டு ஆக்கிரமித்து அவற்றில்  பெரிய கட்டிடங்கள் கட்டுவதற்குக் காவுகொடுப்பதற்கு எங்களுக்குச் சிவப்பு ஈயம் கலந்த எண்ணெய் குடிக்க வைத்து கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் புதைத்து விடுகின்றனர், இது தொடர்ந்து போனால் எங்கள் தலைமுறையே அழிந்து போகாதா?

பாஜிராவ் பேஷ்வாவின் ஆட்சியில் எங்களைக் கழுதைகளை விட மோசமாக நடத்தினார்கள் ஆனால் இங்கே ஒரு ஊனமுற்ற கழுதையை அடித்தால் கூட அதற்குப் பணிந்து பேச அவற்றின் எஜமான வருவான் ஆனால் இந்த மாங்கர்களும் மார்களும் யாருமற்று நிர்க்கதியாக இருக்கிறோம்.

இதுபோல எண்ணற்ற கேள்விகளையும் மனக்குமுறல்களையும் அடுக்கிக்கொண்டே சென்ற சால்வா ஒரு சமயத்தில் இதற்கு மேல் நான் எழுதினேன் என்றால் என் கண்ணீரை என்னால் தடுக்க முடியாது என்று நிறுத்துகிறார். மேலும் இந்த கொடுமைகளிலிருந்த எங்களை மீட்கவே ஆங்கிலேய ஆட்சி வந்தது என்றும் இவர்களின் வருகைக்குப் பிறகு முன்பெல்லாம் இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது என்று முடிக்கிறார்.

ஒரு மாணவ பருவத்தில் இருக்கும் சிறுமியின் மனத்தில் எழுந்த இந்த கேள்விகள் கொழுந்து விட்டு எரியும் தணலை விடத் தார்மீக சுவாலை போன்றதாகவே தெரிகிறது.

அடிமைப்பட்ட மக்களின் வலிகள் தீர எந்த வித வலி நிவாரணியும் இல்லையென்பதுதான் நாம் உணரமுடிகிறது.

தொய்வில்லாமல் அந்த சிறுமியின் மிகத் தெளிவாக மொழிபெயர்த்த திவ்யா பிரபுவிற்கு நன்றிகள்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
01 செப்டம்பர் 2021